Skip to main content

திருமா மீது எடப்பாடிக்கு வந்த திடீர் பாசம்; அரசியலா? அக்கறையா? - ‘விசிக’ சங்கத்தமிழன் 

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

 VCK Sangatamilan interview

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்த தன்னுடைய கருத்துக்களை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த அரசியல் களச் செயற்பாட்டாளர் சங்கத்தமிழன் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

திருமாவளவன் அவர்கள் உடல்நலம் குறித்து சமீபத்தில் முதல்வர் ஸ்டாலினும், எடப்பாடியும் கூட விசாரித்தார். இதனை அரசியல் நோக்குடன் பார்க்கத் தேவையில்லை. ஏனென்றால், திருமாவளவன் அரசியலைக் கடந்து நட்பு வைத்துள்ளவர். அதிமுக குறித்து எங்கள் தலைவர் அக்கறை காட்டக் காரணம், அவர்கள் பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை உடன் வைத்திருப்பதால் அதில் இருந்து வெளிவர பலமுறை கூறியுள்ளார். விசிகவும் இவர்கள் இருவரும் இருக்கும் கூட்டணியில் இடம் பெறாது எனவும் முன்பே அறிவித்திருந்தோம். ஏனென்றால், பாஜக எவ்வாறு மாநிலக் கட்சிகளின் முதுகில் பயணம் செய்து பின் அதன் தலையை வெட்டும் என்பதை மும்பை(ஏக்நாத் ஷிண்டே) விவகாரத்தில் பார்த்தோம். இந்த நிலையில் அ.தி.மு.க. தனது கூட்டணியை முறித்து தான் ஒரு புரட்சித் தமிழன் என நிலைநாட்டி விட்டார் எடப்பாடி. தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் சமூகநீதி என்ற ஒரே கருத்தியலை பேசும் கட்சி என்பதால். பாஜக போன்ற சுமையை அதிமுக சுமக்க வேண்டுமா? என்பது எங்களின் நிலைப்பாடாக இருந்தது.

 

அண்ணாமலை ஐ.டி. ரெயிடுகள் வரும் என சொன்னது உள்பட பல பிரச்சனைகள் இருக்கும் நிலையிலும், அதிலும், பா.ஜ.க. தேர்தல் ஆணையம் தொடங்கி அமலாக்கத்துறை வரை நெருங்கிய உறவு வைத்திருக்கும் போதும் எடப்பாடி கூட்டணியை முறித்தது பெரிய சமூகநீதி தான். இப்படி சொல்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும் என நினைக்கிறேன். இதற்கு மேல், திருமாவளவன் கண்ட கனவும் இந்த கூட்டணி முறிவால் நிறைவேறிவிட்டது. இத்தனைக்கும் என்.டி.ஏ. கூட்டணியில் அ.தி.மு.க.தான் இரண்டாவது பெரிய கட்சி. இருந்தபோதிலும், இந்தியளவில் பெரும் கூட்டணி உடைப்பை எடப்பாடி ஏற்படுத்தியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அதிமுக, தன்னுடன் இருந்த பா.ம.க., பா.ஜ.க. போன்ற கட்சிகளை நீக்கினாலும், விசிக ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால், அ.தி.மு.க.வை பரிசீலிக்கவில்லை.

 

தொடர்ந்து, விசிக கொடியேற்றும் பிரச்சனை குறித்தும் முதல்வரிடம் பேசியுள்ளோம். இனிவரும் காலங்களில் இதுபோன்று நடைபெறாது எனவும் நம்புகிறோம். சொல்லப் போனால், திமுக ஆட்சிக் காலத்தில் கூட கொடியேற்றுவதில் சிறிய சிக்கல்கள் இருந்ததுண்டு, ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெறவில்லை.  தொடர்ந்து, ஒரு காலத்தில் விசிக - அதிமுக கூட்டணியில் இருந்தது. பின்னர், திருமாவளவன் ஒரு சிறிய முரண் காரணத்தால் வெளியே வந்தார். ஆனால், அதிமுகவிற்கும் எங்களுக்குமான உறவு சுமுகமாகவே இருந்துள்ளது. இவ்வளவு ஏன், ஜெயலலிதாவின் கூட்டணியில் இருந்து வெளியேறுபவர்கள் தன் கால் மயிருக்கு சமானம் எனச் சொன்னவர். மாறாக, திருமாவளவன் வெளியேறுகையில் "அன்புத் தம்பி திருமாவளவன் எங்கிருந்தாலும் வாழட்டும். ஆனால், தம்பிக்கு அரசியலில் அவசரம் கூடாது" என அறிவுறுத்தினார். ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர். நேரடியாக ஆர்.எஸ்.எஸ்.ஐ எதிர்த்தும் உள்ளார். எனவே, சமீபமாக சில வருடங்கள் அதிமுக, சங்கிக் கூட்டத்துடன் சுற்றுவது தான் வருத்தமளித்தது. ஒருவேளை, வருகிற தேர்தலில் சில எம்.பி. சீட்டுகள் வென்று பாஜகவில் இணைவார்களா என்று உறுதியாக கூற முடியவில்லை. தற்போதைக்கு அவர்களை விரட்டிவிட்டது மகிழ்ச்சியளிக்கிறது.

 

இந்த கூட்டணி விவகாரத்திற்கு தலைமை தான் முடிவெடுக்கும் என்ற அண்ணாமலை அதன் பிறகு எந்தப் பேட்டியும் கொடுக்கவில்லை. அதேபோல், எந்த ஒரு கட்சி தனது தொண்டனின் கனவுகளை உள்வாங்கி செயல்படுகிறதோ அதன் தலைவர் மாபெரும் தலைவனாக வருவான். தொடர்ந்து, தமிழ்நாட்டில் தி.மு.க.வை விட பெரிய கட்சி என்று பார்த்தால் அது அ.தி.மு.க. தான். தற்போது நடந்து வரும் போஸ்டர் போரில், புலிகேசி என எடப்பாடியை விமர்சித்துள்ளனர். ஆனால், அவர்கள்(அண்ணாமலை) தான் ரசத்திற்கு பயன்படுத்தும் கொட்டை எடுத்த புளி என்பேன். அதிமுகவை பொறுத்தவரை தொண்டனின் முடிவும் கட்சியின் முடிவும் ஒரு சேரத்தான் இருக்கும். ஆனால், பாஜகவில் தலைமை தான் தீர்மானிக்கும். அதேசமயம், இந்த கூட்டணி முறிவிற்கு மோடி அவர்கள் வரை கவலைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். 

 

இன்றைக்கு அ.தி.மு.க. உடைந்து சிதறியதற்கு காரணமே பாஜக தான். எச். ராஜா, அ.தி.மு.க. நெல்லிக்காய் மூட்டையை தூக்கிச் சுமந்தோம் என்கிறார். நெல்லிக்கனி கூட நிறைய விசயங்களுக்கு உதவும். ஆனால், பாஜக என்பது கள்ளிப் பால் போன்றது. இனிமேல், தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க., வி.சி.க. என்ற கட்சிகள் நிலைக்கும். இதனால் பா.ஜ.க.வினர் டெல்லிக்கு சென்று மோடி அவர்களுக்கு பாதுகாப்பாக செல்லவும் வாய்ப்புள்ளது. ஏன், அண்ணாமலையை கூட இந்த கூட்டணி பிரிவு விவகாரத்தில் தலைவர் பதவியில் இருந்து நீக்கவும் செய்யலாம். தற்போது நடந்த கூட்டணி பிரச்சனை பிறகு நடைப்பயணம் கூட நின்றுவிட்டது என சொல்கிறார்கள். அந்தளவு அவர்களின் கதை முடித்து வைக்கப்பட்டுள்ளது.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“அதிமுக கொடி, பெயர், சின்னங்களை பயன்படுத்தமாட்டேன்” - ஓ.பி.எஸ்.

Published on 30/11/2023 | Edited on 30/11/2023

 

Will not use ADMK flag, name, symbols O.P.S

 

அதிமுகவில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த 20.04.2023 அன்று அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வருகிறார். இதனால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடைவிதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், 'எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்' என ஓபிஎஸ் தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓபிஎஸ் பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு கடந்த நவம்பர் 16 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. இதனையடுத்து இந்த வழக்கு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்திருந்தனர்.

 

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்திருந்த வழக்கு தனி நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இடைக்கால உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்த மனுவின் நிலை என்ன என்று கேட்டார். இதற்குப் பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர் அரவிந்த பாண்டியன்,  “மேல்முறையீட்டு மனு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எனவே தீர்ப்பு வரும் வரை இந்த வழக்கை ஒத்தி வைக்கலாம்” என்றார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன், “வழக்கில் தீர்ப்பு வரவில்லை என்றால் பதில் மனுவை தாக்கல் செய்து வாதத்தை தொடங்கலாம் அல்லது வழக்கை ஒத்தி வைப்பதாக இருந்தால் ஓ. பன்னீர்செல்வத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதற்கு ஓ. பன்னீர்செல்வம் தரப்பு எதிர்ப்பு தெரிவித்து, “தீர்ப்பு வரும் வரை அதிமுகவின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தமாட்டோம்” என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை நீதிபதி டிசம்பர் 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

இபிஎஸ்க்கு எதிரான வழக்கு; உச்சநீதிமன்ற நீதிபதி முக்கிய அறிவுறுத்தல்

Published on 29/11/2023 | Edited on 29/11/2023

 

Case against EPS; Supreme Court Judge Key Instruction

 

அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், சிறப்பு விசாரணைக் குழு மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்திருந்தார்.

 

இந்த முறைகேடு புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

 

இதனையடுத்து இந்த வழக்கு விசாரணை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதன்படி இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் கடந்த 2018இல் லஞ்ச ஒழிப்புத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் தவறில்லை. ஆரம்பக்கட்ட விசாரணை அறிக்கையில் குறைபாடுகளைக் காண முடியாது. ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்தத் தேவையில்லை, சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை தேவையில்லை. எனவே எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு தொடர்பான புகாரை விசாரிக்கக் கோரிய ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிடுகிறது என உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்திருந்தார்.

 

Case against EPS; Supreme Court Judge Key Instruction

 

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் போஸ் மற்றும் பீலா எம். திரிவேதி அமர்வு முன்பு இன்று (29.11.2023) விசாரணைக்கு வந்தது.

 

அப்போது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் துஷார் மேத்தா ஆஜராகினார். அவர், “இந்த வழக்கு ஏற்கனவே 3 முறை அனிருதா போஸ் முன்பு விசாரணைக்கு வந்துள்ளது. அதன்படி இறுதி விசாரணை தொடங்கும் என அறிவித்திருந்தார். இந்த சூழலில் தற்போது இந்த அமர்வில் பட்டியலிடப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு அமர்வில் விசாரித்து வரும் வேளையில், வேறு ஒரு அமர்வுக்கு மாற்றுவது என்பது பதிவாளருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த வழக்கில் வழக்கை பட்டியலிடும் பதிவாளரின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது” எனத் தெரிவித்தார்.

 

எடப்பாடி பழனிசாமி தரப்பில், “இந்த வழக்கை தற்போதைய அமர்வே விசாரிக்கலாம். கடந்த முறை கூடுதல் விசாரணை இல்லாமல் வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அமர்வை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே முடிவு செய்வார் என நீதிபதி பீலா எம். திரிவேதி அறிவித்துள்ளார். மேலும் இது குறித்த தங்களது கோரிக்கைகளை தலைமை நீதிபதி முன்பு வைக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தரப்புக்கும் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கும் அறிவுறுத்தியுள்ளார். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்