Skip to main content

ஊழலை தடுக்க முடியவில்லை என கூறியது காங்கிரஸ்: வானதி சீனிவாசன்

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

 

இந்தி மொழி பற்றி பேசியதை தவறாக புரிந்து கொண்டார்கள் என அமித்ஷா கூறியது, தமிழக பாஜக தலைவர் யார்? உள்ளிட்ட கேள்விகளுக்கு பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
 

தமிழக பாஜக தலைவர் நியமனத்தில் தாமதம் ஏன்? அந்தப் பதவிக்கு போட்டி கடுமையாக உள்ளதா? 
 

இந்தக் கேள்விக்கான பதிலை என்னால் சொல்ல முடியாது. இது அகில இந்திய தலைமை அறிவிக்க வேண்டியது.


 

 

உலகளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு மொழி இருக்க வேண்டும். நாடு முழுவதும் அதிகமாக பேசப்படும் மொழி இந்திதான். எனவே அதை தேசிய மொழியாக்க வேண்டும் என அமித்ஷாவின் பேச்சுக்கு தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் எதிர்ப்பு வந்ததால்தான், ''நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், இந்தியாவின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. 2வது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றால் இந்தியை கற்றால் நன்றாக இருக்கும் என்று கூறினேன்'' என தெரிவித்தாரா அமித்ஷா?
 

இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. அமித்ஷாவினுடைய டிவிட்டர் பதிவுக்கு தென் மாநிலங்களில் எதிர் கருத்துக்கள், விமர்சனங்கள் வைத்தார்கள். தான் சொன்னது தவறாக புரிந்து கொள்ளப்படுகிறது என்று உணர்ந்தவுடன் விளக்கம் கொடுத்திருக்கிறார். தான் சொல்லப்பட்ட கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது என்று நினைத்து ஒரு விளக்கத்தை கொடுத்திருக்கிறார். 


 

 

இந்தியை திணித்தால் தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். இந்தி திணிப்பை வடஇந்தியாவில் கூட பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று ரஜினி கூறியிருக்கிறாரே?
 

ரஜினி அவ்வப்போது தன்னுடைய அரசியல் கருத்துக்களை சொல்லி வருகிறார். அந்த வகையில் இந்த கருத்தையும் சொல்லியிருக்கிறார். இந்தி மட்டுமல்ல எந்த மொழியையும் திணிக்க மாட்டோம் என பாஜக தொடர்ந்து கூறி வருகிறது. 

 

Vanathi Srinivasan


 

பொருளாதார விஷயங்கள் விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், அதை எல்லாம் மறைக்க வேண்டி பாஜக எடுத்துள்ள ஆயுதம் தான் இந்தி திணிப்பு என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனரே?
 

இல்லை. பொருளாதார சூழலை பொருத்தவரைக்கும் மத்திய நிதியமைச்சரும், நிதி அமைச்சக அதிகாரிகளும் நாடு முழுக்க ஒவ்வொரு துறையிலேயும் அணுக வேண்டிய பிரச்சனைகள், கொடுக்க வேண்டிய கவனங்கள் என்ன என்பதை தீவிரமாக பரிசீலித்து ஒவ்வொரு வாரமும் நிதியமைச்சர் சில அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார் தொழில்துறையில் உள்ள அச்சத்தை போக்குவதற்காக. அதனால் கனிசமான முன்னேற்றமும் ஏற்பட்டு வருகிறது. 
 

குறிப்பாக தமிழகத்திற்கு அவர் நேரடியாக வந்திருந்து, ஐந்து துறையை சார்ந்தவர்களிடம் ஒவ்வொரு துறையினரிடமும் கிட்டதட்ட ஒன்றேகால் மணி நேரத்திற்கு மேலாக அவர்களுடைய பிரச்சனையை கேட்டு, இன்றைக்கு அதற்கெல்லாம் அறிவிப்புகளை கொடுத்து வரும் சூழல் வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையால் என்ன சொல்வது என்று தெரியாமல் எதிர்க்கட்சிகள் இப்போது இதுமாதிரியான குற்றச்சாட்டுக்களை வைக்கிறார்கள். 


 

amitshah



இந்தியாவில் பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக முறை தோல்வி அடைந்து விட்டது. பல கட்சி நாடாளுமன்ற ஜனநாயக ஆட்சி முறை தோற்றுவிட்டது என்பதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை என்ற அமித்சாவின் கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளதே?
 

அமித்ஷா ஒரு கூட்டத்தில் பேசுகின்றபோது, உறுதியான முடிவுகளை எடுப்பதற்கு மத்தியில் ஒரு நிலையான, பலமான அரசாங்கம் வேண்டும். கடந்த கால சரித்திரத்தை நினைவூட்டுகிறார். யுபிஏ 1 மற்றும் யுபிஏ 2வது ஆட்சி காலத்தில் கூட்டணி கட்சிகளால்தான் எங்களால் ஊழலை தடுக்க முடியவில்லை காங்கிரஸ் கட்சி கூறியது. ஜிஎஸ்டி போன்ற முடிவுகளை எடுக்க சுணக்கம் இருந்தது. இப்போது அந்த நிலைமையெல்லாம் மாறியிருக்கிறது. ஐந்து முக்கிய முடிவுகளை அந்த அரசாங்கம் 10 வருடத்தில் எடுத்தது, ஆனால் ஐந்து வருடங்களில் ஐம்பது முடிவுகளை எடுத்திருக்கிறோம். அதனால் பல கட்சிகள் இருக்கின்ற அந்த கூட்டணி முறை, நாட்டினுடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய முன்னேற்றத்தை கொடுக்கவில்லை என்று மக்கள் நினைக்கிறார்கள் என்று அமித்ஷா சொன்னார். 
 

ஆனால் அரசியல் அமைப்பு சட்டத்தில் நம்பிக்கை இருக்கக்கூடிய, அரசியல் அமைப்பு சட்டத்தின் வாயிலாக அரசாங்கத்தை நடத்துகின்ற கட்சி, இதில் ஏதோ ஒன்று செய்து விடுவார்கள் அல்லது வேறு ஏதாவது ஒரு அதிரடியான முடிவு என்ற மாதிரியெல்லாம் எதிர்க்கட்சிகள் மாற்றுக் கருத்தை முன்வைக்கிறார்கள். சர்வாதிகாரப்போக்கிற்கு செல்கிறது என்பது போன்ற விமர்சனங்களை வைக்கிறார்கள். 

 

chennai



சென்னையில் பேனர் சரிந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ பலியான சம்பவம் தமிழகத்தையே சோகத்தில் ஆழ்த்தியது. இனியாவது பேனர் கலாச்சாராம் ஒழியுமா?
 

இதற்கு முன்பாக நீதிமன்ற உத்தரவுகள் இருந்தபோதிலும் கூட, நிர்வாகங்களும் அந்த பேனர்கள் விசயத்தில் போதிய அக்கறை காட்டவில்லை. பேனர் கலாச்சாரம் மட்டுமல்ல, ஆடம்பர கலாச்சாரம், அரசியல் கட்சிகள் தேர்தலில் பணம் செலவழிப்பது உள்ளிட்ட நிறைய மாற்றங்கள் வரவேண்டியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில். ஏனென்றால் அதிகமாக தேர்தலில் செலவழிக்கின்ற மாநிலமாக தமிழகம் தள்ளப்பட்டிருக்கிறது. இந்த சூழலையும் அரசியல் கட்சிகள் மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதற்கெல்லாம் உயிர்பலி கொடுத்தப்பின்னர்தான் இந்த மாதிரி மாற்றங்கள் வரணும் என்பதுதான் வேதனையாக உள்ளது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.