Skip to main content

சென்னையில் வள்ளுவருக்கு கோட்டம்!

Published on 07/08/2018 | Edited on 27/08/2018


 

Valluvar Kottam in Chennai!

1971 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 183 இடங்களில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றார் கலைஞர். தமிழக சட்டமன்ற வரலாற்றில் இந்தச் சாதனையை யாரும் முறியடிக்கவில்லை. 
 

அசைக்கமுடியாத பலம்பெற்ற கலைஞர், தமிழர்களின் தனித்தன்மையை நிலைநாட்டும் பல நினைவுச் சின்னங்களை நிறுவினார். அன்றைக்கு நுங்கம்பாக்கத்தில் குப்பைமேடாக காட்சியளித்த இடத்தில் வள்ளுவருக்கு கோட்டம் அமைக்க திட்டமிட்டார். 1973 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.
 

 

 

புகழ்பெற்ற சிற்பியான கணபதி ஸ்தபதியைக் கொண்டு, நுணுக்கமாக திட்டமிட்ட கலைஞர், அணு அணுவாக ரசித்து வள்ளுவர் கோட்டத்தை வடிவமைத்தார். கலைஞரின் கற்பனைக்கு உயிர் கொடுத்தார் கணபதி ஸ்தபதி.
 

தூண்களே இல்லாத, 4 ஆயிரம் பேர் அமரக்கூடிய மண்டபத்துடன் கூடிய இந்த கோட்டத்தின் மிகப்பெரிய சிறப்பு திருவாரூர் தேரை நினைவூட்டும் வகையிலான கற்களால் செதுக்கப்பட்ட தேர். இந்தத் தேரின் கருவரையில் ஏழு அடி உயரத்தி அமர்ந்த நிலையில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. குறள் மாடத்தில் 1330 குறள்களும் செதுக்கப்பட்டுள்ளன.
 

1976 ஆம் ஆண்டு வள்ளுவர் கோட்டத்தை திறக்க திட்டமிட்டார். ஆனால், கலைஞர் ஆட்சியை கலைத்த இந்திரா, தமிழகத்திலும் நெருக்கடி நிலையை அமல்படுத்தினார். அதைத்தொடர்ந்து, வள்ளுவர் கோட்டத்தை குடியரசுத்தலைவர் பக்ருதீன் அலி அகமது திறந்துவைத்தார். கலைஞர் கட்டிய கோட்டத்தை அவர் இல்லாமலே திறந்து வைத்தார்கள்.
 

 

 

வள்ளுவர் கோட்டத்தில் கலைஞரின் பெயரே இல்லாமல் செய்தனர். இதை ஈடுகட்டும் வகையில் அன்றைக்கு தினமணிக் கதிர் ஆசிரியராக இருந்த எழுத்தாளர் சாவி, ஜப்பானில் வள்ளுவர் கோட்டம் என்ற தொடரை எழுதி, அந்த வள்ளுவர் கோட்டத்தை கலைஞர் திறந்து வைப்பதாக முடித்தார். இதற்காக, அவர் ஆசிரியர் பொறுப்பை இழக்க நேரிட்டது. அவருக்காகவே கலைஞர் குங்குமம் வார இதழைத் தொடங்கினார் என்பதெல்லாம் பழைய வரலாறு.
 

பின்னர் அதிமுக ஆட்சியில் வள்ளுவர் கோட்டத்துக்கு முன்னே, அண்ணாவுக்கு சிலை அமைக்க அனுமதி பெற்ற கலைஞர், அந்த சிலையின் பீடத்தில், வள்ளுவர் கோட்டம் அமைத்த வரலாறை ஒரு வரியில் பதிவு செய்தார். 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தபோது தனது பதவியேற்பை வள்ளுவர் கோட்டத்திலேயே நடத்தினார் கலைஞர்.
 



 

Next Story

'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்'- வீடியோ வெளியிட்ட தமிழக முதல்வர்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024

 

The Chief Minister of Tamil Nadu released the video 'We are surrounded by the world of artist

சென்னை கடற்கரை காமராஜர் சாலையில் சென்னைப் பல்கலைக் கழகத்தின் எதிரில், தமிழகத்தின் முன்னாள் முதல்வரான பேரறிஞர் அண்ணா 1969 பிப்ரவரி 3 ஆம் நாள் மறைந்த பின் அவருக்கு நினைவிடம் அமைக்கப்பட்டது. மேலும் தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் தனது 95 வது வயதில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7 ஆம் நாள் மறைந்த பின்னர் அண்ணா நினைவிடம் அருகிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டு நினைவிடம் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. அதே சமயம் அண்ணா நினைவிடம் புதுப்பிக்கும் பணிகளும் நடைபெற்றன.

இந்நிலையில், அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும், கலைஞரின் புதிய நினைவிடத்தையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று  (26.11.2024) மாலை 7 மணி அளவில் திறந்து வைத்தார். பின்னர் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகள் மற்றும் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பாக முத்தரசன், கே. பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்சயலாளர் வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் கலைஞர் நினைவிடம் குறித்த வீடீயோவை எக்ஸ் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், 'கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம்! தமிழ்நாடு சுற்றுகிறது! கலைஞர் உலகு ஆள்வார்! உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும்! என்றென்றும்_கலைஞர்' என பதிவிட்டுள்ளார்.

Next Story

''அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
"We don't want to celebrate it as a festival" - Chief Minister's speech in the meeting

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞருக்கு சென்னை மெரினாவில் அண்ணா நினைவிட வளாகத்தில் நினைவிடம் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே சட்டமன்றத்தில் அறிவித்திருந்தார்.

பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இன்று கூட்டத் தொடருக்கான கடைசி நாள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், சட்டப்பேரவையில் கலைஞர் நினைவிடம் திறப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

அவரது உரையில், ''நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற தலைவன். நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய கலைஞரின் நினைவகம் முழுமை அடைந்திருக்கிறது. அது மட்டுமல்ல கலைஞரின் நினைவிடம் மட்டுமல்லாது அவரை உருவாக்கிய நம் தாய் தமிழ்நாட்டின் பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டு புனரமைக்கப்பட்டிருக்கிறது.

அண்ணாவின் நினைவகமும், கலைஞரின் நினைவகமும் புதுப்பிக்கப்பட்டு வருகிற பிப்.26 ஆம் தேதி மாலை 7 மணிக்கு திறந்து வைக்கப்பட இருக்கிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எதற்காக நான் இதை குறிப்பிட்டு சொல்லி இருக்கிறேன் என்று சொன்னால், இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பிதழ் எல்லாம் அடிக்கவில்லை.அதை விழாவாகக் கொண்டாட நாங்கள் விரும்பவில்லை. ஆகவே இதை நிகழ்ச்சியாகவே நடத்த விரும்புகிறோம். அப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு இந்த அவையில் இருக்கக்கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி, கூட்டணிக் கட்சி, தோழமைக் கட்சி என எல்லா கட்சிகளுடைய உறுப்பினர்களும் பங்கேற்க வேண்டும் என்று சபாநாயகர் மூலமாக நான் கேட்டுக்கொள்கிறேன். தமிழ்நாட்டு மக்களுக்கு உங்கள் மூலமாக அழைப்பு விடுத்து இதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார்.