Skip to main content

இறந்த பின்னும் வாழ்கிறார்களே! சித்திரகுப்தனை கிறங்கடித்த சிவாஜி கணேசன்!

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
இறந்த பின்னும் வாழ்கிறார்களே!
சித்திரகுப்தனை கிறங்கடித்த சிவாஜி கணேசன்!

அக்டோபர் 1,  நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பிறந்த நாள். அவருக்கு ரூ.2.80 கோடி மதிப்பீட்டில் மணிமண்டபம் கட்டி திறக்கிறது தமிழக அரசு. அவர்தான் திறக்க வேண்டும்; இவர் திறக்கக் கூடாது என்றெல்லாம் மணிமண்டப திறப்பு விழா சர்ச்சையாகிவிட்டது. தமிழக மக்களோ, சிவாஜி என்னும் மாபெரும் கலைஞனை, தங்களது இதய சிம்மாசனத்தில் அமர வைத்து நாளும் அழகு பார்க்கிறார்கள். வலைத்தளத்தில் அவரைக் கொண்டாடி மகிழ்கின்றனர். எப்படியெல்லாம் தெரியுமா? வாழும் நடிகர் திலகம் என்று சிவாஜியை ரசிகர் ஒருவர் வாழ்த்துவதைப் பாருங்களேன் 



கர்ணன் ஒருநாள் கனவில் வந்தான். யாரந்த சிவாஜிகணேசன் என்றான் ஏன் எனக்கேட்டதற்கு, கர்ணனாக அவர் நடித்த அந்த படத்தை நானும் பார்த்தேன். நானும் அந்த படக் கர்ணன் மாதிரி கம்பீரமாக முயற்சிப்பதாக சொல்லி மறைந்தான்.



கட்டபொம்மன் பின்னொரு நாளில் இது போலவே கனவில் வந்தான். அவன் சொன்னான். அந்த சிங்கத்தமிழனின் தங்கத்தமிழ் என் நாவில் தவழ என்ன செய்யனும் எனக் கேட்ட அவனே, நான் சொல்வதற்குள் அது சாத்தியமில்லை எனச் சொல்லிச் சென்றான்.



ராஜராஜசோழன் வந்தான். சிவாஜி ராஜபரம்பரையைச் சேர்ந்தவரா என்று எடுத்தவுடனே கேட்டான். முகத்தில் ராஜகளையும், அந்த கம்பீரநடையும் தனக்கே வரவில்லையே பிறகு அவருக்கு எப்படி? பிறந்தபோது லட்சுமியின் ஐஸ்வர்யம் இல்லை. ஆனால் கலைவாணியின் முழு வரமும் பெற்று பிறந்தவர் என்றேன் நான்.



கப்பலோட்டிய தமிழன் அய்யா சிதம்பரம் ஒருநாள் வந்தார். இருக்கும்போது தன்னை உணராதவர்கள், இப்போது கொஞ்சமாவது உணர்ந்ததெப்படி என்ற ஆச்சரியம் அவருக்கு. நிஜத்தை உணராதவர்கள் நிழல் கண்டாவது கொஞ்சம் உணர்ந்தார்களே என்ற மகிழ்ச்சி எனக்கு.



யாமறிந்த மொழிகளிலே தமிழைப்போல் எங்கும் காணோம் என்று முழங்கிய முண்டாசுகவி பாரதி வந்தான். யாமறிந்த வகையில் எம்தமிழை சிவாஜிபோல் உச்சரிப்பவர் எவருமில்லை என்றான். ஆச்சரியமில்லை எனக்கு.



அப்பர் திருநாவுக்கரசர் வந்தார். உச்சரிப்பு சுத்தம் என்றால் சிவாஜிதான். அவர்தான் திருவருள் பெற்ற ‘திருநா’வுக்கரசர் என்றார். ஆமோதித்தேன்.



காக்கும் கடவுள் சிவபெருமான் வந்தார். கண்களில் கலவரம் அவருக்கு. என்ன என்பதற்குள் அவரே சொன்னார். திருவிளையாடல் படம் பார்த்தேன். அதில் வரும் சிவாஜியைப் பார்த்து என்னை அறியாமல் நானே வணங்கிவிட்டேன். தன்னைத் தானே மறந்தது கலவரமாகிவிட்டது அவருக்கு. தன்னில் பாதியான உமையவளின் சக்தி முழுக்கவும், பிரம்ம பத்தினி சரஸ்வதி அவர் நாவிலும், திருமாலின் நாயகி லட்சுமி அவர் முகத்திலும் குடிகொண்டிருப்பதும் அப்போதுதான் புரிந்தது சிவனுக்கு.



பகத்சிங் வந்து ஒன்றும் சொல்லாமல் நான் சுவற்றில் மாட்டியிருந்த நடிகர்திலகத்தின் படத்தைப் பார்த்து தன் தொப்பியைக் கழற்றி முதுகை முன் வளைத்து மறைந்தான்.

இன்னும் இன்னும் சரித்திர நாயகர்களும், புராண புருஷர்களும் வந்து பார்த்தார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதவிதமான ஆச்சரியம்.. ஆனால் சித்திரகுப்தன் கவலைதான் விசித்திரம் எனக்கு. கிறங்கிவிட்டாராம் அவர். 



மேலே, ஆயுள் கணக்கு தணிக்கையில் (Audit) பயங்கர பிரச்னையாம் சித்திரகுப்தனுக்கு. பிறக்காத மனிதர்கள் இறக்காமல் தமிழகத்தில் வாழ்வது எப்படி என்றும், கணக்கில் கோட்டை விட்டதாகவும் தணிக்கை அறிக்கையில் புகார் சித்திரகுப்தன் மீது. முதலில் எனக்கு புரியவே இல்லை. பிறகு அவர்களின் பெயர்களைச் சொல்லி விசாரித்தபோதுதான் உணர்ந்தேன் நடிகர்திலகத்தின் உன்னதம் எத்தகையதென்று.

அவன் குறிப்பிட்ட பெயர்களில் சில..... பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர், பாரிஸ்டர் ரஜினிகாந்த், அழகாபுரம் ஜமீன் சின்னதுரை ஆனந்த், ராஜபார்ட் ரங்கதுரை, பர்மா குணசேகரன், மனோகரன், படிக்காதமேதை ரங்கன், பாசமலர் ராஜசேகர், சிக்கல் சண்முகசுந்தரம் நீள்கிறது பட்டியல்....



சித்திரகுப்தனுக்கு சமாதானம் கூறினேன். நீங்கள் எதுவும் குறிப்பில் தவறு செய்யவில்லை என்றேன். அவரை மகிழவிடவில்லை நான். தொடர்ந்தேன். தணிக்கை அறிக்கையும் சரிதான் என்றேன். குழப்பம் அதிகமானது அவருக்கு. கதாபாத்திரமாகவே மாறிவிடுவதுதானே நடிகர்திலகத்தின் திறன். விளங்காத அதியசமே நடிகர்திலகம் சிவாஜிதான்.



வாழ்ந்து மறைந்தவர்களே நேரில் வந்தாலும் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம் நடிகர் திலகம் போல் இல்லையென்று. இந்த பூமியில் பிறக்காத பலரை இறக்காமல் வாழவிட்டதுதான் நடிகர்திலகத்தின் விந்தை. இந்த ஒரு ரசிகர் மட்டுமா? தமிழகத்தில் கோடானுகோடி ரசிகர், ரசிகைகளை, தன் நடிப்பால் கட்டிப் போட்டவர் சிவாஜி கணேசன். அவரது 90-வது பிறந்த நாளில், கலைஉலகத்துக்கு அவர் ஆற்றிய சேவைகளை நினைவுகூர்வோம். 

-சி.என்.இராமகிருஷ்ணன்

சார்ந்த செய்திகள்