Skip to main content

எச்.ராஜாதான் சிறுமைப்பட்டுபோனார்: வைகைச்செல்வன் கண்டனம்

Published on 07/03/2018 | Edited on 07/03/2018
h.raja


தெற்கு திரிபுராவில் உள்ள பிலோனியா என்ற இடத்தில் மார்க்சிஸ்ட் ஆட்சி காலத்தில் வைக்கப்பட்ட லெனின் சிலை புல்டோடசர் மூலம் நேற்று அகற்றப்பட்டது. லெனின் சிலை அகற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது முகநூலில், ''இன்று திரிபூராவில் லெனின் சிலை நாளை தமிழகத்தில் சாதி வெறியர் ஈவேரா ராமசாமி சிலை'' என குறிப்பிட்டிருந்தார். பின்னர் கடும் எதிர்ப்பு வந்ததையடுத்து அந்த பதிவை நீக்கிவிட்டார். 
 

இதுதொடர்பாக நக்கீரன் இணையதளத்தற்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சரும், அதிமுக செய்தித் தொடர்பாளருமான வைகைச்செல்வன், 
 

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. லெனின் என்பவருக்கும் இந்தியாவிற்கும் என்ன சம்பந்தம் என்று பா.ஜ.க தேசிய தலைவர் எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளது அவரது அறியாமையை வெளிப்படுத்துகிறது. ஒரு கோட்பாடு என்பதும், கொள்கை என்பதும் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு என்பதை மறந்துவிட்டு இவ்வாறு பேசுகிறார். 

 

Vaigai chelvan


லெனின் சொன்ன கருத்துக்கள் ரஷ்யாவில் உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, தொழிலாளர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் அவை பொருந்தும் என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும். லெனின் சிலையை அகற்றியதன் மூலம் இவர்களால் கம்யூனிச கோட்பாடுகளை அகற்றிவிட முடியாது. ஒரு கொள்கையும், கோட்பாடும் மக்களிடம் ஊடுருவி சென்றுவிட்ட பிறகு அதை சொன்ன லெனினின் பிம்பத்தை மட்டும் உடைத்துவிட்டால் போதுமா. இது அவர்களின் கொள்கை பலவீனத்தைத்தான் காட்டுகிறது. இதைப்போல தந்தை பெரியாரின் சிலை அகற்றப்படும் என்று எச்.ராஜா பதிவிட்டு, அதை பின்னர் நீக்கிவிட்டு தற்போது தனது உதவியாளர் செய்திருக்கிற பிழை என்று முன்னுக்குப் பின் முரணாக பேசி வருகிறார். எச்.ராஜா இதுபோன்று தொடர்ந்து அவதூறான செய்திகளையே பரப்பி வருகிறார். சர்ச்சையில் இடம்பிடிக்க வேண்டும் என்பதற்காகவே இதுபோன்ற கருத்துக்களை அவர் கூறி வருவது ஏற்கத்தக்கது அல்ல. 

 

பெரியார் தனி மனிதர் அல்ல. ஒரு தத்துவம். தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்டு இயங்கிய தனிப்பெரும் தலைவர். சமூக சீர்திருத்த கொள்கைகள், பெண் விடுதலை, மதவாத மூட நம்பிக்கைகள் இதுபோன்று சமூக விழிப்புணர்வை ஏற்படுத்திய சமூக சிந்தனையாளரை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு திரு.எச்.ராஜாதான் சிறுமைப்பட்டுபோனார். இவ்வாறு கூறினார்.