Skip to main content

வாச்சாத்தி வன்கொடுமை: முப்பது வருடப் போராட்டம்; நின்று வென்ற நீதி

Published on 29/09/2023 | Edited on 30/09/2023

 

vachathi case judgement

 

தருமபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள ஒரு எளிய மலைக் கிராமம் தான் வாச்சாத்தி. மலைவாழ் பழங்குடி மக்கள் வாழும் இந்த கிராமம், நகர எல்லைகளில் இருந்து வெகு தூரம் விலகி இருப்பதால் கல்வி, பொருளாதாரம் சுகாதாரம் எனச் சமூக வளர்ச்சிக்கான அனைத்து அம்சங்களும் இவர்களுக்கு எட்டாத ஒன்றாகவே இருந்து வந்திருக்கிறது. இதனால் சித்தேரி மலையடிவாரத்தின் கீழ் உள்ள பகுதிகளைப் பண்படுத்தி அதில் விவசாயம் செய்து அதிலிருந்து கிடைக்கும் குறைந்த வருமானத்தையே தங்களின் வாழ்வாதாரமாகக் கொண்டு வாழ்ந்து வந்து கொண்டிருந்தார்கள் வாச்சாத்தி பழங்குடி மக்கள்.

 

வாச்சாத்தியை ஒட்டி இருக்கும் சித்தேரி மலைப்பகுதி காடுகளில் அதிக அளவில் சந்தன மரங்கள் இருப்பதாகவும், அது அடிக்கடி காணாமல் போவதாகவும் அப்படி காணாமல் போவதற்கு வாச்சாத்தி பழங்குடி மக்கள்தான் காரணம் என்றும், வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது நீண்ட காலமாக அந்தப் பகுதி வனத்துறையினர் குற்றச்சாட்டு சொல்லி வந்தார்கள். அந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் அடிக்கடி வாச்சாத்தி கிராமத்தில் திடீர் திடீரென புகுந்து சோதனைகளில் ஈடுபடுவதும் வனத்துறையினரின் வழக்கமான நடைமுறைகளில் ஒன்றாக இருந்து வந்திருக்கிறது. அப்படியான சோதனைகளின் போது வனத்துறையினர் வாச்சாத்தி பழங்குடி மக்கள் மீது அத்துமீறுவதும் அதற்கு அந்த அப்பாவி பழங்குடி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதுமாக இருந்து வந்திருக்கிறது. 

 

இந்த நிலையில், 1992 ஆம் ஆண்டு ஜூன் 20 ஆம் தேதி காலையில் தங்களின் வழக்கமான சந்தனக் கட்டைகள் ஆய்வுக்காக வாச்சாத்தி கிராமத்துக்குள் நுழைந்தனர் அந்தப் பகுதி வனத்துறையினர். அப்படி நுழைந்த அவர்களால் அங்கே இருந்த ஒரு விவசாயியின் களத்து மேட்டுக்கு அருகில் சில சந்தன கட்டைகளைக் கைப்பற்றியதாகச் சொல்லப்படுகிறது. அப்படி கைப்பற்றப்பட்ட சந்தனக் கட்டைகள் பற்றி அந்த இடத்தில் விவசாய வேலை செய்து கொண்டிருந்த ஒருவரை அழைத்து விசாரணை செய்திருக்கிறார்கள். ஆனால் அவர் அதுபற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று சொன்னதால் கோபமான வனத்துறை அதிகாரி செல்வராஜ் என்பவர், அந்த விவசாயியை கன்னம் வீங்கும் அளவுக்குக் கடுமையாகத் தாக்கி விட, தகவல் அறிந்த வாச்சாத்தி மக்கள் தாக்குதல் நடந்த இடத்திற்கு ஓடி வந்திருக்கிறார்கள்.  

 

அப்படி கூட்டம் சேர்ந்த பிறகு வனத்துறைக்கும் வாச்சாத்தி மக்களுக்கும் ஏற்பட்ட மோதலில், வனத்துறை அலுவலர் செல்வராஜுக்கு சிறிய அளவில் காயம் ஏற்பட்டு விடுகிறது. காயம் அடைந்த வனத்துறை அலுவலர் செல்வராஜை, உடனடியாக  ஒரு மாட்டு வண்டியை ஏற்பாடு செய்து அதில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள் கிராம மக்கள். அதன்பிறகு வனத்துறை அலுவலர்கள் அங்கிருந்து உடனே கிளம்பிவிட, கூடி இருந்த மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றிருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பிறகுதான் ஒரு மாபெரும் வரலாற்றுத் துயரத்தைச் சந்தித்திருக்கிறது அந்த அப்பாவி மலைக் கிராமம். 

 

வனத்துறை அலுவலர் செல்வராஜ் மீதான தாக்குதல் சம்பவம் நடந்த 1992 ஜூன் 20 ஆம் நாள் மாலைப் பொழுதில், 155 வனத்துறை அலுவலர்கள், 108 காவல்துறையினர், 6 வருவாய் அலுவலர்கள் கொண்ட ஒரு பெரும்படை வாச்சாத்தி கிராமத்திற்குள் அதிரடியாக நுழைந்திருக்கிறது. எதிரி நாட்டுப் படைகளின் மீது போர் தொடுக்கச் செல்லும் மற்றொரு எதிரி நாட்டு வீரர்களைப் போல் ஓர் பயங்கர கொலை வெறியோடு ஊருக்குள் புகுந்த அந்த அரச பயங்கரவாத வன்முறை  கும்பல், முதலில் அந்த எளிய அப்பாவி மக்களின் வீடுகளைச் சூரையாடி அவர்கள் சிறுகச் சிறுக சேர்த்த ஆடுகள், மாடுகள், கோழிகள், வயல்கள், கிணறுகள் என அவர்களின் அத்தனை வாழ்வாதாரங்களையும் அழித்து வேட்டையாடத் தொடங்கி  இருக்கிறது.

 

ஆரம்பத்தில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் திகைத்த அந்த அப்பாவி பொதுமக்களுக்கு, பிறகுதான் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்திருக்கிறது. காலையில் நடந்த சம்பவத்திற்கு நாம் பழிவாங்கப் படுகிறோம் என்பதே. ஆனாலும் நடக்கும் கொடும் அரச வன்முறைக்கு எதிராக நம்மால் எதுவும் செய்ய முடியாது என்பதைப் புரிந்துகொண்ட அந்த அப்பாவி பொதுமக்கள், தங்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டி அந்த பயங்கரவாத கும்பலின் கால்களில் விழுந்து கெஞ்சி இருக்கிறார்கள். ஆனால், அதை கண்டுகொள்ளாத காவல்துறையும் வனத்துறையும் கண்ணில் படும் அத்தனை பேர் மீதும் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலை நடத்தி இருக்கிறது.

 

அப்படி நடந்த அந்த தாக்குதலில் மொத்த வாச்சாத்தி கிராமமும் ஏதோ ஒரு பெரும் புயலில் பாதிக்கப்பட்ட கிராமத்தைப் போல உருக்குலைந்து போனது. அப்படி ஒட்டுமொத்த கிராமமும் சிதைக்கப்பட்ட பிறகு, தங்கள் தாக்குதலின் அடுத்த கட்டமாக கிராம மக்களின் மீது திரும்பி இருக்கிறது. காவல்துறையும், வனத்துறையும் சேர்ந்த அந்த வன்முறை கும்பல் வாச்சாத்தி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமியர்கள் என 217 பேரை ஊருக்குள் புகுந்து இழுத்துச் சென்று அனைவரையும் அங்கே இருந்த ஒரு ஆலமரத்தின் கீழ் மொத்தமாக நிற்க வைத்திருக்கிறார்கள்.

 

அப்படி நிற்க வைக்கப்பட்ட கிராம மக்களில், முதலில் 18 பெண்களை மட்டும் தேர்ந்தெடுத்து அவர்கள் நிற்க வைக்கப்பட்டிருந்த ஆலமரத்தில் இருந்து கொஞ்ச தூரம் தள்ளி இருந்த புதர் மண்டிய ஒரு ஏரிப் பகுதிக்கு அழைத்துச் சென்ற வனத்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த சிலர், 18 பெண்களையும் நிர்வாணப்படுத்தி கூட்டாகப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர். அப்படி நடந்த அந்த பாலியல் வன்கொடுமையில் அந்த பெண்கள் பல முறை பல பேரால் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அந்த அப்பாவி பெண்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதற்குப் பிறகும் தொடர் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார்கள். அப்படி வன்கொடுமை செய்யப்பட்டவர்களில் சில சிறுமிகளும் இருந்திருக்கிறார்கள். சிறுமிகளைக் கூட இரக்கமற்ற முறையில் வன்கொடுமை செய்திருக்கிறது அந்த வனத்துறை கும்பல். 

 

வனத்துறை மற்றும் காவல்துறையின் வன்கொடுமை வெறியாட்டத்திற்குப் பிறகு அந்த பதினெட்டு பெண்களும் மீண்டும் ஆலமரத்தடிக்கு அழைத்து வரப்பட்டார்கள். அப்படி அவர்களை அழைத்து வரும்போது, அத்தனை பெண்களும் ஆடைகள் கிழிக்கப்பட்டு நைந்து நாராக வந்து நின்றதைப் பார்த்த ஆலமரத்தடியில் பிணைக் கைதிகளாக நின்ற அவர்களது உறவினர்கள் கதறித் துடித்திருக்கிறார்கள். ஆனால் அதற்குப் பிறகும் பிணைக் கைதிகளாய் நின்ற அந்த மக்கள் அனைவரையும் அரூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றார்கள் வனத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள். அப்படி அழைத்துச் செல்லப்பட்ட அந்த மக்களை வனத்துறை அலுவலகத்தில் வைத்து வனத்துறை அலுவலர்கள் செய்த கொடுமைகள் மனித குல வரலாற்றில் அதுவரைக்கும் எங்கேயும் நடக்காத வக்கிரத்தின் உச்சங்களாக இருந்தன.

 

பிடித்து வரப்பட்ட பெண்களை அவர்களின் உறவினர்களின் கண் முன்னாலேயே நிர்வாணப்படுத்தி அவர்களுடன் உறவு கொள்ளச் சொல்வது; ஆண்களை நிர்வாணப்படுத்தி  நீண்ட நேரம் அப்படியே நிற்க வைப்பது; அவர்கள் பிடித்து வைத்திருக்கும் அந்த பெண்களை வைத்து அவர்களைத் துடைப்பத்தால் அடிக்க வைப்பது; அதற்கு உடன்பட மறுப்பவர்களைக் கடுமையாகத் தாக்குவது எனக் கடும் சித்திரவதைக் கூடாரமாக மாறி இருந்தது அரூர் வனத்துறை அலுவலகம். அப்படி இரவு முழுவதும் சித்திரவதைக்கு உள்ளான மக்களுக்கு உணவும், தண்ணீரும் கூட வழங்கப்படவில்லை.

 

இது ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மீதமுள்ள மக்களைத் தேடி வாச்சாத்தி கிராமத்திற்குள் புகுந்திருக்கிறார்கள் வெறி கொண்ட வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள். ஆனால் வனத்துறையின் வன்முறை வெறியாட்டத்திற்குப் பயந்து  ஊரில் மீதமிருந்த மக்கள் அனைவரும் வாச்சாத்தி அருகே உள்ள சித்தேரி மலையில் சென்று பதுங்கி இருந்திருக்கிறார்கள். இதனால் ஊருக்குள் மக்கள் யாரும் இல்லாததால் மீண்டும் முடிந்தவரை வீடுகளைச் சூறையாடிய வனத்துறை, வீட்டுக்குள் இருந்த பணம், நகை போன்ற சிறிய சேமிப்புகளைத் திருடியதுடன் தங்கள் கையில் சிக்கிய ஆடு மற்றும் கோழிகளைப் பிடித்து வந்து வனத்துறை அலுவலகத்தில் வைத்து சமைத்துச் சாப்பிட்டிருக்கிறார்கள்.

 

ஜூன் 20 ஆம் தேதி மாலையில் தொடங்கிய வனத்துறை மற்றும் காவல்துறையினரின் வாச்சாத்தி மக்கள் மீதான வன்முறை வெறியாட்டம், அதனைத் தொடர்ந்து ஜூன் 21 மற்றும் 22 ஆகிய மூன்று நாட்கள் நடந்திருக்கிறது. அப்படி நடந்த அந்த மூன்று நாட்கள் வேட்டையில் பிடித்து வரப்பட்ட வாச்சாத்தி பழங்குடி மக்கள் வனத்துறை அலுவலகத்தில் வைத்து தொடர்ந்து கொடும் சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். பெண்களைச் சிறுநீர் கழிக்கக் கூட அனுமதிக்காத காவல்துறை, அதை தங்கள் கண் முன்னாலேயே செய்யச் சொல்லி கொடுமை செய்திருக்கிறார்கள். ஆண்களின் அந்தரங்க இடங்களில் தாக்குவது என மூன்று நாட்கள் தொடர் சித்திரவதைக்குப் பிறகு முதியவர்கள், பெண்கள் 90 பேர், 28 குழந்தைகள், 15 ஆண்கள் என 133 பேர் மீது சந்தனக் கட்டை கடத்தல் என்ற பிரிவில் வழக்குப் பதிந்த வனத்துறை அவர்களைச் சேலம் கிளைச் சிறையில் அடைத்திருக்கிறார்கள். ஒரு எளிய கிராம மக்களுக்கு எதிராக அரசே முன்னின்று நடத்திய அந்த வன்முறை வெறியாட்டம் அந்த கிராமத்தைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் இருந்து வந்திருக்கிறது. 

 

இந்த நிலையில் 1992 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்குவதற்காக மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகள் பலர் ஒன்று கூடி சித்தேரி மலைப் பகுதியில் ஒரு மாநாட்டை நடத்தி இருக்கிறார்கள். அந்த மாநாட்டின் முடிவில் வாச்சாத்தி வன்முறை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிலர் கலந்து கொண்டு தங்களுக்கு நடந்த அநீதியை எடுத்துச் சொல்ல, அதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மலை வாழ் மக்கள் சங்க அமைப்பைச் சேர்ந்த பெ. சண்முகம், என். கிருஷ்ணமூர்த்தி, பாஷா ஜான் ஆகியோர், பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்களுக்காக அப்போது அரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் அரூர் வட்டாட்சியரிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அந்த அரூர் வட்டாட்சியரும் மக்களின் மீது தாக்குதல் நடத்திய கும்பலைச் சேர்ந்தவர் தான் என்பது பின்னர் தான் தெரிய வந்திருக்கிறது.

 

பிறகு 1992 ஜூலை 14 ஆம் நாள் மலைவாழ் மக்கள் சங்க பிரதிநிதிகள் வாச்சாத்தி கிராமத்திற்கு நேரடியாகச் சென்று அந்த மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை கள ஆய்வு செய்யச் சென்றிருக்கிறார்கள். அப்படி அவர்கள் நேரடியாகச் சென்று பார்த்தபோது அந்த ஊரில் ஒரு சின்ன சிட்டுக் குருவி கூட இல்லாமல் முழுவதும் சூறையாடப்பட்ட நிலையில் இருந்திருக்கிறது. பிறகு காவல்துறைக்குப் பயந்து சித்தேரி மலைப் பகுதியில் பதுங்கி இருந்த மக்களைத் தேடிச் சென்று அழைத்து வந்து ஆறுதல் சொன்ன மலை வாழ் மக்கள் சங்க பிரதிநிதிகள், வாச்சாத்தி வன்முறை சம்பவத்தை சமூகத்தின் பார்வைக்குக் கொண்டு வருவதற்கான முயற்சியைத் தொடங்கி இருக்கிறார்கள். முதலில் சிறையில் இருந்த 133 பாதிக்கப்பட்ட மக்களையும் பிணையில் எடுத்த மலைவாழ் மக்கள் சங்க அமைப்பினர், பிறகு வாச்சாத்தி மக்களுக்கான சட்டப் போராட்டத்தைத் தொடங்கி இருக்கிறார்கள்.

 

ஆரம்பத்தில் மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மலைவாழ் மக்கள் சங்கமும் இணைந்து 18 பெண்கள் வன்புணர்வுக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம் மனு மற்றும் காவல்துறையிடம் புகார் போன்ற ஆரம்ப கட்ட நடவடிக்கைளை எடுத்திருக்கிறார்கள். ஆனால் அப்போது வனத்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் வாச்சாத்தி மக்கள் தான் வனத்துறையினர் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்று அறிக்கை வெளியிட்டு வனத்துறைக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் வனத்துறை மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. பிறகு மலைவாழ் மக்கள் சங்க அமைப்பு சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பொதுநல வழக்கை பதிவு செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த பொதுநல வழக்கை விசாரித்த, அப்போதைய பொதுநல வழக்கை விசாரிக்கும் நீதிபதி பத்மினி ஜேசுதுரை, மக்கள் பணியில் இருக்கும் அரசின் உயர் அதிகாரிகள் இதுபோன்ற செயல்களைச் செய்திருக்க மாட்டார்கள் என்று சொல்லி மலைவாழ் மக்கள் சங்கத்தின் பொதுநல வழக்கை தள்ளுபடி செய்திருக்கிறார்.  

 

பிறகு அப்போதைய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஏ. நல்லசிவன் பெயரில் உச்சநீதி மன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கிறார்கள் மலைவாழ் மக்கள் சங்க அமைப்பினர். வழக்கை ஏற்றுக்கொண்ட உச்சநீதி மன்றம் அதை உடனே விசாரிக்கச் சொல்லி 1992 செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது. இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினார்கள். அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால்  அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று வாச்சாத்தி மக்கள் தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதி மன்றம் 1996 ஆம் ஆண்டு வாச்சாத்தி வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. 

 

சிபிஐ விசாரணையில் வாச்சாத்தி வன்புணர்வு சம்பவம் விசாரிக்கப்பட்டு வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் காவல்துறையைச் சேர்ந்த 269 பேர் மீது குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு சேலம் சிறையில் அணி வகுப்பு நடத்தப்பட்டது. அந்த அணி வகுப்பில் வாச்சாத்தியில் வன்புணர்வுக்கு உள்ளான பதினெட்டு பெண்களும் கலந்து கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்கள். பிறகு அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 

 

2008 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. நீண்ட காலம் நடந்த இந்த வழக்கில் குற்றவாளிகள் தரப்பு வழக்கை முடிந்தவரை இழுத்தடிப்பதும் நீதிமன்ற விசாரணைகளுக்குச் சரியாக ஒத்துழைப்பு கொடுக்காமலும் இருந்து வந்தார்கள். ஆனாலும், பாதிக்கப்பட்ட வாச்சாத்தி மக்கள் தங்களின் அத்தனை வாழ்வாதாரப் பிரச்சனைக்கு மத்தியிலும் மிகுந்த நம்பிக்கையோடு நீதிக்கான போராட்டத்தில் உறுதியோடு இருந்தார்கள். அப்படி பத்தொன்பது ஆண்டுக் காலம் நடந்த அந்த வழக்கில் 2011 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் நாள் தீர்ப்பளித்தது தர்மபுரி சிறப்பு நீதிமன்றம். அந்த தீர்ப்பில், வாச்சாத்தி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 269 பேரும் குற்றவாளிகள் என்றும் அனைவருக்கும் சிறைத் தண்டனையும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தார் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குமரகுரு. குற்றவாளிகளில் 12 பேருக்கு பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 5 பேருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் மீதமுள்ள அனைவருக்கும் அவர்கள் செய்த குற்றத்தின் அடிப்படையில் 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை தண்டனை வழங்கப்பட்டது. 

 

அந்தத் தீர்ப்பு வெளியானபோது, குற்றவாளிகளில் 54 பேர் இறந்து போய்விட மீதமுள்ள 215 பேர் மட்டுமே இந்தத் தீர்ப்பால் தண்டிக்கப்பட்டார்கள். பிறகு இந்த தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்கள். இந்த மேல்முறையீடானது கடந்த 12 வருடங்களாக விசாரிக்கப்பட்டு வரப்படுகிறது. தற்போது விசாரணை முடிவுக்கு வந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 5 ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதி வாச்சாத்தி கிராமத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். அந்த ஆய்வுக்குப் பிறகு வாச்சாத்தி வழக்கின் மேல்முறையீட்டில் மீதான தீர்ப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பிக்கையோடு காத்திருந்தார்கள் பாதிக்கப்பட்ட வாச்சாத்தி கிராம மக்கள். 

 

இந்நிலையில் வாச்சாத்தி மலைக் கிராம மக்கள் மீதான வன்கொடுமை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று 29 ஆம் தேதி (29.09.2023) தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம் கொடுத்த தண்டனையை உறுதி செய்த நீதிபதி வேல்முருகன், மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தார். வாச்சாத்தியில் பாலியல் கொடுமையால் பாதிக்கப்பட்ட 18 பெண்களுக்கு தலா 10 லட்சம் ரூபாய் அவர்களின் குடும்பத்துக்கு வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் அல்லது தனியார், சுய வேலைவாய்ப்புக்கு வழிவகை செய்ய வேண்டும். வாச்சாத்தி நிகழ்வின் போது அப்போதைய எஸ்.பி, ஆட்சியர், வனத்துறை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குற்றம் புரிந்தவர்களிடம் இருந்து தலா 5 லட்சம் ரூபாய் வசூலிக்க வேண்டும்' என நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டுள்ளார்.

 

- எஸ். செந்தில்குமார்
 

 

Next Story

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 14/06/2024 | Edited on 14/06/2024
Doctor Subbiah case High Court action verdict

கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமம் பகுதியில் உள்ள ரூபாய் 10 கோடி மதிப்பிலான 2.25 ஏக்கர் நிலம் தொடர்பான நிலத்தகராறில், கடந்த 2013 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நடமாட்டமிக்க பகுதியில் நரம்பியல் மருத்துவர் சுப்பையா கூலிப்படையினரால் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை அதிகாரிகள், சம்பவம் நடந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் கொலை சம்பவம் தொடர்பான காட்சிகள் பதிவாகியிருந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல்துறையினர், ஜேம்ஸ் சதீஷ்குமார், பொன்னுசாமி, மேரி புஷ்பம், போரிஸ், வில்லியம்ஸ், பேசில், யேசுராஜன், முருகன், ஐயப்பன், செல்வ பிரகாஷ் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்பு அவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கு விசாரணை சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. 

Doctor Subbiah case High Court action verdict

இதனிடையே, கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரான ஐயப்பன் என்பவர் அப்ரூவர் ஆனார். அதைத் தொடர்ந்து, அவர் அளித்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து உறவினர்கள் 4 பேர், கூலிப்படையினர் 5 பேர் என மொத்தம் 9 பேர் குற்றவாளிகள் என்று நீதிபதி அல்லி கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி (04.08.2021) தீர்ப்பளித்தார். அதன்படி, பொன்னுசாமி, பாசில், வில்லியம்ஸ், ஜேம்ஸ் சதீஷ்குமார், போரிஸ், முருகன், செல்ல பிரகாஷ் ஆகிய 7 பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், மேரி புஷ்பம், யேசுராஜன் ஆகிய இருவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று (14.06.2024) அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் மருத்துவர் சுப்பையா கொலை செய்யப்பட்ட வழக்கில் இருந்து குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 7 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 2 பேருக்கான ஆயுள் தண்டனையைச் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. 

Next Story

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான வழக்கு; உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Case against Isha Foundation; High Court action order

கோயம்புத்தூர் மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள இக்கரை போளுவாம்பட்டியில் மின் தகன மேடை ஒன்று ஈஷா அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் தகன மேடைக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த எஸ்.என். சுப்பிரமணி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், “மின் தகன மேடை அமைக்கப்பட்டுள்ள பகுதியானது குடியிருப்பு பகுதி ஆகும். இதனால் பொதுமக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். எனவே மின் தகன மேடையை அமைக்கக் கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (12.06.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ஈஷா யோகா மையம் தரப்பில் பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மனுதாரர் வசிக்கும் பகுதி குருட்டுப்பள்ளம் ஆகும். அப்பகுதியில் மனுதாரர் மட்டுமே உள்ளார். மனுதாரர் குறிப்பிட்டிருக்கும் முகவரியில் ஒரு மேற்கூரை மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த குடியிருப்பு வாசிகளும் இல்லை. மனுதாரர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி அரசு ஊழியராக உள்ளார். இவர்கள் போலியான முகவரியைச் சமர்ப்பித்துள்ளனர். அங்கு அமைக்கப்பட்டுள்ள மின் தகன மேடையால் எந்தவொரு சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே உள் நோக்கத்துடன் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது. 

Case against Isha Foundation; High Court action order

அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன், “மின் தகன மேடையால் அருகில் வசிக்கும் குடியிருப்பு வாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மின் தகன மேடை அமைக்கும் முன்பாக அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களின் ஆட்சேபனையைக் கேட்காமல் தகன மேடை அமைக்கப்பட்டுள்ளது. எனவே அந்த மின் தகன மேடையை அகற்ற உத்தரவிட வேண்டும்” என வாதிட்டார். அப்போது ஈஷா மையம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் குறுக்கிட்டு வாதிடுகையில், “அந்தத் தகன மேடை இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. அங்கு நவீன முறையில் எல்.பி.ஜி. எரிவாயு மூலமாக உடல்கள் எரியூட்டப்படவுள்ளது. இதனால் சுற்றுச்சூழலுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது” என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், “சம்பந்தப்பட்ட மின் தகன மேடையை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிடப்படுகிறது” எனத் தெரிவித்தனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 25 ஆம் தேதிக்கு (25.06.2024) ஒத்தி வைத்துள்ளனர்.