/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Va Pugazhenthi.jpg)
மணிப்பூர் விவகாரம் மற்றும் தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களை ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி நம்மிடையே எடுத்து வைக்கிறார்
பாஜகவை நம்பி நாங்கள் அரசியல் செய்யவில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பிரதமருக்கு அருகில் பன்மொழிப் புலவர், வருங்காலப் பிரதமர் எடப்பாடி பழனிசாமி அமர வைக்கப்பட்டார். எங்களை அவர்கள் அழைக்கவில்லை. பாஜக சொன்னதையெல்லாம் ஓபிஎஸ் அவர்கள் கேட்டார். அவருடைய பயணத்திலிருந்து அவரை டைவர்ட் செய்து அவர்களுக்குத் தேவையான வகையில் செயல்பட வைத்தனர். தர்மயுத்தம் மட்டும் தொடர்ந்து நடந்திருந்தால் இன்று தமிழ்நாட்டை ஆளும் இடத்தில் ஓபிஎஸ் அண்ணன் இருந்திருப்பார்.
குடியரசு தினத்துக்கு அவர் வீட்டில் கொடியேற்றும்போது கூட பிரதமர் கொடியேற்றும் நேரத்துக்காக காத்திருந்தார் ஓபிஎஸ். பாஜக கூட்டணி கட்சிகளின் கூட்டத்துக்கு எடப்பாடியை அழைத்தனர். ஆனால் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கு ஓ.பி.ரவீந்திரநாத்தை அதிமுக எம்.பி என குறிப்பிட்டு அழைத்தார் பிரகலாத் ஜோஷி. தாய் பகை, குட்டி உறவு என்பதுபோல் உள்ளது இது. ஒரு நாள் அழைப்பது, ஒரு நாள் புறக்கணிப்பது என்று அவர்கள் மாறுபட்ட நிலையில் நடந்துகொள்கின்றனர். தெளிவான முடிவை அவர்கள் எடுக்க வேண்டும்.
கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கூட்டம் என்று சொல்லி அவர்கள் கூட்டிய கூட்டத்தில் தலைவர்களே இல்லை. பழனிசாமியை வைத்துக்கொண்டு அந்தக் கூட்டணி நிச்சயம் வளராது. எங்களுடைய தொண்டர்களைப் பொறுத்தவரை இது மகிழ்ச்சியான விஷயம்தான். கோடநாடு வழக்கை விரைந்து விசாரிக்கக் கோரி நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். எங்களுடைய போராட்டத்துக்கு யார் ஆதரவு கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக்கொள்வோம். எங்களுடைய போராட்டம் மிகப்பெரிய போராட்டமாக இருக்கும்.
மணிப்பூரில் அநியாயம் நடக்கிறது. காட்டு தர்பார் நடக்கிறது. அங்கு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு கொல்லப்படும் காட்சியை நாம் பார்க்கிறோம். இடஒதுக்கீடு பிரச்சனையால் தான் அனைத்தும் நடக்கிறது. இடஒதுக்கீடு காரணமாக தமிழ்நாட்டில் எந்தப் பிரச்சனையும் வந்ததில்லை. ஏனெனில் இது பெரியார் மண். திராவிட மண். ஒடிசாவில் மிகப்பெரிய ரயில் விபத்து நடந்து பலர் உயிரிழந்தாலும் ரயில்வே அமைச்சர் தன்னுடைய பதவியில் தொடர்கிறார். மணிப்பூரில் இவ்வளவு பெரிய கலவரம் நடந்தாலும் அங்குள்ள முதலமைச்சர் தன்னுடைய பதவியில் தொடர்கிறார்.
சுதந்திர இந்தியாவில் மணிப்பூர் சம்பவம் போன்ற ஒன்று இதுவரை நடைபெற்றதில்லை. மணிப்பூர் எங்கே இருக்கிறது என்பது கூட எடப்பாடி பழனிசாமிக்கு தெரியாது. தனக்கு மற்ற மாநிலங்கள் குறித்து தெரியாது என்று அவரே ஒருமுறை கூறினார். அவர் இந்த சம்பவங்களுக்கு ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை. அவர் முதலமைச்சராக இருந்தபோது தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதையே தொலைக்காட்சியில் பார்த்துத்தெரிந்துகொண்டவர் அவர். மணிப்பூர் குறித்து அவர் கருத்து தெரிவிக்கவில்லை என்று கேள்வி கேட்பதை நான் வருத்தத்துடன் பார்க்கிறேன். மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்ப வேண்டும்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)