Skip to main content

என்னென்ன இந்தியாவிற்கு கிடைக்கும்... ரகசியமாக இருக்கும் ட்ரம்ப் இந்தியா விசிட்... வெளிவந்த தகவல்! 

"உள்நாட்டுப் பிரச்சனையை சமாளிக்க முடியாவிட்டால், எல்லா பிரச்சனைகளுக்கும் வெளிநாட்டினர்தான் காரணம் என்று சொல்லிவிடு. வெளிநாட்டினர் மீது உள்நாட்டு ஜனங்களுக்கு கோபம் வரும். பிரச்சனைகளில் இருந்து அவர்கள் கவனம் திரும்பிவிடும்''

சர்வாதிகாரி ஹிட்லரின் தந்திரம் இது. அவருடைய தந்திரத்தை ட்ரம்ப் கையிலெடுத்து மூன்று ஆண்டுகள் முடிந்து விட்டன. அமெரிக்காவின் சட்டம்-ஒழுங்கு பிரச்சனைக்கும், போதைப்பழக்கத்திற்கும் மெக்சிகோ மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளான ஹோண்டுராஸ், கவுதமாலா உள்ளிட்டவற்றிலிருந்து அமெரிக்காவுக்குள் குடியேறும் அகதிகள்தான் காரணம் என்றார் ட்ரம்ப்.
 

trumpஇவர் அதிபரானவுடன், மெக்ஸிகோ வழியாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற அகதிகளை தடுத்து, பெற்றோரைத் தனியாகவும் குழந்தைகளை தனியாகவும் முகாம்களில் அடைத்து சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பினார்.

அவருடைய இந்த நடவடிக்கையை அமெரிக்கர்களே எதிர்த்தார்கள். ஆனால், ட்ரம்ப் தொடர்ந்து தனது முடிவில் உறுதியாக இருக்கிறார். மெக்ஸிகோவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 1900 கிலோமீட்டர் தொலைவு எல்லையை சுவர் எழுப்பி மூடப்போவதாக அறிவித்தார். முதல்கட்டமாக ஆயிரம் கிலோமீட்டர் சுவர் எழுப்ப 45 ஆயிரம் கோடி டாலர்கள் தேவை என்றார். இதை அமெரிக்க நாடாளுமன்றம் ஏற்கவில்லை. அமெரிக்கா எப்போதும்போல பன்முகத்தன்மையோடு இருப்பதையே விரும்புவதாக பெரும்பான்மை அமெரிக்கர்களும் தெரிவித்துள்ளனர். ஆனாலும் ட்ரம்ப் தனது முடிவில் பிடிவாதமாக இருக்கிறார்.

 

trumpஅவரைப் போலவே இந்திய பிரதமர் மோடியும் கடந்த ஆட்சிக் காலத்திலும் சரி, இந்த ஆட்சிக் காலத்திலும் சரி, தனது நிர்வாக குளறுபடிகளால் ஏற்பட்ட பாதிப்புகளை பாகிஸ்தானைக் காட்டியே திசைதிருப்பினார். இப்போது, காஷ்மீரை திறந்தவெளி சிறைச் சாலையாக மாற்றி, குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்தியா முழுவதும் நாடற்றவர்கள் என்று கோடிக்கணக்கான மக்களை அடைக்க முகாம்களை கட்டத் திட்டமிட்டு வருகிறார். பொருளாதார சீரழிவுகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை திசைதிருப்பி, இந்திய அரசியல் சட்டத்தை வர்ணாசிரம அடிப்படையில் திருத்தும் நோக்கத்தோடு செயல்படுகிறார்.இந்திய மக்களின் எதிர்ப்பை புறந்தள்ளி ஆர்.எஸ்.எஸ்.சின் செயல்திட்டத்தை அமல்படுத்துவதில் உறுதியாக இருக்கிறார். அந்த வகையில் அமெரிக்காவின் மோடியாக ட்ரம்ப்பும், இந்தியாவின் ட்ரம்ப்பாக மோடியும் செயல்படுவதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.


கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் நடந்த "ஹவ்டி மோடி' நிகழ்ச்சியில் மோடியுடன் ட்ரம்ப் பங்கேற்றார். அதற்குப் பதில் மொய் விருந்து இந்தியாவுக்கு ட்ரம்ப்பை அழைத்து "நமஸ்தே டிரம்ப்' என்ற ஒரு நிகழ்ச்சியை நடத்திவிட்டார் மோடி.

அகமதாபாத்தில் காந்தியின் சபர்மதி ஆசிரமம், லால்பகதூர் சாஸ்திரி ஸ்டேடியத்தில் வரவேற்புக் கூட்டம், தாஜ்மகால் விசிட் என ட்ரம்ப்பின் முதல்நாளின் நிகழ்வுகள் திட்ட மிட்டபடி நிறைவேறின. நிறைவுநாளான இரண்டாம்நாளில் மோடியுடன் உரையாடல், விருந்து ஆகியவை நிகழ்ச்சி நிரல்.

பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ட்ரம்ப்புக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. "நண்பர் மோடி'யை ட்ரம்ப் பாராட்டினார். உலகை ஆட்டிப் படைக்கும் நாட்டின் அதிபர் வருகைக்காக குடிசைப் பகுதிகளை மறைக்க சுவர் கட்டிய மோடியின் சாதுர்யம் "பரவலாக'ப் பேசப்பட்டது. பயணத்தின் விளைவாக, இந்தியாவுக்கு என்னென்ன கிடைக்கும் என்பது மட்டும் ரகசியமாக இருக்கிறது. 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்