Advertisment

இது டிரைலர்தான்... நகர்புற உள்ளாட்சி தேர்தல் தான் திமுகவுக்கு கிளைமேக்ஸ் வெற்றி!! - ராம. சுப்ரமணியன் பேட்டி

jkl

Advertisment

தமிழ்நாட்டில் விடுபட்ட 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிகப்படியான இடங்களில் திமுக கூட்டணி வெற்றிபெற்றது. அடுத்து வர இருக்கின்ற நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் இதே மாதிரியான வெற்றியைத் திமுக பெற வாயப்பு இருக்கிறதா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை நாம் அரசியல் விமர்சகர் ராம. சுப்ரமணியனிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடிவருகிறார்கள். மூன்று வேளாண் சட்டங்களையும் மத்திய அரசு நீக்கும்வரை தங்களின் போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்கள். இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக உ.பி.யில் நடைபெற்ற விவசாயிகளின் கருப்புகொடி போராட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த நபர்களின் கார் மோதியதில் நான்கு விவசாயிகள் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறார்கள்?

இந்த விவகாரம் கடும் கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும். விவசாயிகள் மீது வாகனம் மோதியபோது அமைச்சர் மகன் அங்கே இருந்ததாக ஒரு கருத்து கூறப்படுகிறது.அப்படி அவர் அந்த வாகனத்தில் இருந்திருந்தால் அது மிகப்பெரிய தவறு.இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களைக் கூட காவல்துறையினர் தொடர்ந்து தேடிவந்த நிலையில்,விவசாய சங்கங்களின் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு குற்றவாளிகளைக் காவல்துறையினர் கைது செய்தனர். இது எதுவுமே எனக்கு நல்லதாக படவில்லை.

Advertisment

விவசாயிகள் மரணம் தொடர்பாக வருத்தம் தெரிவித்த காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், விவசாயிகள் போராட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல முயன்றபோது தடுக்கப்பட்டனர். குறிப்பாக பிரியங்கா காந்தி சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டார். இதற்குப் பல்வேறு அரசியல் கட்சியனர் கண்டனம் தெரிவித்திருந்தனர். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெறும்போது பெரும்பாலும் அரசியல் கட்சியினரை அங்கே செல்ல அனுமதிப்பதில்லை. சட்ட ஒழுங்கு பிரச்சனை வரும் என்ற நோக்கில் அவ்வாறு காவல்துறையினர் தடுப்பார்கள். மேலும், பிரச்சனைகளை உண்டாக்காமல் இருக்கவே அவர்கள் இவ்வாறு செய்திருப்பார்கள் என்று நான் கருதுகிறேன். இவர்கள் இந்தப் பிரச்சனையை மூடி மறைக்க நினைத்தார்கள், அதை ஒருவர் வீடியோ எடுத்து வெளியே தெரியும்படி காட்டிவிட்டார். வீடியோ எடுத்தவரும் தற்போது மர்மமான முறையில் இறந்துவிட்டார். இதைத்தான் பெரிய துயரமாக பார்க்க வேண்டியுள்ளது. இதைப்பற்றி நாம் பேசினால் எங்கள் மாநிலத்தில் நடைபெற்ற சம்பவம் என்றால் அனைவரும் பேசுகிறார்கள், வேறு மாநிலத்தில் நடைபெறும் சம்பவம் என்றால் கண்டுகொள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று அம்மாநில பாஜகவினர் பேசுவதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது.

நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெற்றது. குறிப்பாக அதிமுகவுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஏற்கனவே இந்த தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று நீங்கள் கூறியிருந்தீர்கள், இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நான் ஏற்கனவே கூறியது போலவே திமுக அதிகப்படியான இடங்களில் வெற்றிபெற்றுள்ளது. 75 சதவீதம் வெற்றிபெறும் என்று எதிர்பார்த்த நிலையில் அனைத்து இடங்களிலும் தற்போது வெற்றிபெற்றுள்ளது. ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்திற்கு ஸ்டாலின் கொடுத்துக்கொண்டிருக்கும் நிலையில், அவருக்கு மக்கள் இந்த வெற்றியைக் கொடுத்துள்ளார்கள். அவர் வெளிப்படையான ஆட்சியைத் தமிழகத்திற்கு கொடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்து வரும் நகர்புற உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக இதைப் போன்றொரு பிரம்மாண்ட வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு அதிகம் இருக்கிறது.

Local bodies elections ramasubramanian
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe