Skip to main content

’’அவனுங்களை விட்டுவிடாதீர்கள்; நான் மீண்டு வருவேன்..சட்டப்போராட்டம் நடத்துவேன்’’- உன்னாவ் பெண்ணின் கடைசிக்குரல்

u

 

த்தரபிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் 23வயது இளம்பெண்ணை அதே பகுதியை சேர்ந்தவர் காதலித்துவந்துள்ளார். திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அப்பெண்ணை உடல்ரீதியாக அணுகியுள்ளார்.  ஒரு கட்டத்தில் அப்பெண்ணை திருமணம் செய்ய மறுத்ததோடு அல்லாமல், தன் நண்பனின் விருப்பத்திற்கு உடன்படவும் கட்டாயப்படுத்தியுள்ளார். உடன்பட மறுக்கவும், கட்டாயப்படுத்தி அவரை பாலியல் வன்கொடுமை செய்து, அதை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொண்டு அப்பெண்ணை மிரட்டி வந்துள்ளனர்.

 

இதையடுத்து அப்பெண்,  சிவம் திரிவேதி, சுபம் திரிவேதி ஆகிய இருவர் மீதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் போலீசில் புகார் அளித்தார்.  இந்தப்புகாரின் பேரில் உடனடி நடவடிக்கை இல்லை என்பதால் தொடர்ந்து அப்பெண் போராடி வந்தார்.  இதனால், கடந்த மார்ச் மாதம்தான் ஒருவர் மட்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அந்த நபரும் கடந்த நவம்பர் மாதம் 30ம் தேதி ஜாமீனில் வந்துவிட்டார்.

 

இளம்பெண் தொடுத்த வழக்கு விசாரணை ரேபரேலி கோர்ட்டில் நடந்து வந்தது.  கடந்த 4.12.2019 அன்று வழக்கு விசாரணைக்காக காலையிலேயே புறப்பட்டுச்சென்றார் அப்பெண்.  அவரை கோர்ட்டுக்கு செல்லவிடாமல் தடுப்பதற்காக சிவம் திரிவேதியும், சுபம் திரிவேதியும் வழியில் காத்திருந்தனர்.  அவர்களுடன் மேலும் மூன்று நபர்களும் இருந்தனர்.  ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாத அந்தப்பகுதியில் அந்தப்பெண்ணை வழிமறித்து தூக்கிச்சென்று அவரின் தலையில் பலமாக அடித்தனர்.  கழுத்தில் கத்தியாலும் குத்தினர்.  இதனால் அப்பெண் மயங்கி கீழே விழுந்ததும், மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தனர்.  உடல் எரிந்ததும் அலறியடித்து ஓடினார் அப்பெண்.

 

u

 

எரிந்துகொண்டிருக்கும் உடலுடனேயே தன்னை காப்பாற்றச்சொல்லி உரக்க சத்தமிட்டுக்கொண்டே ஒரு கிலோ மீட்டர் தூரம் வரைக்கும் ஓடினார் அந்தப்பெண்.  அப்போது ஒருவர், அவசரபோலீஸ் ‘100’க்கு போன் போட்டு கொடுக்க, 5 பேரால் தீ வைத்து எரிக்கப்பட்டதை அப்பெண்ணே போலீசாரிடம் கூறியுள்ளார்.  இதற்குள் தகவலறிந்து அப்பெண்ணின் சகோதரரும் அந்த இடத்திற்கு வந்துவிட்டார்.  அவர், அங்கிருந்தவர்கள் கொடுத்த துப்பட்டாவினால் சகோதரியின் உடலை சுற்றினார்.  இதையடுத்து அவரை ஆம்பூலன்ஸ் மூலம் லக்னோ மருத்துவமனையில் அனுமதித்தனர். 90 சதவிகித தீக்காயங்கள் இருந்ததால்  அங்கு சிகிச்சையளிக்க போதிய வசதிகள் இல்லாததால், அவர் விமான மூலமாக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

u

 

சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு போனபோது, அவருக்கு இலேசான சுய நினைவு இருந்துள்ளது. அப்போது அவர் சகோதரரிடம், ‘’அவனுங்களை விட்டுடாதீங்க.. நான் மீண்டு வந்து சட்டப்போராட்டம் நடத்தி தண்டனை வாங்கிக்கொடுப்பேன்’’என்று கூறியுள்ளார்.  மருத்துவர்களிடம்,  ‘’எனக்கு சாக விருப்பமில்லை. நான் வாழ விரும்புகிறேன். எப்படியாவது என்னை காப்பாற்றுங்கள்...’’என்று கண்ணீர் விட்டுள்ளார். இதையடுத்து அவர் சுய நினைவின்றி போனதால், வெண்டிலேட்டரில் வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வந்தனர்.

 

இந்த விவகாரம் நாடெங்கிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டு, உத்தரபிரதேச சிறையில் அடைக்கப்பட்டனர். மக்களவையில் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது.  கேள்வி நேரத்தின்போது பேசிய காங். மக்களவை கட்சி தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, ‘’ஒரு பக்கம்  ராமர் கோயிலை கட்டுவதற்காக திட்டமிடுகிறார்கள்.   மறுமக்கம் சீதாவை தீவைக்கும் எரிக்கும் சம்பவங்கள் நடக்கின்றன.  உத்தரபிரதேசத்தை உத்தம பிரதேசமாக மாற்றப்போவதாக பேசுகிறார்கள். ஆனால், அது அக்கிரமத்தின் நிலமாக மாறிக்கொண்டிருக்கிறது’’என்று ஆவேசமாக தெரிவித்தார்.  அப்போறு குறுக்கிட்டு பேசிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி, பெண்ணை தீ வைத்து எரிப்பது கண்டிக்கத்தக்கது. அதை மத ரீதியான விவகாரமாக்க வேண்டாம்’’என்றதும், காங். எம்பிக்கள் ஸ்மிருதி ராணி நோக்கி முழக்கமிட்டபடி ஓடிவந்ததால் பதட்டம் ஏற்பட்டது.

 

இந்நிலையில், நேற்று இரவு 11.40மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அப்பெண் உயிரிழந்தார்.

 

பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோதும், தலையில் அடித்து, கத்தியால் குத்தி, கொளுத்தி விட்டபோதும், ஒரு கிலோமீட்டர் தூரம் ஓடி, சட்டப்போராட்டம் நடத்துவதற்காக கடைசி வரையிலும் உறுதியாய் இருந்த அந்த இளம்பெண்ணின், ’நான் மீண்டு வருவேன்..சட்டப்போராட்டம் நடத்தி அவனுங்களுக்கு தண்டனை வாங்கிக்கொடுப்பேன்’என்ற வார்த்தைகள் நிச்சயமாக அசரீரியாகத்தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.


 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்