Skip to main content

அன்று அண்டர்டேக்கரின் தம்பி...இன்று அரசியலில் மேயர்...

Published on 03/08/2018 | Edited on 03/08/2018

 

அமெரிக்கவைச் சேர்ந்த பொழுதுபோக்கு மல்யுத்த நிகழ்ச்சி WWEன் மல்யுத்த வீரர் கேன், இவர் இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் பிரபலமான வீரர்களில் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவின் டென்னெஸ்ஸீ மாகாணத்தின் க்நோக்ஸ் கவுண்டி என்னும் நகரத்தின் மேயராக நேற்று இரவு தேர்தெடுக்கப்பட்டுள்ளார். கேனின் உண்மையான பெயர் க்ளென் ஜாகோப்ஸ். ரிபப்ளிக் என்னும் கட்சி சார்பாக போட்டியிட்டார். இவரை எதிர்த்து டெமோக்ரடிக் கட்சியை சேர்ந்த லிண்டா ஹனே போட்டியிட்டார். க்ளென், லிண்டாவைவிட 66 சதவீத வாக்குகள் பெற்று தேர்தலில் வெற்றிபெற்றிருக்கிறார். இவர் இத்தேர்தலுக்கு போட்டியிடுவதற்தாக ஆரம்பகட்ட தேர்தல் கட்சிக்குள்ளே நடக்கும், அத்தேர்தலில் 23 வாக்குகளே பெற்று வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்பும் ரிபப்ளிக் கட்சிதான்.

 

kane

 

இந்த வெற்றியைத்தொடர்ந்து அமெரிக்காவில் ஒரு நகரின் மேயாராகும் இரண்டாவது WWE மல்யுத்த வீரராகிறார் கேன். இவருக்கு முன்னர் மின்னசொட்டா மாகாணம், ப்ரூக்ளின் நகரின் மேயராக 1991-1995ஆம் ஆண்டுவரை ஜெஸ்ஸி வென்துரா பதவிவகித்தார். பின்னர், மின்னசொட்டா மாகாணத்தின் கவர்னராகவும் 1999-2003 ஆம் ஆண்டு வரை பதவிவகித்தார்.

 

jesse ventura

 

க்ளென் ஜாகோப்ஸின் இந்த வெற்றிக்கு முதல் காரணமாக இருப்பது அவர் பிரபலமான மல்யுத்த வீரர் என்பதே. அவர் 1995ஆம் ஆண்டில்தான் முதன் முதலில் WWF(தற்போது WWE) என்று சொல்லப்பட்ட மல்யுத்த போட்டியில் கலந்துகொண்டார். தொடக்கத்தில் அவ்வளவு பிரபலமாகாமல் இருந்தவர், 1997ஆம் ஆண்டு கேன் என்ற பெயரில் அதுவும் அண்டர்டேக்கரின் சைக்கோடிக் தம்பி என்று ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு, இவரும் பிரபலமாகத் தொடங்கினார். இந்த மல்யுத்த நிகழ்ச்சி வரலாற்றிலேயே அண்டர்டேக்கருக்கும் இவருக்குமான பகை, போட்டி பலரால் பேசப்பட்டிருக்கிறது. அதேபோல இவர்கள் இருவரும் இணைந்தும் டேக் டீம் விளையாடியுள்ளனர். அந்த டேக் டீமின் பெயர் 'பிரதர்ஸ் ஆப் டெஸ்ட்ரக்ஷன்' (அழிவின் சகோதரர்கள்). ’ஸீ நோ ஈவில்’ என்கிற திரைப்படத்தில் நடித்தும் இருக்கிறார்.

 

under taker

 

பிரபல சூப்பர் ஸ்டார்களான ஸ்டீவ் ஆஸ்ட்டின், ஸ்டோன் கோல்டு, ராக் போன்ற வீரர்களுடன் களத்தில் மோதி வெற்றிபெற்றுள்ளார். அதிக வருவாய் ஈட்டிய வீரரிலும் இவரது பெயர் இருக்கிறது. 'சோக்ஸ் ஸ்லாம்' என்னும் ஸ்மாக் இவர் பாணியாகும், கழுத்தை பிடித்து மேலே தூக்கி கீழே அடிப்பதுதான். கேனின் தேர்தல் பரப்புரைக்காக அண்டர் டேக்கரை அழைத்து பிரச்சாரம் செய்துள்ளார். மேலும், இவரது பிரச்சாரத்தில் குறைந்த வரி, உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு, தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்று முழு அரசியல்வாதியாகவே மாறி உறுதியளித்துள்ளார். மேயர் பதவியில் பிரச்சாரம் செய்து வரும் போதே இந்த ஆண்டு மே மாதத்தில் WWE ல் டேனியல் பிரையனுக்கு உதவியாக சண்டையிட வந்தார். பின்னர் அவருடன் கைகோர்த்து டேக் டீம் சாம்பியன்ஷிப்புக்காக போட்டியிட இருந்தார். இதுவும் ஒரு வகையில் மேயர் தேர்தலுக்கான பிரச்சாரம் என்று சொல்கிறார்கள். இவ்வளவு ஏன் தற்போதைய அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் ட்ரம்புமே தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்திற்காக WWEல் கலந்துகொண்டு இருக்கிறார். தமிழக தேர்தல்களில் சினிமாக்காரர்கள் பலர் அரசியல்வாதியாக உருமாறுவதுபோல், வருகின்ற அமெரிக்க தேர்தல்களில் WWE வீரர்களான ஜான் சீனா, ராக் எல்லாம் மாறிடுவாங்களோ...    

 

           

Next Story

இஸ்ரேல் மீது தாக்குதல்; ஈரானுக்கு எதிராக அமெரிக்கா அதிரடி அறிவிப்பு!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
America announced action against Iran to incident on Israel

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படையைச் சேர்ந்த மூத்த தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தத் தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதனையடுத்து, இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலைத் தொடங்கியுள்ளது. ஆனால், ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் சிரியா, லெபனான் எல்லைப் பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

ஈரான் தாக்குதலுக்கு எதிராகவும் இஸ்ரேலுக்கு ஆதரவாகவும் அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்றும், மீறி நடத்தினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என அமெரிக்கா, ஈரானுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.

அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரான் தாக்குதல் நடத்தியதற்காக அமெரிக்கா, ஈரான் மீது பொருளாதாரத் தடையை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை, அமெரிக்காவோடு பிரிட்டனும் கைகோர்த்து அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஜேனட் யெல்லன் கூறுகையில், “வரும் நாட்களில் ஈரானுக்கு எதிராகக் கூடுதல் பொருளாதாரத் தடைகள் நடவடிக்கை எடுப்போம். எந்த மாதிரியான தடைகள் விதிக்கப்படும் என்பது குறித்து விரைவில் விவரங்கள் வெளியிடப்படும்” என்று கூறினார்.

Next Story

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல்; களமிறங்கிய அமெரிக்கா!

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
America sided with Israel against Iran

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதனால், இஸ்ரேல் - ஈரான் இடையே போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு ஆயுதம் வழங்கி வருவதாகக் கூறப்படும் ஈரான், இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில் தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

America sided with Israel against Iran

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது.  ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.