Advertisment

சேலத்தில் பாதாள சாக்கடை திட்டம் பெயரில் 216 கோடி ரூபாய் விரயம்!

சேலத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் அரைகுறையாக செயல்படுத்தப்பட்டு வரும் பாதாள சாக்கடைத்திட்டத்தால் 216 கோடி ரூபாய் மக்கள் பணம் விரயம் ஆவதாக பொதுமக்களிடம் இருந்து அதிருப்தி கிளம்பி உள்ளது.

Advertisment

கடந்த 2006- 2011 திமுக ஆட்சியின்போது, சேலம் மாநகராட்சியில் பாதாள சாக்கடைத் திட்டத்தை அமல்படுத்த திட்டமிடப்பட்டது. இதையடுத்து, 23.2.2006ல் இத்திட்டத்திற்கான அரசாணை (எண்: 63 (டி) வெளியிடப்பட்டு, முதல்கட்டமாக 149.39 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தை மொத்தம் மூன்று பேக்கேஜ்களாக நிறைவேற்றவும் தீர்மானிக்கப்பட்டது.

என்றாலும், எதிர்பார்த்த அளவில் ஒப்பந்ததாரர்கள் முன்வராததால், திட்டத்தை தொடங்குவதில் காலதாமதம் ஆனது. இறுதியாக முதல் இரண்டு பேக்கேஜ்களை நிறைவேற்றும் ஒப்பந்தம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திற்கும், மூன்றாவது பேக்கேஜை முடிக்கும் பணிகள் சென்னையைச் சேர்ந்த சுப்பையா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் வழங்கப்பட்டது.

Underground seawage drainage water in Salem  216 crore in project

Advertisment

பாதாள சாக்கடைத் திட்டத்தின் கீழ் தெருக்கள்தோறும் ஒவ்வொரு 20 மீட்டர் இடைவெளியிலும் ஆள்கள் இறங்கி சுத்தம் செய்வதற்காக ஒரு கழிவுநீர் தொட்டி கட்டப்பட்டது. அந்த கழிவுநீர் தொட்டியுடன் பொருத்தப்பட்ட குழாய்கள், ஒவ்வொரு வீட்டின் கழிவுநீர் வெளியேறும் குழாய்களுடன் இணைக்கப்பட்டு உள்ளது. இதனால் இனி திறந்தவெளி சாக்கடைக் கால்வாய்களே இருக்காது என்ற அளவில் இது ஒரு நல்ல திட்டம்தான். மேலும், கழிவு நீரை சுத்திகரிக்க வெள்ளைக்குட்டை, வண்டிப்பேட்டை, மான்குட்டை, அணைமேடு ஆகிய நான்கு இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

கடந்த திமுக ஆட்சியின்போதே, சம்பிரதாயப்படி இத்திட்டத்தை அப்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சராக மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். ஆனால் 2011ல் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு இத்திட்டத்தின் பட்ஜெட் மீண்டும் திருத்தி அமைக்கப்பட்டது. அதன்படி, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு 149.39 கோடியில் இருந்து 216 கோடியாக உயர்த்தப்பட்டது.

அதன்பிறகும் வேகமெடுக்காமல் இருந்த இத்திட்டம், 7 ஆண்டுகளுக்கு மேலாகியும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. இப்போது முடியுமோ... எப்போது முடியுமோ... என விடை இல்லாத பயணமாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில்தான், சேலம் கடைவீதி பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் பாதாள சாக்கடைத் திட்டத்திற்கு சாலையில் குழி தோண்டினர்.

Underground seawage drainage water in Salem  216 crore in project

திட்டம் தாமதம் ஆகிறது என்பது ஒருபுறம் இருக்க, பாதாள சாக்கடைத் திட்டம் சரியான திசையில்தான் பயணிக்கிறதா என்பதிலும் மக்களுக்கு சந்தேகம் வலுத்துள்ளது. ஏனெனில், அம்மாபேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சேர்மன் ராமலிங்கம் தெருவில் (பாவடி நகரவை ஆண்கள் பள்ளி செல்லும் சாலை) அமைக்கப்பட்டுள்ள பாதாள சாக்கடை குழிகளில் இருந்து, தண்ணீர் குபுகுபுவென்று சீறிப்பாய்கிறது. எப்போதெல்லாம் மழை பெய்கிறதோ, அப்போதெல்லாம் அந்தக்குழிகளில் இருந்து மழைநீர், சாக்கடை கழிவு நீருடன் சேர்ந்து வெளியேறுகிறது.

அதாவது, குடிநீர் குழாயில் வெடிப்பு ஏற்பட்டால் எந்தளவுக்கு தண்ணீர் மேலெழும்புமோ அந்தளவுக்கு பீறிட்டு வெளியேறுகிறது. கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாகவே சேர்மன் ராமலிங்கம் தெரு பகுதியில் அப்படித்தான் தண்ணீர் வெளியேறுவதாகச் சொல்கிறார்கள் அப்பகுதி மக்கள். ஒரு -குழிவிடாமல் எல்லா குழிகளில் இருந்தும் தண்ணீர் வெளியேறுகிறது. சிலவற்றில் கசிவு நீராக வெளியேறுகிறது.

அந்த வழியாகத்தான் மாநகராட்சி மைய அலுவலகம் மற்றும் அம்மாபேட்டை மண்டல அலுவலகங்களில் பணியாற்றும் பல உயரதிகாரிகள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை சென்று வருகின்றனர். ஆனாலும், பாதாள சாக்கடைக் குழிகளில் இருந்து சிமெண்ட் மூடியையும் தாண்டி தண்ணீர் வெளியேறுவதை ஒருவரும் சரிசெய்ய முன்வராததும் மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளக்குட்டை சுத்திகரிப்பு நிலையம் அருகில், பாதாள சாக்கடை குழியில் இருந்து நீர் வெளியேறியதால் அங்கு மட்டும் உடனடியாக குழிக்கும், சாக்கடை கால்வாய்க்கும் தனியாக ஒரு குழாயை பதித்து தற்காலிகமாக சரி செய்தனர். ஆனால் மற்ற இடங்களில் பல்லிளித்துக் கொண்டுதான் இருக்கிறது.

Underground seawage drainage water in Salem  216 crore in project

திட்டம் தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும் இன்னும் பல இடங்களில் பாதாள சாக்கடை தொட்டிகளுடன், வீடுகளுக்கு குழாய் இணைப்பு வழங்கப்படவில்லை. இந்நிலையில், பாதாள சாக்கடை குழிகளில் இருந்து கழிவு பீறிட்டு வெளியேறுவதால் இத்திட்டம் சரியான திட்டமிடலுடன்தான் செயல்படுத்தப்படுகிறதா என்றும், மக்களின் பணம் 216 கோடி ரூபாயும் வீணடிக்கப்பட்டு உள்ளதோ என்றும் சேலம் மாநகராட்சி மக்களிடையே அய்யம் ஏற்பட்டுள்ளது.

இப்பணிகளை ஒப்பந்தம் எடுத்த சுப்பையா கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவன சூப்பர்வைசர் ரபீக் என்பவரிடம் பேசினோம்.

''அம்மாபேட்டை மண்டலத்தில் பாதாள சாக்கடைத் திட்டப்பணிகள் 90 சதவீதம் முடிந்து விட்டது. அம்மாபேட்டை மண்டலத்தில் அனைத்து இடங்களில் இருந்தும் பெறப்படும் கழிவுநீர், இங்குள்ள வெள்ளக்குட்டை சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு வரப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. எதிர்காலத் தேவையைக் கருத்தில்கொண்டு, இந்த நிலையத்தின் சுத்திகரிப்பு திறன் 13 எம்எல்டி ஆக அமைக்கப்பட்டு உள்ளது. 40 ஹெச்பி மோட்டாரும் வைக்கப்பட்டு உள்ளது.

Underground seawage drainage water in Salem  216 crore in project

ஆனாலும், மழைக்காலங்களில் வழக்கமான கழிவுநீருடன், மழைநீரும் சேர்ந்து வருவதால், கிராவிட்டி ஃபோர்ஸ் தாங்காமல் பாதாள சாக்கடை கு-ழிகளின் வழியாக தண்ணீர் வெளியேறுகிறது. இப்படி ஒரு பிரச்னை இருப்பதே எங்களுக்கு இப்போதுதான் தெரிய வந்துள்ளது. விரைவில் இப்பிரச்னையை சரி செய்து விடுவோம்,'' என்றார்.

இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் சதீஸை தொடர்பு கொள்ள பலமுறை முயன்றும் அவர் செல்போனை எடுக்கவில்லை. அவர் எப்போது விளக்கம் அளித்தாலும் பிரசுரிக்க தயாராக இருக்கிறோம்.

Corporation Drainage municipality Salem Tamilnadu
இதையும் படியுங்கள்
Subscribe