Advertisment

நான் அப்படி பேசுவேனா? அதற்கான தகுதி எனக்கு இல்லை..? அதிமுக எம்எல்ஏ பேச்சால் பரபரப்பு!!!

kumaraguru

உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.குமரகுரு

Advertisment

பல்வேறு கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் தமிழகம் எங்கும் பொதுமக்களுக்கு கரோனா நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்த அடிப்படையில் கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக மா.செ.வும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ.வுமான குமரகுரு அவரது தொகுதியில் உள்ள பல்வேறு கிராமங்களுக்கு சென்று நிவாரண உதவிகளை வழங்கி வருகிறார்.

கடந்த 27ஆம் தேதி பரிந்தல் என்ற கிராமத்திற்கு இரவு 8 மணியளவில் நிவாரண உதவி வழங்க சென்றுள்ளார். அந்த ஊரில் அவரது கட்சிகாரர்கள் அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் நிவாரணம் பெற டோக்கன் வழங்கியுள்ளனர். எம்.எல்.ஏ. நிவாரணம் வழங்க ஆரம்பித்ததும் பொதுமக்கள் மத்தியில் கோபம் உண்டானது. பலரும் எம்.எல்.ஏ.வை பார்த்து மூன்று மாதமாக எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை, வருமானம் இல்லாமல் கரோனா ஊரடங்கால் பசி பட்டினியோடு வீட்டிலேயே முடங்கிக்கிடக்கிறோம்.

எங்களை பார்ப்பதற்கு உங்களுக்கு இப்போதுதான் வழி தெரிந்ததா? நிவராணம் கொடுப்பதிலும் உங்கள் கட்சிகாரர்களாக பார்த்து கொடுக்கிறீர்கள், அப்படி கொடுக்கும் பத்து கிலோ அரிசியும், காய்கறிகளும், கொஞ்சம் மளிகை பொருட்களும் எங்கள் வறுமையை தீர்த்துவிடுமா? இதற்காக இந்த இரவு நேரத்தில் மணிக்கணக்கில் சாலையோரத்தில் காத்துகிடக்க வேண்டுமா? மீண்டும் வரும் தேர்தலில் எங்கள் ஓட்டு உங்களுக்கு தேவை இல்லையா? என இப்படி ஆளாளுக்கு கொதித்துள்ளனர்.

Advertisment

அதில் ரவி, கலியன் என்ற இரு இளைஞர்களும் எம்எல்ஏவிடம் நேருக்கு நேர் கேள்வி கேட்டுள்ளனர். அப்போது கடும் கோபமுற்ற எம்எல்ஏ குமரகுரு, எவன் அப்பன் வீட்டு காசிலும் நான் இந்த உதவியை செய்யவில்லை. என் சொந்த பணத்தில் வாங்கிகொடுக்கின்றேன். கொடுக்கிறத வாங்கிக்க, அடுத்த முதல்வரே நான்தான். எங்கிட்டயே எதிர்த்து கேள்விகேட்க உங்களுக்கு அவ்வளவு தைரியாமா? என ஆவேசமாக பேசியபடி எம்எல்ஏ பாதுகாப்புக்கு வந்திருந்த எலவாசனூர்கோட்டை எஸ்ஐ மாணிக்கத்தை கோபத்துடன் திரும்பி பார்த்துள்ளார்.

அந்த இரு இளைஞர்களையும் கட்டாயப்படுத்தி காவல் நிலையம் கொண்டு சென்றார் எஸ்ஐ மாணிக்கம். எம்எல்ஏவும் நிவாரணத்தை அறைகுறையாக கொடுத்துவிட்டு புறப்பட்டு சென்றார். எம்எல்ஏவை எதிர்த்து கேள்வி கேட்டதற்காக இளைஞர்களை சிறைபிடிப்பதா? எம்எல்ஏவின் கண் அசைவிற்கு இரு இளைஞர்களை காவல் நிலையத்திற்கு கொண்டுசென்றதால் அக்கிராமத்தைசேர்ந்த 500க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் எலவாசனூர்கோட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இந்த தகவல் அறிந்து உளுந்தூர்பேட்டை திமுக ஒ.செ. வைத்தியநாதன் காவல் நிலையத்திற்கு வந்தார். அவரும் எஸ்.ஐ. மாணிக்கத்திடம், சட்டமன்ற உறுப்பினர் செயல்பாடுகளை பற்றி கேள்வி கேட்டதற்கு இளைஞர்களை எப்படி கைது செய்யலாம் என்று கேட்டுள்ளார். ஆனால் எஸ்ஐ மாணிக்கம், அந்த இளைஞர்களை விடுதலை செய்ய முடியாது என தெரிவித்திருக்கிறார்.

இது பற்றி நாம் திமுக ஒசெ வைத்தியநாதனிடம் கேட்டோம், சட்டத்திற்கு புறம்பாக எந்த தவறும் செய்யாத அந்த இரு இளைஞர்களையும் கைது செய்தது தவறு என கூறி வாக்குவாதம் நடந்தது. இந்த தகவல் உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி விஜயகுமார் அறிந்து அவர் கோட்டை காவல்நிலையத்திற்கு விரைந்து வந்தார். அங்குள்ள நிலைமையை பார்த்து புரிந்துகொண்ட அவர், அந்த இளைஞர்கள் இருவரையும் விடுதலை செய்யுமாறு எஸ்ஐ மாணிக்கத்திடம் கூறினார். அதற்கு மாணிக்கம் இவர்களை வெளியே அனுப்ப முடியாது. எம்எல்ஏ சொன்னால்தான் அனுப்புவேன் என்று டிஎஸ்பியிடமே எதிர்விவாதம் செய்தார். இதை பார்த்து கோவம் அடைந்து, எஸ்ஐ மாணிக்கத்திடம் காவல் நிலையம் வந்த பிறகு இந்த பிரச்சனை பற்றி முடிவெடுக்க வேண்டியது நமது கடமை என்று கடுமையாக பேசிய பிறகு அந்த இளைஞர்களை எஸ்ஐ மாணிக்கம் வெளி அனுப்பினார். ஊர்மக்களும் கலைந்து சென்றனர்.

Ulundurpet

ரவி கலியன்

மக்கள் வரிபணத்தில் சம்பளம் வாங்கும் எஸ்ஐ மாணிக்கம், தன் உயர் அதிகாரியின் உத்தரவை கூட மதிக்காமல் எம்எல்ஏவின் உத்தரவுக்காக காத்திருந்தது கண்டிக்கத்தக்கது. ஆளும் கட்சி எம்எல்ஏவின் ஏவல் ஆளாக பணிசெய்யும் இந்த எஸ்ஜ மீது அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். எம்எல்ஏவின் செயல்பாடுகளில் அதிருப்தி அடைந்த வாக்களித்த மக்கள் கேள்விகேட்பது சனநாயக உரிமை. அதுகூட தெரியாமல் வாக்களித்த மக்களையே சிறைக்கு அனுப்ப பார்க்கும் இவர் கடந்த 15 ஆண்டுகளாக எம்எல்ஏவாக உள்ளார்.

dmk osey vayithiyanathan

தி.மு.க. ஒ.செ. வைத்தியநாதன்

தொகுதி மக்களுக்கு உருப்படியான திட்டங்களை கொண்டு வரவில்லை. தொகுதி முழுக்க விவசாயம், அதை சார்ந்த கூலிவேலை இதை மட்டுமே நம்பி உள்ளனர். கடந்த சில ஆண்டுகளாக போதிய மழையில்லாததால் விவசாயம் நலிந்து போனது. வேலை கிடைக்காததால் தொகுதியிலுள்ள பல ஆயிரக்கணக்கான மக்கள் கேரளா, கர்நாடகா, மும்பை, சண்டிகர், சென்னை இப்படி பல்வேறு ஊர்களுக்கும்,மாநிலங்களுக்கும் பிழைப்பு தேடி சென்று அங்கு உழைத்து அதன் மூலம் தங்கள் குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்கள்.

அப்படிப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில் ஒரு சிறுதொழிற்சாலை கூட கொண்டு வராத எம்எல்ஏ பின்தங்கிய பகுதியான இப்பகுதி பிள்ளைகள் படிப்பதற்கு அரசு சார்ந்த கல்லூரிகள் கூட துவக்கவில்லை. ஆனால் இவர் சொந்தமாக கல்லூரியையும், பள்ளியையும் துவக்கி கொண்டுள்ளார். இப்படிப்பட்டவர் மக்களின் தேவைகளை நிறைவேற்றாவிட்டாலும் கூட பரவாயில்லை அவர்களை காவல்துறையை ஏவிவிட்டு வதைக்காமல் இருந்தாலே போதும் என்கிறார் திமுக ஒசெ வைத்தியநாதன்.

இந்த பிரச்சனை குறித்து எம்எல்ஏ குமரகுரு என்ன பதில் சொல்கிறார் என்பது பற்றி அவரிடமே கேட்டோம். கரோனா நிவாரணம் கட்சி பார்க்காமல் எனது தொகுதி முழுவதும் உள்ள 1,25,000 ரேஷன் கார்டுகள் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் பத்து கிலோ அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், காய்கறிகள் அடங்கிய தொகுப்புகளை கடந்த 41 நாட்களாக இரவு பகல் பாராமல் வழங்கி வருகிறேன்.

அன்று பரிந்தல் கிராமத்திற்கு நிவாரணம் வழங்க சென்றபோது நிவாரணம் பெறும் மக்களுக்கு முன்கூட்டியே டோக்கன் வழங்கப்பட்டதில் எனக்கு தெரியாமல் சில தவறுகள் நடந்துள்ளன. இதனால் குறிப்பிட்ட சில குடும்பத்திற்கு மட்டும் நிவாரணம் வழங்கப்படுவதாக தவறாக நினைத்துகொண்டு ஆளாளுக்கு கோபத்துடன் பேசினார்கள்.

அப்போது நான் தவறாக எதையும் பேசவில்லை. அடுத்த முதல்வர் நான் என்று எந்த அடிப்படையில் கூறுவேன்? அதற்கான தகுதி எனக்கு இல்லை என்பதை அறிந்தவன். மேலும் அம்மா மறைவுக்கு பிறகு தெய்வமாக முதலமைச்சரை பார்கிறேன். என் கூட பிறவாத சகோதரர் அவருக்கும் எனக்குமான நெருங்கிய நட்பு பற்றி பலருக்கும் தெரியும். அப்படிப்பட்டவரின் பெயருக்கும் புகழுக்கும் சிறிதும் கலங்கம் ஏற்ப்படுத்தாத வகையில் செயல்பட்டு வருகிறேன். எங்கள் ஆட்சிக்கு எந்த விதத்திலும் கெட்டபெயர் வரக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறேன். அப்படிப்பட்ட நான் இதுபோன்ற வார்த்தைகளை பேசி இருப்பேனா என்று யோசிக்கவேண்டும். இது முற்றிலும் தவறான தகவல்.

என் பெயருக்கும், எங்கள் கட்சிக்கும் கெட்டபெயர் உருவாக்குவதற்கு திட்டமிட்டு திமுக ஒ.செ. வைத்தியநாதனை முன்னிருத்தி செயல்படுகிறார்கள். அந்த ஊரில் ஏற்றப்பட்ட அந்த சின்ன சலசலப்பின் போது போலிஸாரால் அழைத்துசெல்லப்பட்ட அந்த இருவரையும் விட்டுவிடுமாறு போலிஸாரை கேட்டுகொண்டேன். அவர்களை நான் கைது செய்ய சொல்லவில்லை என்னை பற்றி தவறான தகவலை வாட்சப்பில் வெளியிட்ட ஒரு திமுக பிரமுகர் மீது போலிஸ் நடவடிக்கை எடுப்பதாக கூறியதை கூட நான் வேண்டாம் என்று கூறிவிட்டேன்.

nakkheeran app

தொகுதி மக்களுக்கு என்னால் இயன்ற உதவிகளையும் திட்டங்களையும் செய்து வருகிறேன். என்னை பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். திமுகவினர் சூழ்ச்சி பலிக்காது. போலிசாரால் அழைத்து செல்லப்பட்ட அந்த இரு இளைஞர்களும், ஊர்மக்களும் மறுநாள் காலை என்னிடம் வந்து நடந்த சம்பவத்திற்க்கு வருத்தம் தெரிவித்து விட்டு சென்றனர். எந்த பாகுபாடுமில்லாமல் அந்த ஊரில் அனைத்து மக்களுக்கும் கரோனா உதவியை வழங்கியுள்ளோம். எனவே நான் முதல்வருக்கும், கட்சிக்கும், மக்களுக்கும் விசுவாசமாக நடந்துவருகிறேன். என்னை பற்றி தொகுதியில் நன்கு விசாரித்துகொள்ளுங்கள் என்கிறார் எம்எல்ஏ குமரகுரு.

சம்பவத்திற்க்கு மறுநாள் எலவாசனூர்கோட்டை எஸ்.ஜ. மாணிக்கம் சம்பந்தப்பட்ட பரிந்தல் இளைஞர்கள் ரவி, கலியன் ஆகிய இருவரையும் சில அதிமுகவினருடன் காவல் நிலையம் வரவழைத்து அங்கிருந்து அவர்களை எம்எல்ஏ வீட்டிற்கு அழைத்து சென்று எம்எல்ஏவிடம் மன்னிப்பு கேட்கவைத்து அவர்களை அனுப்பிவைத்துள்ளார் என்கிறார்கள் கிராம இளைஞர்கள்.

corona issue MLA ulundurpet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe