Skip to main content

"உக்ரைனோடு மட்டும் ரஷ்யா நின்றுவிடாது" - உலக நாடுகளை எச்சரிக்கும் ஓர் உக்ரைனியரின் கட்டுரை!

Published on 03/03/2022 | Edited on 03/03/2022

 

ukrainian president's aide writes about russia ukraine crisis

 

கடந்த எட்டு நாட்களாக உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வரும் நிலையில், நாளுக்கு நாள் போர் தீவிரமடைந்து வருகிறது. உக்ரைன் நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களைக் கைப்பற்றியுள்ள ரஷ்யா, அந்நாட்டின் முக்கியமான இடங்களையும், கட்டுமானங்களையும் குறிவைத்துத் தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. ரஷ்யாவின் இந்த செயலை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்கா உள்ளிட்டவை ரஷ்யா மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் உதவியாளர் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரை ஒன்று தற்போது உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. 

 

ஜெலென்ஸ்கியின் உதவியாளரான ஆண்ட்ரி யெர்மக், ஜெலன்ஸ்கியுடன் பதுங்கு குழியில் இருந்தவாறு எழுதியதாகக் குறிப்பிடப்பட்டுள்ள அந்த கட்டுரையில், "உக்ரைனுடனான ரஷ்யாவின் போர் என்பது ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஒட்டுமொத்த உலகளாவிய படுகொலைக்கான ஒரு முன்னுரையாக இருக்கலாம். எங்கள் நாட்டைப் பாதுகாக்க நாங்கள் எங்களின் கடைசி மூச்சு உள்ள வரை போராடுவோம். ஒரு வாரமாக, ரஷ்ய குண்டுகள் எங்களது தலைக்கு மேல் விழுந்து கொண்டிருக்கின்றன. எங்கள் மீதான ரஷ்யாவின் தொடர்ச்சியான தாக்குதலுக்கு மத்தியிலும், படையெடுப்பாளர்களைத் தோற்கடிப்பதற்கான எங்கள் முடிவில் நாங்கள் உறுதியாகவும் ஒன்றுபட்டும் நிற்கிறோம். என்றைக்கு வேண்டுமானாலும் (மரணத்தின் மூலம்) நமது குரல்கள் அடக்கப்படலாம். ஆனால், அதுவரை நமது ஒவ்வொரு குரலும் சுதந்திர உக்ரைனுக்கான ஆதரவு குரலாகவே இருக்கட்டும். 

 

ukrainian president's aide writes about russia ukraine crisis

 

மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு அதிக இராணுவத் தளவாடங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதோடு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் தாக்குதலைத் தடுக்க உக்ரைனுக்கு உதவ ரஷ்யா மீது இன்னும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும். நேரடியாகக் களத்தில் இறங்கி எங்களுக்காகப் போர் புரியுங்கள் என எங்கள் நட்பு நாடுகளை நாங்கள் கேட்கவில்லை. ஆனால் எங்கள் குடும்பங்களையும் எங்கள் நிலத்தையும் தொடர்ந்து பாதுகாக்க மேற்குலகம் எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். ரஷ்யா தற்போது செய்துள்ள வலி மிகுந்த தவறுகளை உலகத்தின் முன்பு வெளிச்சம்போட்டுக் காட்ட நாங்கள் விரும்புகிறோம். எங்களுக்கு உதவுவதற்காக விரைவான முடிவுகளை எடுத்ததோடு, ரஷ்யப் பொருளாதாரத்திற்கு எதிராகப் பொருளாதாரத் தடைகளை விதித்த எங்கள் நட்பு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் உட்பட உலகெங்கிலும் உள்ள ஜனநாயக நாடுகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். 

 

ஆனால், இது மட்டும் போதாது. எங்களுக்கு இன்னும் தேவை. இராணுவ உதவி வரும் என்று எங்களிடம் கூறுவதை நிறுத்துங்கள். இங்கு எங்களது சுதந்திரமும், அதைவிட அதிகமாக உங்களது சுதந்திரமும் மிகப்பெரிய ஆபத்தில் உள்ளது. ரஷ்யா உக்ரைனோடு மட்டும் நின்றுவிடாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். அது எப்படியும் இந்த மோதலுக்கு நேட்டோவை இழுத்துவிடும். மீண்டும் எந்த தவறையும் செய்துவிடாதீர்கள். உக்ரைனைக் கடந்தும் தனது சித்தாந்தத்தை எடுத்துச் செல்வதற்காக புதின் இந்த இரத்தக்களரியை நீட்டிப்பார். அவர் நிறுத்தப்பட வேண்டும். கிரெம்ளின் புதிய ரஷ்யப் பேரரசை உருவாக்க விரும்புகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மக்களின் எண்ணங்களையும், ரஷ்யாவின் நோக்கத்தையும் பற்றிப் பேசியுள்ள இந்த கட்டுரை தற்போது உலக அரங்கில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது.