Advertisment

நான் போட்டியிட விரும்பவில்லை! - உதயநிதியின் அதிர்ச்சி முடிவு!

dddd

திமுகவில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு இணையான அரசியல் செல்வாக்குடன் பார்க்கப்படுபவர் உதயநிதி ஸ்டாலின். திமுகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பதுடன், ஸ்டாலினை முதல்வராக்கும் இலக்குடன் தமிழகம் முழுவதும் தேர்தல் சூறாவளிப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார் உதயநிதி.

Advertisment

திமுக ஆட்சி அமையும் போது உள்ளாட்சித் துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்பார் எனத் திமுக இளைஞரணி அணியினர் இப்போதே சொல்லிவரும் நிலையில், சென்னையில் உள்ள திருவல்லிக்கேணி-சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்குவார் என அறிவாலயம் தரப்பில் எதிரொலிக்கவும் செய்தது. அதற்கேற்ப, அத்தொகுதியில் போட்டியிட விருப்ப மனுவும் தாக்கல் செய்திருந்தார் உதயநிதி.

Advertisment

இந்த நிலையில், இந்த முறை நான் போட்டியிடமாட்டேன் என உதயநிதி சொல்வதாக இளைஞரணியின் உள்வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இந்த தகவல் மெல்ல மெல்லப் பரவி திமுகவின் மூத்த நிர்வாகிகள் வரை பேசு பொருளாகியிருக்கிறது.

இது குறித்து விசாரித்தபோது, "இந்த தேர்தலில் திமுகவுக்கு எதிராக எந்த ஒரு குற்றச்சாட்டையும் வைக்கமுடியாமல் திணறும் அதிமுக-பாஜகவினர், வாரிசு அரசியலைச் சொல்லி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளனர். இதற்கு இடம் கொடுக்கக் கூடாது எனக் கருதும் உதயநிதி, அப்பாவை (மு.க.ஸ்டாலின்) முதல்வராக்குவதுதான் இந்தத் தேர்தலில் முக்கியம். நான் எம்.எல்.ஏ.ஆக வேண்டும் என்பது முக்கியம் கிடையாது. எதிர்க்கட்சிகள் எழுப்பும் வாரிசு பிரச்சனையை முடக்க வேண்டுமானால் தேர்தலில் நான் போட்டியிடக்கூடாது. அதனால் நான் போட்டியிட விரும்பவில்லை. திமுக ஆட்சி அமைய எந்த தியாகத்தையும் செய்யத் தயார் என்கிற மனநிலையில் உதயநிதி இருப்பதாகத் தெரிகிறது" என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.

இப்படி ஒரு நிலைப்பாட்டை உதயநிதி எடுத்தால், அதை தலைவர் என்கிறமுறையில் மு.க.ஸ்டாலின் ஏற்றுக் கொண்டாலும், கட்சியின் மூத்த தலைவர்கள் ஏற்க மாட்டார்கள். உதயநிதி போட்டியிட்டே தீர வேண்டும் என வலியுறுத்துவார்கள் என்றும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

tn assembly election 2021 udhayanithi stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe