hjk

Advertisment

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக அரசியல் வெப்பம் அதிகரித்துக் காணப்படுகின்றது. நீண்ட காலமாக திமுகவினரால் எதிர்பார்க்கப்பட்டு வந்த உதயநிதி ஸ்டாலின் தற்போது அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. உதயநிதி அமைச்சரானதிலிருந்தே அவரை குறிவைத்துத் தொடர்ந்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அதிமுக மற்றும் பாஜகவின் விமர்சனங்கள் குறித்துபிரபல வழக்கறிஞர் பாலு அவர்களிடம் கேட்ட போது, "உதயநிதியை வாரிசு என்று பேசும் எந்தக் கட்சியில் வாரிசு அரசியல் இல்லை என்று முதலில் அந்தக் கட்சிகள் விளக்கமளிக்க வேண்டும். ஒரு இயக்கத்தின் அடுத்தகட்ட வளர்ச்சியாகத்தான் இதைப் பார்க்க வேண்டுமே தவிர, இதில் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது.

உலகத்தில் உள்ள ஜனநாயக இயக்கங்கள் அனைத்திலும், இன்னும் சொல்லப்போனால் இங்கிலாந்து அரசக்குடும்பத்தில் ஆரம்பித்து நம்மூர் தேசிய; மாநிலக் கட்சிகள் வரை, அனைத்துக் கட்சிகளிடமும் வாரிசு அரசியல் என்று காலங்காலமாக இருக்கிறது. நான் உதயநிதியின் இந்த அரசியல் வருகையை வாரிசு என்ற அரசியலாகப் பார்க்கவில்லை.திராவிட இயக்கத்தின் வழித்தோன்றலாகவே பார்க்கிறேன். வாரிசு என்ற ஒற்றைப் பதத்தில் தகுதி இருக்கின்ற யாருமே அரசியலுக்கு வர முடியவில்லை என்றால், அப்புறம் எதற்காக ஜனநாயகம் என்ற அமைப்பு இருக்கிறது. யாரையும் வலுக்கட்டாயமாக ஒரு இடத்தில் தொடர்ந்து திணிக்க முடியாது.

Advertisment

ஜனநாயக முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட ஒரு நபரை எப்படி அமைச்சராக்கலாம், முதல்வராக்கலாம் என்று கேட்பதெல்லாம் சரியான நடைமுறை ஆகாது. சட்டமன்ற உறுப்பினராக இருக்கின்ற எவரையும் அமைச்சராக்கும் உரிமை மாநில முதல்வருக்கு இருக்கிறது. எனவே, இவர் பணி செய்வாரா என்பதை அவர் முடிவு செய்வார். அதிமுகவில் எம்ஜிஆருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த முதல்வர் உள்ளிட்ட முக்கியப் பதவிகளிலிருந்த யாருமே இந்த வாரிசு அரசியலில் வரமாட்டார்களா? உதயநிதி மட்டும் டக்கென வாரிசு அரசியலில் வந்து அமர்ந்து கொள்கிறாரா என்று தெரியவில்லை. தனிப்பட்ட வெறுப்பரசியலே இந்த மாதிரியான தனிப்பட்ட தாக்குதலுக்குக் காரணமாக உள்ளது” என்று கூறினார்.