ADVERTISEMENT

ஸ்டாலினுக்குக் கிடைக்காதது... உதயநிதிக்குக் கிடைத்தது!

04:07 PM May 02, 2021 | vasanthbalakrishnan

ADVERTISEMENT

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு தொகுதியாக வெற்றி அறிவிப்புகள் வரத் தொடங்கியிருக்கின்றன. சென்னை சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் வெற்றி பெரிய அளவு வாக்கு வித்தியாசத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது உதயநிதி ஸ்டாலின் போட்டியிடும் முதல் தேர்தலாகும்.

ADVERTISEMENT

2019இல் திமுகவின் இளைஞரணி செயலாளராக நியமிக்கப்பட்ட உதயநிதி அதன் பின்னர் தீவிர அரசியலில் ஈடுபட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்காக பிரச்சாரம் செய்தார். வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்கள் எழுந்த போதும் அதை கருத்தில் கொள்ளாமல் செயல்பட்டு வந்த அவருக்கு சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பு கிடைத்தது. தனது தொகுதி மட்டுமல்லாமல் பரவலாக பிரச்சாரம் மேற்கொண்ட உதயநிதியின் 'AIIMS - செங்கல்' பிரச்சாரம் வைரல் ஆனது. மதுரையில் பாஜக அரசு கட்டிய AIMS மருத்துவமனை இதுதான் என்று ஒரு செங்கலை காட்டி கிண்டல் செய்தார் உதயநிதி. பொதுமக்கள் அதை ரசித்தனர். AIMS மருத்துவமனை கட்ட வைத்திருந்த செங்கலை உதயநிதி திருடினார் என்று பாஜக காரர் ஒருவர் புகாரளித்தது எக்ஸ்ட்ரா ரைஸ் காமெடி.

உதயநிதி தனது 43ஆவது வயதில் முதல் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றிருக்கிறார். அவரது தந்தை ஸ்டாலின் தனது 31வது வயதிலேயே அந்த வாய்ப்பை பெற்றார். ஆனால், ஸ்டாலின் போட்டியிட்ட முதல் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார். ஸ்டாலின் போட்டியிட்டது 1984 சட்டமன்ற தேர்தல், ஆயிரம் விளக்கு தொகுதி. அந்த தேர்தலின்போது எம்ஜிஆர் அமெரிக்காவில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் இங்கு வராமலேயே அதிமுக அந்தத் தேர்தலில் வென்றது. ஸ்டாலின் தனது முதல் தேர்தலில் வெற்றியை நழுவவிட்டபோதும் பிறகு பல முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்றார். உதயநிதியை விட களப்பணியில் அதிகம் ஈடுபட்டவர், சிறை சென்று சிரமங்களை சந்தித்தவர் ஸ்டாலின். என்ற போதும், சந்தித்த முதல் தேர்தல் வெற்றி என்பது ஸ்டாலினுக்குக் கிடைக்கவில்லை, உதயநிதிக்குக் கிடைத்துவிட்டது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT