Skip to main content

ஸ்டாலின் மகனாக இருப்பதால் உதயநிதி அரசியலுக்கு வரக்கூடாதா? - ராஜீவ்காந்தி கேள்வி!

Published on 04/02/2021 | Edited on 04/02/2021

 

hjk


தமிழகத்தில் விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், மாற்றுக் கட்சியில் இருந்து அடுத்த கட்சியில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் திமுக மற்றும் அதிமுகவில் மாற்றுக் கட்சியில் இருந்து வருபவர்களை இணைக்கும் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய அக்கட்சியின் முக்கியப் பிரமுகரான வழக்கறிஞர் ராஜீவ் காந்தி தற்போது திமுகவில் தன்னை இணைத்துக்கொண்டார். இதுவரை விமர்சனம் செய்து வந்த கட்சியில் எவ்வாறு இணைந்தீர்கள், அதற்குக் காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கேள்விகளை அவரிடம் முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

"தமிழ்நாட்டில் பாஜகவை எதிர்க்கும்  ஒரே கட்சியாக நாம் தமிழர் கட்சி தான் தொடர்ந்து இருந்துவருகிறது" என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தெரிவித்துருகிறார். பாஜகவோடு திமுக கூட்டணி வைத்துள்ளதே என்று அவர் தொடர்ந்து கூறி வருகிறாரே? அப்படி இருக்கும் போது சீமானை பாஜகவோடு எப்படி ஒப்பிடுகிறார்கள், அதற்கு முறையான காரணம் உங்களிடம் இருக்கிறாதா? 

 

கடந்த ஆறு மாதத்திற்கு முன்புவரை இந்த இயக்கத்தில் தான் நான் தொடர்ந்து இருந்துவந்தேன். அதிகாரத்தை எதிர்த்தோ, குருமூர்த்தி போன்றோர்களை எதிர்த்தோ இந்த இடைப்பட்ட காலத்தில் கட்சி என்ன விதமான எதிர்வினைகளை ஆற்றி இருக்கிறது? அவர்கள் ஆரியத்தின் மீது தொடர்ந்து மென்மையான பார்வையைப் பார்க்கிறார்கள். பெரிய எதிர்வினைகளை அவர் இன்றுவரை ஆற்றவில்லை. அவர் பி டீமாக இருக்கிறார் என்பதை தாண்டி கட்சி இப்படி இருக்கிறதே என்ற அச்சம் கட்சியில் இருந்த வரையில் தொடர்ந்து எனக்கு இருந்து வந்ததது. 

 

அந்த மென்மையான போக்கு திமுகவிடம் இல்லை என்ற நம்பிக்கை உங்களுக்கு எங்கிருந்து வந்தது?

 

கூட்டணி வைத்ததோடு, காரைக்குடியில் ராஜாவை வெல்ல வைத்ததை தாண்டி, இன உரிமையில் திமுக எங்கே விட்டுக்கொடுத்தது. நான் முக்கியமாக பார்ப்பது இட ஒதுக்கீடு. அதில் இதுவரை திமுக சமரசம் செய்துள்ளதா? பொருளியல் ரீதியாக இடஒதுக்கீடு இங்கே கொண்டு வரும்போது தான் இட ஒதுக்கீட்டின் அடிப்படையே ஆட்டம் கண்டுவிடும் என்று பயப்படுகிறேன். அதை யாரும் ஏற்க முடியாது. அதை திமுக தற்போது வரை எதிர்த்து வருகிறது. அதில் யாருக்கும் மாற்றுக்கருத்து என்பதற்கு இடமில்லையே. எனக்கு ஒரு அமைப்பு தேவைப்படுகிறது. ஜனநாயக ரீதியாகக் கருத்து எங்கிருக்கிறதோ அதில் பயணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. திமுக அதில் தொடர்ந்து பயணித்ததால் நான் அந்த கட்சியில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இணைந்தேன். மக்களின் உரிமைகளை மீட்டெடுக்க இன்று வலிமையாகக் கட்டமைக்கப்பட்டிருக்கின்ற திமுக பயன்படும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். 

cnc

 

 

உங்கள் கட்சியின் இளைஞரணிச் செயலாளர் மீது பல்வேறு விமர்சனங்கள் இருக்கிறது. அவருக்கு என்ன பின்புலம் இருக்கிறது என்று நீங்கள் நம்புகிறீர்கள்? 

 

ஸ்டாலின் மகனாக இருப்பதால் அவர் அரசியலுக்கு வரக்கூடாது, பதவிக்கு வர கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம். அந்த வகையில் திமுகவுக்கு அவர் வந்தது தகுதியின் அடிப்படையில்தான் என்பதை நான் நம்புகிறேன். அந்த வகையில், இளைஞரணியை வழிநடத்த அவருக்கு முழு தகுதி இருக்கிறது. திராவிட இயக்கங்களை ஒழிக்க வேண்டும் என்று 'சோ' தொடங்கி குருமூர்த்தி வரை தொடர்ந்து வேலைசெய்தார்கள். தற்போதும் செய்து வருகிறார்கள். அதற்கு கண்முன் உள்ள உதாரணம் அதிமுக. அவர்கள் கட்சியில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், அமைச்சரவையில் என்ன மாற்றம் கொண்டுவர வேண்டும், யாரை நீக்க வேண்டும், சேர்க்க வேண்டும் என்பதில் இவர்களின் தலையீடு இருக்கிறது என்பது தற்போது வெளிப்படையாகத் தெரிகிறது. ஸ்டாலின் மகன் என்பதற்காக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கிறீர்கள் என்றால், ஸ்டாலின் மகனாக இருப்பதால் அவர் பதவிக்கு வரக் கூடாதா? என்பதை அவர்கள் தான் தெளிவுபடுத்த வேண்டும். யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதில் ஆரியம் எப்போதும் விழிப்பாக இருக்கிறது. உதயநிதி விஷயத்தில் அதனால்தான் உள்ளே நுழைகிறார்கள்.