Skip to main content

சசிகலாவை பார்த்து பேசும் 2 பேர்! - யாரையும் நெருங்க விடுவதில்லை என பகீர் புகார்!

Published on 23/02/2021 | Edited on 23/02/2021

 

ddd

 

சசிகலா வெளியே வந்தால் அவரைச் சந்திக்க 10 அ.தி.மு.க. அமைச்சர்கள் வருவார்கள், அவரது சொந்த பந்தங்களுடன் 50க்கும் மேற்பட்ட எம்.எல். ஏ.க்கள் தொடர்பில் இருக்கிறார்கள், அ.தி.மு.க. கட்சி உடையும், எடப்பாடி பழனிசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய மாட்டார் என சசிகலா வந்தால் நடக்கும் விவரங்கள் பற்றி அவரது சொந்தபந்தங்கள் ஏகப்பட்ட பில்டப்களைக் கொடுத்து வந்தார்கள். அது எதுவும் இதுவரை நடக்கவில்லை. அவரது சமூகமான முக்குலத்தோர் சமூகத்தைச் சார்ந்த 6 அமைச்சர்களில் ஒருவர்கூட சசிகலா இருக்கும் பக்கம் வெளிப்படையாக இதுவரை வரவில்லை. கருணாஸ், தனியரசு போன்ற சசிகலாவால் உருவாக்கப்பட்ட சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் கூட சசிகலாவை வெளிப்படையாக சந்திக்கவில்லை.

 

இந்நிலையில் பா.ஜ.க. ஆதரவுடன் சசிகலா இயங்குகிறார் என சொல்லப்பட்ட விவரங்களும் உண்மையில்லை என நிரூபிக்கப்பட்டுள்ளது. இப்படி ஏகப்பட்ட விமர்சனங்கள் சசிகலா தரப்பைப் பற்றி எழுந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில் சசிகலா இதுவரை மவுனமாக இருக்கிறார். இதற்கு என்ன காரணம் என அவரது சொந்தபந்தங்களிடம் விசாரித்தபோது அவர்கள் இன்னொரு கதையைச் சொல்கிறார்கள்.

 

சசிகலாவை இப்பொழுது பார்த்துப் பேசுவது இளவரசியின் மகன் விவேக்கும், டிடிவி தினகரனின் நெருங்கிய உறவினரான டாக்டர் வெங்கடேஷும்தான். இதில் விவேக்கின் மாமனார் கட்டை பாஸ்கர், செம்மர கடத்தல் வழக்கில் கைதாகியிருக்கிறார். ஆந்திரா சிறையில் இருக்கும் அவர் மீது ஆந்திர அரசு குண்டர் தடுப்புச் சட்டத்தைப் பாய்ச்சியுள்ளது. சர்வதேச செம்மரக் கடத்தல்காரர் என ஆந்திர அரசால் குற்றம்சாட்டப்படும் கட்டை பாஸ்கர் மூலம் விவேக் பல சொத்துக்களை வாங்கியுள்ளார். தமிழக அரசு இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடைமையாக்கியதுபோல் விவேக்கிற்கு சொந்தமான சொத்துக்களையும் முடக்க நடவடிக்கை எடுத்துள்ளது என்கிற தகவல் அதிர்ச்சி செய்தியாக சசிகலாவின் வீட்டிற்குள் உலா வருகிறது.

 

விவேக்கின் மாமனாரான கட்டை பாஸ்கர் கைது செய்யப்பட்டதற்குக் காரணம் விவேக்கின் சகோதரிகளான கிருஷ்ணப்பிரியாவும் ஷகிலாவும் கொடுத்த ரகசிய தகவல்கள்தான். இவர்களுக்கும் விவேக்கின் மனைவிக்கும் இடையே நடக்கும் குடும்பச் சண்டையில்தான் இது நடந்தது என அரசல் புரசலாக கட்டை பாஸ்கரின் கைதின்போதே செய்திகள் வெளியானது. மூன்று மாதங்களுக்கு முன்பு விவேக் மும்பையைச் சார்ந்த, கட்டை பாஸ்கருக்கு நெருக்கமான, கடத்தல்காரர் ஒருவரிடமிருந்து 50 கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார். அந்தப் பணமும் விவேக் வேறு வகையில் சம்பாதித்த பணத்தையெல்லாம் துபாயில் முதலீடு செய்திருக்கிறார். இதைத் தேடி ஆந்திர அரசு பயணிக்கிறது. இவையெல்லாம் மத்திய பா.ஜ.க.வுக்கு நெருக்கமான ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் திருவிளையாடல்கள்தான் என சசிகலா தரப்பு சந்தேகிக்கிறது.

 

இதற்கிடையே சசிகலாவுடன் நேரடியாக மோதும் எடப்பாடி பழனிசாமியுடன் திவாகரன் தொடர்பு வைத்துள்ளார் என செய்திகள் சசிகலாவின் காதை வந்தடைந்திருக்கின்றன. சசிகலா சிறையில் இருந்து வந்த பிறகு கடுமையான மவுனத்தை கடைப்பிடிக்கிறார். சசிகலாவிற்கு சிகிச்சை அளித்த பெங்களூரு மருத்துவர்கள் சென்னைக்குப் போய் 10 நாட்கள் உங்களை நீங்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும், உங்கள் மூலமாகவோ அல்லது மற்றவர்கள் மூலமாகவோ கரோனா பரவிவிடக் கூடாது என அட்வைஸ் செய்திருக்கிறார்கள். அதனால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ள சசிகலாவிற்கு உள்ள ஒரே வெளியுலக தொடர்பு டாக்டர் வெங்கடேஷ்தான்.

 

sasikala

 

தினகரனின் உறவினரான இவர், மற்ற சொந்தபந்தங்கள் யாரையும் சசிகலாவை நெருங்க விடுவதில்லை. இவர் சொல்வதை மட்டுமே சசிகலா கேட்கிறார். அது அரசியல் கணக்குகளைத் தவறாக்கிவிடுகிறது. விவேக்கின் மாமனார் கைது செய்யப்பட்டதற்கும் தனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என கிருஷ்ணப்பிரியா சசிகலாவிடம் சொல்ல முயன்றபோது, ஏற்கனவே வருமான வரித்துறையிடம் கிருஷ்ணப்பிரியாவின் செல்ஃபோனில் இருந்த விவரங்கள் மூலமாகத்தான் 1500 கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களைப் பறிமுதல் செய்தது என்கிற கோபத்தில் கிருஷ்ணப்பிரியாவுடன் பேசாமல் இருக்கும் சசிகலாவை, வெங்கடேஷ் சந்திக்க விடாமல் தடுத்தார்.

 

அதேபோல் திவாகரன் எடப்பாடி பழனிசாமியுடன் நெருக்கமாக இருக்கிறார் என்ற செய்தி வந்தவுடன் அதைப் பற்றி விளக்கம் அளிக்க திவாகரனை டாக்டர் வெங்கடேஷ் அனுமதிக்கவில்லை என்கிறது சசிகலாவின் சொந்தபந்தங்கள். ஆனால் வெங்கடேஷ் தரப்போ இதை மறுக்கிறது. சசிகலாவுக்கு கரோனா பாதிப்பால் ஜெ.வைப் போல் ஏதாவது ஆகிவிடப்போகிறது என்கிற பயத்தில்தான் சசிகலா தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார். திவாகரன் பற்றி செய்திகள் வந்ததும் சசிகலா தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேச அக்காவும் தம்பியும் பழைய கதைகளைப் பேசி மணிக்கணக்கில் அழுது தீர்த்திருக்கிறார்கள் என விளக்கம் சொல்கிறது டாக்டர் வெங்கடேஷ் தரப்பு.

 

இந்நிலையில் சசிகலாவை சேர்த்துக்கொண்டு ஒற்றுமையுடன் களம்காண வேண்டும் என சொல்லி வந்த பா.ஜ.க.வின் குரலிலும் மாற்றம் தெரிகிறது. தினகரனை சேர்த்துக்கொள்ள வேண்டும் என பேசி வந்த பா.ஜ.க. தரப்பினரிடம், தேர்தலில் வெற்றி பெற்றால் எனக்கு துணை முதல்வர் பதவி தர வேண்டும் என தினகரன் கோரிக்கை வைத்ததாகவும், அதனால் தினகரனையும் சசிகலாவையும் சேர்த்துக்கொள்ள முடியாது, அவர்கள் இல்லாமலேயே தேர்தலைச் சந்திக்கலாம், அதில் நிச்சயம் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்றும் எடப்பாடி பழனிசாமி தெளிவுப்படுத்திவிட்டார். சென்னைக்கு வந்த பிரதமர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக சசிகலா எதிர்ப்பு நிலையை எடுக்க, பிரதமர் அதற்கு எந்தப் பதிலும் கூறாமல், எதிர்ப்பும் தெரிவிக்காமல் சென்றுவிட்டார் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள்.

 

இதற்குப் பதிலளிக்கும் சசிகலாவுக்கு நெருக்கமான வட்டாரங்கள், சசிகலா வருகிற 19ஆம் தேதி ஜெயலலிதாவின் நட்சத்திரப் பிறந்தநாளையொட்டி திதி ஒன்றைக் கொடுக்கிறார். அதன் பிறகு அவர் சொந்த பந்தங்களிடம் விரிவான உரையாடலை நிகழ்த்துகிறார். அதற்குப் பிறகு பத்திரிக்கையாளர்களைச் சந்திக்கிறார். ஜெ.வின் பிறந்த நாளன்று ஜெ.வின் சமாதிக்குப் போவதைப் பற்றி இன்னமும் முடிவெடுக்கவில்லை. ஆனால் அ.தி.மு.க.வில் சசிகலாவின் செல்வாக்கில் எந்த மாற்றமும் இல்லை. எடப்பாடி பழனிசாமியுடன் சேர்ந்து எம்எல்ஏக்கள் போட்டியிட தேவையான, கட்சி சின்னமான இரட்டை இலையைப் பெறுவதற்கான பி. படிவத்தில் கையெழுத்துப்போடும் அதிகாரம் பெற்றுள்ள ஓ.பி.எஸ்., இன்றளவும் சசிகலாவுடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறார். வரும் வாரங்களில் சசிகலாவின் விஸ்வரூபம் வெளிப்படும் என்கிறார்கள்.

 

sasikala

 

இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அரசு நாலரை லட்சம் கோடி ரூபாய் கடனில் இருக்கிறது. அது தொடர்ந்து கடன் பெறும் தகுதியை இழந்துவிட்டது. அதற்காக ஒரு சிறப்பு அனுமதியை நரேந்திர மோடி ரிசர்வ் வங்கி மூலம் பெற்றுத்தர உதவி செய்துள்ளார். அந்த உதவி மூலம் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து, வருகிற 25ஆம் தேதி கோவையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச இருக்கிறார். 25ஆம் தேதிக்குள் சசிகலா, எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி ஆகியோர் மத்தியில் ஒரு உடன்பாடு ஏற்பட வேண்டும். இல்லையென்றால் சசிகலா, அமமுக சார்பில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரிப்பதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை. அதற்குள் அ.தி.மு.க.வில் தனக்கு இருக்கும் செல்வாக்கை சசிகலா நிரூபித்துக் காட்ட வேண்டும். இல்லையென்றால், நாடாளுமன்றத் தேர்தல் போல சட்டமன்றத் தேர்தலிலும் ஜெ - சசி படத்துடன் அ.ம.மு.க. தனித்துப் போட்டியிட வேண்டும். அதுதான், 6 ஆண்டுகளுக்குத் தேர்தல் களம் காண முடியாத சசிகலாவின் நிலையாக அமையும்.

 

தேர்தல் அறிவிப்பு வந்த பிறகு பலர் சசிகலா பக்கம் வருவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் அது டூ லேட் என்கிறது அ.தி.மு.க. வட்டாரங்கள். இப்படி எண்ணற்ற சோதனைகள் சூழ, அதிக கவலையுடன், கரோனாவால் பாதிக்கப்பட்ட உடலுடன் அரசியல் போராட்டத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் சசிகலா என்கிறார்கள் அவரது சொந்த பந்தங்கள்.

 

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.