Skip to main content

ஐஐடியில் எந்த மாதிரியான இடஒதுக்கீட்டை பின்பற்றுகிறார்கள்..? - வேல்முருகன் கேள்வி!

Published on 19/11/2019 | Edited on 19/11/2019

சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற மாணவி கடந்த 9ம் தேதி தற்கொலை செய்து கொண்டு இறந்ததாக கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக பல்வேறு சந்தேகங்களை அவரின் குடும்பத்தினர் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில், இது தொடர்பாகவும், அயோத்தி தீர்ப்பு சம்பந்தமாகவும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

தமிழகத்தில் தொடர்ச்சியான தற்கொலைகள் கல்வி நிறுவனங்களில் நடைபெற்று வருகிறது. சில தினங்களுக்கு முன்பு சென்னை ஐஐடியில் கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீபா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இதுதொடர்பாக நீங்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தீர்கள். அதில் மாணவர்கள் மட்டும் அல்லாது ஆசிரியர்களுக்கும் இதே நிலைமை தான் சென்னை ஐஐடியில் ஏற்பட்டுள்ளது என்று கூறியிருந்தீர்கள். எந்த அடிப்படையில் இந்த குற்றச்சாட்டுக்களை முன் வைக்கிறீர்கள்? 

என்னுடைய அறிக்கையிலேயே அதுகுறித்து முழுதகவலையும் வெளியிட்டு உள்ளேன். சென்னை ஐஐடியில் உள்ள 500 பேராசிரியர் பணியிடங்களில் 475க்கு மேல் உயர் சாதியினர் மட்டுமே பதவிகளில் இருக்கிறார்கள். அவ்வாறு பதவியில் இருப்பவர்களை விட அறிவில், ஆற்றலில் மற்ற ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மற்ற சமூக மக்கள் அங்கே ஆசிரியர்களாக பணிபுரிய ஐஐடி நிர்வாகத்தினர் அனுமதிப்பதில்லை. மிக குறைவான அளவே மற்ற சாதியினர் ஆசிரியர்களாக பணியில் இருக்கிறார்கள். அரசியல் சட்டத்தில் உருவாக்கப்படாத ஒரு நிலையை ஐஐடி போன்ற ஒரு உயர் நிறுவனங்கள் கடைபிடித்து வருகின்றது. எந்த வகையான இடஒதுக்கீட்டு முறைகளை அவர்கள் கடைபிடிக்கிறார்கள். இதுவே இந்த மாதிரியான சிக்கல்களை ஏற்படுத்த காரணமாக உள்ளது. இந்த நிலை முழுவதும் மாற வேண்டும். அதற்கான முயற்சிகளை அனைவரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும். 


 

df



அப்துல் கலாம் போன்றவர்களும் அங்கே பகுதி நேரமாக சென்று பாடம் எடுத்திருக்கிறார். அவருக்குகான அங்கீகாரம் அங்கே கிடைக்கிறது. ஏனென்றால் குறிப்பிட்ட நேரத்தில் அவர் பாடம் நடத்திவிட்டு வெளியேறி விடுவார். ஆனால் அதே போன்று ஒரு அங்கீகாரம் ஏன் பாத்திமா போன்ற பெண்களுக்கு கிடைப்பதில்லை. ஏனென்றால் அவர்களின் இடத்துக்கு போட்டியாக யாரும் வந்துவிடக்கூடாது என்பதில் சிலர் தெளிவாக இருக்கிறார்கள். இதுவே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமாக இருக்கிறது. முன்பு ஒரு காலத்தில் மருத்து துறையிலும் இதே மாதிரியான பிரச்சனைகள் இருந்துள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட உயர் ஜாதியினர் மட்டுமே மிக முக்கியமான உறுப்பு மாற்று அறுவைச்சிகிச்சைகளை செய்து வந்தார்கள். ஆனால் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு, மருத்துவ துறைகளில் அனைவருக்குமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்ட பிறகு, மற்ற சாதியினரும் அதில் தேர்ச்சி பெற்று மிகச்சிறந்த மருத்துவர்களாக தற்போது பணியாற்றி வருகிறார்கள். வாய்ப்பு அனைவருக்கும் சமமாக வழங்கப்பட்டதே இந்த நிலை ஏற்பட காரணமாக அமைந்தது. அதே போன்றதொரு நிலை உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி போன்ற இடங்களிலும் வழங்கப்பட வேண்டும். இதுவே இந்த மாதிரியான சிக்கல்களை போக்க சரியான தீர்வாக இருக்கும்.

சில நாட்களுக்கு முன்பு அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்கு உள்ளான நிலத்தில் ராமர் கோயில் கட்டலாம் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை எப்படி பார்க்கிறீர்கள்?

பல ஆண்டுகளாக அங்கு பாபர் மசூதி இருந்துவரும் நிலையில் 1949க்கு பிறகு அங்கே ராமர் கோயில் இருந்தது என்று கூறுவதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்வது என்பது முக்கியமானது தான். ஆனால், அதில் இருக்கும் சிறுபான்மை மக்களுக்கான உரிமையை புறந்தள்ள முடியாது. இந்த தீர்ப்பை முஸ்லிம்கள் ஏற்றுக்கொண்டுள்ளார்களே? என்று பெரும்பான்மையானவர்கள் தற்போது கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர்கள் மனதார ஏற்றுக்கொள்ள வில்லை. அவர்கள் அமைதிகாக்கிறார்கள். அதனை நாம் ஏற்றுக்கொண்டு விட்டார்கள் என்று நினைப்போமானால் அது முட்டாள்தனமானது. இது நாளை மற்ற இடங்களில் தொடர்ந்தால் சிறுபான்மையினர் நிலை என்னவாகும். அயோத்தியில் ராமர் பிறந்தார் என்று சொல்லும் அவர்கள் நாளை தாஜ்மஹாலின் கீழே இந்து கோயில் இருந்தது என்று சொல்ல மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம். அவர்கள் எதை வேண்டுமானாலும் சொல்ல தயங்கமாட்டார்கள் என்பதே தற்போது உள்ள கள எதார்த்தம். 


 

 

Next Story

கோடை காலம்... அயோத்தி ராமருக்கு பருத்தி ஆடை!

Published on 30/03/2024 | Edited on 30/03/2024
Cotton clothes for Ayodhya Ram

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் 2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் கடந்த மாதம் 22 ஆம் தேதி ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது.

அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார். இதனையடுத்து கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள், பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் ராமரை வழிபாடு செய்து வருகின்றனர்.

கோவிலுக்கு வரும் பக்தர்களின் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், அதிகாலை 4 மணிக்கு பூஜைகள் தொடங்கப்பட்டு, பக்தர்களுக்கான பொது தரிசன நேரம் காலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டது. இந்த நிலையில், ராமர் சிலைக்கு பருத்தி ஆடை அணிவிக்கப்படும் என ராம ஜென்மபூமி தீர்த்த  சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது. கோடை காலத்தையொட்டி அயோத்தி ராமர் சிலைக்கு இன்று முதல் பருத்தி ஆடை அணிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இயற்கை வண்ணம் பூசப்பட்ட கைகளால் நெய்த ஆடைகளை ராமருக்கு அணுவிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதனால், கோடை காலம் தொடங்கி வெப்பநிலை அதிகரித்துள்ளதால், அயோத்தி ராமருக்கு இன்று முதல் பருத்தி உடை அணிவிக்கப்படும் என்று ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர அறக்கட்டளை அறிவித்துள்ளது.

Next Story

அயோத்தியில் கட்டுக்கடங்காத கூட்டம்; நெரிசலில் சிக்கி பக்தர்கள் காயம்

Published on 23/01/2024 | Edited on 23/01/2024
Unruly crowd in Ayodhya; Devotees were in the jam

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ரூ.2,000 கோடி மதிப்பில் மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவிலுக்காக ஒதுக்கப்பட்ட 70 ஏக்கர் நிலத்தில் 2.7 ஏக்கர் நிலத்தில் மட்டுமே ராமர் கோவில் கட்டப்பட்டது. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையில் நேற்று (22.1.2024) ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு பூஜைக்கு பின்பு, குழந்தை ராமர் சிலை கண் திறக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. குழந்தை ராமருக்கு பிரதமர் மோடி முதல் பூஜை செய்து தீபாராதனை காட்டி வழிபாடு செய்தார்.

அதன் பிறகு, கோவில் கருவறை திரைச்சீலை விலக்கப்பட்டு மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது. அதே சமயம் நேற்று பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், பல நாட்களாக அயோத்தியில் காத்திருந்த மக்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும் நாட்டில் உள்ள பலரும் வீட்டில் இருந்தபடியே தொலைக்காட்சியில் நேரலையில் பார்த்து மகிழ்ந்தனர். இந்த சூழலில் அயோத்தி ராமர் கோவிலில் பொதுமக்கள் தரிசனம் செய்ய இன்று (23.01.2024) முதல் அனுமதி அளிக்கப்பட்டது. காலை 7 மணி முதல் 11.30 மணி வரை, பிற்பகல் 2 மணி முதல் இரவு 7 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

மேலும் சிறப்பு பூஜைகளில் பங்கேற்க ஆன்லைனில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. ராமர் கோவிலில் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மேலும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் திணறி வந்தனர். இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலில் தரிசனம் செய்வதற்காக அதிகளவில் பக்தர் குவிந்தனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பக்தர்கள் பலர் காயமடைந்துள்ளனர். கூட்ட நெரிசலில் சிக்கி காயமடைந்த பக்தர்கள் தூக்குப்படுக்கையில் சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டனர்.

Unruly crowd in Ayodhya; Devotees were in the jam

கூட்டத்தைக் கட்டுப்படுத்த கோவிலுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காக கூடுதலாக துணை ராணுவப்படையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் அதிக எண்ணிக்கையிலான பக்தர்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ள  உள்துறை முதன்மைச் செயலாளர் சஞ்சய் பிரசாத் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி பிரசாந்த் குமார் ஆகியோர் ராமர் கோவில் வளாகத்திற்கு வந்துள்ளனர்.