Skip to main content

ஈகோ; வறட்டு கௌரவம் - தூத்துக்குடியை உலுக்கிய படுகொலை! 

Published on 04/11/2023 | Edited on 04/11/2023

 

Tuticorin new married couple passes away

 

மணமாலை வாடும் முன்பே படுகொலை செய்யப்பட்ட காதல் தம்பதியின் மரணத்தால் தூத்துக்குடி மாவட்டமின்றி தமிழ்நாடே மிரண்டு போயுள்ளது. ஆசை ஆசையாக மணவாழ்க்கையைத் தொடங்குவதற்காக இல்லற வாசலில் வலது கால்களை அடி எடுத்து வைத்த இளம் காதல் தம்பதியைத் துடிக்கத்துடிக்க வெட்டிப் பொலி போட்டது தான் பதற்றத்திற்குக் காரணம்.

 

தூத்துக்குடியை ஒட்டியுள்ள மடத்தூர் சாலையின் முருகேசன் நகரைச் சேர்ந்த வசந்தகுமார் சுமை தூக்கும் தொழிலாளி. இவரது மனைவி சுமதியோ தனியார் நிறுவனத்தில் கூலி வேலை செய்பவர். இவர்களது ஒரே மகன் மாரிச்செல்வம். 24 வயதேயான மாரிச்செல்வம், டிப்ளமோ முடித்துவிட்டு தூத்துக்குடியிலுள்ள ஷிப்பிங் கம்பெனியில் வேலை செய்து வருகிறவர்.

 

இந்தக் குடும்பம் மடத்தூர் முருகேசன் நகருக்கு வருவதற்கு முன்பாக திரு.வி.க.நகரில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வந்திருக்கிறது. அது சமயம் மாரிச்செல்வத்திற்கு அதே பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரியான முத்துராமலிங்கம் என்பவரின் மகள் கார்த்திகாவுடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் பழக்கம் நாளடைவில் இவர்களுக்குள் காதலாக கெட்டியாகியிருக்கிறது.

 

Tuticorin new married couple passes away

 

கார்த்திகா பட்டப் படிப்பு படித்தவர். இவருடன் பிறந்த இரண்டு சகோதரிகளும் உண்டு. ஆனாலும் மூத்தவள் கார்த்திகா மீது குடும்பத்தார்களுக்கு ஈர்ப்பும் பாசமும் அதிகம். ஆனால் மாரிச்செல்வத்தின் குடும்பத்தார்களோ அடித்தட்டு வர்க்கமானாலும் இரண்டு குடும்பமும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள். 

 

அண்மையில் தான் கூடுதலாகப் பத்துப் பசு மாடுகளை வாங்கி பால் தொழிலை விரிவுபடுத்தி முன்னேறி வருபவர் முத்துராமலிங்கம் என்கிறார்கள். அதே சமயம் மாரிச்செல்வமும் ஷிப்பிங் கம்பெனியில் வேலை பார்த்தாலும் தன் பணியிலேயே கவனமாயிருப்பவராம்.

 

ஒரு வகையில் மாரிச்செல்வத்தின் குடும்பத்தார்களும், முத்துராமலிங்கம் குடும்பம் சார்ந்தவர்களும் தூரத்து உறவினர்கள் என்றாலும் பொருளாதாரத்தில் ஏற்றத் தாழ்வுகளுண்டு. மாரிச்செல்வம் குடும்பம் பொருளாதாரத்தில் தொய்வானவர்கள் என்றும் சொல்லப்படுகிறது. மாரிச்செல்வம், கார்த்திகா காதலில் அத்தனை வீக் இல்லாமல் நாளுக்கு நாள் டெவலப்பாகியிருக்கிறது. ஷிப்பிங் கம்பெனி வேலை என்பதால் மாரிச்செல்வம் தெம்பாகவே இருந்திருக்கிறார். காதலர்களின் சந்திப்பும் அடிக்கடி நடந்திருக்கிறது.

 

Tuticorin new married couple passes away

 

இவர்களின் காதல் விவகாரம் இருவீட்டார்களுக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் கார்த்திகாவின் வீட்டிலோ கடும் எதிர்ப்பு. காதல் கத்தரிக்கா விவகாரம் வேண்டாம். அவர்களுக்கும் நமக்கும் சரிப்பட்டு வராது என்று கார்த்திகாவின் பெற்றோர்களும் உறவினர்களும் எச்சரிக்கையாகவே கண்டித்திருக்கின்றனர். ஆனாலும் கார்த்திகா தன் எண்ணத்தை மாற்றிக் கொள்ளவில்லை. மாரிச்செல்வத்தினுடனான காதலில் உறுதியாயிருந்திருக்கிறார். இரண்டு வருடத்திற்கும் மேலாக நீடித்திருக்கிறது.

 

அவரின் பிடிவாதமறிந்த கார்த்திகாவின் பெற்றோர், மாரிச்செல்வத்திடம் பேசி இந்தக் காதல் சரிப்படாது. பேசாமல் ஒதுங்கி விடு என்றும் கண்டித்திருக்கிறார்கள். முட்டுக் கட்டை இப்படி விழ விழ, மாரிச்செல்வம் – கார்த்திகா காதல் விசுவரூபமாகியிருக்கிறது. இந்த விவகாரம் சொந்த பந்தங்களுக்குத் தெரியவர, அவர்களும் காதலைத் துண்டிப்பதுதான் சரி என்று தூபம் போட்டிருக்கிறார்கள். ஜாடை மாடையாக கார்த்திகாவின் உறவினர்கள் இவர்களின் காதலை விமர்சித்திருக்கிறார்கள். வேறு மாதிரியான பேச்சுக்களும் கிளம்ப, இது கார்த்திகாவின் பெற்றோர்கள் உறவினர்களைச் சீண்டியிருக்கிறது. விளைவு அவர்களைப் பிரிக்கிற நோக்கத்தில் மாரிச்செல்வம், அவரது பெற்றோர்களுக்கு எச்சரிக்கை, தொடர் நெருக்கடிகள் வர இதனால் அரண்டு போன மாரிச்செல்வத்தின் குடும்பம் அங்கிருந்து மடத்தூர் முருகேசன் நகருக்கு குடி வந்திருக்கிறது.

 

இடம் பெயர்ந்தாலும் மாரிச்செல்வம் கார்த்திகாவின் காதல் மற்றும் சந்திப்புகள் தொடர்ந்திருக்கின்றன. இனிமேலும் இதனை நீடிக்க விரும்பாத காதலர்கள் திருமணம் செய்து கொள்வது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். கடந்த 30ம் தேதியன்று (அக்-30) மாரிச்செல்வமும் கார்த்திகாவும் கோவில்பட்டிக்குச் சென்று பதிவுத் திருமணம் செய்து மாலை மாற்றிக் கொண்டார்கள்.

 

Tuticorin new married couple passes away

 

இதனிடையே மூன்று நாட்களாகக் காணாமல் போன கார்த்திகாவைத் தேடிப் பெற்றோர்களும், உறவினர்களும் பதற்றப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், மாரிச்செல்வமும் கார்த்திகாவும் திருமணம் செய்து கொண்ட தகவல் பெற்றோர்களை உலுக்கியிருக்கிறதாம். உறவுகள் மட்டத்தில் தகவல் தீயாய் பரவ, சுற்றமும் உறவுகளும் இதுபற்றிக் கிளப்பிய விமர்சனங்களும் வார்த்தைகளும் கார்த்திகாவின் மொத்தக் குடும்பத்தார்களையும் மனரீதியாக அவர்களைத் தாக்கியிருக்கிறதாம்.

 

இதனிடையே மாலை மாற்றிக் கொண்ட காதல் தம்பதியரான மாரிச்செல்வமும் கார்த்திகாவும் கோவில்பட்டியிலிருந்து மூன்று நாட்களுக்குப் பிறகு 2ம் தேதி மதியம் தான் தூத்துக்குடியின் முருகேசன் நகர் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். தகவல் கார்த்திகாவின் குடும்பத்தார்களுக்குப் போயிருக்கிறதாம். அன்றைய தினம் மாரிச்செல்வத்தின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டதால் வீட்டில் இருவர் மட்டுமே இருந்திருக்கிறார்கள். சாயங்கால வேளையில் மாரிச்செல்வம் கடைவீதி சென்றுவிட்டுத் திரும்பும் போது வேவு பார்த்து பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று மாரிச்செல்வத்தை மட்டுமே டார்கெட்டாக வைத்து விரட்ட, பீதியில் வேகமாக வீட்டிற்கு வந்திருக்கிறார். ஆனாலும் பின் தொடர்ந்த மர்ம கும்பல் அந்தி சாயும் வேளையில் திடீரென வீட்டின் கதவைத் தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்து மாரிச்செல்வத்தைச் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்ட, ஓலமிட்ட கார்த்திகா கதறிக் கொண்டிருந்த மாரிச்செல்வத்தின் மீது அடுத்த வெட்டு விழுவதைப் பதறித் தடுத்தபோது வெட்டுக்கள் அவர் மீதும் விழ, கொடுமையான வெட்டுக்களால் மாரிச்செல்வமும் கார்த்திகாவும் சம்பவ இடத்திலேயே பலியாகியிருக்கிறார்கள். பிறகே பைக்குகளில் தப்பியிருக்கிறது கும்பல்.

 

தகவல் போய் ஸ்பாட்டுக்கு வந்த மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன், புறநகர் டி.எஸ்.பி. சுரேஷ், டவுண் டி.எஸ்.பி. சத்யராஜ் உள்ளிட்ட அதிகாரிகள், காதல் தம்பதி உடல்களைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தவர்கள் விசாரணையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

 

திருமணமான உடனே நடந்த கொலைச் சம்பவம். அதுதான் காரணமா அல்லது அவர்களைப் பிரிக்க வேண்டுமென்ற திட்டமா? என்ற கோணத்தில் விசாரணை போகிறது என்கிற போலீசார், கொலையாளிகள் கார்த்திகாவின் உறவினர்களாவுமிருக்கலாம். வந்தவர்கள் ஐந்து பேருக்கும் குறையாமலிருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

 

Tuticorin new married couple passes away

 

மாவட்ட எஸ்.பி.யான பாலாஜி சரவணன், குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையாளிகள் பற்றிய அடையாளம் காணப்பட்டுள்ளது. விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

 

இந்நிலையில், கார்த்திகாவின் தந்தை முத்துராமலிங்கம் தூண்டுதலின் பேரில், அவரது உறவினர்களான தூத்துக்குடியைச் சேர்ந்த இசக்கிராஜா(23), ராஜபாண்டி (27) மற்றும் 17 வயது சிறுவன் உள்ளிட்ட ஆறு பேர்தான் இந்தக் கொலையை செய்தது என்பது விசாரணையில் தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து போலீஸார், முத்துராமலிங்கம், இசக்கிராஜா, ராஜபாண்டி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய நான்கு பேரைக் கைது செய்துள்ளனர். மேலும், இந்தக் கொலையில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள 3 பேரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். 

 

ஈகோவும், வறட்டு கௌரவமும் வாழ வேண்டிய இளந்தளிர்களின் வாழ்வைத் தொடக்கத்திலேயே கருக்கி நாசப்படுத்தியிருக்கிறது.