Skip to main content

கவனமாக அடியெடுத்து வைக்கிறாரா  கனிமொழி ?

இந்தியாவே தேர்தல் ஜுரத்தில் இருக்கிறது. தலைவர்களின் பிரச்சார உறுதிமொழிகளையும் கடந்த முறை தந்த வாக்குறுதிகள் நிறைவேறியதையும் ஒப்பிட்டு, எந்தப் பக்கம் ஓட்டுப் போடலாம் என, மக்கள் நாடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படி மக்கள் நாடி பிடிக்கும் கைகளில் ஒன்று சிறந்த பாராளுமன்ற உறுப்பினர் விருதுபெற்ற கனிமொழியுடையது, மற்றது மருத்துவர் தமிழிசையினுடையது.  தூத்துக்குடி தொகுதியில் தி.மு.க., பா.ஜ.க., அ.ம.மு.க.வோடு சுயேட்சைக் கட்சிகள் பலவும் போட்டியிட்டாலும் அசல் போட்டி கனிமொழிக்கும் தமிழிசைக்கும்தான்.

 

kanimozhi -tamilisaiதமிழிசை தரப்பு விளாத்திக்குளம் தொகுதியிலுள்ள அ.தி.மு.க. வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்கும் என நினைத்திருக்கையில், விளாத்திக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்குவது முதல் ஷாக்.

வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முந்தைய நாள் வரை தமிழிசை, அ.தி.மு.க. மா.செ. சண்முகநாதனைக் கண்டுகொள்ளவில்லை என்கிற வருத்தம் அ.தி.மு.க. தரப்பிலிருக்கிறது. தவிரவும் இப்பகுதியில் ஓரளவு வாக்கு வங்கியுள்ள த.மா.கா. மாவட்டச் செயலாளர்களான தெற்கு விஜய சீலனையும் வடக்கு கதிர்வேலனையும் இதேரீதியில்தான் நடத்தியிருக் கிறார்கள். இதனால் வேட்புமனு தாக்கல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சி களிலும் இவர்கள் ஆப்சென்ட். பா.ம.க., சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் போன்ற கட்சி பொறுப் பாளர்களுக்கும் இதே நிலைதானாம். ஆனால் அழைக்காமலே வேட்புமனு தாக்கலுக்கு வந்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் தே.மு.தி.க. மா.செ. ஆறுமுகநயினார்.

 

kanimozhiஅ.தி.மு.க. மா.செ., தொகுதியை நன்கறிந்தவர் என்கிற முறையில் பிரச்சாரத்துக்கு டூர் சார்ட் போட்டால், தமிழிசை தரப்பிலிருந்து வேறொரு சார்ட் போடப்படுகிறது. உள்ளூர் அ.தி.மு.க.வினரும் ஐக்கிய வியாபாரிகள் சங்கத்தினரும் சங்கரராமேஸ்வர் கோவிலிலிருந்து பழைய முனிசிபல் அலுவலகம் வந்து, வ.உ.சி. சந்தையிலுள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவிப்பதாகத் திட்டம். ஆனால் தமிழிசை தரப்போ அந்த திசையைத் தவிர்த்து அந்தோணியார் கோவில் வழியாக காரியாலயம் நோக்கிச் சென்றது. ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் பிரச்சாரத்துக்கு அ.தி.மு.க. ஏற்பாடு செய்திருந்தது. தமிழிசை அங்குசென்று பிரச்சாரத்தை ஆரம்பிக்க, டி.எஸ்.பி. சகாய ஜோஸ் "அனுமதி பெறாமல் பிரச்சாரம் செய்யக்கூடாது' என அவர்களை அங்கிருந்து அகற்றியது தனிக்கதை.

அதிருப்திகள் இப்படி ஒருபுறம் இருந்த போதும் சாத்தான்குளம், ஸ்ரீவைகுண்டம், திருச் செந்தூர் பகுதி கிராமங்களில் கோவில்களில் மாவிளக்கு பூஜை, குத்துவிளக்கு பூஜை ஏற்பாடு செய்து வாக்கு சேகரித்து வருவது நல்ல அடித் தளத்தைத் தந்திருக்கிறது. குறிப்பிட்ட சமுதாய மக்கள் நிறைந்திருக்கும் கோவில் பாடல் கச்சேரி களில், அங்குள்ள பாடகரைக் கொண்டு வாக்கு சேகரிப்பதும் பலன் தருமெனவே தெரிகிறது.
 

kanimozhiஇதுதான், தான் போட்டியிடும் தொகுதி என பல மாதகாலம் முன்பே திட்டமிட்டு, தொகுதி மக்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளைக் குறித்துக்கொண்டு தொகுதி முழுவதும் வலம் வருகிறார் கனிமொழி. அதோடு ஒவ்வொரு சமுதாயத் தலைவரையும் சந்தித்து அவர்கள் கூறும் ஆலோசனைகளையும் கேட்டுக்கொள்கிறார்.

தூத்துக்குடி வடக்கு மாவட்டத்திலுள்ள விளாத்திக்குளம், கோவில்பட்டி, தெற்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒட்டப்பிடாரம் பகுதி மக்களின் வாக்குகளை ஈர்ப்பதுதான் கனிமொழிக்கு முன்பிருக்கும் சவாலான வேலை. ஆண்டாண்டு காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப் பட்ட தூத்துக்குடியை பா.ஜ.வுக்கு தாரை வார்த்ததால் அ.தி.மு.க.வினரிடையே ஏற்பட்ட மனக்கசப்பு, மத்திய-மாநில ஆட்சியாளர்கள் மீதான அதிருப்தி, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச் சூட்டால் 13 நபர்கள் பலி, நசியும் கடற்கரையோர மக்களின் வாழ்வாதார நிலை, "ஒக்கி' புயலில் மத்திய-மாநில அரசுகள் காட்டிய அலட்சியம் என பல்வேறு விவகாரங்கள் கனிமொழிக்கு துணைசெய்யக் காத்திருக்கின்றன.

ஆனாலும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சியினரின் கலாட்டாக்களுக்கும் பஞ்சமில்லாமல் இல்லை. காங்கிரசைச் சேர்ந்த எட்டையபுரம் சீனிவாசன் தலைமையிலான டீம், "எங்களை தி.மு.க. மதிக்கவில்லை'’என கூட்டமே நடத்திக் காட்டியது. இதனை தி.மு.க. எப்படியோ சமாளித்து வந்தாலும் "கனிமொழி வென்றுவிட்டால் நமக்கு வாய்ப் பிருக்காதோ' என உள்ளடி வேலையிலும் இறங்கியிருக்கிறது கட்சியைச் சேர்ந்த சீனியர் தரப்பு. அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், ஜெயதுரை, ஜோயல் என தி.மு.க. அதிகார மையம் நான்காகப் பிரிந்து கிடப்பதும் எதிரணிக்கு சாதகமாக உள்ளது.

வேட்பாளர் கனிமொழியைக் காரணம்காட்டி சொந்தக் கட்சியினரையும் தொழிலதிபர்களையும் காசு கேட்டு அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு மிரட்ட... இதனாலேயே புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவுவரை போனதும் இடைஞ்சல்தான். இப்படி இரு தரப்பிலும் சாதக, பாதகங்கள் இருக்க... கள நிலவரத்தை கணித்து கவனமாக அடியெடுத்து வைக்கிறார் கனிமொழி. தமிழிசை தரப்பு சவாலாக இருக்கிறது. 
 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்