Turkey's planned 'Faridabad model' - NIA sniffs out in one day Photograph: (NIA)
டெல்லி செங்கோட்டையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவம் நாடளவில் அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு எடுத்துள்ள நிலையில் தற்போது பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த கார் வெடிப்புக்கு முன்னதாக நேற்று முன்தினம் (10/11/2025) நண்பகலில் ஹரியானாவில் உள்ள அல் ஃபலோ என்ற மருத்துவக் கல்லூரியில் ஜம்மு காஷ்மீர் மற்றும் ஹரியானா காவல்துறையினர் சேர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில் ஒரு ஏகே 47 துப்பாக்கியும், 8 குண்டுகள், 360 கிலோ வெடி பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அதில் அதீல் அகமது ராதர், முசாமில் ஷகீல் என்ற இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இருவரும் மருத்துவர்கள் என தெரிந்தது. பேட்டரியுடன் 20 டைமர்கள், 24 ரிமோட்டகள் கைப்பற்றப்பட்டதால் வெடிகுண்டு தாக்குதலுக்கான முயற்சியா என்ற அச்சம் டெல்லியில் மேலோங்கி இருந்தது.
அதனைத் தொடர்ந்து அன்று இரவே செங்கோட்டை முதலாவது நுழைவாயில் அருகே நிறுத்தப்பட்டிருந்த வெள்ளை நிற ஐ 20 கார் ஒன்று, நேற்று பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்துச் சிதறியது. இதில் 12 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட காரை ஓட்டி வந்தவர் மருத்துவர் முகமது உமர் என தகவல் வெளியாகியது.
35 வயதான உமர், புல்மாவை சேர்ந்தவர் என்பதும், அவரும் ஒரு மருத்துவர் என்பது போலீசார் விசாரணையில் தெரிந்தது. ஹரியானாவில் வெடிமருந்து கண்டுபிடிக்கப்பட்ட அல் ஃபலோ என்ற அந்த மருத்துவக் கல்லூரியில் பணியாற்றி வந்துள்ளார். அதே கல்லூரியில் பணியாற்றி வந்த முசாமில் ஷகீல் கைது செய்யப்பட்ட நிலையில் உமருக்கும் அவருடன் தொடர்பிருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்தனர். அமோனியம் நைட்ரேட் பியூயல் ஆயிலை காரில் நிரப்பி தற்கொலைப்படை தாக்குதலுக்கு உமர் தன்னை உட்படுத்தி இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்திருந்தது.
இதில் பெண் மருத்துவர் ஷாகின் என்பவரும் காஷ்மீரில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். அப்பெண் தீவிரவாத அமைப்பான ஜெய்ஷ்- இ முகமது அமைப்பின் பெண் பிரிவு தலைவராக செயல்பட்டு பலரை அணி திரட்டியதும், உமர் உள்ளிட்டவர்களுக்கு உதவியதும் தெரியவந்தது. அவருடைய புகைப்படமும் நேற்று வெளியாகி இருந்தது.
இந்த வழக்கு நேற்று தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்ட நிலையில் விசாரணை தீவிரமடைந்தது. சம்பவம் நடந்த இடத்தை சுற்றி வெள்ளை திரைசீலை இட்டு தீவிர விசாரணையில் என்ஐஏ இறங்கியது. சம்பந்தப்பட்ட கார் பயணித்த இடங்களில் கிடைத்த சிசிடிவி காட்சிகள், இதில் சம்பந்தப்பட்டோரின் சமீபத்திய பயணங்களை ஆய்வு செய்தது என்ஐஏ. இந்நிலையில் என்ஐஏ தரப்பில் வெளியான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக கருதப்படும் மருத்துவர் உமர், முசாமில் ஷகீல் ஆகியோர் துருக்கி நாட்டிற்கு சென்று வந்தது தெரிந்துள்ளது. அங்கு ஜெய்ஷ்- இ முகமது அமைப்பின் ஏஜண்டை சந்தித்ததாகவும், முன்னரே எழுந்த சந்தேகத்தின்படி ஜெய்ஷ்- இ முகமது தீவிரவாத இயக்கத்தின் தொடர்பு இதில் உள்ளதாக என்ஐஏ உறுதிப்படுத்தியுள்ளது. உமர், முசாமில் ஷகீல் ஆகியோர் 'ஃபரிதாபாத் மாடல்' என்ற பெயரில் டெலிகிராமில் இயங்கி வந்துள்ளனர்.
அண்மையாகவே இந்தியாவிற்கு எதிரான, பாகிஸ்தானுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் துருக்கி உள்ள நிலையில் அங்கு வைத்து சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதும் அம்பலமாகி இருக்கிறது. அந்த திட்டத்தின்படி டெல்லி அருகே வெடிபொருட்களை உமர் உள்ளிட்ட அவர்களின் கூட்டாளிகள் வாங்கி குவித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. போலீசார் பிடியில் வெடிமருந்தோடு கூட்டாளிகள் சிக்க, தலைமறைவில் இருந்த உமர் அன்றைய தினமே கார் வெடிப்பை நிகழ்த்தியுள்ளது உறுதியாகியுள்ளது. இந்த சம்பவத்தில் முதலில் விசாரணை செய்து வந்த டெல்லி காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையில் இதனை குண்டு வெடிப்பு என்றே பதிவு செய்துள்ளனர்.
இந்த கார் வெடிப்புக்கு முன்னதாக உமரை அவரது வீட்டார் தொலைபேசியில் அழைத்தபோது 'நான் நூலகத்தில் புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறேன். அடிக்கடி போன் செய்து தொந்தரவு செய்ய வேண்டாம்' என உமர் தெரிவித்துள்ளது அவருடைய குடும்பத்தாரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஜெய்ஷ்- இ முகமது அமைப்பின் பெண்கள் பிரிவான 'ஜமாத் உல் மொமினாத் 'அமைப்பின் தலைவராக மசூத் அஸாரின் சகோதரி ஷாதியா அஸாரி உள்ளார். இவருடன் தொடர்பில் இருந்த பெண் மருத்துவர் ஷாகின் மருத்துவ சேவை, என்ஜிவோ என்ற பெயரில் உமர் உள்ளிட்டவர்களுக்கு சதித்திட்ட செயல்பாடுகளுக்காக 40 லட்சம் ரூபாய் நிதி திரட்டி கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
இப்படியாக இந்த சம்பவதில் ஒவ்வொரு முடிச்சுகளையும் அவிழ்த்து வருகிறது என்ஐஏ.
Follow Us