Advertisment

"அவர் எல்லாம் ஒரு தலைவரா...? பதவிக்காக காலில் விழுவது எங்கள் ரத்தத்திலே கிடையாது..." - டிடிவி தினகரன்

jkl

எடப்பாடியின் நேற்றையபேட்டிக்குப் பதிலளிக்கும் விதமாக டிடிவி தினகரன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது, " சில நாட்கள் முன்பு உங்களை எல்லாம் சந்தித்தபோது என்னிடம் நாடாளுமன்றத் தேர்தலில் உங்களின் நிலைப்பாடு என்ன என்று கேட்டீர்கள். மக்கள் விரோத திமுக அரசை வீழ்த்தும் நோக்கத்தோடு எங்களின் செயல்பாடு இருக்கும் என்று தெரிவித்திருந்தேன். நீங்கள் கூட அதிமுகவோடு கூட்டணி என்றெல்லாம் எழுதினீர்கள். அதற்கு நாம் தற்போது பதில் சொல்ல வேண்டும்.

Advertisment

அதிமுக தற்போது தலையில்லா முண்டமாக இருக்கிறது. நடந்து முடிந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் கூட அந்தக் கட்சியால் ஏ பார்ம், பி பார்ம் கொடுக்க முடியவில்லை. இதுதான் எடப்பாடியின் நிலைமை. அவரால் எதையும் செய்ய முடியாது. அவர் மெகா கூட்டணி அமைப்பேன், அந்தக் கூட்டணி அமைப்பேன் என்பதெல்லாம் அவருக்கு வேண்டுமானால் ஈஸியாக இருக்கலாம். ஆனால் நிஜத்தில் நடக்கப்போவதில்லை.

Advertisment

இருக்கிற அதிமுக கட்சியினரைக்கூட அவரால் தொடர்ந்து கட்சியில் வைத்துக்கொள்ள முடியவில்லை. இவர் எப்படி மெகா கூட்டணி அமைப்பார். வாய் வேண்டுமானால் பேசிக்கொண்டு இருக்கலாம். ஆனால் எடப்பாடி சொல்வதெல்லாம் ஒருகாலும் நடக்காது. பாஜக தலைவர் அண்ணாமலை பாஜக 25 எம்பிக்களை தமிழகத்திலிருந்து பெறுவோம் என்று கூறி வருகிறார். அப்படியென்றால் அவர்கள் தமிழகத்தில் உள்ள அனைத்துத்தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டால்தான் இந்த எண்ணிக்கையில் அவர்கள் வெற்றிபெற முடியும். அப்படி என்றால் எடப்பாடி மெகா கூட்டணியின் தலைவர் மட்டும்தானே, தேர்தலில் நிற்கமாட்டாரா என்பது தெரியவில்லை.

அதிமுக தொடர்பான பிரச்சனை கோர்ட்டுக்கு சென்றுவிட்டது, அங்குதான் அதிமுக யாருக்குச் சொந்தம் என்பது தெரிய வரும். எனவே உண்மை தெரியாமல் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது. அதைப்போல அமமுக வேறு எந்தக் கட்சியுடனும் இணையும் என்று சொல்லக்கூடாது. அதற்கு வாய்ப்பு என்பது சிறிதும் இல்லை. எடப்பாடி போல் தொண்டர்களை அடகு வைத்து நாங்கள் கட்சி நடத்தவில்லை. இயக்கத்தில் உள்ள அடிமட்ட தொண்டர்களின் விருப்பத்திற்கிணங்க கட்சி நடத்தி வருகிறோம். யாருக்கோ பயந்து எடப்பாடி மாதிரி கட்சி நடத்தவில்லை.

எந்தக் காலத்திலும் எடப்பாடியை ஒரு கட்சித் தலைவராக நாங்கள் கருதவில்லை. அதற்கான தகுதியும் அவருக்கு இல்லை.அவருடன் கூட்டணிக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பு இல்லை என்று கூறியதாகக் கேள்வி எழுப்பினீர்கள். அவருடன் கூட்டணி என்பது காலரை சதவீதம் கூட இல்லை. கூட்டணிக்குத் தலைமை தாங்கும் அளவுக்கு எடப்பாடி பெரிய ஆள் இல்லை. அவரைப் போல் பதவி வேண்டும் என்றால் காலில் விழவோ இல்லை பதவி கிடைக்கவில்லை என்றால் காலை வாரவோ எங்களுக்குத் தெரியாது. பதவிக்காகக் காலில் விழும் வம்சத்தில் வந்தவர்கள் இல்லை நாங்கள்.

எடப்பாடி முதல்வராக இருந்தபோது கூட அவர்தான் என்னைத் தேடி என் வீட்டிற்கு வந்துள்ளார். அவரைத்தேடி நான் போனதில்லை. இதைப் பெருமைக்காக நான் கூறவில்லை. எடப்பாடி மாதிரி எதையும் எதிர்பார்த்து யாரையும் சார்ந்திருக்கமாட்டேன். துரோகம் செய்வதனால் எத்தகைய பதவி கிடைக்கிறது என்றாலும் அதை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். எனவே எங்கள் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் நல்ல கூட்டணி அமைக்கும். பாஜக, காங்கிரஸ் கட்சிகளோடு கூட்டணி வைத்தால்தான் நல்லது. அப்படி இல்லை என்றாலும் தனித்துத் தேர்தலைச் சந்திக்கவும் அமமுக தயாராக இருக்கிறது.

Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe