குளிர் படர்ந்த பிரதேசமான அலாஸ்காவில் தற்போது அரசியல் வெப்பம் சூழ்ந்துள்ளது. காரணம் - பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடக்கவிருக்கும் டிரம்ப் - புடின் சந்திப்பு.

Advertisment

உலகின் இரு பெரும் பகைமை நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு என்பது இயல்பாகவே உற்றுநோக்கப்படும்...ஏனென்றால், இந்த வகையான சந்திப்புகள் பல சர்வதேச திசைகளை மாற்றக்கூடிய வல்லமைப்படைத்தவை. அந்தவகையில் தான், டிரம்ப் - புடின் சந்திப்பில் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்புடன் அவர்கள் இருவரையும் வரவேற்க அலாஸ்கா தயாராகிக்கொண்டிருக்கிறது.

வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த வரலாற்றுச் சந்திப்பு நடைபெறப்போகிறது. டிரம்பும் புடினும் அவர்களது மூன்றாவது நேரடி சந்திப்பை எதிர்நோக்கும் வேளையில், இந்த சந்திப்பிற்கு பின்னணி என்ன? இதனால் டிரம்ப்-புடின் உறவில் மீண்டும் நட்புறவு ஏற்படுமா? இந்த சந்திப்பால் இந்தியாவிற்கு சாதக, பாதகங்கள் என்ன? என்பதுபோன்ற பல கேள்விகள் எழுந்துள்ளன. டிரம்ப், இந்தியா மீது விதித்த 50% வரி ஆகஸ்ட் 27ஆம் தேதி நடைமுறைக்கு வருவதால், இந்த சந்திப்பிற்கு பின் டிரம்பின் முடிவில் மாற்றம் தெரியுமா என்ற எதிர்பார்ப்புடன் இந்தியா இருக்கிறது.

டிரம்ப் தனது வரி ஆயுதத்தை இந்தியா மீது ஏவுவதற்கு மிக முக்கிய காரணம், இந்தியா ரஷ்யாவிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய்யை கொள்முதல் செய்கிறது. இதன்மூலம், இந்தியா ரஷ்யாவிற்கு கொடுக்கும் பணம், புடின் அரசாங்கத்திற்கு உக்ரைனுக்கு எதிரான போருக்கு உதவுகிறது. டிரம்ப், தான் நினைத்த வழியில் புடினை கொண்டுவரமுடியாததால், ரஷ்யாவின் நட்பு நாடுகளை அவருக்கு எதிராக திருப்பும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளார். இதில், இந்தியாவை அடிக்கும் அளவிற்கு ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவை டிரம்ப் அடிக்கவில்லை.

Advertisment

ஆகையால்தான், ஒருவேளை இந்த சந்திப்பிற்கு பிறகு டிரம்ப்-புடின் இடையே ஒரு நட்புறவு மலர்ந்தால், அது இந்தியா மீது டிரம்ப் கொண்டிருக்கும் கோபத்தை தணிக்கலாம் என்றும், அதன்மூலம், டிரம்ப் தனது வரிவிதிப்பை திரும்ப பெறுவார் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், டிரம்ப்பை பொறுத்தவரை மீண்டும் புடினை நேருக்குநேர் சந்திக்கவேண்டும், அவரின் நோக்கத்தை புரிந்துகொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனே இந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.

டிரம்ப் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றார். பதவிக்கு வந்த ஆறு மாதத்தில், டிரம்ப் புடினுடன் ஐந்து முறை தொலைபேசியில் பேசியுள்ளார். ஒவ்வொன்றும் நீண்ட தொலைபேசி உரையாடல்...பெரும்பாலும், இந்த உரையாடல்களில் உக்ரைன் போர் பற்றியும், போரை முடிவிற்கு கொண்டுவருவது பற்றியும் டிரம்ப் பேசியுள்ளார். மறுமுனையில் பேசிய புடின், உக்ரைன் மீது குற்றச்சாட்டை ஒருபுறம் வைத்தாலும், மறுபுறம், டிரம்ப்பின் வழிக்கு வரவேயில்லை.

தான் அனைத்து போர்களையும் ஒற்றை தொலைபேசி அழைப்பில் முடிவிற்கு கொண்டுவருவேன் என்று சூளுரைத்த டிரம்ப்பிற்கு புடின் சோதனையாக அமைந்தார். டிரம்ப் முதல்முறையாக அமெரிக்க அதிபராக வந்தவுடன் புடினிடம் நட்புறவை பேண முயற்சித்தார். டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் இருவரும் இரண்டுமுறை நேரில் சந்தித்தனர். அந்த ஒரு நட்பின் நம்பிக்கையில் தான், 'நண்பர் தானே, நான் சொன்னால் கேட்டுக்கொள்வார்' என்ற நம்பிக்கையில் டிரம்ப் புடினை தற்போது கையாளமுயற்சிக்கும் விதம் அவருக்கு எதிராகவே திரும்பியுள்ளது.

Advertisment

ஏனென்றால், ரஷ்ய அதிபர் புடின், ஜார்ஜ் புஷ், பராக் ஒபாமா, ஜோ பைடன், டிரம்ப் என நான்கு அமெரிக்க அதிபர்களை பார்த்தவர். அமெரிக்காவையும், அதன் தலைவரையும் எப்படி கையாளவேண்டும் என்று புடினுக்கு நன்றாகவே தெரியும். இந்த இருநாடுகளின் உறவில் புடின், தனிப்பட்ட நட்பை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார் என தற்போது மெல்ல மெல்ல டிரம்ப்பிற்கு புரிய ஆரம்பித்திருக்கிறது. அந்த புரிதலின் வெளிப்பாடுதான், சில நாட்களுக்கு முன்னர், டிரம்ப், புடின் மீது வைத்த மிகக்கடுமையான விமர்சனம்.

புடினிடம் கொண்டிருக்கும் நட்பின் காரணமாகவும், புடின் பேச்சின் மீது வைத்த நம்பிக்கையின் காரணமாகவும்தான், டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை, தனது ஓவல் அலுவலகத்தில் வைத்து, திட்டித் தீர்த்தார். உக்ரைனிடம் உள்ள கனிம வளங்களை கைப்பற்ற டிரம்ப் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கினார். அந்த ஒப்பந்தத்தை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொள்வார் என்று டிரம்ப் எதிர்பார்த்தார். அதுமட்டுமில்லாமல், போரை உக்ரைன் தான் தொடங்கியது எனவும், உக்ரைன் தான் போரை நிறுத்தவேண்டும் எனவும் புடினுக்கு ஆதரவான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். ஆனால், ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தத்தில் ரஷ்யாவின் உத்தரவாதங்கள் என்ன என்று டிரம்பிடம் கேள்வி எழுப்பினார். பேச்சுவார்த்தை வார்தைப்போராக மாறியதை தொடர்ந்து, எந்த முடிவும் எட்டப்படவில்லை.

S

அதற்குப்பிறகு, உக்ரைன் போர் தொடர்பாக டிரம்ப் பலமுறை புடினிடம் தொலைபேசியில் பேசினார். ஆனால், ஒவ்வொரு முறையும் டிரம்பிற்கு கிடைத்தது ஏமாற்றமே. தான் சொன்னால் புடின் கேட்டுக்கொள்வார் என்றிருந்த டிரம்ப்பின் நிலைப்பாடு, தன்னை வைத்து புடின் விளையாடுகிறார் என்று சமீபத்தில் மாறியது. ஒருபுறம் புடின் தொலைபேசியில் பேசினாலும், மறுபுறம் ரஷ்யா, உக்ரைன் நகரங்களில் மீது தாக்குதல்களை அதிகப்படுத்தியது டிரம்ப்பிற்கு கிடைத்த தோல்வியாகவே பார்க்கப்பட்டது. அதன் வெளிப்பாடு தான், கடந்த ஜூலை மாதம், புடினின் செயல்பாடுகள் தனக்கு பெரும் ஏமாற்றம் அளிப்பதாக டிரம்ப் ஒப்புக்கொண்டார்.

தன் பேச்சைக்கேட்காமல் புடின் செயல்படுவதாக டிரம்ப் உணர்ந்தபிறகு, டிரம்ப் நிர்வாகம் ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகள் விதித்தது. அதுமட்டுமில்லாமல், எந்தெந்த நாடுகள் ரஷ்யாவுடன் நெருக்கமாக வர்த்தகம் செய்கிறதோ அந்த நாடுகள் மீதும் டிரம்ப் அதிக வரியை விதித்தார். இப்படிதான், டிரம்ப்-புடின் அரசியல் மோதலில் இந்தியாவும் தற்போது மாட்டிக்கொண்டது. ஐந்து முறை தொலைபேசியில் பேசியும் புடினின் நோக்கத்தை தன்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை என்ற காரணத்தால் டிரம்ப் அவரை நேரில் சந்திக்க வேண்டும் என்றெடுத்த முடிவே இந்த அலாஸ்கா சந்திப்பு.

'நான் அவரை நேரில் சந்திக்கவேண்டும், அவருடன் நேரடியாக உரையாடவேண்டும், நான் அவரை பார்த்து அவரின் எண்ணஓட்டம் எப்படி இருக்கிறது, அவரின் உண்மையான நோக்கம் என்ன என்பதை தெரிந்துகொள்ளவேண்டும்' என்று டிரம்ப் தனது அதிகாரிகளுடன் தெரிவித்ததாக பல செய்திமுகமைகள் சொல்கின்றன. எங்கே சந்திப்பை நடத்துவது என்ற கேள்விக்கு, உலகின் பல நகரங்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில், 'அலாஸ்கா' என்று முடிவானது...அலாஸ்கா ஒரு அமெரிக்க மாகாணம், நிலப்பரப்பின் அடிப்படையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மாகாணமும் கூட. அதுமட்டுமல்லாமல், ரஷ்யாவிற்கு மிக அருகில் இருக்கும் மாகாணமும் கூட.

தயாராகும் அமெரிக்க ராணுவ தளம்:

ஆகஸ்ட் 15ஆம் தேதி, டிரம்பும் புடினும் அலாஸ்காவில் உள்ள ஒரு அமெரிக்க ராணுவ தளத்தில் சந்திக்கபோகின்றனர். ஒரு எதிரி நாட்டுத் தலைவரை நம் ராணுவ தளத்தில் வைத்து சந்திப்பதா என்ற ஒரு கேள்வி அமெரிக்கா முழுவதும் எழுந்தது. ஆனால், அலாஸ்காவில் மிகவும் பாதுகாப்பான இடமாக இந்தத் தளம் கருதப்படுவதால்தான் இங்கு சந்திப்பு நடக்கப்போகிறது. அலாஸ்காவில் தற்போது சுற்றுலா காலம் என்பதால், இடப்பற்றாக்குறை மற்றும் ஒரு பொதுவான இடத்தில் இந்த வரலாற்றுச் சந்திப்பை நடத்துவது பல சிக்கல்களை ஏற்படுத்தும் என்பதால் இந்த ராணுவ தளத்தை சந்திப்புத் தளமாக மாற்ற முடிவெடுத்தனர்.

டிரம்ப், புடின் இதுவரை இரண்டு முறை நேரில் சந்தித்துள்ளனர். ஆனால், ஒருமுறைக்கூட இருவரும் தங்களது நாட்டில் சந்தித்துக்கொள்ளவில்லை. இம்முறை வரலாறு மாறுகிறது...அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்ற பிறகு, டிரம்ப், முதல்முறையாக புடினை சந்திக்கவுள்ளார்...அதுவும் தன்னுடைய நாட்டில். இந்த குறிப்பிடத்தக்க அம்சத்தின் காரணமாகவும் இந்த சந்திப்பு மேலும் கவனம் பெறுகிறது.

முடிவுக்கு வருமா ரஷ்யா-உக்ரைன் போர்?

டிரம்ப்-புடின் சந்திப்பிற்கு பிறகு ரஷ்யா-உக்ரைன் போர் முடிவுக்கு வருமா என்று கேட்டால், அதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. ஏனென்றால், இந்த சந்திப்பை நடத்துவது டிரம்பாக இருந்தாலும், ரஷ்யா-உக்ரைன் போர் தொடர்பாக இறுதி முடிவை எடுப்பது புடின் ஆகத்தான் இருக்கும். ஏற்கனவே, இந்த சந்திப்பில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை அழைக்கும் திட்டம் இருந்தது...(போர் தொடங்கிய பிறகு ஒருமுறை கூட புடினும் ஜெலன்ஸ்கியும் சந்தித்துக்கொள்ளவில்லை). ஆனால், இந்த திட்டம் ரஷ்யாவிற்கு தெரிவிக்கப்பட்டபோது, புடின் அதற்கு உடனடியாக தனது மறுப்பை தெரிவித்தார்.

புடின் வரவில்லையென்றால், நம்மால் அவரை சந்திக்கமுடியதோ என்ற ஐயத்தில் இருந்த டிரம்ப், இந்த சந்திப்பிற்கு ஜெலன்ஸ்கி தடையாக இருப்பாரோ என்ற எண்ணத்தில் புடினின் மறுப்பை ஏற்றுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. ஆகையால், இந்த சந்திப்பு ஜெலன்ஸ்கி இல்லாமல் நடைபெறுவதால், போருக்கான முடிவு எட்டப்படாது என்றே தெரிகிறது. மேலும், இந்த சந்திப்பில் புடினின் ஆதிக்கம் அதிகமாக இருக்க வாய்ப்பிருக்கிறது. டிரம்ப் மற்ற தலைவர்களிடம் பேசுவது போல் 'நான் தான் இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்', என இந்த சந்திப்பில் பேசுவது சந்தேகமே.

ரஷ்ய படைகள் தற்போது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் உக்ரைன் பகுதிகளை தனதாக்கிக்கொள்ள புடின் விரும்புகிறார். இந்த விருப்பத்தை டிரம்பிடம் அவர் தெரிவிக்க வாய்ப்புகள் அதிகம். அதை கேட்டுக்கொண்டு, டிரம்ப் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் 'உங்கள் நாட்டுப் பகுதிகள் சிலவற்றை ரஷ்யாவிற்கு விட்டுக்கொடுக்கவேண்டும்' என்று அழுத்தம் கொடுக்கவும் வாய்ப்புகள் அதிகம். டிரம்ப் ஏற்கனவே உக்ரைன் சில பகுதிகளை விட்டுக்கொடுக்க தயாராக வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.

இந்த சந்திப்பில் இருவரும் என்ன பேசப்போகிறார்கள் என்ற சரியான அஜெண்டா நம்மிடம் இல்லை. உயரதிகாரிகள் யாருமே இல்லாமல் இருவரும் தனிமையில் சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. ஒருவேளை, இந்த சந்திப்பின் மூலம் இருவருக்கும் மீண்டும் நட்புறவு மலர்ந்தால், புடினின் சார்பாக டிரம்ப் உக்ரைனுக்கு எதிராக செயல்பட தொடங்குவார். புடின் கூறுவது போல, டிரம்ப் உக்ரைனுக்கு அழுத்தம் கொடுக்கவும் வாய்ப்பிருக்கிறது. அதை ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொள்ளமாட்டார். ஆகையால், ரஷ்யா-உக்ரைன் போரின் முடிவு இன்னும் தென்படவில்லை. எதிரே இருக்கும் புடினை கையாள்வது கடினம் என்பதால், டிரம்ப் தனது ஆக்ரோசனமான போக்கிற்கு வேலைத்தரமாட்டார்.

டிரம்ப்-புடின் சந்திப்பு இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்?

ரஷ்யா, இந்தியாவிற்கு மிகப்பெரும் வர்த்தக கூட்டாளி. அமெரிக்காவும் வேண்டும், ரஷ்யாவும் வேண்டும் என்பதுதான் பல ஆண்டுகளாக இருக்கும் இந்தியாவின் நிலைப்பாடு. தற்போது, இந்தியா மீது டிரம்ப் ஏவியிருக்கும் வரி ஆயுதம், புடினுக்கு எதிராக அவர் ஏவியிருக்கும் மறைமுக ஆயுதமே. ஒருவேளை, இந்த சந்திப்பின் மூலம் இருவரும் தங்கள் நட்பை புதுப்பித்துக்கொண்டால், புதிய மாற்றங்கள் உருவாகும். டிரம்ப் தனது ரஷ்ய எதிர்ப்பை சற்று குறைத்துக்கொள்ளலாம். தனது புதிய நண்பர் புடினை மீண்டும் சந்திக்க டிரம்ப் ரஷ்யாவிற்கு செல்லலாம். அமெரிக்கா, ரஷ்யா மீது விதித்த பல பொருளாதார தடைகள் விலக்கிக்கொள்ளப்படலாம், மேலும், டிரம்ப் நிர்வாகம், ரஷ்ய நட்பு நாடுகள் மீது விதித்த வரியை குறைத்துக்கொள்ளலாம். ஒருவேளை அப்படி குறைத்தால், அது இந்தியாவிற்கு சாதகமாக அமையும்.

இந்தியாவிற்கு தேவை தடையற்ற கச்சா எண்ணெய் விநியோகம். ரஷ்யா இதை உறுதிசெய்து, தள்ளுபடியுடன் தருவதால், இந்தியா, ரஷ்யாவின் உறவை, டிரம்ப் பேச்சைக்கேட்டு, பகைத்துக்கொள்ள விரும்பாது. ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் எண்ணெய் இறக்குமதியில், ரஷ்யாவின் பங்கு இரண்டு சதவிகிதத்திற்கும் கீழே. தற்போது அது, 35 சதவிகிதமாக வளர்ந்து நிற்கிறது. உண்மையென்னவென்றால், ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியபிறகு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தது.

ரஷ்ய எண்ணெய் தடையின்றியும், தள்ளுபடியுடனும் வருவதால் இந்தியா நிச்சயம் இந்த உறவை இறுகப் பிடித்துக்கொள்ளும். டிரம்பின் வரி மிரட்டலுக்கு மோடி அரசு தொடர்ந்து பதிலடி கொடுப்பதன் மூலம், ரஷ்யா தங்களுக்கு எவ்வளவு முக்கியம் என்பதை இந்தியா தெளிவுபடுத்துகிறது. ஒருவேளை, இந்த அலாஸ்கா சந்திப்பு, பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியில் முடிந்துவிட்டால், டிரம்ப் ரஷ்யாவை ஏதோ ஒருவகையில் அச்சுறுத்துவார்,டிரம்ப் இந்தியா மீது விதித்த வரி அப்படியே தொடரும். மேலும், ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்குவதை அதிகரித்தால், டிரம்ப் தான் ஏற்கனவே விதித்த அபராத வரியை அதிகப்படுத்துவார்.

அமெரிக்க நிதி அமைச்சரின் கூற்றும் இதுவாகத்தான் இருக்கிறது. டிரம்ப்-புடின் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால், டிரம்ப் இந்தியா மீது கூடுதல் வரி விதிப்பார் என்றும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்திடம், இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் என்று நிதி அமைச்சர் ஸ்காட் பெஸ்ஸன்ட் தெரிவித்திருக்கிறார். ஆக, புடினை தன் வழிக்கு கொண்டுவரமுடியாமல் டிரம்ப் தோல்வியடைந்தால், அவர் இந்தியா போன்ற நாடுகளை மேலும் தண்டிப்பார் என்பது நிதர்சனமான உண்மை.

இந்த அலாஸ்கா சந்திப்பு எப்படி நடக்கப்போகிறது, எப்படி முடியப்போகிறது என்று இந்தியா மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் இருக்கிறது. இந்த பேச்சுவார்த்தைக்கு தனது ஆதரவை இந்திய அரசு தெரிவித்திருக்கிறது. பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிந்து, ரஷ்யா-உக்ரைன் போர்நிறுத்தம் ஏற்பட்டால், இந்தியா சற்று நிம்மதிப் பெருமூச்சு விடும். இல்லையென்றால், டிரம்ப் விதித்த வரியையும் ஏற்றுக்கொண்டு, ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை அதிகப்படுத்தினால், அதிக இறக்குமதி வரியின் காரணமாக அமெரிக்க மக்கள் இந்திய பொருட்களை வாங்கமாட்டார்கள், இங்கு வேலையிழப்புகள் ஏற்படும், அதுமட்டுமல்லாமல், இந்திய-அமெரிக்க உறவில் இந்த மோதல் போக்கு சேதத்தை ஏற்படுத்தும்.

ஒருவேளை, டிரம்ப் விதிக்கும் வரிக்கு கட்டுப்பட்டு, இந்தியா ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை குறைத்துக்கொண்டால், அந்த ரஷ்ய எண்ணெய்க்கு ஈடாக வேறொரு மத்தியகிழக்கு நாட்டிலிருந்து எண்ணெய் வாங்குவதை அதிகரிக்கவேண்டும். மத்தியகிழக்கில் ஏற்கனவே போர் பதற்றமும், நிலையற்ற சூழலும் இருப்பதால் இங்கிருந்து எண்ணெய் வாங்க நாம் அதிக விலை கொடுக்கவேண்டும்...அப்படி அதிக விலை கொடுத்தால், இங்கு பெட்ரோலிய பொருட்களின் விலை அதிகரிக்கும். ஏற்கனவே விலைவாசி உயர்வால் நெருக்கடியில் இருக்கும் இந்தியர்களை இது பாதிக்கும், மேலும் நம் பொருளாதாரமும் சரியும்.

T

இப்படி, டிரம்ப்-புடின் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் இந்தியாவிற்கு அது பாதகமாக அமையும். அமெரிக்காவின் உறவும் வேண்டும், ரஷ்யாவின் எண்ணெய்யும் வேண்டும் என்ற இந்தியாவின் சமநிலைக்கு தற்போது ஒரு பெரும் சவால் வந்துள்ளது. ரஷ்யா-உக்ரைன் போரை டிரம்ப் முடிவிற்கு கொண்டுவந்து அமைதிக்கான நோபல் பரிசை வெல்வாரா? டிரம்ப் -புடின் இடையே நட்பு மலருமா? ஜெலன்ஸ்கியிடம் 'எனக்கு நீங்கள் நன்றி சொல்லவேண்டும்' என்று கூறிய டிரம்ப், புடினிடமும் நன்றியை கேட்பாரா? இந்த அலாஸ்கா பேச்சுவார்த்தையின் முடிவை இந்தியா எப்படி கையாளும்? என்ற பல கேள்விகளுக்கு விடை தொலைதூரத்திலில்லை.

அடுத்த வாரம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ரஷ்யாவிற்கு செல்கிறார். ரஷ்ய அதிபர் புடின் விரைவில் இந்தியா வரவுள்ளார். பிரதமர் மோடி, அடுத்த மாதம், அமெரிக்காவில் நடக்கும் ஐ.நா. சபை கூட்டத்திற்கு செல்லும்போது டிரம்பை சந்திக்கக்கூடும். இவ்வாறு, அடுத்தடுத்து நிகழப்போகும் சந்திப்புகள் இந்தியா-அமெரிக்கா-ரஷ்யா உறவுகளில் எப்படி தாக்கத்தை, மாற்றத்தை ஏற்படுத்தப்போகின்றன என்ற கேள்வியும், எதிர்பார்ப்பும் நாடு முழுக்க எழுந்திருக்கிறது.

- அழகு முத்து ஈஸ்வரன்