Advertisment

"வட்டச் செயலாளர் ஆவதற்கு கூட 5 வருடம் கட்சியில் இருக்க வேண்டும்... ஆனால் அண்ணாமலை போன்று.." - வேலுச்சாமி தடாலடி கேள்வி!

XZC

தமிழ்நாடுமுன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் அடுத்தடுத்து தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்துவருகிறார்கள். இது பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படும் வேளையில், தவறு செய்யவில்லை என்றால் நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள் என்று ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்கள் மல்லுக்கட்டும் சம்பவம் ஒருபுறம் நடந்துவரும் நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய தனிப்படை போலிசார் தீவிரமாக முயற்சிசெய்தும் முடியாமல் தவிக்கும் கையறு நிலை என பல அதிரடிகளைத் தற்போது தமிழ்நாடு அரசியல் களம் சந்தித்துவருகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுச்சாமியிடம் நாம் கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

Advertisment

நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய லக்கிம்பூர் விவகாரத்தில் அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன், இதனை திட்டமிட்ட படுகொலை என்று அறிக்கை அளித்துள்ளது. விவசாயிகள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட பயங்கரமான தாக்குதல் இது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

Advertisment

இந்த விவகாரத்தை எளிதாக கடந்துவிட முடியாது.சம்பவம் எதற்காக நடைபெற்றது என்பதைக் கவனமாகப் பார்க்க வேண்டும். மத்திய அமைச்சர் வருகையைக் கண்டித்து அங்கு விவசாயிகள் கருப்பு போராட்டம் நடத்துவதாக முன்பே கூறிவிட்டு, அந்த இடத்தில் விவசாயிகள் சம்பவம் நடைபெற்ற அன்று கூடியுள்ளனர். போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த அந்தக் குறிப்பிட்ட இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டு அந்த இடம் முழுவதும் காவல்துறை கண்காணிப்பில் கொண்டுவரப்பட்டிருந்தது. அந்த இடத்தில் போலீசார் அனுமதி இல்லாமல் யாரும் செல்ல முடியாது என்றிருந்த நிலையில், விவசாயிகள் மீது மோதிய வாகனம் மட்டும் எப்படி அங்கே சென்றது என்ற கேள்வியைத்தான் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் கேட்டுவருகிறோம்.

அப்படியென்றால் காவல்துறையின் அனுமதியோடுதான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் நடைபெற்ற பிறகு, இது தவறுதலாக நடைபெற்ற ஒன்று என்றார்கள். அமைச்சர் மகன் அங்கே இல்லை என்று சொன்னார்கள், துப்பாக்கிச்சூடு நடைபெறவில்லை என்றார்கள். ஆனால் இவை அனைத்தும் உண்மை என்று பிறகு தெரியவந்தது. இப்போது விசாரணையில், அதுவும் இவர்கள் அமைத்த விசாரணை கமிஷனில் இது திட்டமிட்ட படுகொலை என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் இப்போது என்ன சொல்கிறார்கள், சம்பவத்தில் தொடர்புடைய அமைச்சரைப் பதவியிலிருந்து நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று கூறுகிறார்கள். இவர்கள் யாருக்கும் வெட்கம் இல்லை.பதவி, அதிகாரம் இருந்தால் மட்டும் போதும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் சிறிய பிரச்சனை என்றாலும் அதுதொடர்பாக கருத்து தெரிவிக்கும் பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட எந்த பாஜக தலைவர்களும் இதுதொடர்பாக எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை. இது தொடர்பாக என்ன நினைக்கிறீர்கள்?

அவர்கள் என்ன கருத்து சொல்வார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இந்த அண்ணாமலைக்கும் பாஜகவுக்கும் என்ன சம்மந்தம். இந்தக் கட்சிக்கு அவர் எப்போது வந்தார். குருட்டு அதிர்ஷ்டத்தில் அவர் தலைவர் பதவிக்கு வந்துள்ளார். நல்லவர்கள் எல்லாம் அமைதியாக இருக்கிறார்கள், இவர்கள் எல்லாம் தேவையில்லாமல் அதிகம் பேசுகிறார்கள். இந்தியாவில் எந்த கட்சியிலாவது உறுப்பினராக சேர்ந்த உடனேயே கட்சித் தலைவராக மாறிய வரலாறு உண்டா? அதிமுகவில் வட்டச் செயலாளர் ஆவதற்குக் கூட 5 ஆண்டுகள் கட்சியில் உறுப்பினராக இருக்க வேண்டும்.ஆனால் பாஜகவில் அப்படி ஏதும் இருக்கிறதா? இவர்கள் அனைவருக்கும் காலம் தக்க பாடத்தை விரைவில் எடுக்கும் என்பது மட்டும் நிஜம்.

இந்த ஆட்சி வெறும் 5 வருடம்தான், ஆட்சி மாறியதும் லஞ்ச ஒழிப்பு போலீசாரின் சட்டை கழற்றப்படும் என்று விழுப்புரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சி.வி.சண்முகம் பேசியுள்ளதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அவர் டவுசர் முதலில் இருக்கிறதா என்பதை அவரை பார்க்கச் சொல்லுங்கள். ஒருமுறை பாமக கட்சியினர் அவரை தாக்க முற்பட்டபோது, அவர் காருக்கு அடியில் பயந்து ஓடி தப்பித்த சம்பவம் அவருக்கு நினைவில் இருக்கும் என்று நினைக்கிறேன். இப்பேர்பட்ட சூரன் தற்போது டவுசரைக்கழட்டுவேன் என்று கூறுகிறார். ஏதோ பைத்தியம் உளறுகிறது என்று நாம் இதைக் கடந்து போகத்தான் வேண்டும். வெறும் வாய் சவாடால் எதற்கும் புண்ணியப்படாது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாகக் கூறி தொடரப்பட்ட வழக்கில் அவரை கைது செய்ய காவல்துறையினர் தனிப்படை அமைத்து அவரை தேடிவருகிறார்கள். அவர் பல்வேறு கார்களை மாற்றி தப்பி ஓடிவிட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

நீங்கள் ராஜேந்திர பாலாஜியை தயவுசெய்து அவமானப்படுத்தாதீர்கள். அவர் தகுதிக்குக் குறைந்தபட்சம் 3000 கோடி ஊழல் என்றாவது கூறுங்கள். அதிமுக மந்திரிகள் எப்படி சொத்து சேர்த்துள்ளார்கள், பதவிக்கு முன்பு அவர்களின் பொருளாதாரம் என்ன என்பது பற்றியும் அனைவருக்கும் நன்கு தெரியும். எனவே இவர்களை சில கோடிகளில் சுருக்கிவிடாதீர்கள். இவர்கள் ஒன்றும் அவ்வளவு நல்லவர்கள் இல்லை. கோடி கோடியாய் அனைவரும் குவித்து வைத்துள்ளார்கள்.

இன்றைக்கு தங்கமணி தன்னிடமிருந்து லஞ்ச ஒழிப்புத்துறை எதையும் கொண்டு செல்லவில்லை என்று கூறியிருக்கிறார். இதை யாராவது நம்ப முடியுமா? 91இல் அமைச்சராக இருந்த செல்வகணபதியிடம் எடுபிடியாக இருந்தவர்தான் இந்த தங்கமணி. தற்போது அவரிடம் எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் சொத்துக்கள் இருக்கிறது என்று யாருக்காவது தெரியுமா? இவர்கள் அனைவரும் ஊழல் மணிகள். மடியில் கணம் இருப்பதால் பயப்படுகிறார்கள்.

admk velusamy
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe