Advertisment

"கஜோலை சந்திக்க நேரமிருக்கிறது... விவசாயிகளை சந்திக்க பிரதமருக்கு நேரம் இல்லை..." - திருச்சி வேலுச்சாமி சீற்றம்!

y

Advertisment

மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி. அரசுக்கு எதிராக தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்திவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உ.பி.யில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது அங்கு வந்த பாஜகவினரின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? விவசாயிகள் கல் எறிந்ததால்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக எதிர் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்?

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் இவர்கள் புளுகு எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. அந்தக் கார் எப்படி அவர்கள் மீது மோதியது என்ற வீடியோ உடனடியாக வெளியானது. அந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை பலருக்குத் தெரியவில்லை. அந்த ஊருக்கு அமைச்சர் வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனால் விவசாயிகள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புகொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு, கால்நடையாக கருப்பு கொடியை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். போலீசார் அங்கே இருக்கிறார்கள். அவர்களை வாகனங்களில் செல்ல அனுமதியளிக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் நடந்தே சாலையில் செல்கிறார்கள். ஆனால் பின்னால் அவர்களின் மீது மோத அந்த வாகனத்துக்கு யார் அனுமதி அளித்தார்கள். அந்த உண்மை தெரிந்தாக வேண்டும்.

Advertisment

அந்த வீடியோவில் மிகத் தெளிவாக இருக்கிறது, பின்புறமாக இருந்து வாகனம் வந்து விவசாயிகள் மீது மோதுகிறது. இதை ஒருவர் உயிரைக் கொடுத்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகிறது. அடுத்த சில மணி நேரங்களில் வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மர்மமான முறையில் இறக்கிறார். எனவே இவர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தை செய்திருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின்னால் இவர்கள் சொல்லும் காரணம்தான் கொடுமையிலும் கொடுமை. அந்த காலத்தில் ஒரு படத்தில் சோ ஒரு வசனம் பேசியிருப்பார். "கத்தியால் குத்திய என் கட்சிக்காரரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அவரை விடச் சொல்லுங்கள்" என்று அந்த வசனம் இருக்கும். அது இன்றைக்கு நிஜமாக மாறியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யாமல், அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்துள்ளனர். அதுவும் சட்டவிரோதமாக கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். சட்டத்திற்குப் புறம்பாக 34 மணி நேரத்திற்கு மேலாக அவரை சிறையில் வைத்திருந்தனர் என்றால், அவர்கள் எந்த சட்டத்தை மதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எல்லாருக்கும் எழுகிறது.

இதுதொடர்பாக பாஜக பிரமுகர்களிடம் பேசும்போது, ஏற்கனவே அங்கே நான்கு உயிர் போயுள்ளது. இவர்கள் அங்கே சென்றால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும். அதனால்தான் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனரே?

மொத்த பிரச்சனைக்கும் காரணமே நீங்கள்தானே. நீங்கள் என்ன கருத்து சொல்கிறீர்கள், வீணாய் போன நீங்கள் ஒழுங்காக இருந்தால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே! உலக வரலாற்றிலேயே இந்தப் போராட்டம் சாதனைதான். எந்த இடத்திலும் இவ்வளவு நாட்கள் இந்த மாதிரியான போராட்டம் நடைபெற்றதில்லை. ஒரு வருடமாக போராட்டம் நடக்கிறது, இங்கே இருக்கிற மோடி உலக சுற்றுப்பயணம் செய்கிறார். எனவே இவர்கள் யாரும், பிறருக்கு அட்வைஸ் செய்கின்ற தார்மீக தகுதியை இழந்துவிட்டார்கள். இந்த வீடியோ வெளிவந்துவிட்டது, உண்மை தெரிந்துவிட்டது என்றே ஒரே காரணத்திற்காக தற்போது அந்த பத்திரிகையாளரையும் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்றாவது இவர்கள் கண்டுபிடிப்பார்களா என்றால் அவர்களிடம் எந்த பதிலும் இருக்காது.

இன்றைக்கு போராட்டம் ஏன் நடக்கிறது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறதே? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவில் எல்லா பிரச்சனைகளும் நீதிமன்றத்திற்கு செல்கிறது. அப்படியென்றால் எந்த பிரச்சனை பற்றியும் நாம் பேசக்கூடாதா? பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். இவர்கள், விவசாயிகளிடம் விவசாய சட்டத்தைப் பற்றி மட்டும் பேசாதீர்கள், திருத்தம் வேண்டுமானால் கூறுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர்களை எதற்காக அழைக்கிறார்கள்? டீ, போண்டா சாப்பிடவா அழைக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை, கவுதமி, கஜோல்-ஐ சந்திக்க நேரமிருக்கிறது. இந்த நாட்டில் விவசாயிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது, உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில்தான் இவர்கள் இங்கே வாழ்ந்துவருகிறார்கள். எனவே, மத்திய அரசு அவர்களுக்கு எதுவும் செய்யாது என்பதே நூறு சதவீதம் உண்மை.

velusamy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe