Skip to main content

"கஜோலை சந்திக்க நேரமிருக்கிறது... விவசாயிகளை சந்திக்க பிரதமருக்கு நேரம் இல்லை..." - திருச்சி வேலுச்சாமி சீற்றம்!

Published on 08/10/2021 | Edited on 08/10/2021

 

y


மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் திருத்த சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். இதன் ஒருபகுதியாக லக்கிம்பூரில் நடைபெற்ற போராட்டத்தில் விவசாயிகள் மீது பாஜகவைச் சேர்ந்தவர்களின் கார் ஏறியதில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதை தொடர்ந்து இந்த சம்பவத்தில் இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்தியா முழுவதும் விவாதத்தைக் கிளப்பியுள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர் கடும் கண்டனங்களை உ.பி. அரசுக்கு எதிராக தெரிவித்துவருகிறார்கள். இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமியிடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, 

 

மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாய திருத்தச் சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் மாதக்கணக்கில் போராட்டம் நடத்திவருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக உ.பி.யில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தபோது அங்கு வந்த பாஜகவினரின் கார் மோதி நான்கு விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் அங்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? விவசாயிகள் கல் எறிந்ததால்தான் இந்த சம்பவம் நடைபெற்றதாக எதிர் தரப்பினர் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள்? 

 

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் இவர்கள் புளுகு எட்டு மணி நேரம் கூட தாங்கவில்லை. அந்தக் கார் எப்படி அவர்கள் மீது மோதியது என்ற வீடியோ உடனடியாக வெளியானது. அந்த சம்பவத்தின் உண்மைத்தன்மை பலருக்குத் தெரியவில்லை. அந்த ஊருக்கு அமைச்சர் வருவதாக தகவல் வெளியாகியிருந்தது. அதனால் விவசாயிகள் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கருப்புகொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு, கால்நடையாக கருப்பு கொடியை எடுத்துக்கொண்டு செல்கிறார்கள். போலீசார் அங்கே இருக்கிறார்கள். அவர்களை வாகனங்களில் செல்ல அனுமதியளிக்கவில்லை. அதன் காரணமாக அவர்கள் நடந்தே சாலையில் செல்கிறார்கள். ஆனால் பின்னால் அவர்களின் மீது மோத அந்த வாகனத்துக்கு யார் அனுமதி அளித்தார்கள். அந்த உண்மை தெரிந்தாக வேண்டும். 

 

அந்த வீடியோவில் மிகத் தெளிவாக இருக்கிறது, பின்புறமாக இருந்து வாகனம் வந்து விவசாயிகள் மீது மோதுகிறது. இதை ஒருவர் உயிரைக் கொடுத்து வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தொலைக்காட்சிகளில் வெளியாகிறது. அடுத்த சில மணி நேரங்களில் வீடியோ எடுத்த பத்திரிகையாளர் மர்மமான முறையில் இறக்கிறார். எனவே இவர்கள் திட்டமிட்டு இந்த சம்பவத்தை செய்திருக்கிறார்கள். ஆனால், அதற்குப் பின்னால் இவர்கள் சொல்லும் காரணம்தான் கொடுமையிலும் கொடுமை. அந்த காலத்தில் ஒரு படத்தில் சோ ஒரு வசனம் பேசியிருப்பார். "கத்தியால் குத்திய என் கட்சிக்காரரைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். அவரை விடச் சொல்லுங்கள்" என்று அந்த வசனம் இருக்கும். அது இன்றைக்கு நிஜமாக மாறியுள்ளது. தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யாமல், அந்த தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்கச் சென்ற பிரியங்கா காந்தியை கைது செய்துள்ளனர். அதுவும் சட்டவிரோதமாக கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.  சட்டத்திற்குப் புறம்பாக 34 மணி நேரத்திற்கு மேலாக அவரை சிறையில் வைத்திருந்தனர் என்றால், அவர்கள் எந்த சட்டத்தை மதிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி இயல்பாகவே எல்லாருக்கும் எழுகிறது.

 

இதுதொடர்பாக பாஜக பிரமுகர்களிடம் பேசும்போது, ஏற்கனவே அங்கே நான்கு உயிர் போயுள்ளது. இவர்கள் அங்கே சென்றால் இன்னும் பதற்றம் அதிகரிக்கும். அதனால்தான் அனுமதி  மறுக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளனரே? 

 

மொத்த பிரச்சனைக்கும் காரணமே நீங்கள்தானே. நீங்கள் என்ன கருத்து சொல்கிறீர்கள், வீணாய் போன நீங்கள் ஒழுங்காக இருந்தால், எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே! உலக வரலாற்றிலேயே இந்தப் போராட்டம் சாதனைதான். எந்த இடத்திலும் இவ்வளவு நாட்கள் இந்த மாதிரியான போராட்டம் நடைபெற்றதில்லை. ஒரு வருடமாக போராட்டம் நடக்கிறது, இங்கே இருக்கிற மோடி உலக சுற்றுப்பயணம் செய்கிறார். எனவே இவர்கள் யாரும், பிறருக்கு அட்வைஸ் செய்கின்ற தார்மீக தகுதியை இழந்துவிட்டார்கள். இந்த வீடியோ வெளிவந்துவிட்டது, உண்மை தெரிந்துவிட்டது என்றே ஒரே காரணத்திற்காக தற்போது அந்த பத்திரிகையாளரையும் கொலை செய்திருக்கிறார்கள். இந்த சம்பவம் எப்படி நடைபெற்றது என்றாவது இவர்கள் கண்டுபிடிப்பார்களா என்றால் அவர்களிடம் எந்த பதிலும் இருக்காது. 

 

இன்றைக்கு போராட்டம் ஏன் நடக்கிறது, வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறதே? என்று சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்தியாவில் எல்லா பிரச்சனைகளும் நீதிமன்றத்திற்கு செல்கிறது. அப்படியென்றால் எந்த பிரச்சனை பற்றியும் நாம் பேசக்கூடாதா? பேச்சுவார்த்தைக்கு அவர்கள் தயாராகத்தான் இருக்கிறார்கள். இவர்கள், விவசாயிகளிடம் விவசாய சட்டத்தைப் பற்றி மட்டும் பேசாதீர்கள், திருத்தம் வேண்டுமானால் கூறுங்கள் என்று சொல்கிறார்கள். அப்படியென்றால், அவர்களை எதற்காக அழைக்கிறார்கள்? டீ, போண்டா சாப்பிடவா அழைக்கிறார்கள். பிரதமர் மோடிக்கு விவசாயிகளை சந்திக்க நேரமில்லை, கவுதமி, கஜோல்-ஐ சந்திக்க நேரமிருக்கிறது. இந்த நாட்டில் விவசாயிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது, உயிருக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில்தான் இவர்கள் இங்கே வாழ்ந்துவருகிறார்கள். எனவே, மத்திய அரசு அவர்களுக்கு எதுவும் செய்யாது என்பதே நூறு சதவீதம் உண்மை.

 

 

Next Story

“விஜயகாந்த் வீட்டில் பாதுகாத்து வந்த பொக்கிஷம்” - திருச்சி வேலுச்சாமி

Published on 28/12/2023 | Edited on 28/12/2023
Trichy Veluchami shared about the photograph kept at Vijayakanth house

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக மீண்டும் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி திருச்சி வேலுச்சாமி விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜயகாந்த் குறித்து நம்முடன் பகிர்ந்துகொண்டவை, “தனிப்பட்ட முறையில் ஒரு சகோதரரை போல என்னுடன் பழகிய அன்பு சகோதரர் விஜயகாந்த் மறைந்திருக்கிறார். அதிமுக எனும் தனிக் கட்சியை எம்.ஜி.ஆர் வைத்திருந்தாலும், நான் சாகும் வரை காமராஜர் தான் எனது தலைவர் என்று கூறியது போல், விஜயகாந்த்தும் தனியாக தேமுதிக என்ற தனி கட்சியை வைத்திருந்தாலும் நான் காமராஜரின் தொண்டன் தான் என்று சொல்லியதற்கு என்றும் தயங்கியது கிடையாது. 

கடைசி வரை கதர் வேஷ்டி சட்டை அணிவதில் பெருத்த மகிழ்ச்சி கொண்டவர் விஜயகாந்த் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்று. ஆனால் அவரது வீட்டில் பொக்கிஷமாக பாதுகாத்து வைத்திருந்த ஒரு புகைப்படம், பலருக்கு தெரியாது, விஜயகாந்திற்கு 5 அல்லது 6 வயது இருக்கும் போது காமராஜர் மதுரையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது காமராஜருடன் விஜயகாந்த் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது வீட்டில் பொக்கிஷமாக வைத்திருந்தார். அரசியல் களத்தில் இருந்தாலும், திரைத்துறையில் பல சாதனைகளை செய்தாலும் மனிதனாகவே வாழ்ந்தார். சக மனிதனை மதிக்கக் கூடிய பெரிய பண்பாளர். அவரது இழப்பு மிகவும் ஈடுசெய்யமுடியாத ஒன்று. நீங்கள் எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும் சக மனிதனை மதிக்கக் கூடிய பண்பை விஜயகாந்த்திடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். 

Next Story

“உங்க தாத்தாவையே பார்த்தவர் கார்கே” - மோடியை வறுத்தெடுத்த திருச்சி வேலுச்சாமி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

Trichy velusamy Interview

 

சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் தேசிய அளவிலான மாநாடு நடைபெற்றது. சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் அகில இந்திய அளவில் உள்ள பொறுப்பாளர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இது குறித்தும், சமகால அரசியல் குறித்தும் தன்னுடைய கருத்துகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்.

 

ஈடுபாட்டோடு செயல்பட்டால் நாட்டில் எதுவுமே சாத்தியம் தான். அதுபோல்தான் ஒத்த கருத்துடைய, இந்திய நாட்டின் நலனை விரும்பும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்கிற கருத்தும். நாடு முழுவதும் மக்கள் விரோத பாஜக அரசுக்கு எதிரான ஒரு மனநிலை ஏற்பட்டுள்ளது. மக்களுடைய தன்னம்பிக்கையை இன்னும் வலுப்படுத்தும் வகையில் மதச்சார்பற்ற சிந்தனையுடைய கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும். அப்படிப்பட்ட நிலை ஏற்பட்டால் இந்த ஆட்சியை நிச்சயம் வீழ்த்த முடியும். இதற்கான தீர்மானம் தான் சத்தீஸ்கர் காங்கிரஸ் மாநாட்டில் கொண்டுவரப்பட்டது.

 

பத்தாண்டு காலத்தில் நாங்கள் மக்களுக்கு இவ்வளவு நன்மைகளைச் செய்திருக்கிறோம், அதனால் மக்கள் எங்களோடு நிற்பார்கள் என்று சொல்லும் தைரியம் பாஜகவுக்கு இருக்கிறதா? ஒரு மதம், ஒரு மொழி, ஒரு சித்தாந்தம் என்று நாட்டு மக்களிடையே அமைதியின்மையை உருவாக்கியுள்ளது பாஜக அரசு. எனவே மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்று தவறான கனவு காண்பது பாஜக தான். எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தால் பாஜகவை 100 சீட்டுகளுக்குள் அடக்கிவிடலாம் என்று நிதீஷ் குமார் சொன்னது மிகச் சரி.

 

ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரையில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒவ்வொரு இடத்திலும் லட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். அவர்கள் கூலிக்காகத் திரண்டவர்களா? இதை விமர்சிக்கும் துக்ளக் குருமூர்த்தி கனவுலகத்திலிருந்து நிஜ உலகத்திற்கு வருவது அவருக்கு நல்லது. நாட்டு மக்களிடையே தற்போது ஒரு அமைதிப் புரட்சி ஏற்பட்டுள்ளது. ஏசி ரூமில் உட்கார்ந்துகொண்டு அரசியலைப் பார்ப்பவர்களுக்கு அது புரியாது. 

 

நான் டீ விற்றவன், ஏழைத்தாயின் மகன் என்று சொல்லிக்கொள்ளும் மோடி தினமும் தன்னுடைய மேக்கப்பிற்கே லட்சக்கணக்கில் செலவழிக்கிறார். அவர் போல் அல்ல மல்லிகார்ஜுன கார்கே. 50 வருடங்களாக சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் அவர், மிகச் சாதாரணமான வாழ்க்கை வாழ்பவர். எனவே மோடிக்கு இதெல்லாம் புரியாது. இந்த நாட்டின் பிரதமராக ஒரு தலித்தை அறிவிக்க பாஜகவால் முடியுமா? பட்டியலினத்தைச் சேர்ந்த, நீண்ட அரசியல் அனுபவமுள்ள கார்கேவை மிரட்டிப் பணிய வைக்க முடியாது என்பதால் அவருக்கு ஆதரவாகப் பேசுவது போல் நடிக்கிறார் மோடி. உங்களுடைய தாத்தாவையே பார்த்தவர் கார்கே. தாமரை எப்போதும் சாக்கடையில் தான் மலரும். தற்போது மக்கள் தெளிவாகி விட்டனர். இனி பாஜகவால் வெற்றி பெற முடியாது.