Advertisment

BIG BREAKING! ராமஜெயம் கொலை வழக்கில் நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக துப்பு!

Trichy Ramajayam case

Advertisment

சமீபத்தில் ராமஜெயம் கொலை குறித்து துப்பு கிடைத்துள்ளது என பத்திரிகையாளர்களுக்கு தகவல் தெரிவித்து, "ராமஜெயம் படுகொலையில் ஈடுபட்ட கொலையாளிகள், தொடர்புடைய நபர்கள் குறித்து எந்தவொரு தகவல், எவருக்குத் தெரிந்தாலும் சரியான தகவல் அளிப்போருக்கு சன்மானம் வழங்குவதுடன், அவர்களது விவரம் ரகசியம் காக்கப்படும்" என்று மடைமாற்றியது எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழு. அந்த பிரத்யேக துப்பு "நக்கீரனுக்கு' கிடைக்க, அதன் வழியில் பயணமாக பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன.

வழக்கின் பாதை:

அமைச்சர் நேருவின் தம்பியும், குவாரி கான்ட்ராக்ட் முதல் ரியல் எஸ்டேட் வரை, ‘ஜனனி’ மினரல்ஸ், ‘கேர் காலேஜ்’ என தனது சாம்ராஜ்ஜியத்தை சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேஷியா, தென் ஆப்ரிக்கா என வர்த்தகத் தொடர்பை விரிவுபடுத்திய ராமஜெயம் கொலைக்கான புதிர் அவிழ்க்கப்படவுள்ளது என்கிறது உளவு வட்டாரம்.

29/03/2012 அன்று திருச்சி - கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் உள்ள முட்புதரில் ஆசிட் ஊற்றப்பட்டு, கட்டுக்கம்பிகளால் உடல் கட்டப்பட்டு, போர்வையால் சுற்றப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தார் ராமஜெயம். ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை ஆரம்பித்தபோதிலும், முன்னேற்றம் எதுவும் ஏற்படாததால், அதே வருட ஜூனில் சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.

Advertisment

தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய இந்தக் கொலை வழக்கில், வழக்கு விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக்கோரி அவரது மனைவி லதா சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்ய, 2015-ஜூன் 12-ஆம் தேதி மனு விசாரணையின்பொழுது ஆஜரான சி.பி.சி.ஐ.டி. போலீசார், குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என்றும், விசாரணைக்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கேட்டு, ஜூலை 24-வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அதற்கடுத்த நாட்களில் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இதிலும் போதிய முன்னேற்றம் இல்லாததால் சி.பி.ஐ. துணைகொண்டு எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் டி.எஸ்.பி. மதன், சி.பி.ஐ. டி.எஸ்.பி. ஹரி மற்றும் பல்வேறு பிரிவு போலீஸார் அடங்கிய சிறப்புப் புலனாய்வுக் குழுவினை அமைத்தது தமிழ்நாடு அரசு.

தொடக்ககால ட்விஸ்டுகள்:

சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24-ஆம் தேதி முதல் 26-ஆம் தேதிவரை சந்தேக வளையத்திற்குள் இருந்த கொலைசெய்யப்பட்ட ராமஜெயத்தின் உதவியாளர்கள் நந்தகுமார், 'கேபிள்' மோகன் ஆகியோரை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து சென்னை சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்தில், உண்மை கண்டறியும் சோதனையை நடத்தினர். அதன்பின் ராமஜெயம் வழக்கு மீண்டும் கிணற்றில் போடப்பட்ட கல்லாக மாறிவிட்டது.

பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் ‘அட்டாக் பாண்டி கைது செய்யப்பட்டவுடன், அவருக்கு இந்தக் கொலை பற்றி தெரியுமா என்று இரண்டு நாட்கள் எஸ்.பி. அன்பு தலைமையிலான குழுவினர் மதுரைக்கு வந்து அட்டாக் பாண்டியிடம் விசாரணை நடத்தினர். அதிலும் எந்தத்துப்பும் கிடைக்கவில்லை. அதேவேளையில் அரியலூரைச் சேர்ந்த கார்த்திக், பெரியசாமி ஆகியோர் "ராமஜெயம் கொலை வழக்கை விசாரித்துவரும் திருச்சி சி.பி.சி.ஐ.டி. இன்ஸ்பெக்டர் தங்களை விசாரணைக்கு ஆஜராகும்படி அடிக்கடி தொந்தரவு செய்துவருகிறார். எது சம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகவேண்டும் என்று கேட்டால் எந்த விவரத்தையும் தெரிவிக்காமல் இன்ஸ்பெக்டர் மிரட்டல் விடுக்கிறார். விசாரணைக்காக சம்மன் எதுவும் அனுப்பவில்லை. எங்கள் மீது எந்த கிரிமினல் வழக்கும் கிடையாது. எனவே, விசாரணை என்ற பெயரில் எங்களை போலீசார் தொந்தரவு செய்யக்கூடாதென உத்தரவிட வேண்டும்' என மனுத் தாக்கல் செய்ய, அப்பொழுதும் பின்னடைவைச் சந்தித்தது சி.பி.சி.ஐ.டி.

நக்கீரனுக்கு கிடைத்த பிரத்யேக துப்பு:

இது இப்படியிருக்க, எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் தொலைத்த இடத்திலிருந்து தேடவேண்டுமென்பதால் கொலை நடந்த இடம், வழக்கமாக வாக்கிங் செல்லும் பாதை, பொன்னி அபார்ட்மெண்ட்ஸ், காவிரிக்கரையின் வடகரை என துழாவத் தொடங்கியது. இதில் வீட்டிலிருந்து அதிகாலை 5.15 மணியளவில் நடைப்பயிற்சிக்காக வெளியில் புறப்பட்ட ராமஜெயத்தின் செல்போன் 5:45 மணியளவில் கோட்டை ரயில் நிலையமருகே அணைக்கப்பட்டுள்ளது. அதன்பின் 8:15 மணியளவில் பிணமாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றார்.

Trichy Ramajayam case

இப்பொழுதுபோல அப்பொழுது செல்போன் டவர் துல்லியமாகத் தெரியாது. சுமார் 2 சதவிகிதம் தெளிவாகக் கிடைக்கும். அதாவது, அப்பொழுது செல்போன் அணைக்கப்பட்டால் அது சுற்றியுள்ள 6 கி.மீ வரை காண்பிக்கும். துல்லியமாக எந்த இடத்தையும் கூறாது. இவரது போன் அணைக்கப்பட்ட பிறகு டவர் ரேஞ்சின் மையப் புள்ளியைக் கணக்கிட்டால், 8.3 கி.மீ தொலைவில் இவரது உடல் கிடைத்துள்ளது. கிடத்தப்பட்ட உடலின் கண், அருகிலுள்ள பொன்னி டெல்டா அபார்ட் மெண்ட்ஸையும், வலது கை கரூரை நோக்கியும், இடது கை சென்னை பைபாஸை நோக்கியும் இருக்குமாறு அமைந்துள்ளது.

இதில் நீதிபதி மணி, போலீஸ்காரர் வாக்குமூலங்கள் தவிர அந்த அபார்ட்மெண்டின் மேனேஜரின் வாக்குமூலம் முக்கியமானதாக கருதப்படுகின்றது. அதுதான் இந்த வழக்கின் பிரத்யேக துப்பு. அவரது வாக்குமூலத்தின்படி வடகரையில் அந்த பொழுதில், மாருதி கம்பெனியை சேர்ந்த வாகனம் ஒன்று வந்ததாகவும், அதனுடைய எண் TN6*** என்பது போல் பார்த்ததாகக் கூறியுள்ளார். இதனடிப்படையில் அந்த வாகனம் Maruti Versa வாகனம் எனக் கண்டறியப்பட்டது. செல்போன் அணைக்கப்பட்ட கோட்டை ரயில் நிலையம் ரவுண்டானாவில் இருந்த சி.சி.டி.வி.யில் அந்த Maruti Versa வாகனம் கடந்ததாக உறுதிசெய்யப்பட்டது.

அத்துடன் 2010-ஆம் ஆண்டு தொடங்கி 2012ம் ஆண்டு வரை விற்பனை செய்யப்பட்ட சுமார் 1400 அந்த ரக வாகனங்களின் உரிமையாளர்களின் காண்டக் சர்டிபிகேட் அலசி ஆராயப்பட்டு வருகின்றது'' என்கிறார் அந்த குழுவினைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

186 குண்டூசித் துளைகள்:

ராமஜெயம் கடத்தப்பட்ட பிறகு, டூவீலரின் பிரேக், ஆக்ஸி லேட்டர் கேபிள்களால் கைகால் கட்டப்பட்டு, உடலெங்கும் கட்டுக்கம்பிகளால் கட்டப்பட்டு ஏறக்குறைய 1 மணி நேரம் குறிப்பிட்ட "அந்த" நபரின் வருகைக்காக காத்திருக்க வைக்கப்பட்டு, அந்த நபர் வந்தவுடன் நேரில் ஆஜர்படுத்தப் பட்டிருக்கின்றார் ராமஜெயம். வந்த நபரோ குண்டூசிகளால் ராமஜெயத்தின் உடலெங்கும், ஏறக்குறைய 186 குண்டூசி அளவிலான துளைகள் இட்டபின்னரே, கொலை செய்யப்பட்டிருக்கிறார் ராமஜெயம் என தெளிவாக குறிப்பிடுகின்றது ராமஜெயத்தின் பிரேத பரிசோதனை அறிக்கை.

Trichy Ramajayam case

காரணங்கள் ஐந்து:

ராமஜெயம் கொலையில் கொலைக்கான காரணங்களில் ஒன்றாக, பெண்கள் விஷயத்தில் ராமஜெயம் சபலம் என சொல்லப்படுகிறது. இதில், காதல் விவகார பிரச்சினை ஒன்றில் நெல்லை மாவட்டம் வள்ளியூரைச் சேர்ந்த ஒரு நபருக்கு எதிராக பஞ்சாயத்து பேசியதோடு மட்டுமல்லாமல், அவருடைய காதலியையே சம்பவம் நடந்த இடத்திற்கு அருகாமையிலுள்ள பொன்னி டெல்டா அபார்ட்மெண்டில் வைத்து குடித்தனம் நடத்தியதாகவும், திரைப்படத்துறையைச் சேர்ந்த நடிகர் ஒருவரின் மனைவியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாகவும், கோவை மாவட்ட என்.ஜி.ஓ. அமைப்பினைச் சேர்ந்த பெண்மணியிடம் சில்மிஷம் செய்ததும் கொலைக்கான காரணமாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினரால் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளது. அதுபோல், ரூ. 1000 கோடி பஞ்சாயத்து ஒன்றில் தலையிட்டதும், மணல் விவகாரத்தில் தலையிட்டதும் கொலைக்கான கூடுதல் காரணமாக முன்வைக்கப் படுகின்றது.

ஆந்திரா ஸ்டைலும், அந்தோனியும்:

"உடலெங்கும் கட்டுக் கம்பிகளால் சுற்றப்பட்டு, வாயில் உறுப்பை வைத்து கொலை நடந்திருப்பதைப் பார்த்தால் இது ஆந்திரா ஸ்டைலே! ஆந்திராவில் நடந்திருக்கும் கூலிக் கொலைகள் அனைத்தும் இதே மாடலிலே நடந்திருக்கும். அதாவது முதலாவது அடியே எதிராளியை நிலைகுலைய வைப்பதுபோல் இருக்கும். ராமஜெயம் கொலையிலும் அவ்வாறே நடந்திருக்கின்றது. ராமஜெயத்தின் பின் மண்டையில் அடித்த அடிதான் அவரை நிலைகுலைய வைத்து உயிர்போகக் காரணமாக இருந்திருக்கின்றது.

அதுபோக இதே மாடல் கொலைகள் இலங்கையிலும் நடப்பது வழமையான ஒன்று. இந்த கொலைக்கான ஸ்கெட்ச் அனேகமாக திருச்சி மத்திய சிறைச்சாலையில் உருவாகியிருக்கும். அங்கேயிருந்த இலங்கையைச் சேர்ந்த அந்தோனி தனக்கு நெருக்கமான ஆந்திரக் கூலிகளிடம் இந்த அசைன்மெண்டை ஒப்படைத்திருக்கலாம். அந்தோனியைத் தொட்டால் கூலிக் கொலையாளிகளைக் கண்டுபிடித்துவிடலாம். ஆனால், அது அவ்வளவு எளிதல்ல'' என்கின்றார் சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரி ஒருவர்.

"ராமஜெயம் கொலையைப் பொறுத்தவரை 120-பி பிரிவின்படி கொலையின் சூத்ரதாரியை நெருங்கிவிட்டது சிறப்புப் புலனாய்வுக் குழு. ஆனால், கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள், இதனால்தான் கொலை நிகழ்ந்தது, இன்னார்தான் கொலையாளிகள்...' என அறியும்வரை பதைபதைப்பு நிச்சயமே!

படம்: விவேக்

police ramajayam
இதையும் படியுங்கள்
Subscribe