Skip to main content

ஆசிரியர் அடித்ததால் பிளஸ்-1 மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை!

திருச்சி அருகே, பிரபல தனியார் பள்ளியில் பலர் முன்னிலையில் ஆசிரியர் கன்னத்தில் அறைந்ததால் மனம் உடைந்த பிளஸ்-1 மாணவி, பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


திருச்சி மவட்டம் முசிறி தாலுகாவுக்கு உட்பட்ட தாத்தையங்கார்பேட்டை அருகே உள்ள ஜம்புமடை கைகாட்டி பகுதியைச் சேர்ந்தவர் தமிழ்க்குமரன். தனியார் நிறுவனத்தில் கார் ஓட்டுநராக உள்ளார். இவருடைய மனைவி தேவிகா. இவர்களது மூத்த மகள் தனபிரியங்காதேவி (17). இவர், தாத்தையங்கார்பேட்டையில் உள்ள சவுடாம்பிகா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்&1 அறிவியல் பாடப்பிரிவில் படித்து வந்தார். இதே பள்ளியில்தான் தமிழ்க்குமரனின் இளைய மகள் தனபிருந்தாதேவியும் படித்து வருகிறாள்.


அக்காளும், தங்கையும் ஆனந்தமாக பள்ளிக்குச் சென்று வந்த நிலையில், இப்போது தங்கையை தனிமரமாக தவிக்கவிட்டுவிட்டு, தனபிரியங்காதேவி திடீரென்று பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (அக். 13) பூச்சி மருந்து குடித்துவிட்டு, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்துள்ளார். அவரை மீட்டு, நாமக்கல் அரசு மருத்துவமனையில் பெற்றோர் சேர்த்துள்ளனர். நிலைமை கவலைக்கிடமாகவே, மகளை அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வந்துள்ளனர்.

trichy private school +1 student incident parentsதொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், புதன்கிழமை மாலை (அக்.16) தனபிரியங்காதேவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பெற்றோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருப்பதுடன், பள்ளி வட்டாரத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஏனெனில், மரணத்தருவாயில், தனபிரியங்காதேவி தனது தற்கொலைக்கு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி டி.கே.ரம்யாவும், தாவரவியல் ஆசிரியர் ரங்கநாதனும்தான் காரணம் என மரண வாக்குமூலம் அளித்திருக்கிறார். இதுதான் இப்போது சவுடாம்பிகா பள்ளி வட்டாரத்தில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 


சேலம் அரசு மருத்துவமனையில் மகளின் பிரிவுத்துயரில் இருந்த தனபிரியங்காதேவியின் தாயார் தேவிகாவிடம் பேசினோம். 


''எங்கள் இரு மகள்களும் தினமும் வீட்டில் இருந்து பள்ளிக்குச் சொந்தமான பேருந்திலேயே சென்று வந்தனர். போன சனிக்கிழமைக்கு முன்தின சனிக்கிழமையன்று, பள்ளி முடிந்து வீட்டுக்கு வருவதற்காக பள்ளிக்கூட பேருந்தில் என் மகள்கள் ஏறி அமர்ந்து உள்ளனர். மூத்த மகள் தனபிரியங்காதேவி தனது புத்தகப்பையை பேருந்தின் இன்ஜின் பக்கத்தில் வைக்கும்படி மற்றொரு மாணவியிடம் கொடுத்து வைத்திருக்கிறாள். 


இதைப்பார்த்த அதே பள்ளியில் பிளஸ்-2 படித்து வரும் டி.கே.ரம்யா என்ற மாணவி, எதற்காக நான் உட்காரும் இடம் அருகே புத்தகப்பையை வைத்தாய்? என்று கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென்று டி.கே.ரம்யா, என் மகளின் கன்னத்தில் அறைந்து விட்டார். சக மாணவ, மாணவிகள் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்ததால், என் மகள் இதுகுறித்து உடனடியாக பள்ளி முதல்வர் தினேஷ்குமாரிடம் புகார் அளித்தார். 

trichy private school +1 student incident parentsஅவரும் இரண்டு பேரையும் அழைத்து விசாரித்துவிட்டு, இருவரது பேரிலும் தப்பு இருக்கிறது என்று கூறி, இருவரையும் ஒருவருக்கொருவர் 'சாரி' சொல்லும்படி கூறியுள்ளார். இதுகுறித்து என் மகள் என்னிடம் கூறியபோது, முதலில் நீ என்ன செய்தாய்? என்று கேட்டேன். அதற்கு அவள், 'மம்மி... நான் உனக்கு முக்கியமா?  இல்ல... அவ முக்கியமா?' என்று கோபமாக கேட்டாள். அதற்கு நான், 'இல்ல சாமீ...எனக்கு நீதான் முக்கியம்னு' சொன்னேன். அதற்குபிறகுதான் பேருந்தில் நடந்த விவரங்களை முழுமையாக சொன்னாள். 


இந்நிலையில், கடந்த 13ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலையில் லேசாக தலைவலிக்கிறது என்றாள். பின்னர் மதியம் சிக்கன் குழம்பு சமைத்து சாப்பிட்டோம். மாலை 5.30 மணியளவில் தனபிரியங்காதேவி வாந்தி எடுப்பதாக என் சின்ன மகள் கூறினாள். என்ன ஏது என்று விசாரிக்கும்போதுதான் அவள் தோட்டத்திற்காக வாங்கி, மோட்டார் அறையில் வைத்திருந்த பூச்சி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டு, தற்கொலைக்கு முயன்றிருப்பது தெரிய வந்தது.


பதறிப்போன நாங்கள், உடனடியாக நாமக்கல் அரசு மருத்துவமனையில் மகளை சேர்த்தோம். பின்னர், அங்கிருந்து சேலம் அரசு மருத்துவமனையில் கொண்டு வந்து சேர்த்தோம். சிகிச்சை பலனின்றி இன்று (அக். 16) என் மகள் இறந்துவிட்டாள். 


கடந்த 12ம் தேதியன்று தாவரவியல் பாட ஆசிரியர் ரங்கநாதன் என்பவர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது என் மகளிடம் பின்னால் உட்கார்ந்திருந்த மாணவி புத்தகம் வாங்கியிருக்கிறாள். அந்த புத்தகத்தை திரும்ப வாங்குவதற்காக தனபிரியங்காதேவி திரும்பியபோது, அங்கே மூன்று மாணவிகள் சிரித்துக் கொண்டிருந்தனர். 

trichy private school +1 student incident parents


'அவர்களை எல்லாம் விட்டுவிட்டு மம்மி... என்னை மட்டும் ஆசிரியர் ரங்கநாதன் ஆக்ரோஷமாக திட்டினார். நீ எல்லாம் என்ன ஜென்மம்? உனக்கு வெட்கமாக இல்லையா? பசங்க இருக்கற இடத்துல இப்படி பல்லைக் காட்டிட்டு இருக்கனு,' என்று கேட்டுட்டு, மகளை கன்னத்தில் அறைந்ததாகச் சொன்னாள். ரம்யா என்னை அறைந்தபோதும், ஆசிரியர் அறைந்தபோதும் எல்லோரும் என்னை கேலி செய்வது போலவும், நான் மட்டும் தனியாக இருப்பதுபோலவும் இருக்கிறது மம்மி. என் சாவுக்கு ரம்யாவும், ரங்கநாதன் சாரும்தான் காரணம் என்று சொல்லிவிட்டு எங்களை தவிக்கவிட்டுச் சென்றுவிட்டாள்....,'' என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார். 


தேவிகாவுக்கு குறைந்த ரத்த அழுத்தப் பிரச்னை இருப்பதாகவும், அவர் எமோஷனல் ஆனால் உடல்நலம் மேலும் பாதிக்கும் என்று கூறிய தமிழ்க்குமரன், பீறிட்டு அழும் மனைவியை சமாதானப்படுத்த முடியாமல் அவரும் கலங்கிப்போனார். 


இது தொடர்பாக நாம் சவுடாம்பிகா மேல்நிலைப்பள்ளி முதல்வர் தினேஷ்குமாரிடம் பேசினோம். 


''சார்... கடந்த அக். 4ம் தேதி, பள்ளிக்கூட பேருந்தில் பிளஸ்-2 மாணவி டி.கே.ரம்யா தன்னை அறைந்துவிட்டதாக தனபிரியங்காதேவி அன்றே என்னிடம் புகார் அளித்தார். இருவரையும் ஒருவருக்கொருவர் 'சாரி' சொல்லிட்டு சமாதானமாகப் போகச்சொன்னேன். மேலும், ரம்யாவிடம் மறுநாள் (அக்.5) மன்னிப்பு கடிதமும் எழுதி வாங்கினோம். அந்தப் பிரச்னை அப்போதே முடிந்துவிட்டது.


ஆனால் ஆசிரியர் ரங்கநாதன் தனபிரியங்காதேவியை அறைந்ததாகச் சொல்வதில் கொஞ்சமும் உண்மை இல்லை. போர்டில் அவர் எ-ழுதிக் கொண்டிருக்கும்போது  தனபிரியங்காதேவி பின்பக்கமாக திரும்பி ஏதோ பேசிக்கொண்டிருந்தார். அதற்கு அவர், 'பாடம் நடத்தும்போது என்ன பேச்சு? பாடத்தைக் கவனி,' என்றுதான் சொல்லி  இருக்கிறார். வகுப்பில் இருந்த மற்ற பசங்ககிட்ட விசாரித்தபோது, இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகக்கூட ஞாபகம் இல்லை என்கிறார்கள்.

trichy private school +1 student incident parentsஆசிரியர் ரங்கநாதன் (55) எங்கள் பள்ளியில் இரண்டு ஆண்டாக வேலை செய்கிறார். பள்ளி விடுதியில்தான் தங்கி இருக்கிறார். இதுவரை அவர் மீது ஒரு சின்ன புகார்கூட வந்ததில்லை. அவர் யாரையாவது திட்டினார் என்று சொன்னால்கூட யாரும் நம்பமாட்டார்கள். கடந்த 13ம் தேதி, வீட்டில் கறி சமைத்து அம்மா, மகள்கள் என மூவரும் சாப்பிட்டிருக்கிறார்கள். அதன்பிறகு கேரம்போர்டு விளையாடி இருக்கிறார்கள். இந்த நிலையில் தனபிரியங்காதேவி திடீரென்று மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். அதற்கு முன்புவரை மாணவி ரம்யா, ஆசிரியர் ரங்கநாதன் பற்றியோ எந்த புகாரும் இல்லை. மாணவி இறந்தபிறகுதான் அவர்களாக இப்படி 'கிரியேட்' செய்கிறார்கள். 


தனபிரியங்காதேவி தற்கொலை சம்பவத்தையொட்டி நாங்கள் விசாரித்தபோது, அவர் கொஞ்சம் ஷார்ட் டெம்பர் சுபாவம் உள்ளவர் என்பது தெரிய வருகிறது. 9ம் வகுப்பு படிக்கும்போதே, தந்தையிடம் கோபித்துக்கொண்டு கிணற்றில் குதித்து விடுவேன் என்று சொன்னதாக சக மாணவி ஒருவர் கூறினார். பள்ளியில்கூட ரொம்பவே சராசரி மாணவிதான் என்றாலும், நடத்தை அடிப்படையில் அந்த மாணவி மீது எந்த தவறும் சொல்ல முடியாது. நல்ல பொண்ணுதான். ஆனால் யாரிடமும் சகஜமாக சிரித்துப் பேசி பழக மாட்டார். இப்போது, தனபிரியங்காதேவி தரப்பில் சிலர் 30 லட்சம் கேட்டு மிரட்டுகின்றனர். பணம் தராவிட்டால் பள்ளி முன்பு பிணத்தை போட்டு போராட்டம் செய்வோம் என்றும் மிரட்டுகிறார்கள்,'' என்கிறார் பள்ளி முதல்வர் தினேஷ்குமார்.


இந்த சம்பவம் குறித்து தாத்தையங்கார்பேட்டை காவல் ஆய்வாளர் (பொ) குருநாதன் வழக்குப்பதிவு (குற்ற எண்: 126/19) செய்து விசாரித்து வருகிறார். மாணவியிடம் நேரடியாக பெற்ற வாக்குமூலத்தின் அடிப்படையில் சவுடாம்பிகா மேல்நிலைப்பள்ளி தாவரவியல் ஆசிரியர் ரங்கநாதன் மீது இ.த.ச. பிரிவுகள் 294 (பி) (ஆபாசமாகப் பேசுதல்), 323 (கையால் தாக்குதல்), 306 (தற்கொலைக்கு தூண்டுதல்) இதனுடன் இணைந்த 511 (தற்கொலைக்கு முயற்சித்தல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 


தனபிரியங்காதேவி தற்கொலை முயற்சி சம்பவத்தில், அக். 15ம் தேதி காலையிலேயே வழக்குப்பதிவு செய்துள்ளதாக கூறுகிறது தாத்தையங்கார்பேட்டை காவல்நிலையம். மாணவி ரம்யா மீது கையால் தாக்குதல் என்ற ஒரே பிரிவின்கீழ் மட்டும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இருவருமே தற்போது தலைமறைவாக உள்ளனர். இந்த சம்பவம் தாத்தையங்கார்பேட்டை சுற்றுவட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்