Advertisment

‘நெகட்டிவிட்டி எல்லாம் தள்ளி வை..’ அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்தான பார்வையை மாற்றிய செல்வங்கள்! 

அரசுப் பள்ளி மாணவர்கள் ஆசிரியரைத்தாக்குவது போன்றும், பள்ளி டேபிள், பெஞ்சுகளை உடைப்பது போன்றும் காணொளிகள் சமீபத்தில் வெளியாகி தமிழ்நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

Advertisment

இந்நிகழ்வுகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், "ஆசிரியரிடம் மாணவர்கள் தவறாக நடந்து கொள்வதை நினைத்தால் வேதனையாக உள்ளது. இது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, துறை அமைச்சராக மட்டுமில்லாமல் இரண்டு குழந்தைகளின் தந்தையாக நான் வேதனைப்படுகிறேன்

Advertisment

ஆசிரியர்கள் கோபத்தில் திட்டுவதைக் கூட இப்போதெல்லாம் மாணவர்கள் தவறாக எடுத்துக்கொள்கிறார்கள். ஒரு காலத்தில் அடித்துத் தான் மாணவர்களை வளர்த்தார்கள். ஆனால், இப்போது அதெல்லாம் நடப்பதில்லை. ஒரு மாணவரை நல்வழிப்படுத்த வேண்டும் என்பதற்காக மட்டுமே அடித்தார்கள். ஆனால், இப்போது எந்தவொரு ஆசிரியரும் மாணவர்களை அடிப்பதில்லை. எடுத்துச் சொல்லித் தான் புரிய வைக்கிறார்கள்.

அதையும் தாண்டி வரம்பு மீறி சிலர் நடந்து கொள்ளும் போது, அவர்களைத் திருத்த வேண்டிய கட்டாயத்தில் சில தண்டனைகளைக் கொடுக்க வேண்டி உள்ளது. தவறு செய்தால் தண்டை கிடைக்கும் என்பதை இந்த வயதிலேயே உணர வைக்கவே தண்டனை வழங்கப்படுகிறது. இப்போது கூட மாணவர்கள் இடைநீக்கம் மட்டுமே செய்யப்பட்டுள்ளனர்.

இதைப் பாடமாக எடுத்துக் கொண்டு, இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் வகுப்புகளில் நடைபெறாமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது தான் எங்கள் பொறுப்பு, அதை நாங்கள் நிச்சயம் செய்வோம். மாணவர்களை நல்வழிப்படுத்தும் வகையில் அவர்களுக்கு மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சிலிங் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

அதேபோல், தமிழ்நாடு டி.ஜி.பி. சைலேந்திர பாபு ஒரு காணொளியை வெளியிட்டார் அதில் அவர், “இரண்டு காணொளிகளை பார்த்தேன். அரசுப் பள்ளி மாணவர்கள், ஒரு ஆசிரியரை ஒரு குறிப்பிட்ட மாணவர் தாக்க முற்படுகிறார். அதேபோல், மற்றொரு இடத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் அந்த வகுப்பறையில் இருக்கும் டேபிள், பெஞ்சு உள்ளிட்டவற்றை சிரமப்பட்டு உடைக்க முற்படுகிறார்கள். பாரதியார் சொல்வதுபோல், “நெஞ்சு பொறுக்குதில்லையே” எனும் சூழ்நிலையில் தான் இந்த வீடியோவை பதிவு செய்கிறேன்.

நானும் அரசுப் பள்ளியில் தான் படித்தேன். நம் பெற்றோர்கள் நம்மை ஏன் அரசுப் பள்ளியில் சேர்த்துள்ளனர் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும். அவர்களிடம் பெரிய வருமானமோ, சொத்தோ இல்லை.உங்க அப்பா அம்மாவிற்கு சொத்து இல்லை. ஆனால், உங்களுக்கு நிறைய சொத்துகள் உள்ளன. நீங்கள் படிக்கும் அரசுப் பள்ளி, அங்கிருக்கும் விளையாட்டு மைதானம், அந்த வகுப்பறை, அங்கிருக்கும் டேபிள், பெஞ்சு, அங்கிருக்கும் ஆசிரியர் இது தான். உங்கள் சொத்து.

நாங்க படிக்கும் போது பள்ளியில் டேபிள், பெஞ்சு எதும் கிடையாது. கீழே தரையில் அமர்ந்துதான் படித்தேன். இவற்றையெல்லாம் அரசு உங்களுக்கு வசதி செய்து கொடுத்து இருக்கிறது. அதனைத் தான் நீங்கள் உடைக்கிறீர்கள்.

இந்த ஆசிரியர்கள்தான் நமக்கும், கணிதம், அறிவியல், கணிணி, மூவாயிரம் ஆண்டு வரலாறு, மனித சரித்திரம் உள்ளிட்டவற்றை கற்பிப்பார்கள். இவர்கள் தான் நமக்கு மிகப் பெரிய சொத்து. அப்படி இருக்கும்போது, அறிவையும், செயல்திறனையும், நல்ல மனப்பான்மையையும் கற்றுக்கொள்ள வேண்டிய இந்த நேரத்தில், இதுபோன்ற வன்முறை செயல்களை ஏன் செய்கிறீர்கள்.

இந்தச் செயல்கள், நம் வீட்டிற்கே நாம் தீவைப்பது போன்றும், நம் கை, கால்களை நாமே வெட்டுவது போன்றும் உள்ளது. உங்கள் ஆதாரங்களை நீங்களே சேதப்படுத்திக் கொள்கிறீர்கள். இனி இதுபோன்ற செயல்களை செய்யாதீர்கள். பள்ளிக்கூடத்திற்கு வருவது என்பது ஒரு மிகப்பெரிய நோக்கத்தோடு வருகிறோம். இங்குதான் நீங்கள் முழு மனிதராக, சிந்தனையாளராக வளரவேண்டிய ஆற்றல் படைத்தவராக மாறவேண்டிய ஒரு பயிற்சி இடம் தான் பள்ளிக்கூடம். ஆகவே அந்த இடத்திற்கு மிகவும் மரியாதை தரவேண்டும். ஆசிரியர் பெருமக்களை மிகவும் உயர்வாக எண்ண வேண்டும். உங்கள் மனங்கள் மாறவேண்டும். பள்ளிக்கூடங்களில் இது போன்ற வன்முறை சம்பங்கள் என்பது மிகப் பெரிய குற்றம். ஆகவே இதுபோன்ற குற்றங்களை மீண்டும் செய்யாதீர்கள்.” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், திருச்சி லால்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு கணினி பிரிவில் படிக்கும் 38 மாணவர்கள், அவர்களின் சேமிப்புத் தொகையைக் கொண்டு தங்களின் வகுப்பறையை சுத்தம் செய்து, சுவர்களுக்கு வர்ணம் பூசி புதுபொலிவுறச் செய்துள்ளனர். இதில் ஐந்து மாணவர்கள் மிகவும் ஆர்வமாகவும், மொத்த நிகழ்வையும் முன்னெடுத்து சென்றதாகவும், அந்தப் பள்ளி தலைமை ஆசிரியர் சுதாகர்நம்மிடம் தெரிவித்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது. மேலும், இந்த மாணவர்களுக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. சமீபத்தில் வெளியான மேற்குறிப்பிட்ட வீடியோக்களால் அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்தான ஒரு பார்வையை, இந்த மாணவர்களின் செயல் மாற்றும் வகையில் அமைந்துள்ளது.

students government school trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe