Advertisment

அதிர வைத்த திருச்சி நகை கொள்ளையின் முழு தகவல்...களத்தில் இறங்கிய போலீஸ்...அதிர்ச்சி ரிப்போர்ட்! 

- மகேஷ், பகத்சிங்

சுவரில் துளையிட்டு திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடையில் ரூ.13 கோடி மதிப்புள்ள தங்க, வைர, பிளாட்டின நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. சி.சி.டி.வி. கேமராவில் சிக்காமல் இருக்க மிருக முகமூடி அணிந்தும், மோப்ப நாயை திசை திருப்ப மிளகாய்ப் பொடி தூவியும் கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். எப்போதும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும் பகுதி. நான்கு காவலர்கள், 15 நாய்கள் என்று கொள்ளையர்களுக்கு சவாலாக நிறைய இருந்தும், லேசான மழைத்தூறலும், இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த பழைய கட்டிடத்தின் சத்தமும் சாதகமாக அமைந்திருக்கிறது.

Advertisment

incident

தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் கிளைகள் பரப்பி உள்ள மிகப்பெரிய நகைக்கடை சாம்ராஜ்யம் லலிதா ஜுவல்லரி. இதன் திருச்சி கிளை கடந்த 5 வருடங்களுக்கு முன்பு துவக்கப்பட் டது. சத்திரம் பேருந்துநிலையம் அருகே 160 பணியாட்களுடன் இயங்கிவரும் இக்கடையில் அக்டோபர் 1-ஆம் தேதி இரவில் 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளைபோன தகவல் கிடைத்ததில் இருந்தே... திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர்கள் மயில்வாகனன், நிஷா தலைமையிலான டீம் இவ்வழக்கை சவாலாக எடுத்துக்கொண்டு விசாரித்து வருகிறது.

incident

Advertisment

நள்ளிரவு 1:30 மணிக்கு கடையின் இடது பக்கம் முக்கால் அடி செங்கல் சுவரை கட்டர் உதவியுடன் துளைபோட்டு அதிகாலை 3:00 மணிக்கு உள்ளே நுழைந்திருக்கிறார்கள். நகைகளை கொள்ளையடித்துவிட்டு 4:30 மணிக்கு வெளியேறியிருக்கிறார்கள். துளை போடப்பட்ட இடத்திலிருந்து வலதுபக்கம் 20 மீட்டர் தொலைவில்தான் பள்ளியின் வாட்ச்மேன் இருக்குமிடம். அதேபோல் இடதுபக்கம் 20 மீட்டர் தொலைவில்தான் நகைக்கடையின் வாட்ச்மேன்கள் இருக்குமிடம். கரிகாலன், ஆன்ரின், அருள்மொழி, மகேஷ்வரன், ஆக 4 வாட்ச்மேன்களும் அரைமணி நேரத்திற்கு ஒருமுறை அந்தப்பகுதிக்கு வந்து கைரேகை வைக்கவேண்டும். இரவு முழுவதும் தூங்காமல் இருப்பதற்காக இப்படி ஒரு முறையை வைத்திருந்தும் அவர்கள் கவனிக்காமல் போனது இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போலீசாருக்கு. துளைபோட்ட இடத்திலும், உள்ளேயும் மிளகாய்ப் பொடியை தூவி விட்டிருப்பதால் மோப்பம் பிடிக்க வந்த அர்ஜுன் நாய் கொஞ்சம் திணறி, கரூர் பைபாஸ் சாலைபக்கம் சென்று திரும்பிவிட்டது. கொள்ளையர்கள் பயன்படுத்திய வாட்டர் பாக்கெட், ஸ்குரூ டிரைவர், மிளகாய்த்தூள் பாக்கெட் மட்டும் கைப்பற்றப்பட்டுள்ளன.

incident

குழந்தைகள் விளையாட்டுக்காக அணியும் சிங்கம் முகமூடியை ஒருத்தனும், முயல் பொம்மை முகமூடியை இன்னொருவனும் அணிந்து, உடலின் வேறு எந்த பாகத்தையும் வெளியே தெரியாதபடி மறைத்து வந்து, எந்த பதட்டமும் இல்லாமல், கவனமாகவும் பதற்றமின்றியும் அதே நேரம் சுறுசுறுப்பாகவும் கொள்ளையடித்துள்ளதால் தொழில்முறை கொள்ளையர்கள் என்பது உறுதியாகியுள்ளது. கடந்த 6 மாதத்திற்கு முன்பு லலிதா ஜுவல்லரி கடைக்கு அடுத்துள்ள காலி இடத்தில், கோவிந்தராஜ் கண் மருத்துவமனை நிர்வாகம் ஒரு மாடிவரை கட்டிடம் எழுப்பி, பின்னர் இடித்து தரைமட்டம் ஆக்கியது. லலிதாவில் கொள்ளைச் சம்பவம் நடந்த சிலநாட்கள் முன்பு வரை இடித்துக்கொண்டிருந்தார்கள். இது கொள்ளையர்களுக்கு சாதகமாக அமைந்துள்ளது. இந்த இடத்தை வேறொரு ஜுவல்லரி கேட்டுவந்த நிலையில், அதற்கு வணிகரீதியான எதிர்ப்பு வந்தது. இதனால் வேறொரு கோணத்திலும் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

நகைக்கடையின் பின்புற பகுதி புனித ஜோசப் கல்லூரியின் மைதானம். இரவு நேரங்களில் அங்கே 15 நாய்களுக்கு மேல் இருக்கும். அந்த வழியாக யாரும் உள்ள நுழையவே முடியாது; ஆனால், சம்பவம் நடந்த அன்று இரவு லேசான மழைத்தூறல் இருந்ததால் நாய்கள் எல்லாம் கட்டிடங்களுக்குள் சென்றுவிட்டன. மேலும், கல்லூரியின் 175-ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் நடந்துகொண்டிருப்பதால் இந்தியா முழுவதிலும் இருந்து பலரும் தொடர்ச்சியாக வந்து போய்க் கொண்டிருந்தனர். அதனால் அங்குள்ளவர்களின் கவனம் நிகழ்ச்சியிலேயே குவிந்திருந்தது. இதுவும் கொள்ளையர்களுக்குச் சாதகமாக அமைந்துள்ளது.

கடந்த 2011-ல் மலைக்கோட்டை அமர் ஜுவல்லரியில் ஷட்டரை திறந்து 31 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இதில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மோகன்சிங் என்பவன் சிக்கினான். அவன்மூலம் 13 பேர் சிக்கி பெரும்பாலான நகைகளை மீட்டுள்ளனர் போலீசார். இக்கொள்ளை சம்பவமும் வெளிமாநிலத்தவர்களின் கை வரிசையாக இருக்குமோ என்ற சந்தேகத்தில், திருச்சி, தஞ்சை, புதுக் கோட்டை, கரூர் ஆகிய இடங்களில் வட இந்தியர்கள் ஓட்டலில் தங்கியிருக்கிறார்களா என்று 7 தனிப்படை போலீசார் சல்லடையாக தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

கம்பளிப் போர்வை விற்பதற்காக புதுக்கோட்டை டைமண்டு விடுதியில் தங்கியிருந்த ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை திருச்சிக்கு அழைத்து வந்து சந்தேகத்தின் பேரில் விசாரித்ததில், அவர்கள் பழைய கொள்ளையர்கள் என்பதும், நடந்துள்ள லலிதா கொள்ளையில் சம்பந்தம் இல்லை என்பதும் முதற்கட்டமாகத் தெரியவந்துள்ளது. கொலைத்தொழிலை கைவிட்டு, நகைக்கொள்ளையில் ருசி பார்த்து வரும் தமிழகத்தின் புது கும்பலின் பட்டியலையும் தயார் செய்து தீவிரமாக கண்காணித்து வருகிறது போலீஸ். வடநாட்டுக் கொள்ளையர்கள் மட்டும் தானா, வெளிநாட்டுக் கொள்ளையர்களும் இருக்கிறார்களா, மோடி-சீன அதிபர் விசிட்டுக்கும் இதற்கும் தொடர்புள்ளதா என எந்தக் கோணத்தையும் விட்டு வைக்காமல் அலசுகிறது காவல்துறை.

complaint police incident lalithaa jewellery trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe