ADVERTISEMENT

நான் தப்புப் பண்ணீட்டேங்க.. உடைந்து சிதறும் உறவுகள்!

12:11 PM Jun 18, 2019 | Anonymous (not verified)

"ஹலோ... நீங்க.. சரண்யாவோட வீட்டுக்காரர் கனகராஜ்தானே?''’’

ADVERTISEMENT

""ஆமா''’’

ADVERTISEMENT

“""நான் சரண்யா படிக்கிற காலேஜ்லருந்து பேசுறேன். சரண்யாவோட செல்போனை வாங்கி செக் பண்ணுங்க''’’

இப்படிச் சொல்லிவிட்டு அந்தப் பெண்குரல் தொடர்பைத் துண்டிக்க... இந்த தகவலைக் கேட்டதிலிருந்து கடந்துபோகும் ஒவ்வொரு நொடியும் கனகராஜுக்கு நரகவேதனையாக இருந்தது.

திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே பெரகம்பி கிராமத்தைச் சேர்ந்த +2 வரை படித்த கனகராஜ் தன் கடும் உழைப்பால் சென்னையில் ஒரு ஹோட்டலும், சொந்த கிராமத்தில் பெற்றோருக்காக ஒரு ஹோட்டலும் நடத்திவருகிறார். நல்ல வருமானம் வந்தநிலையில்... நான்கு ஆண்டுகளுக்கு முன்... துறையூர் அருகே கீராம்பூரைச் சேர்ந்த சரண்யாவை கனகராஜுக்கு திருமணம் செய்துவைத்தனர். இரண்டரை வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. சரண்யாவை ராணிபோல கவனித்துக்கொண்டார்கள் கனகராஜின் பெற்றோர்.

ஒருநாள்... “""நான் பி.சி.ஏ. படிச்சிருக்கேன். மேல படிக்கணும்... வேலைக்குப் போகணும்னு ஆசையா இருக்கு...''’என்று சரண்யா கெஞ்ச... மனைவி மீது இருந்த கட்டுக்கடங்காத பாசத்தில்... துறையூருக்கு படிக்க அனுப்பிவைத்தார் கனகராஜ்.

இந்நிலையில்தான்... யாரோ ஒரு பெண் கனகராஜைத் தொடர்புகொண்டு... இப்படியொரு தகவலைச் சொல்ல... மனைவி வீடு திரும்பியதும்... செல்போனை பறித்து ஆராய்ந்த கனகராஜுக்கு இதயம் நொறுங்கியது.

தன் மனைவி... யாரோ ஒருவனுடன் லிப் டூ லிப் முத்தம் கொடுப்பது உள்ளிட்ட எடுக்கக்கூடாத படங்களால் நிரம்பியிருந்தது. அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்த கனகராஜ்... மனைவியை அடிக்க...

""நான் தப்புப் பண்ணீட்டேங்க... அவன் பேரு செல்வம். எங்க ஊர்க்காரன். சின்னவயசுலருந்தே எங்களுக்குள்ள பழக்கம். அவனைத்தான் கல்யாணம் பண்ணணும்னு நினைச்சேன். அவன் வேற ஜாதிங்கிறதால அது முடியாமப் போச்சு. எனக்கு உங்களோட கல்யாணம் ஆயிருச்சு. அவனுக்கு வேற பொண்ணோட கல்யாணமாகி, ரெண்டு குழந்தைகள் இருக்கு. அவனை இப்ப திடீர்னு பார்த்ததும் பழைய பழக்கத்துல தப்புப் பண்ணீட்டேன். என்னை மன்னிச்சிடுங்க... இனிமே நான் இப்படி தப்புப் பண்ணமாட்டேன்''’எனச் சொல்லி அழ... மனைவி மீது இருந்த பாசத்தில்“""இனிமே ஒழுங்கா இரு''’என மன்னித்தார் கனகராஜ்.

அடுத்த சிலநாட்களில்... இரவுச் சாப்பாட்டிற்கான குழம்பில் மயக்க மாத்திரையை கலந்து பரிமாறிய சரண்யா... கணவனும், மாமனார்-மாமியாரும் அசந்து தூங்கியநேரம்... குழந்தையைத் தூக்கிக்கொண்டு கிளம்பி... ஏற்கனவே திட்டமிட்டபடி செல்வத்துடன் துறையூர் பகுதியில் தலைமறைவானார்.

மனைவியையும், குழந்தையையும் நாலாபுறமும் தேடிப்பார்த்த கனகராஜ் இறுதியாக... ""என் மனைவியையும் குழந்தையையும் மீட்டுத் தாருங்கள்''’என சிறுகனூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

செல்வத்தின் பெற்றோரை அழைத்து விசாரணை நடத்தினார் இன்ஸ்பெக்டர் ராஜா. நான்கு நாட்கள் கடந்த நிலையில்...

""நானும், சரண்யாவும், உன் குழந்தையும் துறையூர்லதான் இருக்கோம். நீ உடனே கிளம்பி வா. சரண்யா உன்கூட வர்றேன்னு சொன்னா... கூட்டிட்டுப்போ. வரமாட்டேன்னு சொன்னா... அவளை என்கிட்ட விட்டுட்டு அப்படியே போயிடு''’என செல்வம் செல்போன் மூலம் சொல்ல...

உடனடியாக உறவினர்களை அழைத்துக்கொண்டு துறையூர் பஸ் நிலையத்திற்குச் சென்றார் கனகராஜ். செல்வத்துடன் இருந்த தன் மனைவி சரண்யாவை கடுமையாக தாக்கினார். செல்வத்தின் உறவினர்கள் செல்வத்தை அடித்து உதைத்தனர். இந்த களேபரத்தில் மக்கள் கூடிவிட... துறையூர் போலீஸார்... இருதரப்பினரையும் அள்ளிக்கொண்டு காவல் நிலையத்திற்குச் சென்றனர். விஷயமறிந்த சிறுகனூர் போலீஸார், அவர்களை இங்கு கொண்டுவந்து விசாரித்தனர்.

""நான் என் மனைவி மேல ரொம்ப பாசம் வச்சிருந்தேன். அவ படிக்கணும்னு சொன்னதும் ஒரு லட்ச ரூபா செலவு பண்ணி படிக்கவச்சேன். ஆனா அவளை இந்த செல்வம் கூட்டிக்கிட்டுப்போய் எனக்கு துரோகம் பண்ணீட்டான். அவன் மேலயும், என் மனைவி மேலயும் நடவடிக்கை எடுங்க. என் குழந்தையை என்கிட்ட வாங்கிக் கொடுங்க''’என கனகராஜ் புகார் சொன்னார்.

""இவங்க ரெண்டுபேர் மீதும் கேஸ் போட முடியாது. வயதுக்கு வந்த இரண்டுபேர் விருப்பப்பட்டு ஒண்ணா இருக்கலாம். உச்சநீதிமன்ற தீர்ப்பு அப்படி இருக்கு. நான் எதுவும் பண்ணமுடியாது. சரண்யாவும், செல்வமும் என்ன சொல்றாங்களோ... அதைப் பொறுத்துத்தான் முடிவெடுக்க முடியும்''’’ என இன்ஸ்பெக்டர் ராஜா சொல்லிவிட்டு... செல்வத்தையும், சரண்யாவையும் பார்த்தார்.

""எனக்கு கனகராஜும் வேண்டாம்... அவன் மூலமா பிறந்த குழந்தையும் வேண்டாம். செல்வத்தோட போறேன்''’என்று சொல்லி அதன்படி எழுதிக் கொடுத்துவிட்டு செல்வத்துடன் ஸ்டேஷனை விட்டுக் கிளம்பினார் சரண்யா.

ஸ்டேஷனுக்கு வெளியே செல்வத்தின் மனைவியும், ரெண்டு குழந்தைகளும், செல்வத்தின் பெற்றோரும் நிலைகலங்கி நின்றிருந்தனர். ஆனால் கண்ணை மறைத்த காமம் அவர்களின் கண்ணீரை பெரிதாக நினைக்கவில்லை. சரண்யாவுடன் போய்க்கொண்டிருந்தான் செல்வம்.

""இனி இவன் எங்க புள்ளையே இல்ல. எங்க புள்ள செத்துட்டான். இனிமே எங்களுக்கும், எங்க சொத்துக்கும் வாரிசு... எங்க மருமகள்தான்''’எனச் சொல்லிவிட்டு அவர்களும் கிளம்பினார்கள்.

தன் குழந்தையை தோளில் சுமந்தபடி கனகராஜ் ஸ்டேஷனைவிட்டு வெளியே வர...

""டேய்... அந்தப் புள்ளய அவகிட்டயே குடுத்திரு... உனக்கு வேற கல்யாணம் பண்ணி வைக்கிறோம்''’என உறவினர்கள் சொல்ல...

தோளில் கிடந்த குழந்தையை மேலும் இறுகப் பற்றிக்கொண்டு... “""இது எனக்குப் பிறந்த குழந்தை. என் ரத்தம். எனக்கு இனிமே கல்யாணமே வேணாம். என் மகளை நல்லபடியா வளர்த்து ஆளாக்கிறதுதான் எனக்கு முக்கியம்...''’என உறுதியாகச் சொல்லிவிட்டு நடந்தார் கனகராஜ்.

நாட்டாமைகளின் தீர்ப்புகளில். நியாயம்... சுயவிருப்பம்... என்பதைத் தாண்டி குடும்ப, சமூக, பாரம்பரிய, கலாச்சார கட்டமைப்புகள் பாதிக்காதபடி இருக்கும்.

ஆனால் நீதிமன்ற தீர்ப்புகளில் தனிமனித சுதந்திரத்திற்கும், உரிமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இது ஒருவகையில் சிறப்பானது என்றாலும்கூட... அதன் நல்ல நோக்கத்தை தங்களின் தீய நோக்கத்திற்கு தோதாக பயன்படுத்திக்கொள்கிற சிலரால்... நீதிமன்ற தீர்ப்புகளின் சாராம்சம் விமர்சனத்திற்கு ஆளாகிறது.

சட்டத்தின் மூலம் கிடைக்கிற சில சலுகைகள்... நாம் ஆண்டாண்டுகாலமாக நம்பிக்கொண்டிருக்கிற "ஒருவனுக்கு ஒருத்தி'’என்கிற பிம்பத்தை உடைத்துக்கொண்டிருக்கிறது என்பதைத்தான் இதுபோன்ற சம்பவங்கள் காட்டுகின்றன. இதுபோன்ற சம்பவங்கள் நீடித்தால் நாளை... இல்லற நம்பிக்கை என்பதே நிலையற்றதாகிவிடுமோ... என்கிற அச்சம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT