Skip to main content

"திருச்சி சூர்யா போன்ற நபர்கள் திருந்தமாட்டார்கள்; அமைதியாக இருந்தால் நாளை மற்ற பெண்களுக்கு நடக்கும்..." - காயத்ரி ரகுராம் ஆவேசம்

Published on 22/11/2022 | Edited on 24/11/2022

 

கச

 

பாஜகவைச் சேர்ந்த காயத்ரி ரகுராம் இன்று கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மாநில பாஜக தலைவர் தொடங்கி அனைவரையும் விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது, "இந்த எட்டு ஆண்டுகளில் எனக்குக் கொடுக்கப்பட்ட அனைத்துப் பணிகளையும் நான் சிறப்பாகச் செய்து வந்துள்ளேன். என் வேலையில் ஏதாவது குறை கண்டுபிடித்து அதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டால் கூட அது சரியாக இருக்கும். ஒரு நபர் தவறாகப் பேசுகிறார், அது தவறு என்று கூறியதற்காக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்றால் அதை எப்படிப் புரிந்துகொள்வது என்று தெரியவில்லை. என்னை ஓரங்கட்ட நடவடிக்கை எடுக்கிறார்களா என்று கேட்கிறீர்கள். நான் ஏற்கனவே ஓரமாகத்தானே இருக்கிறேன். திருச்சி சூர்யா மாதிரியான ஆட்களைத் தவறு செய்ததற்காகக் கேட்டதற்கு இந்த தண்டனை என்பது மிகவும் வருத்தத்துக்குரியது. நாளை யார் தவறு செய்தாலும் யாரும் கேட்கத் தயங்குவார்கள். 

 

திருச்சி சூர்யா போன்ற ஆட்கள் எல்லாம் எப்போதும் திருந்தமாட்டார்கள். இன்றைக்கு இந்தப் பெண்ணுக்கு நடந்த சம்பவம் நாளை வேறு ஒரு ஆளுக்கு நடக்கலாம். அம்மாவுக்கு நடக்கலாம், தங்கைக்கு நடக்கலாம். இந்த மாதிரி நபர்கள் யாருக்கும் தொல்லை கொடுப்பார்கள். ஆனால் அவரை தவறு செய்கிறீர்கள்  என்று கூறக்கூடாது என்றால் அது எப்படி சரி என்று நீங்கள்தான் கூறவேண்டும். சூர்யா மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கூற விரும்புகிறேன். இல்லை என்றால் அவர் எல்லாம் எந்தக் காலத்திலும் திருந்தமாட்டார். ஒரு  ட்விட் போட்டு எனது வருத்தத்தை இந்த விஷயத்தில் வெளிப்படுத்தினேன். 

 

அதை நான் அண்ணாமலையை எதிர்ப்பது மாதிரியான தோற்றத்தைக் கீழே இருப்பவர்கள் உண்டாக்கினார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் நான் சென்று ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று கேட்க முடியாது. அண்ணாமலை அவர்களுடன் அவர் கட்சியில் இணைந்ததிலிருந்தே ஒரு சகோதரர் போன்ற உணர்வுடன் நல்ல முறையில் இணைந்து பணியாற்றினோம். ஆறு மாதம் கட்சியில் நல்ல முறையில் வேலை செய்தேன். எங்கே அநீதி நடக்கிறதோ அங்கே அதைத் தட்டிக்கேட்பேன். அது என்னுடைய பழக்கம், அது என்னுடைய சிறு வயதிலிருந்தே இருக்கும் பழக்கம். 

 

அண்ணாமலை அவர்களும் என்னுடைய நீக்கத்திற்குக் காரணம் என்று சொல்வதில் எனக்குத் தயக்கம் இல்லை. ஏனென்றால் இந்த அறிக்கையைத்தான் தலைமைக்கும் நீங்கள் அனுப்புவீர்கள். தப்பே பண்ணாதபோது நீதான் செய்த, நீதான் செய்த என்றால் அதை என்ன செய்வது, எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். இந்த எட்டு வருடத்தில் நாங்கள் நல்ல முறையில் தான் வேலை செய்து வந்தோம். இந்த மாதிரி நீக்குவது சேர்ப்பது என்ற நடைமுறையெல்லாம் இப்போதுதான் நான் கேள்விப்படுகிறேன். இது தேவையில்லாத ஒன்று, தவறு செய்தவர்களை விட்டுவிட்டு அடுத்தவர்களைத் தண்டிப்பது என்பது எந்த வகையில் நியாயம். 

 

என்னை ஏன் கட்சியை விட்டு நீக்கினார்கள் என்பதை நீங்கள்தான் அண்ணாமலையிடம் கேட்க வேண்டும். மற்றவர்களுக்குக் கொடுக்கப்பட்ட விளக்கமும், கால நேரமும் கூட எனக்கு வழங்கப்படவில்லை என்பது உங்களுக்கே தெரியும். அது எப்படி தவற்றை எடுத்துச் சொல்வது தவறாகிவிடும் என்று எனக்குத் தெரியவில்லை. நான் யாருடைய வளர்ச்சிக்கும் தடங்கலாக இருந்ததில்லை. அடுத்தவர்களை வளர்த்துவிட வேண்டும் என்றுதான் நினைப்பேனே தவிர யாரையும் காயப்படுத்த வேண்டும், வளர்ச்சியைத் தடுக்க வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. நினைக்கவும் மாட்டேன்" என்றார்.

 

 

Next Story

காயத்ரி ரகுராம் - வரிச்சூர் செல்வம் சந்திப்பு; “இதை வெளியில் சொல்லக்கூடாது என நினைத்தேன்” - திருச்சி சூர்யா 

Published on 12/02/2023 | Edited on 12/02/2023

 

Gayathri Raghuram Varichur Selvam Junction; Trichy Surya speech

 

ஓரிரு தினங்கள் முன் வரிச்சூர் செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நான் காதல் செய்து கொண்டிருக்கிறேன். ஜாலியா இருக்கிறேன். எல்லாத்தையும் காதலிக்கிறேன். உங்களையும் காதலிக்கிறேன். இந்த மக்கள் எல்லாத்தையும் காதலிக்கிறேன். நான் ஒரு பப்புக்கு போறேன். நான்கு நடிகர்கள் வந்து என்கூட ஃபோட்டோ எடுத்துக் கொள்கிறார்கள். பாவம் அந்த காயத்ரி ரகுராம். ஒரு நாள் ஓட்டலில் சாப்பிடுவதற்காக போனேன். மாஸ்டர் கணேஷ், ஒரு ஐந்து ஆறு பேர் வந்திருந்தார்கள். வந்தபோது என் கூட ஃபோட்டோ எடுத்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். அப்புறம் திருச்சி சூர்யாகிட்ட பேசினேன். அவர் என்கிட்ட சாரி கேட்டாரு. நான் தெரியாமல் பதிவு போட்டுவிட்டேன் என்றார். ஏம்ப்பா இப்படி எல்லாம் போடலாமா? அந்த பொண்ணு யாருன்னே தெரியாது. ஃபோட்டோ தான் எடுத்தது. இது குத்தமாய்யா. அவங்களுக்கும் நமக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது சாமி. அரசியல்வாதிக்கும் எனக்கும் ரொம்ப தூரம்'' எனக் கூறியிருந்தார். 

 

இந்நிலையில் இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த திருச்சி சூர்யா, “நான் சில தினங்கள் முன் காயத்ரி ரகுராம் வரிச்சூர் செல்வத்தை சந்தித்தது குறித்து ட்விட்டரில் போட்டிருந்தேன். அதற்கு வரிச்சூர் செல்வம் செய்தியாளர்கள் சந்திப்பில் அதைக் கூறி இது குறித்து திருச்சி சூர்யாவிடம் பேசினேன் என்றும் அதன் பிறகே அவர் அதை எடுத்தார் என்றும் சொல்கிறார். நேற்றிலிருந்து அனைத்து பத்திரிகைகளும் திருச்சி சூர்யா வரிச்சூர் செல்வத்திடம் மன்னிப்பு கேட்டதாக செய்திகள் வெளியிட்டு வருகிறது.

 

வரிச்சூர் செல்வம் என்னிடம் கேட்டது, ‘அரசியல் ரீதியாக உங்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை உள்ளது. அதில் சம்பந்தம் இல்லாமல் என்னை ஏன் உள்ளே கொண்டு வருகிறீர்கள். அதிலும் என்னை ரவுடி என போட்டுள்ளீர்கள். நான் அதை எல்லாம் விட்டுவிட்டேன். அதை நீக்குங்கள்’ என சொன்னார். தனிப்பட்ட முறையில் அவர் கேட்டுக் கொண்டதன் காரணமாகத்தான் அதை நீக்கினேன். பாவம் காயத்ரி ரகுராம் என சொல்லுகிறார். அதை எல்லாம் வெளியில் சொல்லக்கூடாது என நினைத்தேன். என்னை சொல்ல வைக்கிறார்கள். அவர் தனியார் ஹோட்டலில் எதேச்சையாக சந்தித்தேன் என்கிறார். அது எதேச்சை சந்திப்பு அல்ல. திட்டமிட்டு நடந்தது தான். 

 

காயத்ரி ரகுராமுக்கு திருமாவளவனுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக போலீஸ் பாதுகாப்பு போட்டு இருந்தார்கள். ஆனால் அன்றைய இரவு காயத்ரி ரகுராம் எங்கு சென்றார் என்பது காவல்துறைக்கே தெரியவில்லை. கணேஷ் என்கிற நடிகர் தான் காயத்ரி ரகுராமை வரிச்சூர் செல்வத்திடம் அழைத்துச் சென்றதாக சொல்கிறார். எதேச்சையாக புகைப்படம் எடுத்தால் அதை ஏன் வரிச்சூர் செல்வம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட வேண்டும். வரிச்சூர் செல்வம் என்ற ரவுடியிடம் காயத்ரி ரகுராம் புகைப்படம் எடுக்க வேண்டிய காரணம் என்ன?” என்றார்.

 

 

Next Story

“பெண்கள் மீது தனிப்பட்ட தாக்குதல் நடத்தும் அண்ணாமலை வார் ரூம்” - காயத்ரி ரகுராம் பரபரப்பு குற்றச்சாட்டு

Published on 29/12/2022 | Edited on 29/12/2022

 

Gayathri Raghuram sensational allegation of "Annamalai war room of personal attacks on women".

 

தமிழக பாஜகவின் முன்னாள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாழும் தமிழர்கள் நலப் பிரிவின் தலைவராக காயத்ரி ரகுராம் இருந்தார். தற்போது காயத்ரி ரகுராம் அண்ணாமலை மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்துள்ளார். இது தமிழக பாஜகவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. காயத்ரி ரகுராம் தற்போது தெரிவித்திருக்கும் இந்தக் குற்றச்சாட்டை நாம் கடந்த நக்கீரன் இதழிலேயே வெளியிட்டிருந்தோம். 

 

அதில் “அண்ணாமலையின் ரபேல் வாட்ச் விவாதத்துக்குள்ளான நிலையில், தி.மு.க. அமைச்சர்களின் சொத்து விவரங்களை வெளியிடப் போவதாக அண்ணாமலை மிரட்டிக் கொண்டிருக்கிறார். ஆனால், அண்ணாமலைக்காக இதுவரை பா.ஜ.க. என்ன செலவு செய்தது என்ற விவரம் வெளியாகியுள்ளது. நூற்றுக்கணக்கான கோடிகள் அண்ணாமலைக்காக பா.ஜ.க. செலவு செய்துள்ளது. அவருக்காக ‘வார் ரூம்’ எனப்படும் கணினித் தொடர்பு மையங்கள் மூன்று இடங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. ஒரு வார் ரூம் உருவாக்க மூன்று கோடி ரூபாய் தேவை. ஒவ்வொரு வார் ரூமிலும் 80 கணிப்பொறி பட்டதாரிகள் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பளத்தில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

 

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடம், போலி நிதி நிறுவனமான சுரானாவுக்குச் சொந்தமான இடம் மற்றும் பெங்களூருவில் உள்ள ஒரு இடம் ஆகிய மூன்று இடங்களில் வார் ரூம் எனப்படும் கணிப்பொறி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்பொழுது நான்காவது வார் ரூம் ஒன்றை சென்னை மவுண்ட் ரோட்டில் அமைக்க முடிவு செய்துள்ளார்கள். இந்த வார் ரூம் மூலம்தான் என் மீது தாக்குதல் நடத்துகிறார்கள் என காயத்ரி ரகுராம் குற்றம் சாட்டுகிறார்” என நாம் தெரிவித்திருந்தோம்.

 

அதை உறுதிப்படுத்தும் வகையில் காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணாமலை தலைமையிலான வார் ரூமில் இருந்து மிகவும் மோசமான கேவலமான தனிப்பட்ட தாக்குதல்களை நாங்கள் சந்திக்கிறோம். பெண்களைப் பற்றி அவதூறான கருத்துகளைப் பரப்புகிறார்கள். தமிழக காவல்துறை இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். இந்தக் குற்றச்சாட்டு தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.