ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு ஏழை மக்கள் எல்லாம் எந்த வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கியுள்ளனர். இதில் ஏழை கூலி தொழிலாளர்கள், விவசாயிகள் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் இருப்பதை கருத்தில் கொண்டு தமிழகத்தில் வாழும் ஒன்றரைகோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசால் ஆயிரம் ரூபாய் நிதியும், 25 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 2 கிலோ சர்க்கரை போன்றவை வழங்கப்படும் என அறிவித்து அதன்படி வழங்கப்பட்டு வருகின்றன.

Advertisment

இந்நிலையில் தமிழகத்தின் பூர்வகுடிகளான இருளர்கள், மலைவாழ் பழங்குடியின மக்கள், அருந்ததியர்கள் பிரிவைச் சேர்ந்த பலருக்கு குடும்ப அட்டையே கிடையாது. அதிலும் குறிப்பாக இருளர்கள் காடுகளில் மரம் வெட்டி வந்து விற்பவர்களாகவும், செங்கல் சூளைகளில் கொத்தடிமைகளாகவும் இருப்பவர்கள். அதேபோல் பூம்பூம் மாட்டுக்காரர்கள் சமூகம் ஒருயிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்துக்கொண்டே இருப்பவர்கள் இவர்களுக்கும் குடும்ப அட்டை கிடையாது.

இருளர்கள் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, ஈரோடு, திருச்சி என தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் வசிக்கின்றனர். இவர்கள் எண்ணிக்கையில் குறைவானர்கள். அதேபோல் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் நாட்றம்பள்ளி, புதுக்கோட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பகுதியில் பூம்பூம் மாட்டுக்கார சமூகத்தினர், ஜவ்வாதுமலை, கல்வராயன் மலை, கிழக்கு தொடர்ச்சி மலை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைககளில் வாழும் மலைவாழ் பழங்குடியின மக்களில் பலருக்கு குடும்ப அட்டை கிடையாது.

tttt

Advertisment

இவர்கள் அனைவரும் அன்றாட காய்ச்சிகள், காலை வேலைக்கு போனால் தான் மாலை அடுப்பெரியும், உலை கொதிக்கும். அப்படிப்பட்டவர்கள் தமிழகத்தில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு மேல் இருப்பார்கள் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இவர்களுக்கு குடும்ப அட்டை இல்லாததால் இவர்களால் அரசு தரும் நிதியுதவி ஆயிரம் ரூபாய் பெற முடியாத நிலையில் உள்ளனர். பணம் தரவில்லையென்றால் கூட பரவாயில்லை. வேலைக்கு செல்ல முடியாததால் அரிசி, மளிகை பொருட்கள் என எதுவும் வாங்க முடியாத நிலையில் தவிக்கின்றனர்.

இதுப்பற்றி நம்மிடம் பேசிய செஞ்சி – மலையனூர் பகுதி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆல்பர்ட் வேளாங்கண்ணி, விழுப்புரம் மாவட்டத்தில் பலயிடங்களில் இருளர் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களுக்கு குடும்ப அட்டை உட்பட எதுவும் கிடையாது. அதுப்பற்றி நாங்கள் கணக்கெடுக்க தொடங்கியபோதே 150க்கும் அதிகமானவர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள உட்பட எதுவும் கிடையாது. தற்போது 144 ஊரடங்கு உத்தரவு அமலாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் அடுத்த வேளை உணவுக்கு வழியில்லாமல் குழந்தை குட்டிகளை வசித்துக்கொண்டு உள்ளார்கள். இதுப்பற்றி எங்களுக்கு தகவல் வந்தது, நாங்கள் இதை மாவட்ட ஆட்சியரிடம் சென்று முறையிடக்கூட முடியாத நிலையில் உள்ளோம். அவர்களையும் கணக்கில் கொண்டு அரசாங்கம் உதவி செய்தால் அவர்களின் பசி போகும் என்றார்.

இதுப்போல் பெரும்பாலான திருநங்கைகளுக்கும், குடும்ப அட்டை கிடையாது. இவர்களுக்கும் தற்போது ஊரடங்கால் அரசு அறிவித்துள்ள எந்த சலுகைகளும், நிதியுதவியும், அரிசி, பருப்பு போன்றவையும் கிடைக்கவில்லை. இப்படிப்பட்டவர்களை கணக்கில் கொண்டு அரசு சிறப்பு ஏற்பாடுகள் செய்து உதவி செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை சமூக ஆர்வலர்களிடம் இருந்து எழுந்துள்ளது.

Advertisment

இவர்களின் நிலை குறித்து அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். தொடர்ந்து தொடர்பு கொண்டோம். பலதரப்பட்ட மக்களுக்கு ஆயிரம் ரூபாய் நிதியும், 25 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, 2 கிலோ சர்க்கரை போன்றவை வழங்கப்பட்டு வரும் நிலையில் இவர்களுக்கு இன்னும் உதவித்தொகையும், பொருட்களும் கிடைக்கவில்லை.