Advertisment

திருநங்கை பொன்னியின் விடாமுயற்சியும்.. விஸ்வரூப வெற்றி பயணமும்! 

Transgender Ponni interview

Advertisment

தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரம் இந்திரா நகரைச் சேர்ந்த கருப்பசாமி - ஜெயக்கொடி தம்பதியின் வாரிசான திருநங்கை பொன்னி ஒரு பியூட்டிபுல் பரதநாட்டிய கலைஞர்,பி.எஸ்சி. பட்டதாரி,கல்லூரியில் எம்.ஏ,பரதம் முறைப்படி பயின்றவர். தற்போது ‘தாமிரபரணி ஆற்றங்கரையோர கோயில்களில் இசை மற்றும் நாட்டிய சிற்பங்கள்’என்ற தலைப்பில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. ஆராய்ச்சி படிப்பு மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் திருநங்கை பொன்னியை நாம் சந்தித்தபோது தனது வாழ்கை குறித்து பகிர்ந்துகொண்டார். அதில், “எனக்கு பரதநாட்டியம் மற்றும் டான்ஸ் என்றால் உயிர். அதை எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் இருந்த சூழலில், என்னை சுற்றி இருந்த அன்பான மனிதர்கள் என்னை ஊக்குப்படுத்தினார்கள். அதன் காரணமாக, தூத்துக்குடியில் இயங்கிக் கொண்டிருந்த ஒரு நடன பள்ளிக்கு வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழத்துடன் சேர்வதற்காக போனேன். அங்கு பரதம் கற்பித்து வந்த குரு, பெற்றோருடன் வந்தால் தான் உன்னை சேர்த்துக் கொள்வேன் என தெரிவித்து அதனை மறுத்துவிட்டார். சில நாட்கள் கழித்துமனசு மாறி இருப்பார் என நினைத்து இரண்டாவது முறையும் வெற்றிலை, பாக்கு, தேங்காய், பழத்துடன் சென்றேன். அப்போதும் மறுத்தார். எனக்கு மனசு ரொம்ப கஷ்டமாகிவிட்டது. ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்து, அந்த நடனப் பள்ளியின் நிர்வாகி அங்கிருந்து காரில் வெளியே வரும் போது மறிச்சு என்னை பரதநாட்டிய கிளாஸில் சேர்க்கணும். அங்கிருக்கும் குரு என்னை சேர்த்துக்க மறுக்கிறார் என்றேன். நான் ஒரு நல்ல பரதநாட்டிய கலைஞராக உருவாக வேண்டும் என தெரிவித்தேன். அவருக்கு மகிழ்ச்சியாகிவிட்டது. என் கையைபிடித்து அழைத்துக் கொண்டு அந்த நடனப் பள்ளியில் சேர்த்து விட்டார். அதில் தான் எனது பரதநாட்டிய பயணம் தொடங்கியது. சிறுவயதிலிருந்தே எனக்கு படிப்பில் ஆர்வம் அதிகம். எங்கள் குடும்பத்தில் யாரும் அதிகமாக படிக்கவில்லை. எனது தந்தை மிக்சர் வியாபாரம் செய்து வந்ததால் எங்கள் குடும்பத்தில் ஆரம்பப்பள்ளி முடித்தவுடன் மிக்ஸர் வியாபாரம் செய்ய பழக்கி விடுவார்கள். ஆனால், எனக்கு படிப்பில் தீராத ஆர்வம் இருந்த காரணத்தினால் தொடர்ந்து படித்தேன். அதற்கு எனது தாய் மிகவும் உறுதுணையாக இருந்தார்.

பிளஸ் டூ முடித்த பிறகு தூத்துக்குடி காய்கறி மார்க்கெட்டில் கணக்கு எழுதுவதற்காக வேலைக்குச் சென்றேன். ஆனாலும், பிஎஸ்சி கணிதம் படிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் இருந்து கொண்டே இருந்தது. ஒரு நாள் காய்கறி கடையில் கணக்கு எழுதி கொண்டிருந்தபோது ஒருவர் பேன்ட் - சர்ட்டில் டிப் டாப்பாக வந்தார். இவரை எங்கேயோ பார்த்த மாதிரி உள்ளது என்று அவரிடம் பேச்சு கொடுத்தேன். ஏம்மா... நான் உங்க கடையில் இருந்து கானா அண்ணன் கடைக்கு மூட்டைத் தூக்கி போடுவோம்ம்ல, காலையில மூனு நாலு மணிக்கு வருவேன். எட்டரை மணிக்கு எல்லாம் எனக்கு வேலை முடிந்து விடும். இன்னைக்கு ஒரு கல்யாண வீட்டுக்கு போறேன் அதனால தான் பேண்ட் - சர்ட்ல போகிறேன் என்றார். ஆகா.... இது ஒரு நல்ல வேலையாக இருக்கிறது. உடனே அந்த வேலையில் சேர்ந்திடனும் என முடிவெடுத்து மூட்டை தூக்குற வேளையில் சேர்ந்துட்டேன். மீன் மார்க்கெட் பொருளாளர் அஸ்மீர் அண்ணாச்சி எனக்கு 1,570 ரூபாய் பணம் கட்டினார்கள். அந்தப் பணம் தான் நான் பி.எஸ்சி. மேக்ஸ் முடிப்பதற்கு முதல் பணமாக அங்கு சென்றது. காய்கறி மார்க்கெட்டில் மூட்டை தூக்கி ரெகுலர் காலேஜில் பி.எஸ்சி. கணிதம் முடித்தேன். ஒரு நாள் தக்காளி கூடை கை தவறி காலில் விழுந்ததால் கால் முறிவு ஏற்பட்டு நாலாவது, ஐந்தாவது செமஸ்டர் எழுத முடியாமல் ஆறாவது செமஸ்டரின் போது தான் மொத்தமாக எழுதினேன். என்னால் ஜஸ்ட் பாஸ்தான் செய்ய முடிந்தது. ஆனாலும் துவண்டு போகாமல், பரதநாட்டியம் அழகாக வரும் என்பதால் முறைப்படி கற்றுக் கொள்வோம் என முடிவெடுத்து தூத்துக்குடி மாவட்ட அரசு இசைப்பள்ளியில் பரதநாட்டியத்தை முறைப்படி பயின்றேன். பின்பு, சென்னையில் குமாரி ராணி மீனா முத்தையா கல்லூரியில் எம். ஏ. பரதநாட்டியம் 2015ஆம் ஆண்டில் படித்தேன். இப்போது தாமிரபரணி ஆற்றங்கரையோர கோவில்களில் இசை மற்றும் நாட்டிய சிற்பங்கள் என்ற தலைப்பில் வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் பிஹெச்டி ஆய்வுப் படிப்பு மேற்கொண்டு வருகிறேன்.

Advertisment

Transgender Ponni interview

நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது பரதநாட்டியம் கற்றுக்கொள்ள முறைப்படி சென்றபோது என்னை சேர்த்துக் கொள்ள மறுத்த சம்பவம் என் மனதில் அப்படியே பதிந்து விட்டது. யாரெல்லாம் விருப்பப்படுகிறார்களோ அவர்களுக்கெல்லாம் பரதநாட்டியம் சொல்லித் தரணும் என்கிற அந்த ஒரு விதை, நான் எட்டாம் கிளாஸ் படிக்கும் பருவத்திலேயே எனக்குள் விதைக்கப்பட்டது. அதே மாதிரி 2004ல் மிஸ் கூவாகம் நிகழ்வில் பரதநாட்டியம் ஆடி முதல் பரிசை பெற்றேன். பொதுவாக திருநங்கைகள் இருக்கும் குடும்பத்தில், உறவுகளாலும், சக நண்பர்கள் உட்பட அனைவராலும் அவமானத்துக்கு ஆளாவார்கள். ஆனால் என்னை எனது தாய் மிகுந்த ஆதரவுடன் அன்புடனும் வளர்த்தார். என்னை கேலி செய்தவர்களிடம் என் அம்மா சென்று சண்டை போடுவார்.

கணிதப் பாடத்தில் எனக்கு இருந்த ஆர்வம் காரணமாக என் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு கணிதம் கற்றுக் கொடுப்பேன். இதனால் என்னை பள்ளிக்கூடத்தில் வேறு யாராவது கிண்டல் செய்தாலும் என்னிடம் கணிதம் கற்கும் மாணவர்கள் அவர்களை கண்டித்து விடுவார்கள். அது எனக்கு அரணாகவும் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரி படிப்பை இடையூறு இல்லாமல் முடித்தேன். ஆனால் 2005 கடைசில நான் சென்னைக்குள் நுழைந்தபோது அங்கிருந்த சூழலைக் கண்டு மிகுந்த மன வேதனைக்கு ஆளானேன். 2006ல் அபிநயா சமூக கலை மையத்தை வியாசர்பாடி குப்பைமேடு பகுதியில் ஆரம்பித்தேன். அங்கிருக்கும் குழந்தைகளுக்கு பரதநாட்டியம் கற்றுக்கொடுத்தேன். பரதநாட்டியம் கற்றுக்கொண்ட நான்கு திருநங்கைகள் கூட்டாக சேர்ந்து அரங்கேற்றம் செய்ய பல இடங்களிலும் வாய்ப்பு கேட்டோம். ஆனால், திருநங்கை என்பதால் மறுக்கப்பட்டேன். பின்னர் ஒரு நல்வாய்ப்பாக கிடைத்த பத்துக்கு பத்து சைஸ் உள்ள சிறிய மேடையில் என் பரதநாட்டியத்தை ஒரு மணி நேரமாக அரங்கேற்றம் செய்து என்னை நிரூபித்தேன். பார்வையாளர்கள் கூட்டம் அப்படியே அசையாமல் திகைத்து நின்றது.

Transgender Ponni interview

அந்த நிகழ்ச்சியை நடத்திய நிர்வாகி என்னிடம் வந்து, ‘பெரிய பெரிய ஆர்கெஸ்ட்ரா வைத்து நிகழ்ச்சி நடத்தும்போதெல்லாம் இவ்வளவு கூட்டம் இருக்காது. நீ ஒரு மணி நேரமாக இந்த கூட்டத்தை அப்படியே நிறுத்தி வைத்திருக்கிறன்னு’ சொன்னார். பரதம் ஆடியவர்கள் திருநங்கை என்று பார்க்காமல் அதை ஒரு கலையாக, எங்களை கலைஞர்களாக பார்த்தாங்க என்று சொன்னேன். அவர்கள் அனைவரும் சந்தோஷப்பட்டாங்க. வருடம் வருடம் எங்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். அதன் மூலம் என்னிடம் நிறைய குழந்தைகள் சேர்ந்து பரதநாட்டியம் கற்றுக் கொண்டு வருகிறார்கள். பரதநாட்டியம் மட்டுமல்லாது,கிராமங்களில் தேவாரம், திருவாசகம் கற்பித்தல், குழந்தைகளுக்கு கைவினைப் பொருள்கள் தயாரித்தல் உள்ளிட்ட சமூக சேவை பணிகளையும் திருநங்கை சகோதரிகளுடன் இணைந்து முன்னெடுத்து செய்கிறோம். தமிழ்நாடு முழுவதும் திருநங்கைகளுக்கு அரசின் சலுகைகள் கிடைப்பதற்கு உதவிகள் செய்து வருகிறேன். கலைகள் சார்ந்தும், கற்பித்தல் சார்ந்தும், சமூக சேவையுடனும் களப்பணி செய்து வருகிற காரணத்தினால் எல்லாமே ஒன்றாக இணைக்கும் போது சிறந்த திருநங்கைக்கான விருதுக்கு விண்ணப்பிக்க சொல்லி எனது நட்பு வட்டாரத்தில் என்னை ஊக்கப்படுத்தினார்கள். நான் விண்ணப்பித்தேன். எனது கலை மற்றும் கற்பித்தல் சேவையை பாராட்டி சமூக நலத்துறை சார்பில் 2025 ஆம் ஆண்டுக்கான சிறந்த திருநங்கைக்கான விருதினை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கரங்களால் அண்மையில் பெற்றேன். எனக்கு இது அளவில்லா மகிழ்ச்சியை தந்தது.

Transgender Ponni interview

கோவிட் காலத்துக்கு பிறகு எனது தாயை கவனிப்பதற்காக சொந்த ஊரான தூத்துக்குடிக்கு வந்து விட்டேன். இங்கேயும் ஒரு பரதநாட்டிய பள்ளியை தொடங்கி மாணவர்களுக்கு கற்றுக் கொடுத்து வருகிறேன். நான் சிறுவயதில் இருந்து இப்போது வரை துவண்டு போகும்போதெல்லாம் என்னை அரவணைத்து என்னை பக்குவப்படுத்தி நேர்வழியில் கொண்டு சென்ற எனது தாயை ஒருபோதும் மறக்க முடியாது. இந்த சமூகம் அனைவருக்கும் பொதுவானது. இதில் மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் என எவ்வித பாகுபாடும் கூடாது. திருநங்கை குழந்தைகளை அவமான சின்னமாக பெற்றோர்கள் கருதக்கூடாது. திருநங்கை குழந்தைகளை பெற்றோர்கள் சரியான வழியில் நடத்தினால் அவர்கள் இந்த சமூகத்தில் ஏதோ ஒரு துறையில் மிளிருவார்கள்.

திருநங்கைகள் வாழ்வில் விடியல் கிடைத்தது கலைஞர் அவர்களால் தான். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு தான் முன்னோடியாக திகழ்ந்து வருகிறது. திருநங்கைகளை பார்த்தால் ரொம்ப கலவர பூமியாக இருக்கக்கூடிய கேரள மாநிலத்தில் இன்றைக்கு திருநங்கைகளின் வாழ்வாதாரம் டாப் லெவல் ஆக வந்து கொண்டிருப்பதற்கு காரணம் தமிழக அரசுதான்.

திருநங்கைகளுக்கு தமிழ்நாட்டில் கொடுக்கப்படும் சலுகைகளை திட்டங்களை பார்த்து புரிந்து அங்குள்ள திருநங்கைகள் அந்த அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். 2030ல் எல்லாத் துறைகளிலும் திருநங்கைகள் பணியில் இருப்பார்கள். ஆண்கள், பெண்கள், திருநங்கைகள் என்கிற பாகுபாடு இல்லாமல் அழகான சமுதாயத்தை எதிர்பார்க்கலாம். அந்த சமத்துவத்தை நோக்கியே நானும் உழைத்துக் கொண்டிருக்கிறேன்” என்றார் திருநங்கை பொன்னி.

செய்தியாளர் - எஸ்.மூர்த்தி

Thoothukudi Transgender
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe