Skip to main content

காஷ்மீர் கந்தரகோலம்!!!

Published on 08/05/2018 | Edited on 08/05/2018

நல்லா இருந்த ஒரு இடத்தை, அல்லது பொருளை கந்தரகோலப் படுத்திட்டான்யா என்று சொல்வார்கள். அதாவது அது ஏற்கெனவே நல்லாத்தான் இருக்கும். ஆனால், அதை இன்னும் நல்லா பண்றேன்னு சொல்லி, இருப்பதையும் கெடுத்துக் குட்டிச் சுவராக்குவதைத்தான் கந்தரகோலம் என்பார்கள்.

 

kashmir

 

2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய வீரர்களோ, காஷ்மீர் மக்களோ பாதிக்கப்பட்டால் பாஜக பயங்கரமாக கூச்சல் போடும். மோடி இந்தியப் பிரதமரானால் பாகிஸ்தான் பயந்து, பதுங்கு குழிக்குள் படுத்துவிடும் என்பார்கள். அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீனா ராணுவம் நுழைந்தால் மன்மோகன் சிங்கிற்கு சேலையும், வளையலையும் வாங்கி அனுப்புவார்கள்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மோடி வந்தால்தான் அடக்க முடியும் என்று பாஜகவினர் பில்டப் செய்தார்கள். வெற்றுப் பில்டப்புகளாலும், 69 சதவீத வாக்காளர்களை எதிர்க்கட்சிகள் பிரித்ததாலும் வெறும் 31 சதவீத ஆதரவுடன் 2014 மே மாதம் பிரதமரானார் மோடி.

2014 இறுதியில் ஜம்மு காஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. அந்தத் தேர்தலில் பாஜகவுக்கு 25 இடங்கள் கிடைத்தன. முந்தைய தேர்தலில் மொத்தமுள்ள 87 இடங்களில் 11 இடங்களே பெற்றிருந்த பாஜக, இதை மாபெரும் வெற்றி என்று பில்டப் செய்தது.


தனிப்பெருங்கட்சியாக மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களைப் பெற்றிருந்தது. அந்தக் கட்சி துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை. தேசியமாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும், சிபிஎம் 1 இடத்தையும், ஜம்மு காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி 2 இடங்களையும் பெற்றிருந்தன.

காஷ்மீர் மாநில முதல்வராக பாஜகவைச் சேர்ந்தவரை கொண்டுவர மோடி முயற்சித்தார். பாஜக இல்லாமல் மக்கள் ஜனநாயகக் கட்சி, தேசியமாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்திருக்க முடியும். தேவையற்ற கவுரவப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, அதை தவிர்த்துவிட்டன. இதையடுத்து, மெஹபூபா தலைமையில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பாஜகவும் சேர்ந்து கூட்டணி அமைச்சரவை அமைத்தன.

  kashmir

 

மெஹபூபாவின் இந்த முடிவு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரச்சனைகளை உருவாக்கியது. மோடி வந்தால் காஷ்மீரில் அமைதி திரும்பும். சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம். பயங்கரவாதிகளின் கொட்டம் அடக்கப்படும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்ற தைரியத்தில் முஸ்லிம்களுடன் மோதல் போக்கை அதிகரித்தனர்.

தீவிரவாத அமைப்புகளை சேர்ந்தவர்கள் என்று முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப்பட்டனர். இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தினர். போலீஸார் மற்றும் பாதுகாப்புப் படையினரின் அத்துமீறல் அதிகரித்தது. இதுவே அங்கு மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கியது.

இதையடுத்து, காஷ்மீரில் நடத்தமுடியாத இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலை நடத்தமுடியாமல் போனது. பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்ட தேர்தலிலும் 8 சதவீதம் 12 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. காஷ்மீர் வரலாற்றில் இத்தகைய நிலை முன்னர் ஏற்பட்டதே இல்லை. இதுகூட மோடியின் சாதனைதான் என்று கிண்டல் செய்தார்கள்.

 

kashmir


 

எங்களுக்கு பாதுகாப்புப் படையே தேவையில்லை என்று பொதுமக்கள் போராடும் நிலை ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் வந்தால் கல்லூரி செல்லும் பெண்களே கற்களை வீசித்தாக்கினார்கள். இதற்கு காரணம் அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று முத்திரைகுத்தி என்கவுண்டரில் சுட்டுக் கொல்வதுதான். காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினை வாதத்தையும் ஒழிப்போம் என்று முழங்கிய பாஜக கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகுதான் பிரிவினைவாத அமைப்புகள் காஷ்மீரில் அதிகரித்துள்ளன. அவற்றின் உறுப்பினர்களும் அதிகரித்துள்ளனர்.

இன்னும் நிலைமையை துல்லியமாக சொல்ல வேண்டுமானால், காஷ்மீர் பயங்கரவாத அமைப்புகளின் நிதிநிலையை முடக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததாக மோடி கூறினார். அவருடைய கணிப்பும் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த நடவடிக்கைக்கு பிறகுதான் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்துள்ளன.

இதோ, காஷ்மீரில் ஷோபியன், குல்காம், ஆனந்த்நாக் மாவட்டங்களில் பயங்கரவாதிகள் மீது என்கவுண்டர் என்று போலீஸும் பாதுகாப்புப்படையும் ராணுவமும் சேர்ந்து நடத்திய தாக்குதல் மாநிலம் முழுவதும் பதட்டை ஏற்படுத்தி இருக்கிறது.


ஏப்ரல் 1ஆம் தேதி நடந்த இந்த தாக்குதலில் 13 தீவிரவாதிகள், 4 பொதுமக்கள், 3 ராணுவத்தினர் உயிரிழந்தனர். அதையடுத்து அந்தப் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டுள்ளது. திடீர் தீடீர் என்று அங்கு மோதல்களும் குண்டுவீச்சுகளும் தொடர்கின்றன.

சுற்றுலா சென்றவர்களை பாதுகாக்க வேண்டிய ராணுவம் தீவிரவாதிகளுடன் சண்டை என்று பொதுமக்களுடனே மோதிக்கொண்டிருக்கிறது. ஆம், தீவிரவாதிகள் யார் என்று உறுதி செய்ய முடியாமல், எல்லோரையும் எதிரிகளாக்கிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட கலவர பூமியாக்கத்தான் பாஜகவும் மோடியும் ஆசைப்பட்டார்களா? என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இஸ்லாமியர்களை ஜம்முவில் உள்ள இந்துக்களுக்குக் கீழே கொண்டுவர பாஜக விரும்புகிறதா? அல்லது இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி, இந்துக்களுக்கு தனிப்பகுதியை பிரிக்க பாஜக முயற்சிக்கிறதா? ஏற்கெனவே பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதாக இந்திய காஷ்மீர் பகுதி மக்கள் நினைக்க தொடங்கியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் காஷ்மீரை மீண்டும் இந்து முஸ்லிம் கலவர பூமியாக்கி கந்தரகோலம் செய்து கொண்டிருப்பதாக பாஜக மீது குற்றம் சாட்டுகிறார்கள்.

சார்ந்த செய்திகள்