Advertisment

டி.ஆர். பாலு எழுதிய கடிதம்! அ.தி.மு.க.வை கழட்டி விடும் மோடி! தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணிப் பாலம்?

eps-trbaalu-modi

Advertisment

ராமர் பாலத்தைக் காரணம் காட்டி முடக்கி வைக்கப்பட்டுள்ள சேது சமுத்திர திட்டத்தை மீண்டும் துவக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அனுமதியுடன் கடிதம் எழுதியிருக்கிறார் தி.மு.க. எம்.பி. டி.ஆர் பாலு. சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை பிரதமர் மோடி பிடிக்க வேண்டும் என்கிற டி.ஆர். பாலுவின் இந்தக் கடிதவரிகள் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பதற்றமடைந்த முதல்வர் எடப்பாடி தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி உருவாகிறதா என டெல்லி லாபி மூலமாகவும், உளவுத்துறை மூலமாகவும் விசாரிக்கத் துவங்கியிருக் கிறார். அ.தி.மு.க சீனியர்களும் பரபரப்படைந்துள்ளனர்.

தமிழக சட்டமன்றத்திற்குள் குறைந்தபட்சம் 15 எம்.எல்.ஏ.க்களுடன் நுழைந்து விட வேண்டுமென்பது பா.ஜ.க. தலைமையின் திட்டம். அண்மையில் மத்திய அமைச்சர் அமித்ஷா எடுத்த சர்வே முடிவுகள், தமிழகத்தில் தி.மு.க. தனித்துப் போட்டியிட்டாலே 174 இடங்களைக் கைப்பற்றும்; அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. 3 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வாய்ப்பில்லை (இந்த சர்வே குறித்து முழு விபரங்களைக் கடந்த மாதம் எழுதியிருக்கிறோம்) எனச் சொல்லியுள்ளன. இதனை பிரதமர் மோடியுடன் இரண்டு முறை விவாதித்திருக்கிறார் அமித்ஷா.

இதுகுறித்து பா.ஜ.க.வின் கொள்கை வகுப்பாளர்கள் தரப்பில் நாம் விசாரித்த போது, "ஆர்.எஸ்.எஸ். உத்தரவின்படி, தமிழகத்தில் தேர்தல் நடக்கும்போது தமிழகத்தின் நிர்வாக அதிகாரம் மத்திய அரசிடம் இருக்க வேண்டும், தமிழகத்தில் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்க வேண்டும் அல்லது கூட்டணி ஆட்சியில் பா.ஜ.க. இருக்க வேண்டும் என 3 அஜெண்டாக்களை வைத்துள்ளது பா.ஜ.க.!

Advertisment

அ.தி.மு.க.வுடன் கூட்டணியைத்தொடர விரும்பாத பா.ஜ.க., அரசியலுக்கு ரஜினி வராமல் போகும்பட்சத்தில், நாடாளுமன்றத்தில் வலிமையாக உள்ள தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்கொள்ள விரும்புகிறது. தி.மு.க. சீனியர்கள் மூலம் இதற்காக ரகசிய மூவ்களும் நடந்தன. பாசிட்டிவ்வான பதில்கள் வராத நிலையில்தான், தி.மு.க.வின் நிதி கட்டமைப்பு மீது கை வைக்க முடிவு செய்தது.

அதாவது, சோனியா-ராகுல்காந்தி தலைமையிலான காங்கிரஸ் அறக்கட்டளைகளின் சட்ட விரோத பணபரிவர்த்தனைகளை மத்திய நிதியமைச்சகமும், அமலாக்கத்துறையும் விசாரித்து வருவதுபோல, தி.மு.க. அறக்கட்டளை விவகாரத்தையும் கையிலெடுத்துள்ளது. இது குறித்த பல விவகா ரங்களைச் சேகரித்து வைத்திருக்கிறார் அமித்ஷா. அதேசமயம், தி.மு.க.வுக்கு நிதி ஆதாரமான பலரையும் அமலாக்கத்துறை குறி வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், சேதுசமுத்திர திட்டத்தை முன்னிறுத்தி மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார் டி.ஆர். பாலு. அதில் சொல்லப்பட்டுள்ள பல வரிகள், பா.ஜ.க.வை குளிர வைப்பதாக இருக்கிறது. இதெல்லாமே டெல்லி திட்டமிடலின் ஒரு பகுதி என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

இதுபற்றி தி.மு.க.வின் சீனியர் தலைவர் ஒருவரிடம் பேசியபோது, "முடக்கப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை தமிழகத்தின் நலன்களுக்காக துவக்க வேண்டும் என மத்திய பா.ஜ.க. அரசை வலியுறுத்துவது தேவையானதுதான். அதில் தப்பில்லை. ஆனால், ’இந்தத் திட்டத்தை நிறைவேற்றி தமிழக மக்களின் மனதில் நீங்காத இடத்தை மோடி பிடிக்க வேண்டும் எனச் சொல்வதில் பா.ஜ.க.வை தி.மு.க. நெருங்கிறதோ என்கிற சந்தேகம் வலுக்கிறது. தமிழக மக்களின் மனதில் மோடி இடம்பிடிக்க வேண்டும் என்பது தி.மு.க.வின் வேலை இல்லையே! இப்படிப் பல வரிகள் மறைந்திருக்கின்றன. கூட்டிக்கழித்துப் பார்த்தால் கணக்கு ஒரு நேர்க் கோட்டில் வரும்'' என்கிறார் அந்த சீனியர்.

இவரைப் போலவே பாலுவின் கடிதத்தை தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலரும் அலசி வருவதுடன் சித்தரஞ்சன்சாலையில் என்ன நடக் கிறது எனத் துப்பறிந்தும் வருகின்றனர். தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணிக்கு அச்சாரமிடப்படுகிறதா என தி.மு.க. எம்.பி., டி.கே.எஸ். இளங்கோவனிடம் கேட்ட போது, "சேதுசமுத்திரத் திட்டத்திற்கு எதிராக சுப்பிரமணியசாமி மூலம் வழக்குப் போட்டு முடக்கியவர்கள் பா.ஜ.க.வினர்தான். இந்தத் திட்டத்திற்கு விரோதமானவர்கள். அப்படியிருக்கும் நிலையில், அவர்கள் இந்தத் திட்டத்தைத் துவக்குவார்களா என எனக்குத்தெரியவில்லை. அரசியல் கொள்கைகளிலும் சமுக கொள்கைகளிலும் பா.ஜ.க.வுக்கும் தி.மு.க.வுக்கும் நிறைய முரண்பாடுகள் உண்டு. தி.மு.க.வின் கொள்கை விரோதி பா.ஜ.க. அதனால், கூட்டணிக்கு வாய்ப்பில்லை'' என்கிறார்.

பா.ஜ.க.வின் தேசிய செய்தித் தொடர்பாளரும் முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மனிடம் பேசியபோது, "தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலைத் தள்ளிவைத்து கவர்னர் ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்பதைத்தான் எங்கள் தலைமைக்கு கோரிக்கை வைத்து வருகிறோம். தவிர, கழகங்களை வீழ்த்தி ஆட்சியைக் கைப்பற்றுவதுதான் பா.ஜ.க.வின் இலக்கு. அதற்காகத்தான் தமிழகத்திற்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் பிரதமர் மோடி செய்து வருகிறார். இறைநம்பிக்கை இல்லாத தி.மு.க.வுடன் கூட்டணி என்பதை பா.ஜ.க.வினர் ஏற்கமாட்டார்கள். இருப்பினும், கூட்டணியைத் தேர்தல் நேரத்தில் கட்சித் தலைமை முடிவு செய்யும்'' என்கிறார் அழுத்தமாக.

http://onelink.to/nknapp

இதற்கிடையே டி.ஆர்.பாலுவின் கடிதவரிகள் எடப்பாடிக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருப்பதால், முன்னாள் கவர்னர் சதாசிவம் மூலம் அவர் விசாரித்ததில், 'அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்பதில் பா.ஜ.க. உறுதியாக இருக்கிறது’ என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்துள்ளார் எடப்பாடி என்கின்றன உளவுத்துறை வட்டாரங்கள்.

Alliance aiadmk edapadi palanisamy narandra modi t.r.balu
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe