Skip to main content

ஆடைகளை களைத்து நித்தியானந்த மடத்தில் டார்ச்சர்! பெற்றோர்களும் உடந்தை!

 

Torture in Nithiyanatham aasiramam issue

 

சமாதி நிலையில் இருக்கின்ற சாமியார் நித்தியானந்தா குருபூர்ணிமா அன்று பக்தர்களுடன் நேரடியாக உரையாடி ஆசிர்வதிக்க உள்ளார் என்றது கைலாசா இணையதளம். ஆனால், பெங்களூரு பிடதியில் அவரது ஆசிரமத்திலுள்ள பக்தர்களுக்கு நித்தியானந்தா பெயரில் கொடூர டார்ச்சரை அரங்கேற்றி வருகின்றனர் அங்குள்ள நிர்வாகிகள்.

 

நித்தி எங்கே, எப்படி இருக்கிறார் என்ற மர்மம் தொடரும் நிலையில், அவரது ஆசிரமங்களில் போதிய வருவாய் இல்லை. இதனால் 300 உறுப்பினர்களைக் கொண்ட பிடதி ஆசிரமம் பெரிதும் பாதிக்கப்பட்டது. ஆசிரமத்திற்கு வரும் மிச்ச சொச்ச பணத்தை பங்கு போடுவதில், ஆசிரமத்திலுள்ள இரு நிர்வாகிகளுக்கிடையே அடிக்கடி நிகழ்ந்த குடுமிப்பிடி சண்டையும், இனியும் தம்மால் பட்டினியாக வாழ முடியாது என, ஆசிரமத்தில் 10 ஆண்டுகளாக சேவை செய்து வரும் நபர் அங்கிருந்து தப்பிக்க எத்தனித்த நிலையில், குடுமிப்பிடிக்காரர்கள் இருவரும் கூட்டாகச் சேர்ந்து அவரை அடித்து உதைத்ததும் ஆடியோவாக தற்பொழுது வெளியாகியுள்ளது.

 

நித்தியுடன் குஜராத்தில் கைது செய்யப்பட்ட சென்னைப் பெண் ஹரிணி எனும் பிரணா பிரியானந்தா குஜராத்திலுள்ள ஆசிரமத்தை நிர்வகித்து வந்திருக்கின்றார். கைதிற்குப் பிறகு கிடைத்த ஜாமீனில் மார்ச் மாத வாக்கில் தனது ஜாகையை பிடதி ஆசிரமத்திற்கு மாற்றி வந்தார். இங்கு ஆசிரமத்தை நீண்டகாலமாக நிர்வகித்து வருவது அசலானாந்தா எனும் பெண். கொத்துச் சாவி யாரிடம் இருக்க வேண்டும் என்பதில் இரு வருக்கும் நீயா- நானா போட்டி.

 

ஆசிரமச் செலவுகளுக்காக கைலாசாவிலிருந்து மாதந்தோறும் பிடதிக்கு வரும் தொகை நிறுத்தப்பட்ட நிலையில், பிடதியிலுள்ள உறுப்பினர்களான பக்தர்களை காசி, ராஜபாளையம் மற்றும் திருவண்ணாமலையிலுள்ள நித்தியின் கிளை ஆசிரமங்களுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஏப்ரல் முதல் வாரத்திலேயே பிடதியிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 70 ஆனது. அவர்களுக்கும் அன்றாட உணவுக்கு கையேந்தும் நிலை வந்தது.

 

வழிபாட்டிற்காக ஆசிரமத்திற்கு வரும் பக்தர்கள் கொடுக்கும் பணமே இங்குள்ளவர்களின் பசியைத் தீர்த்து வந்துள்ளது. நித்திசாமி அவ்வளவுதான். இருப்பதை நாம் எடுத்து வைத்துக்கொண்டால் எங்காவது போய்விடலாம் என்கின்ற எண்ணத்தில், "சுவாமி சமாதி நிலையில் இருக்கின்றார். அவரை வெளிக்கொணர உங்களின் பிரார்த்தனை மட்டும் போதாது ஆசிரமத்தில் உள்ளவர்கள் அனைவரும் 'நீராகாரம்' (பட்டினி) எனும் விரதத்தை கடைப்பிடிக்க வேண்டும்'' என நிர்ப்பந்திக்கப்பட்டனர். அதாவது, ஆசிரம பக்தர்கள் பட்டினி கிடந்தால் நித்தி எழுந்துவிடுவார் என நம்பவைக்கப்பட்டுள்ளது.

 

நிராகாரத்தால் மிச்சமான பணத்தை திருடிக்கொண்டு ஹரிணி எனும் பிரணா பிரியானந்தா எஸ்கேப் ஆகியுள்ளார். இது தாமதமாக அசலானந்தாவிற்கு தெரியவர குண்டர்கள் உதவியுடன் பெங்களூரு பஸ் நிலையத்திலிருந்து ஹரிணி தூக்கி வரப்பட்டார். வந்தவருக்கு அடி உதையுடன் அவருடைய தனிப்பட்ட வீடியோவும் காண்பிக்கப்பட கப்சிப் ஆனார்'' என்கிறார் பிடதி ஆசிரமத்தைக் கண்காணித்து வரும் உளவு அதிகாரி ஒருவர்.

 

பிடதி ஆசிரமத்தில் பணியாற்றி, தற்பொழுது ராஜபாளையத்தில் இருக்கும் பக்தரோ, "ஆசிரமத்தில் நெல்லை மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட ஒரு தம்பதி தங்களது 18 வயது மதிக்கத்தக்க மகனுடன் நித்தியை நம்பி ஆசிரமத்தில் இணைய, காசி ஆசிரமத்தில் மணியும், திருவண்ணாமலையில் கவிதாவும் பணிவிடை செய்த நிலையில் கடந்த பத்து வருடங்களுக்குமுன் அந்த இளைஞர் பிடதி அனுப்பப்பட்டார். 18 வயதாகும் இளைஞர் உள்ளிட்ட பிடதி ஆசிரம உறுப்பினர்களுக்கு 'நீராகாரம்' எனும் பட்டினிப் பிரார்த்தனை வலுக்கட்டாயமாகப் போதிக்கப்பட்டது. இத்தனை காலம் நன்றாக சாப்பிட்டு வளர்ந்த பையனுக்கு இது ஒத்துப் போகலை. கடந்த பத்து நாட்களுக்கு முன் இவரும், இவரின் நண்பர் ஒருவரும் ஆசிரமத்திலிருந்து தப்பிக்க முயற்சித்த நிலையில் தான் அசலானந்தாவிடம் சிக்கியுள்ளனர்.

 

ஆசிரமக் குண்டர்களை வைத்து அந்த இளைஞரை நிர்வாணமாக்கி, மாட்டுக்குக் கட்டும் மூக்கணாங்கயிறு கொண்டு இரத்தம் வர அடித்துத் துவைத்துள்ளனர். உடலெங்கும் காயத்துடன்தான் அங்கேயே இருக்கின்றார். அவன் சித்ரவதைக்குள்ளாகும்போது அங்கிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவர் பதிவு செய்தது தான் இந்த ஆடியோ. தனக்குத் தெரிந்த 3 ஆசிரம மின்னஞ்சல்களுக்கு அனுப்பியுள்ளார். அதில் ஏற்கனவே ஆசிரமத்தில் பணியாற்றிய ஒருவருக்கு கிடைத்துள்ளது. அவர் மூலமாகத்தான் இப்பொழுது வெளியாகியுள்ளது" என்கிறார் அவர்.

 

அந்த இளைஞரின் பெற்றோரிடம் இது குறித்து தெரிவிக்கப்பட்ட நிலையில், "ஆசிரமத்தில் ஒழுக்கம் தான் முக்கியம். ஆசிரம விதிகளை யார் மீறினாலும் தண்டனையே. அவனுக்கு கிடைத்தது தண்டனை அல்ல... பாவமன்னிப்பு'' என அதிரவைத்திருக்கிறார்கள்.