Skip to main content

தமிழ்நாடு எனப் பெயர் சூட்டப்பட்ட நாள் இன்று...

Published on 18/07/2018 | Edited on 18/07/2018
Sankaralinganar Jeevanandham M. P. Sivagnanam anna


சென்னை மாகாணத்திலிருந்து மொழிவாரி மாநிலங்களாக ஆந்திரா, கர்நாடகா, கேளரா, ஒடிசா ஆகியவற்றின் பகுதிகள் பிரிக்கப்பட்டபிறகு, நம்முடைய நிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்ட வேண்டும் என்பதை திராவிட முன்னேற்றக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. 
 

தமிழ்நாடு என்கிற பெயர் மாற்றத்தை வலியுறுத்தி தியாகி சங்கரலிங்கனார் 1956ஆம் ஆண்டு 76 நாட்கள் உண்ணாவிரதமிருந்தார். ஜீவானந்தம் போன்ற பொதுவுடைமை இயக்கத் தலைவர்கள், தி.மு.க நிறுவனர் அண்ணா, தமிழரசு கழகத் தலைவர் ம.பொ.சி. உள்ளிட்டோர் சங்கரலிங்கனாரின் உயர்ந்த  நோக்கத்தை ஆதரித்த அதே வேளையில், சாகும்வரை உண்ணாவிரதம் என்பதை கைவிட வலியுறுத்தினர். எனினும், தனது கொள்கையில் உறுதியாக இருந்து உண்ணாவிரதத்தைத் தொடர்ந்த சங்கரலிங்கனார் அக்டோபர் 31ல் உயிர்நீத்தார்.
 

1957ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க முதல்முறையாக வெற்றி பெற்று, பேரவையில் நுழைந்தபோது தமிழ்நாடு பெயர் மாற்றத்தை வலியுறுத்தியது. பெயர் மாற்றம் செய்வதால், சர்வதேச அளவில் சிக்கல்கள் ஏற்படும் எனக் காரணம் தெரிவித்த, காங்கிரஸ் அரசு அதனை நிறைவேற்றவில்லை. 1967ல் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி அமைந்தபிறகுதான் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. அதற்கானத் தீர்மானத்தை பேரவையில் தாக்கல் செய்து உரையாற்றினார் முதலமைச்சர் அண்ணா.
 

 

 

 “தமிழ்நாடு என்ற பெயர் இருந்தால் வெளிநாடுகளில் உள்ளவர்கள் அறிந்துகொள்ள மாட்டார்கள் என்பது மட்டுமல்ல, நம்முடைய தொழில் அமைச்சராக முன்பிருந்த திரு.வெங்கட்ராமன் அவர்கள் ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் இடையே செய்துகொள்ளக்கூடிய ஒப்பந்தம் எல்லாம் திருத்தி எழுதப்படவேண்டி வரும். அதனால் சிக்கல்கள் நாடுகளுக்கெல்லாம் விளையும் என்றெல்லாம் சொன்னார்கள். அதிலிருந்து அவர்கள் வெளிநாடுகளெல்லாம் போய் வந்தார்கள் என்பதைத்தான் கவனப்படுத்துகிறார்களே தவிர, உண்மையாக சிக்கல்கள் இருக்கின்றனவா என்பதைக் கவனப்படுத்தவில்லை. மதிப்பிற்குரிய நண்பர் பாலசுப்ரமணியம் எடுத்துச்  சொன்னபடி, ‘கோல்ட் கோஸ்ட்’ என்பது ‘கானா’ ஆகிவிட்டது. அதனால் எந்தவிதமான சர்வதேச சிக்கல்களும் ஏற்பட்டுவிடவில்லை. தமிழ்நாடு தனிநாடாகி இந்த பெயரை இடவில்லை. இந்தியாவில் ஒரு பகுதியாக இருந்துகொண்டிருந்த பெயரை இடுவதால் இதில் சர்வதேச சிக்கல்கள் எழுவதற்கு நியாயமில்லை. ஆகவே, இந்தத் தீர்மானத்தை அனைவரும் தங்கள் தங்கள் கட்சியில் சார்பில் ஆதரிக்க வேண்டும் என்பதை ஒரு கடமையுணர்ச்சியாகக் கொண்டதற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
 

இந்தத் தீர்மானம் எந்தவித எதிர்ப்பும் இல்லாமல் இந்த அவையில் நிறைவேற்றப்பட இருக்கிறது என்று கருதுகிறேன். அப்படிப்பட்ட ஒரு வெற்றி கிடைக்குமானால் அது இன்று (தி.மு.)கழகத்திற்கு  வெற்றியல்ல; (ம.பொ.சி) தமிழரசுக் கழகத்திற்கு வெற்றியல்ல, மற்ற கட்சிகளுக்கு வெற்றியல்ல- இது தமிழுக்கு வெற்றி, தமிழருக்கு வெற்றி, தமிழ் வரலாற்றுக்கு வெற்றி, தமிழ்நாட்டுக்கு வெற்றி என்ற விதத்தில் அனைவரும் இந்த வெற்றியிலே பங்குகொள்ளவேண்டும்.  
 

நண்பர் ஆதிமூலம் அவர்கள், “தமிழ்நாடு என்ற பெயர் மாற்றத்திற்காகத்தன்னைத்தானே தியாகம் செய்துகொண்ட சங்கரலிங்கனார் அவர்களுக்கு நினைவுச் சின்னம் எழுப்ப வேண்டும்” என்று குறிப்பிட்டார்கள். அவருடைய எண்ணங்கள் இன்றைய தினம் ஈடேறத்தக்க நிலை கிடைத்திருப்பதும் அந்த நிலையை உருவாக்குவதிலே நாம் அனைவரும் பங்கு பெற்றிருக்கிறோம் என்பதும் நமக்கெல்லாம், நம் வாழ்நாள் முழுவதும் பெருமைப்படத்தக்க காரியமாகும். 

 

anna


 

நம்முடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் நெடுங்காலத்திற்குப் பிறகு நம்முடைய இல்லங்களிலே அமர்ந்து பேசிக்கொள்கின்ற நேரத்தில், “என்னுடைய பாட்டனார் காலத்திலேதான் நம்முடைய நாட்டுக்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் இடப்பட்டது என்று பெருமையோடு சொல்லிக் கொள்ள இருக்கிறார்கள். 
 

-என்று அறிஞர் அண்ணா 18-7-1967 அன்று சட்டமன்றத்தில் இவ்வாறு பேசினார். இதன்பின் தீர்மானம் பேரவையின் முடிவுக்கு விடப்பட்டு, எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சியினராலும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
 

அதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் அண்ணா அவர்கள், “வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின்ற இந்த நாளில், ‘தமிழ்நாடு’ என்று நான் சொன்னதும், ‘வாழ்க’ என்று அவை உறுப்பினர்கள் சொல்லுவதற்கு பேரவைத் தலைவரின் அனுமதி பெற்றார். அதன்படி, அண்ணா அவர்கள் தமிழ்நாடு என்று மூன்று முறை சொல்ல, ஒவ்வொரு முறையும் அனைத்து உறுப்பினர்களும் வாழ்க என முழக்கமிட்டனர்.  1967 நவம்பர் 23 அன்று மத்திய அரசு இந்த தீர்மானத்திற்கு ஏற்பளித்தது. 
 

 

 

தமிழ்நாடு என்ற பெயர் 50 ஆண்டுகளாக உலகெங்கும் பரவியுள்ளது. எவ்வித சர்வதேச சிக்கலும் எழவில்லை. அதுபோலவே, மதறாஸ் என அழைக்கப்பட்ட தமிழ்நாட்டின் தலைநகரை ‘சென்னை’ என ஆங்கிலம் உள்பட அனைத்து மொழிகளிலும் மாற்றியது கலைஞர் தலைமையிலான (1996-2001) தி.மு.க. அரசு. இன்று எல்லோருடைய உதடுகளும் சென்னை என்றே உச்சரிக்கின்றன. தமிழ்நாடு என்று பெயர் சூட்டுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்த சங்கரலிங்கனாருக்கு கலைஞர் ஆட்சிக்காலத்தில் சென்னையில் மணிமண்டம் எழுப்பப்பட்டது.
 

இந்த மண்ணின் பண்பாட்டு அடையாளத்தை உலகெங்கும் உரத்துச் சொல்லும் வகையில்தான் நமது மாநிலத்திற்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது. பெயரைக் காப்பாற்றியதுபோலவே மாநிலத்தின் உரிமைகளைக் காப்பாற்ற வேண்டிய கட்டத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். தமிழகம் என சுருக்கமாகக் குறிப்பிடுவதை இயன்றவரையில் தவிர்த்து, தமிழ்நாடு எனப் பெருமிதத்துடன் குறிப்பிட வேண்டிய கடமையும் தமிழர்களுக்கு இருக்கிறது.