Skip to main content

டிஎன்.பி.எஸ்.சி முறைகேட்டில் தப்பிக்கும் முக்கிய புள்ளிகள்... காப்பாற்றும் அதிமுக அரசு... வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

டிஎன்.பி.எஸ்.சி.யின் மாபெரும் முறை கேட்டில் ஓநாய்களை விட்டுவிட்டு ஆடுகளை மட்டுமே "பலி'யாக்கிக் கொண்டிருக்கிறது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். "நக்கீரன்' ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினாலும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகமோ, காவல்துறையோ, டி.என்.பி.எஸ்.சி. முறைகேடுகளை விசாரித்துவரும் சி.பி.சி.ஐ.டி. தனிப்பிரிவு போலீஸோ எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. காரணம், இந்த முறைகேடுகளை விசாரிக்க ஆரம்பித்தால் டி.என்.பி.எஸ்.சி.யின் முன்னாள் -இன்னாள் உறுப்பினர்கள், செயலாளர்கள், தலைவர்கள், அரசியல்வாதிகள் என உயரதிகாரிகள் சிக்குவார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

 

tnpsc



குற்றச்சாட்டு-1 

தட்டச்சுத் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து குரூப்-4 பணியில் முறைகேடாக சேர்ந்துகொண்டிருக்கிறார்கள்’என்ற நக்கீரன் செய்தியை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்தியது தட்டச்சுத் தேர்வை நடத்தும் தமிழ்நாடு தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகம். அந்த விசாரணையில், ஆள்மாறாட்டம் செய்ய புரோக்கராக செயல்பட்டவர் மதுரையைச்சேர்ந்த ஸ்ரீ நாதன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் என்கிற பிரபல தட்டச்சுப் பயிற்சி நிறுவனத்தின் உரிமையாளர் செல்லதுரை. ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் விக்னேஷ், மரகதம் ஆகியோர்தான் என்று நக்கீரன் அம்பலப்படுத்தியது உண்மைதான் என்று உறுதிசெய்த தொழில்நுட்பக்கல்வி இயக்குனரகத்தின் கூடுதல் இயக்குனர் அருளரசு, மதுரை ஜெய்ஹிந்த்புரம் காவல்நிலையத்தில் 2020 பிப்ரவரி 6-ந் தேதி புகார் கொடுத்தார். ஆனால், இதுவரை மூன்றுபேர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதுகுறித்து என்ன நட வடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்க ஜெய்ஹிந்த்புரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் முருகனை பலமுறை தொடர்புகொண்டபோதும் பிஸியாக இருப்பதுபோலவே போனை துண்டித்தார்.

இதுகுறித்து மதுரை சட்டம்-ஒழுங்கு கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஐ.பி.எஸ்ஸின் கவனத்துக்கு கொண்டுசென்றபோது, உடனடியாக தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி முறைகேடு செய்தவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் உறுதியாக. ஆனால், புரோக்கர்கள் சித்தாண்டி, ஜெயக்குமாரோடு விசாரணையை முடிக்க நினைக்கும் சி.பி.சி.ஐ.டி. காவல்துறையோ இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை.

 

tnpsc



குற்றச்சாட்டு-2 

போலீஸும் புரோக்கருமான சித்தாண்டியைப்போலவே மதுரை திருப்பரங்குன்றம் வட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த, காவல்துறையில் பணியாற்றிய முத்துராஜா, மாசானம் மற்றும் மாசானத்தின் அண்ணன் முனியாண்டி என மூவரும் டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் வினாத்தாள்களை முன்கூட்டியே அவுட் செய்து முறைகேடாக தேர்ச்சி பெற்றார்கள் என்று "வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் போட்டித்தேர்விற்கு மதுரை மாநகராட்சி வளாகத்தில் தங்கிப்படிக்கும் மாணவர்கள்' என்கிற பெயரில் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமாருக்கு புகார் கடிதம் அனுப்பப்பட்டது. இப்புகாரிலுள்ள தகவல்கள் உண்மைதானா என்று விசாரித்தபோது, காவல்துறையில் பணியாற்றி முறைகேடாக டி.என்.பி.எஸ்.சி. தேர்வில் தேர்ச்சிபெற்ற முத்துராஜா, மாசானம், முனியாண்டி ஆகிய மூன்றுபேரின் மனைவிகளும் வினாத்தாள்களை முன்கூட்டியே பெற்று தேர்ச்சிபெற்று மதுரை பொ.ப.து.வில் பணியாற்றும் அதிர்ச்சித்தகவல் கிடைத்தது. இதுபோல பலரிடமும் லட்சக்கணக்கில் பணம் வாங்கிக்கொண்டு முன்கூட்டியே வினாத்தாளை லீக்அவுட் செய்து முறைகேடாக தேர்ச்சிபெற வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

போலீஸாக இருந்த முத்துராஜா முறைகேடாக குரூப்-4 தேர்வில் தேர்ச்சி பெற்று முதலில் மதுரை மாவட்டம் திருமங்கலம் வட்டத்தில் வி.ஏ.ஓ.வாக பணிபுரிந்தார். அதற்குப்பிறகு, முறைகேடாக தேர்ச்சிபெற்று ஜெயிலர் ஆகியுள்ளார். அதற்குப்பிறகு, குரூப்-4 தேர்வை மீண்டும் முறை கேடாக எழுதி இளநிலை உதவியாளர் பணியில் சேர்ந்துள்ளார். பிறகு, குரூப்-2 தேர்வில் முறைகேடு செய்து திருப்பரங்குன்றம் சார்பதிவாளராக பணியாற்றிவருகிறார். இவரது கல்லூரி நண்பரான மாசானமோ காவல்துறையில் பணிபுரிந்து திருச்சி பெல் நிறுவனத்தில் உதவி ஆய்வாளராக இருந்தவர், முறைகேடு செய்து மதுரை மாவட்டம் வடக்கு சார்பதிவாளராக பணிபுரிந்துவருகிறார். மாசாணத்தின் அண்ணன் முனியாண்டி, குரூப்-4 தேர்வில் முறைகேடு செய்து கமுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்தார். அதற்குப்பிறகு முறைகேடாக தேர்ச்சிபெற்று மதுரை மத்திய சிறையில் உதவி ஜெயிலராக உள்ளார். தேர்வு எழுதுவதற்கு முன்பே இவர்களுக்கு டி.என்.பி.எஸ்.சி. வினாக்கள் கிடைத்துவிட்டன. அதற்கான பதில்களை அரசு உயர் பதவியில் இருப்பவர்களிடம் வாட்ஸ்-அப்பில் அனுப்பி கேட்டிருக்கிறார்கள். அவர்களிடம் விசாரித்தாலே இவர்கள் செய்த மாபெரும் முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும். ஆனால், டி.என்.பி.எஸ்.சி.க்கு இந்த முறைகேடுகள் குறித்து புகார் வந்தபிறகும்கூட இதுகுறித்து கண்டுகொள்ளவில்லை. காரணம், டி.என்.பி.எஸ்.சி.யிலிருந்து வினாத்தாள் லீக் அவுட் ஆகவில்லை என்றும் உடனே அழிந்துவிடும் மேஜிக் மையை பயன்படுத்தி, போக்குவரத்திலேயே புரோக்கர் ஜெயக்குமார் முறைகேடு செய்துவிட்டார் என்றும் டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் எழுதிய திரைக்கதை பொய்யாகிவிடும் என்பதால்தான் அந்த கோணத்தில் விசாரிக்காமல் இருக்கிறது சி.பி.சி.ஐ.டி.

 

tnpsc



குற்றச்சாட்டு-3 

கடந்த 2011-ஆம் ஆண்டு நடந்த குரூப்-2 (non interview) தேர்வில், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ராமாபுரம் (கிழக்கு) கிராமத்தில் ஒரே ஊரை சேர்ந்த 12 நபர்கள் முறைகேடாக தேர்வாகி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஒரே குடும்பத்தில் சகோதரர்கள் இரண்டு, இரண்டு நபர்கள் என்று மூன்று குடும்பத்தில்மட்டும் 6 நபர்கள் தேர்வாகி உள்ளனர். அண்ணாதுரை(எ) சந்திரசேகர், திருமுருகன் ஆகிய சகோதரர்களும், விஜயரங்கன், விஜயவேலன் சகோதரர்களும், சிவகுமார், விஜயகுமார் சகோதரர்களும் மற்றும் கோவிந்தன், வெற்றிச்செல்வன், வாசுதேவன், வேல்முருகன், ரமேஷ், நாகராஜன் ஆகியோரும் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். இதுகுறித்த புகாரும் டி.என்.பி.எஸ்.சி. அதிகாரிகளுக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீஸாருக்கும் சென்றது. நக்கீரனால் அம்பலப்படுத்தப்பட்ட 12 பேருக்கும் தற்போதுதான் சம்மன் அனுப்பியுள்ளது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.

 

tnpsc



குற்றச்சாட்டு-4 

புதுக்கோட்டை ஆலங்குடி அருகிலுள்ள கத்தக்குறிச்சி கிராமத்தைச்சேர்ந்த பிரவீன்ராஜ் தனது அண்ணன் மற்றும் பெரியப்பாவின் மகன், தோழியின் தம்பி ஆகியோருக்காக ஆள்மாறாட்டம் செய்து குரூப்-4 தேர்வு எழுதிய அதிர்ச்சித்தகவல் வெளியாகியுள்ளது. அதே போல், புதுக்கோட்டை அறந்தாங்கி அருகிலுள்ள ரெத்தினக்கோட்டையைச் சேர்ந்த பரமேஸ்வரி என்பவர் தனது தங்கை புவனேஸ்வரிக்காக தேர்வு எழுதிய அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து நாம் மேலும் விசாரித்தபோது, புதுக்கோட்டை மாவட்டம் கத்தக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைக்கண்ணுவின் மகன் பிரவீன்ராஜ். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்று புதுக்கோட்டை மாவட்ட வருவாய்த்துறையில் உள்ளார்.

இவருடைய ஒன் டைம் பாஸ்வேர்டு ஐ.டி: 14764036 ஆகும். இதன் பாஸ்வேர்டு: V9Y28FW. அதுவே, 2016-ஆம் ஆண்டு வி.ஏ.ஓ. அப்ளிகேஷன் எண்: 520043456 ஆகும். இவருக்கு தேர்வு எழுத ஒதுக்கப்பட்ட கல்லூரி, புதுக்கோட்டை சத்திய மூர்த்தி சாலையிலுள்ள அரசு மகளிர் கலைக்கல்லூரி. ஆனால், இவரோ புதுக்கோட்டை சிவபுரத்திலுள்ள ஜே.ஜே. கல்லூரியில் தேர்வு எழுதியுள்ளார். யாருக்காக எழுதினார் என்று விசாரணை நடத்தப்பட வேண்டும்.


இதேபோல், கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த குரூப்-4 வி.ஏ.ஓ. தேர்வில் தனது உடன் பிறந்த அண்ணனான ஜெயரவிவர்மா என்பவருக்காக வி.ஏ.ஓ. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்துள்ளார். முறைகேடாக தேர்ச்சிபெற்ற ஜெயரவிவர்மா தற்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டத்தில் வி.ஏ.ஓ.வாக உள்ளார். இவருடைய 2014-ஆம் ஆண்டு வி.ஏ.ஓ. பதிவு எண்:180401262. ஆனால், சந்தேகம் வரக்கூடாது என்று சிவகங்கை மாவட்ட காரைக்குடியிலுள்ள அழகப்பா மாடல் மேல்நிலைப்பள்ளியிலுள்ள தேர்வுமையத்தில் தேர்வு எழுதியுள்ளார். அதே 2014 குரூப்-4 தேர்வில் தனது பெரியப்பாவின் மகன் பிரகதீஸ்வரனுக்காக மூன்று லட்ச ரூபாய் பணம் வாங்கிக்கொண்டு தேர்வு எழுதியிருக்கிறார். பிரகதீஸ்வரனோ தற்போது சென்னையிலுள்ள வருவாய்த் துறையில் இளநிலை உதவியாளராக உள்ளார்.

குற்றச்சாட்டு-5 

புதுக்கோட்டை ரெத்தினக்கோட்டையை சேர்ந்த பரமேஸ்வரி 2013 ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வில் தேர்ச்சிபெற்று அறந்தாங்கியிலுள்ள ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளராக பணிபுரிந்துவருகிறார். ஆனால், இவரோ தனது தங்கை புவனேஸ்வரிக்கு பதிலாக 2014 ஆம் ஆண்டு நடந்த வி.ஏ.ஓ. தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து காரைக்குடி தேர்வுமையத்தில் தேர்வு எழுதியுள்ளார். தற்போது புவனேஸ்வரியோ ஆவுடையார்கோயில் கிடங்கிவயல் என்ற கிராமத்தில் வி.ஏ.ஓ.வாக உள்ளார்.

அதுமட்டுமல்ல, தனது சகோதரர்களுக்காக ஆள்மாறாட்டம் செய்த பிரவீன்ராஜும் சகோதரிக்காக ஆள்மாறாட்டம் செய்த பரமேஸ்வரியும் ஊரக வளர்ச்சித்துறையில் பணிபுரிகிறார்கள். இவருவமே பி.இ. பட்டதாரிகள்; நண்பர்கள் என்பதால் கலந்துபேசி பரமேஸ்வரியின் தம்பி பாலசுப்பிரமணியனுக்காக பிரவீன்ராஜ் ஆள்மாறாட்டம் செய்து 2017 ஆம் ஆண்டு குரூப்-4 தேர்வு எழுதியிருக்கும் அதிர்ச்சித்தகவல் கிடைத்துள்ளது. பாலசுப்பிரமணியனோ நீடாமங்களத்தில் ஊரக வளர்ச்சித்துறையில் இளநிலை உதவியாளராக உள்ளார். இவர்களை விசாரித்தாலே ஆள்மாறாட் டத்துக்கு உதவிய தேர்வு சூபர்வைஸர் உள்ளிட்டவர்கள் சிக்குவார்கள்.


குற்றச்சாட்டு-6 

குரூப்-1 தேர்வு முறைகேடு குறித்து விசாரணை செய்த மத்தியக்குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகள் நீதிமன்றத்திலேயே இப்படி அறிக்கை கொடுத்தார்கள். அதாவது, "தமிழ்நாடு தேர்வாணைய TNPSC Group-1 2016-ன் தேர்வில் தேர்ச்சிபெற்ற மொத்தமுள்ள 74 பேரில் 62 பேர் ஒரு குறிப்பிட்ட தனியார் பயிற்சிமையத்தில் பயிற்சிபெற்று முறைகேடாக தேர்ச்சிபெற்றுள்ளனர் என்பது பற்றி உயர்நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டு அது சம்பந்தமாக காவல் விசாரணை மேற்கொள்ள நீதிமன்றம் அறிவுறுத்தலின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்விசாரணையில், மனிதநேயம் மற்றும் அப்பல்லோ பயிற்சி மையத்தின் இயக்குனராக செயல் பட்டுவரும் திரு. சாம் ராஜேஸ்வரன் தேர் வாணையத்தில் நடைபெறும் போட்டித் தேர்வுகளுக்கு கேள்வித்தாள்களை முனைக்கும் பணியில் (Question Setters) சம்பந்தப்பட்ட கல்லூரி பேராசிரியர்களுடனும் மற்றும் போட்டித் தேர்வுகளின் விடைத்தாள்களை திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சம்பந்தப்பட்டுள்ள பேராசிரியர்களுடனும் தேர்வாணையத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும் நெருங்கிய தொடர்பு கொண்டு பல தேர்வாணைய முறைகேடுகள் செய்து இருப்பதாக அவர்கள் தொலைபேசி எண்களை ஆய்வு செய்ததிலிருந்து தெள்ளத் தெளிவாக தெரிய வருகிறது.

சாம் ராஜேஸ்வரன் கேள்வி முனைவோர் (Question Setters), விடைத்தாள் திருத்துவோர் (Evoluators) மற்றும் தேர்வாணைய ஊழியர்களின் உதவியை பயன்படுத்தி, பல முறைகேடுகளில் ஈடுபட்டு 2016 Group-1 தேர்வில் தேர்ச்சி பெற்ற 74 பேரில் 62 பேர் தன் பயிற்சி மையத்தில் படித்த மாணவர்களை முறைகேடாக தேர்ச்சிபெறச் செய்து, அவர் நடத்திவரும் தனியார் பயிற்சி மையத்தை நம்பர்-1 பயிற்சி மையமாக பல பத்திரிகைகளில் விளம்பரம் செய்துவருகிறார். இதனால், இவ்விளம்பரத்தை பார்த்த நூற்றுக் கணக்கான போட்டித்தேர்வு பயிற்சி மாணவர்கள் மேற்படி அப்பல்லோ பயிற்சி மையத்தில் படிக்க ஆர்வம் காட்டி பல ஆயிரக்கணக்கில் கட்டணங்கள் செலுத்தியதன் மூலம் சாம் ராஜேஸ்வரன் கோடிக்கணக்கான ரூபாய் லாபம் அடைந்துள்ளார்.

தேர்வாணைய முறைகேடுகளில் சம்பாதித்த கோடிக்கணக்கான பணத்தின் மூலம் தேர்வாணைய ஊழியர்களையும், கேள்வி முனையும் பேராசிரியர்களையும் (Question Setters) விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களையும் (Evoluators) விலைக்கு வாங்கி தன்னுடைய அப்பல்லோ பயிற்சி மையத்தை நம்பர்-1 பயிற்சி மையமாக நடத்தி வந்துள்ளார்.

மேற்படி, அப்பல்லோ பயிற்சி மைய அலுவலகத்தை கடந்த 18-01-2018-ஆம் தேதி தீவிர சோதனை செய்ததிலிருந்தும் அவர்கள் மேற்படி முறைகேட்டில் ஈடுபட்டவர்களின் கைபேசி எண்களை ஆய்வு செய்ததிலிருந்தும் அந்த அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் பல மாதிரி வினாத்தாள்களை ஆய்வு செய்ததிலிருந்தும் முறைகேடுகள் தெள்ளத் தெளிவாக நிரூபணமாகிறது'’ என்று மத்திய குற்றப்பிரிவு காவல்துறையின் அறிக்கையிலேயே தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்தும் சி.பி.சி.ஐ.டி. போலீஸ் கண்டுகொள்ளவில்லை. இதனால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கக்கோரும் தி.மு.க.வின் மனுவை தாக்கல் செய்யக்கூறியுள்ளது நீதிமன்றம்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முறைகேடு என்பது மேஜிக் பேனாவை பயன்படுத்தி வரும் வழியில் புரோக்கர் ஜெயக்குமார் மட்டுமே முறைகேட்டை செய்தார் என்றும் அதற்கு டி.என்.பி.எஸ்.சி. கடைநிலை ஊழியரான ஓம்காந்தன் உதவி செய்தார் என்றும் லாஜிக் இல்லாத ‘மேஜிக்’ செய்து ஃபைலை குளோஸ் பண்ணி தமிழக மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறது அ.தி.மு.க. அரசு.