/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/652_29.jpg)
தமிழக அரசின் செய்தி துறையில் நடக்கும் பதவி உயர்வு அக்கப்போர்கள் அத்துறையின் சீனியர்களை கொந்தளிக்க வைத்திருக்கிறது. அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காக மாவட்டம் முழுவதும் பி.ஆர்.ஓ.க்கள், உதவி பி.ஆர்.ஓ.க்கள் இருக்கின்றனர். கடந்த வாரம் உதவி பி.ஆர்.ஓ.க்கள் சிவகங்கை கருப்பண்ண ராஜவேல், தஞ்சாவூர் இளமுருகு, கரூர் செந்தில் குமார், கள்ளக்குறிச்சி லோகநாதன், கிருஷ்ணகிரி ஏ.எஸ். மோகன், திண்டுக்கல் நாகராஜ பூபதி ஆகிய 6 பேரும் பி.ஆர்.ஓ.க்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டு பல்வேறு மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
அதேபோல, கடலூர் மாவட்ட பி.ஆர்.ஓ சரவணன், அரியலூர் ஜெய அருள்பதி, திருப்பூர் ஜான்ஜெகன், விருதுநகர் ஜெகவீரபாண்டியன், விழுப்புரம் சுப்பையா, ஈரோடு தீபா, பெரம்பலூர் பாலசுப்பிர மணியன், ராமநாதபுரம் மகேஸ்வரன், கோவை மதியழகன், வேலூர் துரைசாமி ஆகிய 10 மாவட்ட பி.ஆர்.ஓ.க்களும், தமிழ் நாடு தேர்தல் ஆணையத்தின் பி.ஆர்.ஓ. பிரசன்னா வெங்கடேசனும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். இப்படி அதிரடியாக நடக்கும் பதவி உயர்வுகள் மற்றும் இட மாறுதல்களில் அரசியல் விளையாடுவதாக சீனியர்கள் கொந்தளிக்கின்றனர். இது குறித்து நம்மிடம் பேசிய செய்தி மக்கள் தொடர்பு துறையினர், அ.தி.மு.க. ஆட்சியில் பணியில் அமர்த்தப்பட்டவர்களுக்குத்தான் பதவி உயர்வுகளும் நல்ல பணியிட மாறுதல்களும் கிடைக்கின்றன. ஆனால், திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டவர்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய பதவி உயர்வுகள் கொடுக்கப்படுவதில்லை.
அதாவது, மு.க.ஸ்டாலினின் மனைவி துர்காவின் உறவினர் மணிமாறன், வீரபாண்டி ஆறுமுகத்தின் மைத்துனர் மேகவர்ணம், ஆர்.டி.சீதாபதியின் மகன் ராஜன், அண்ணாதுரை, தமிழ்மொழிஅமுது ஆகிய 5 உதவி இயக்குநர்களுக்கும் கிடைக்கவேண்டிய துணை இயக்குநர் பதவி உயர்வு கடந்த 2 ஆண்டுகளாக கொடுக்கப்படவில்லை.
அதேசமயம், செய்தித்துறையில் பல முறை பணிநீட்டிப்பும் உயர்பொறுப்பும் கிடைத்து தற்போது முதல்வர் எடப்பாடி அலுவலகத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அந்த அதிகாரியை கவனித்துக்கொள்ளும் தி.மு.க.வினருக்கு கிடைக்க வேண்டியது கிடைத்து விடுகிறது. அ.தி.மு.க.வினர்களுக்கும் கூட இந்த அதிகாரியின் கடைக்கண் பார்வை கிடைத்தால் மட்டுமே அனைத்தும் கிடைக்கும். செய்தித்துறையில் தகுதிக்கும், திறமைக்கும் மரியாதை இல்லை. அரசியல்தான் ஏகத்துக்கும் விளையாடுகிறது'' என்று கொந்தளிக்கின்றனர்.
இதற்கிடையே, சார்நிலை அலுவலர்களுக்கான கணக்கு தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மட்டுமே பி.ஆர்.ஓ. பதவி உயர்வு அளியுங்கள் என நிதித்துறை கடந்த சில வருடங்களாகவே வலியுறுத்தி வருகிறது. ஆனால், அ.தி.மு.க. அரசின் செய்தித்துறையோ, கருர் மாவட்ட ஏ.பி.ஆர்.ஓ.வாக இருந்த செந்தில்குமாரை திருப்பூர் மாவட்ட பி.ஆர்.ஓ.வாக பதவி உயர்வளித்து, இரண்டு வருடங்களுக்குள் தேர்ச்சி பெற வேண்டும் என அரசாணை போடுகிறது. இதே அளவுகோல் திமுகவினருக்கு கிடையாது. ஆளைச் சொல்லு ரூலை சொல்கிறேன் கதைதான் செய்தித்துறையில் நடக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)