Skip to main content

சைலண்ட் மோடில் அ.தி.மு.க! -ஸ்டாலினை கவனிக்கும் டெல்லி!

dddd

 

இந்த சட்டமன்றத் தேர்தல் தி.மு.க.வுக்கு வாழ்வா-சாவா எனச் சொல்லப்பட்ட நிலையில், அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை ஒரு அக்னிப்பரிட்சையாகவே அமைந்திருந்தது. 30 ஆண்டுகள் அ.தி.மு.க.வை நிர்வகித்த ஜெ.வும், அவருக்குத் துணையாக இருந்த சசிகலாவும் இல்லாமல் அ.தி.மு.க. சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால், அதன் வழக்கமான தேர்தல் நடைமுறைகளில் பல மாற்றங்கள் தெரிந்தன. அதற்கேற்ப பிளஸ்களும் மைனஸ்களும் அங்கங்கே களத்தில் தென்பட்டது என்கிறார்கள் அ.தி.மு.க. தலைமையைச் சேர்ந்தவர்கள்.

 

மற்ற மாவட்டங்களைவிட சென்னைக்குட்பட்ட தொகுதிகளில் வாக்கு சதவிகிதம் குறைந்து போனதற்கு முக்கிய காரணம், அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் பல தொகுதிகளில் தேர்தல் திருவிழாவில் பங்கேற்க விருப்பம் காட்டாமல் இருந்ததுதான். இரட்டை இலையின் நிரந்தர வாக்காளர்களை வாக்குச்சாவடிக்குக் கொண்டுவருவதில் அ.தி.மு.க. சுணக்கமாக இருந்தது. உதயநிதி போட்டியிட்ட சேப்பாக்கத்தில் அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் நின்ற பா.ம.க வேட்பாளருக்கு பூத்திலும் பூத் ஸ்லிப் கொடுக்கவும், அ.தி.மு.க சைடில் போதிய ஆள் பலம் இல்லை. அ.ம.மு.க சார்பில் போட்டியிட்ட எல்.ராஜேந்திரன் தரப்பு, அ.தி.மு.க.வை விட ஆர்வமாக வேலை பார்த்தது. எழும்பூரில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலையில் நின்ற ஜான்பாண்டியனுக்கு ஆளுந்தரப்பு ஆர்வம் காட்டவில்லை.

 

இதுபோலவே வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் அ.தி.மு.க.வும் கூட்டணிக் கட்சிகளான பா.ம.க.வும் சோர்வுடனேயே செயல்பட்டன. கிராமப்புறங்களில் வழக்கமாக களைகட்டும் இலைத் தரப்பு, இந்த மாவட்டங்களில் டல்லடிக்க, பா.ம.க சைடில், சோளிங்கர் உள்ளிட்ட மாம்பழம் போட்டியிடும் தொகுதிகளில் ஓரளவு வேகம் தெரிந்தது. அ.தி.மு.க தரப்பின் சோர்வு... காஞ்சிபுரம், செங்கல்பட்டு தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் மத்தியில் காணப்பட்டது.

 

காஞ்சி மாவட்டத்தில் பகல் 12 மணிவரைதான் அ.தி.மு.க. ஆக்டிவாக இருந்தது. திருவள்ளூர் மாவட்டத்தில் எப்போதும் சாதகமாக அமையும் பொன்னேரி தொகுதியில் அ.தி.மு.க.வினர் களத்தில் இல்லை. அதே நிலவரம்தான் திருத்தணி, கும்மிடிப்பூண்டி தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள், கட்சிக்காரர்கள் ஒத்துழைப்பு இல்லாமல் சிரமப்பட்டார்கள்'' என்கிறார்கள் அந்த மாவட்ட ர.ர.க்கள்.


அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரான வைத்தியலிங்கம், ஒரத்தநாடு தொகுதியில் அவரது ஆட்களைவிட அ.ம.மு.க. வேட்பாளர் சேகரின் ஆட்கள் படுஸ்பீடாக இருந்தார்கள். திருவையாறு தொகுதியில் அ.ம.மு.க.வின் வேலு கார்த்திகேயன், அங்கு போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளரைவிட வேகம் காட்டினார். தாமரை இலைத் தண்ணீர்போல இந்தத் தொகுதியில் அ.தி.மு.கவும், பா.ஜ.க.வும் இருந்தன. பல இடங்களில், கட்சியினர் பூத் ஸ்லிப் கொடுக்கும் பகுதியில் அ.தி.மு.க. கொடிக்குப் பக்கத்தில் பா.ஜ.க. கொடி கட்டப்படுவதை ர.ர.க்கள் விரும்பவில்லை. "தனியா கொடி கட்டிக்குங்க' என்று பக்குவமாக சொல்லி, காவிக் கொடியைத் தவிர்த்தனர்.

 

இந்த நிலவரங்கள் குறித்து, மாநில உளவுத்துறை போலீசார் ஆட்சித் தலைமைக்கு ரிப்போர்ட் அனுப்பியபடி இருந்தனர். அ.தி.மு.க.வின் ஒத்துழையாமை இயக்கம் பற்றிய ரிப்போர்ட்டுகளால் கரூர் அரவக்குறிச்சியில் போட்டியிட்ட பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலை, தனது ஐ.பி.எஸ் சர்வீஸ் மாநிலமான கர்நாடகத்திலிருந்து ஆட்களைக் கூட்டிவந்திருந்தார். கிருஷ்ணராயபுரம் எப்போதுமே அ.தி.மு.கவுக்கு சாதகமான தொகுதி. ஆனால், அங்கும் தி.மு.க.வின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் அ.தி.மு.க. பின்தங்கியது. திருவரங்கம், லால்குடி தொகுதிகளில் ஈடுகொடுத்தது.

 

அ.தி.மு.கவின் தொகுதி பொறுப்பாளர்கள்-அமைச்சர்கள் என முக்கிய பங்காற்றிய வைத்தியலிங்கம், விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன், காமராஜ் போன்ற வி.ஐ.பி.க்கள் தங்களது தொகுதிகளை விட்டு வெளியே கவனம் செலுத்த முடியாத அளவிற்கு தி.மு.க. தரப்பு தேர்தல் வியூகத்தில் லாக் செய்திருந்தது. தங்களின் பொறுப்பில் இருந்த மற்ற தொகுதிகளை அவர்களால் பார்க்க முடியவில்லை. இப்படி பல இடங்களில் அ.தி.மு.க. பழைய தெம்புடன் இல்லை என்கிறார்கள் தேர்தல் களத்தில் நீண்ட அனுபவம் கொண்ட ர.ர.க்கள்.

 

தற்போதைய களத்தை உணர்ந்த அ.தி.மு.க.வினரோ, "இது போன்ற சோர்வையெல்லாம் தொகுதிகளில் பாய்ந்த பணம் மாற்றி விட்டது' என்கின்றனர். ஒரு கிராமத்தில் மூன்று கிளை இருக்கிற தென்றால், அந்த கிளை நிர்வாகிகளுக்கு ஆளுக்கு ஐந்தாயிரம் என மூன்று முறை வந்து சேர்கிறது. அதுபோக வாக்குகளுக்குப் பணம் என அவர்களிடம் விநியோகிக்க பணம் தரப்பட்டது. அதனால் அவர்கள் உற்சாகமாகிவிட்டனர்'' என்கிறார் விழுப்புரம் மாவட்ட அ.தி.மு.க. தலைவர் ஒருவர்.

 

"அதிருப்தி என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக காணப்பட்டது. ஆனால் அ.தி.மு.க.வினர் சோர்வாக இல்லை' என்கிறார்கள், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர்.

 

சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் வெறித்தனமாகச் செயல்பட்டார்கள். தி.மு.க.வினர்தான் நாம் வெற்றிபெறுவோம் என மெத்தனமாகச் செயல்பட்டார்கள் என்கிறார்கள் அம்மாவட்ட ர.ர.க்கள்.

 

கொங்கு மண்டலமான ஈரோடு, கோவை மாவட்டங்களிலும் அ.தி.மு.க.வினர் சுணக்கமாக இல்லை என்கிறார்கள் அம்மாவட்ட ர.ர.க்கள். அங்கே இதற்கு முன்பு இருந்ததைவிட தி.மு.க தரப்பு காட்டிய வேகமும் தேர்தல் களத்தை பரபரப்பாக்கியது.

 

சேலம், நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க.வினர், கடைசி ஒருவாரத்தில் ரொம்பவே சோர்ந்துவிட்டார்கள். தலித், முஸ்லிம் வாக்குகள் தி.மு.க.வுக்கு முழுமையாக ஆதரவாக இருந்ததும், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தி.மு.க.வுக்கு சாதகமாக இருந்ததும் அ.தி.மு.க.வினரை சோர்வடைய வைத்தது. ஏற்காடு தொகுதியில் அ.தி.மு.கவின் சித்ராவை மக்கள் நான்கு முறை முற்றுகையிட்டனர் என்கிற நிலை, அவர்களது சோர்வை அதிகப்படுத்தியது.

 

சில இடங்களில் அ.தி.மு.க.வைப் போல தி.மு.கவும் பண விநியோகத்தில் ஈடுபட்டது.. பண விநியோகம் வாக்குகளைப் பெற்றுத்தரும் என்கிற ஃபார்முலாவை இரண்டு கட்சிகளுமே அறிந்திருந் தாலும், கள நிலவரம் சாதகமாக இருந்தால்தான் அது முழுமையான பலன் தரும் என்பதையும் கழகத் தினர் உணர்ந்திருந்தனர். பல இடங்களில் ஓட்டுக்கு 500 என அ.தி.மு.க. கொடுக்க, தி.மு.க. தரப்பில் ஓட்டுக்கு 300 கொடுத்தது. சில தி.மு.க. வேட்பாளர் கள் 100 ரூபாய் அதிகமாக வாக்காளர்களுக்குத் தந்த னர். அ.தி.மு.க அமைச்சர்கள் தொகுதியில் 1000, 2000, தங்க காசு, கிராம சங்கத்துக்கு நிதி என அசத்தினார்கள்.

 

""எடப்பாடி தொகுதி மூன்று கட்டமாக பண விநியோகம் மேற்கொள்ளும் சூழல் உருவாகும் அளவிற்கு போட்டி கடுமையானதாகவே இருந்தது' என்கிறார்கள் சேலம் மாவட்ட அ.தி.மு.க. தலைவர்கள்.

 

""சென்னை முதல் சேலம் வரை சுணக்கம் காட்டிய ர.ர.க்கள், விழுப்புரம் முதல் ராமேசுவரம் வரை வேகம் காட்டினார்கள். இடையில் திருச்சி, தஞ்சை என ஸ்பீடு பிரேக்கர்கள் அ.தி.மு.க. வேகத் துக்கு தடை ஏற்படுத்தியதுதான் அ.தி.மு.க. களப் பணியின் நிலவரம்'' என்கிறார்கள் அ.தி.மு.க. தலை வர்கள். மற்ற மாவட்டங்களில் இரண்டு கட்சிகளின் களப்பணியும் தொகுதிகளுக்கு ஏற்றாற்போல ஏற்ற இறக்கமாக இருந்துள்ளன.

 

கலைஞரும் ஜெயலலிதா வும் தலைமை வகிக்காத இந்த தேர்தல் களத்தில், தி.மு.கவும் அ.தி.மு.கவும் தனியார் கார்ப்ப ரேட் நிறுவனங்களை வியூக வகுப்பாளர்களாக நியமித்திருந்தன. அந்த நிறுவனங்களும், அர சின் உளவுத்துறையும், வாக்குப் பதிவின் போக்கினைத் தங்கள் தலைமைக்குத் தெரிவித்துக் கொண்டிருந்தன. முக்கிய பிரமுகர் கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட் டோரும் இத்தகைய நிலவரத்தை அறிந்தபடியே இருந்தனர்.

 

காலையிலேயே வாக்களிக்க வந்த நடிகர் அஜித், கறுப்பு-சிவப்பு கலந்த மாஸ்க் அணிந்து வந்ததும், நடிகர் விஜய் கறுப்பு-சிவப்பு நிற சைக்கிளை ஓட்டியபடி வந்து ஓட்டுப் போட்டு விட்டு, டூவீலரின் பின்சீட்டில் உட்கார்ந்து வீட்டுக்குத் திரும்பியதும்கூட மீடியாக்களால் பர பரப்பான செய்தியாயின. "இந்த வருடம் நல்லாட்சி அமைய வேண்டும் என்பதற்காக வாக்களித்தேன்' என ஜெயம்ரவி யதார்த்தமாக சொன்னதும், "சாதி-மதம் கடந்து வாக்களிக்க வேண்டும் என்பதுதான் எப்போதும் என் நிலைப்பாடு' என விஜய்சேதுபதி சொன்னதும் பரபரப்பாயின.

 

இதுபோன்ற பிரபலங்களின் குறியீடுகள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது பற்றியும் ரிப்போர்ட்டுகள் கட்சித் தலைமைகளுக்குப் போய்க் கொண்டிருந்தன. தி.மு.க கூட்டணியில் மு.க.ஸ்டா லின், ப.சிதம்பரம், திருமாவளவன், வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் தங்கள் கூட்டணி பெரும் வெற்றி பெறும் என வாக்களிப்புக்குப் பிறகு நம்பிக்கையுடன் பேட்டி அளித்தனர்.

 

"அனைவரும் வாக்களிக்கவேண்டும்' என்று பொதுவாகச் சொன்னார் சிலுவம்பாளையத்தில் வாக்களித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி. அ.தி.மு.க தரப்பு சைலண்ட் மோடில் இருந்த நிலையில், ஏப்ரல் 6 இரவில் மத்திய உளவுத்துறை ரிப் போர்ட் டெல்லிக்குச் சென்றது. மறுநாள், வாக்குப் பதிவு 72.78% என உறுதியான நிலையில், "ஸ்டாலினுக்கு கூடுதல் பாதுகாப்பு கொடுங்கள். கவனித்துக் கொள்ளுங்கள்' என டெல்லியிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. கோட்டையில் உள்ள அதிகாரிகளின் சமிக்ஞைகள் பலவற்றை உணர்த்துகின்றன.