Skip to main content

துபாயில் இறந்த கணவர்... உடலை தமிழகம் கொண்டுவர முடியாமல் 4 குழந்தைகளுடன் கதறும் தாய்... ஏழைக் குடும்பத்திற்கு அரசு உதவ கோரிக்கை

Published on 21/07/2020 | Edited on 21/07/2020
Tittakudi - balakrishnan - vadakara poodi

 

''துபாயில் கணவனுக்கு உடல்நல பாதிப்பு... கணவனை மீட்க போராடும் மனைவி...'' என்ற தலைப்பில் கடந்த 19ஆம் தேதி நக்கீரன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில் துபாயில் இருந்த பாலகிருஷ்ணன் உயிரிழந்துள்ளார் என்ற செய்தி அவரது மனைவி அஞ்சலைக்கும், நான்கு குழந்தைகளுக்கும் தெரியவந்ததும் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

 

துபாயில் உடல்நிலை பாதித்து சிகிச்சை பெற்று வரும் கணவரை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை மனு அனுப்பியிருக்கிறார் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், வடகரா பூண்டி கிராமத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை.

 

பாலகிருஷ்ணன் 2007ஆம் ஆண்டு வேலைக்காக துபாய் சென்றுள்ளார். அங்கு சார்ஜாவில் உள்ள ரான்ஜஸ் பில்டிங் கன்சக்சன் என்ற நிறுவனத்தில் கட்டுமான துறையில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தினமும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மொபைலில் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் எட்டாம் தேதி முதல் அவர் போன் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ளவில்லை. அவர் வேலை செய்த கம்பெனியிலிருந்து எந்த தகவலும் வரவில்லை.

 

இந்த நிலையில் அவருடன் வேலை பார்த்த நண்பர்கள் பாலகிருஷ்ணன் பணியில் இருந்தபோது மயங்கி விழுந்ததாகவும், அவரை அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தொலைபேசி மூலம் அவரது மனைவியிடம் கூறியுள்ளனர். மேலும் அவரது நிலைமை மிகவும் சீரியஸாக இருப்பதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர். எப்படியும் தனது கணவரை தமிழகம் கொண்டுவந்து இங்குள்ள மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றிவிடலாம் என்று பாலகிருஷ்ணன் மனைவி அஞ்சலை விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமாரிடம் தனது குழந்தைகளுடன் வந்து மனு கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.

 

அவரது கணவர் குறித்து அவரிடம் நாம் கடந்த 18ஆம் தேதி கேட்டபோது, ஏற்கனவே எனது கணவருக்கு தலையில் ஏதோ கட்டி இருப்பதாகவும் அதை சரி செய்வதற்காக நமது ஊருக்கு வந்து இங்குள்ள மருத்துவமனைகள் அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக அங்கிருந்து புறப்படுவதற்காக பல மாதங்களாகவே முயற்சி செய்து வந்துள்ளார்.

 

இந்திய தூதரகத்தில் தனது உடல்நிலையை பற்றி எழுத்து மூலம் முறையாக விண்ணப்பித்து காத்துக்கிடந்துள்ளார். இந்த கரோனா பரவல் காரணமாக அவரை ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதப்படுத்தி உள்ளனர். இந்த கால தாமதம் அவருக்கு ஆபத்தான நிலையை உருவாகியுள்ளது. வேலையில் இருந்த போதே மயங்கி கீழே விழுந்துள்ளார். அவருடன் வேலை செய்த நண்பர்கள் அவரை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அவர் இன்னும் சுயநினைவு இல்லாமல் இருப்பதாக அவரது நண்பர்கள் கூறுகின்றனர். நமது தமிழக அரசு மற்றும் இந்திய அரசுக்கு எனது கணவரை உடனடியாக தமிழகம் அனுப்பி வைக்குமாறு புகார் மனுக்களை அனுப்பி உள்ளேன். அரசு அதிகாரிகளிடமிருந்து இதுவரை எந்த பதிலும் கிடைக்கவில்லை.

 

Tittakudi - balakrishnan - vadakara poodi

        குழந்தைகளுடன் அஞ்சலை                           பாலகிருஷ்ணன் 

 

அவர் வேலை செய்த கன்சக்ஷன் கம்பெனியில் தொடர்புகொண்டு கேட்டபோது, அவர்கள் பொறுப்போடு எந்த பதிலும் சொல்லவில்லை. என் கணவருக்கும் அவர்களுக்கும் தொடர்பு இல்லாத மாதிரி பதில் கூறுகின்றனர். எனவே எனது கணவரின் நிலைமை அங்கு எப்படி உள்ளது. அவர் இங்கு கொண்டு வருவதற்கு  விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அவருக்காக  நானும் எனது நான்கு பிள்ளைகளும் காத்திருக்கிறோம் என்றார்  கலங்கிய கண்களுடன் அஞ்சலை.

 

பாலகிருஷ்ணனுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் மனைவி மூலம் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். முதல் மனைவி பிரசவத்தின்போது இறந்து போனார். அதன்பிறகு இரண்டாவது மனைவியாக அஞ்சலை என்பவரை திருமணம் செய்துள்ளார். அவருக்கு ஒரு பெண், ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். அஞ்சலை மற்றும் நான்கு குழந்தைகளும் பாலகிருஷ்ணன் வருகையை எதிர்பார்த்து கண்ணீருடன் காத்திருந்தனர். ஆனால் அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக அவரது நண்பர்கள் மூலம் அங்கிருந்து வரும்தகவல்கள் அவரது குடும்பத்தினரை கலக்கமடைய வைத்தது.

 

பாலகிருஷ்ணனின் மனைவி அவரது  நான்கு பிள்ளைகள் பரிதவித்து வருகிறார்கள். அரசு அதிகாரிகள் இந்திய தூதரகம் பாலகிருஷ்ணன் விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் அவரை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என வடகராம் பூண்டி கிராம மக்களும் அவரது குடும்பத்தினர்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். பாலகிருஷ்ணன் போன்று அயல்நாடுகளில் வெவ்வேறு உடல்நல பாதிப்புகளில் அவஸ்தைப்படும் தமிழர்களை விரைந்து தமிழகம் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்திருப்பதாக நாம் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

இந்தநிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் கிடைத்தததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். 

 

எப்படியாவது உடல்நிலை சரியில்லாத கணவரை அரசின் உதவியால் தமிழகம் கொண்டு வந்து இங்கு மருத்துவம் பார்க்கலாம் என்று நினைத்தோம், அது நடக்காமல் போய்விட்டது. இப்போது அவரது உடலை எங்கள் ஊருக்கு கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கதறுகின்றனர் அவரது மனைவி அஞ்சலை மற்றும் குழந்தைகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

துபாயில் வரலாறு காணாத கனமழை; விமானங்கள் ரத்து!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 Heavy rain in Dubai Canceled flights

துபாயில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. குறிப்பாகத் துபாயின் சர்வதேச விமான நிலையம் வெள்ளத்தில் சிக்கித் தத்தளித்து வருகிறது.

துபாய் உள்ளிட்ட ஐக்கிய அரபு நாடுகளில் கடந்த சில நாட்களாக வரலாறு காணாத அளவிற்குக் கனமழை பொழிந்து வருகிறது. இதனால் துபாயின் முக்கிய நகர்ப் பகுதிகளில் வெள்ளம் தேங்கும் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் குடியிருப்புகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. பல்வேறு இடங்களில் இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் மிதக்கின்றன. துபாயின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்திற்குக் கீழ் மற்றும் அதன் அருகே உள்ள வணிக வளாகங்களைச் சுற்றிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இது தொடர்பான காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

அதே சமயம் சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதையில் வெள்ளம் சூழ்ந்ததால் விமானத்தை இயக்கவும் மற்றும் விமானங்களைத் தரையிறக்கவும் முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்தவகையில் துபாய், ஷார்ஜா, குவைத் நகரங்களுக்கு சென்னையில் இருந்து செல்லும் 5 விமானங்களும், மறுமார்க்கத்தில் இருந்து சென்னைக்கு வர வேண்டிய 5 விமானங்களும் நேற்று (17.04.2024) ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில் சென்னையில் இருந்து துபாய், குவைத் மற்றும் சார்ஜா செல்லும் 12 விமானங்கள் இரண்டாவது நாளாக இன்று (18.04.2024) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.