Skip to main content

குபேரனோடு கிரிவலமாம். - புதுபுதுசா கண்டுபிடிக்கறாங்க... உண்மையை வெளிப்படுத்த தயங்கும் கோயில் நிர்வாகம்!!!

Published on 05/12/2018 | Edited on 05/12/2018
girivalam

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கிரிவலம் உலக பிரசித்தம். லட்சகணக்கான பக்தர்கள் 14 கி.மீ மலையை அண்ணாமலையாராக நினைத்து வலம் வருவார்கள். பௌர்ணமி மட்டும்மல்லாமல் புதிய வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, வெள்ளிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என பக்தர்கள் வலம் வருவர். தற்போது வாரத்தில் ஏழு நாட்களும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வலம் வருகிறார்கள். 

 

இந்நிலையில் திருவண்ணாமலையில் திடீரென குபேர கிரிவலம் என்பது பிரபலமாகிவருகிறது. கிரிவலப்பாதையில் அஷ்ட லிங்கங்கள் என்கிற பெயரில் 8 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு லிங்கம்மென பக்தர்கள் வணங்குவார்கள். ஆனால் குபேர லிங்கத்தை மட்டும் அனைவரும் வணங்குவார்கள். அதற்கு காரணம், குபேர லிங்கத்தை வணங்கினால் வீட்டில், தொழிலில் செல்வம் பெருகும் என்கிற நம்பிக்கையே காரணம். அதனால் எப்போதும் அந்த லிங்க கோயிலில் கூட்டம்மிருக்கும்.

 

girivalam


 

இந்நிலையில் தான் குபேர கிரிவலம் வந்தால் குபேரனாகலாம் என்கிற பிரச்சாரத்தை ஆன்மீக அமைப்புகள் சில தொடங்கியுள்ளன. அவர்கள் கூறுவது, ஒவ்வொரு தமிழ் வருடமும், கார்த்திகை மாதம் வரும் சிவராத்திரி அன்று வான் உலகிலிருந்து செல்வத்தின் அதிபதியான குபேரபகவான் பூமிக்கு வருகிறார். வந்து அவர் திருஅண்ணாமலையில் கிரிவலப்பாதையில் 7 வது லிங்கமான குபேரலிங்கத்துக்கு தினப்பிரதோஷ நேரத்தில் (மாலை 4.30 முதல் 6.00 வரை) பூஜை செய்கிறார். அப்படி பூஜை செய்துவிட்டு, இரவு 7 மணியளவில் குபேரபகவானே கிரிவலம் செல்கிறார். அதே நாளில் நாமும் கிரிவலம் சென்றால், நமக்கு அண்ணாமலையின் அருளும், சித்தர்களின், குபேரனது அருளும் கிடைக்கும். இதன் மூலம் நாம், நமது முன்னோர்கள் செய்த பாவங்கள் தீரும். நாம், நமது அடுத்த ஏழு தலைமுறையும் நிம்மதியாகவும், செல்வச்செழிப்புடனும்  இருக்கும் என பிரச்சாரம் செய்துள்ளார்கள்.

 

இந்த ஆண்டு குபேர கிரிவலம் டிசம்பர் 5ந்தேதி என பிரச்சாரம் செய்தனர். அன்று குபேரன் விண்ணில் இருந்து மண்ணுக்கு வருகிறார். அவருடன் சேர்ந்து குபேர லிங்கத்தை வணங்கி அவருடன் சேர்ந்து கிரிவலம் சென்றால் அடுத்த ஒரு வருடத்திற்கு நமது வருமானம் நியாயமான விதத்தில் அதிகரிக்கும். இந்த ஒரு மணி நேரத்தில் குபேர லிங்கத்தை தரிசிக்க இயலாவிட்டால் வருத்தப்பட வேண்டாம், மானசீகமாக குபேர லிங்கம் இருக்கும் இடத்தை நோக்கி வேண்டிக் கொண்டால் போதும். இரவு 7 மணி ஆனதும் குபேர லிங்கத்தில் இருந்து புறப்பட்டு குபேரலிங்கத்தில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். கிரிவலம் முடித்ததும் வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும், பிறர் வீடுகளுக்குச் செல்லாமலும் நேராக அவரவர் வீடு திரும்ப வேண்டும். கிரிவலம் முடிந்து அன்று இரவு கண்டிப்பாக அண்ணாமலையில் தங்க வேண்டும் என்பது ஐதீகம். தங்கி, மறு நாள் வேறு எங்கும் செல்லாமல் அவரவர் ஊருக்குச் செல்ல வேண்டும் என்பது எழுதப்படாத சம்பிரதாயம். அப்படி செய்தால் மட்டுமே குபேரகிரிவலத்தின் பலன் நமக்குக் கிடைக்கும் என பிரச்சாரம் செய்கின்றனர்.

 

girivalam


 

வாட்ஸ்அப், முகநூல்களில் முன்பு பரவிய அந்த தகவல் தற்போது செய்தித்தாள் செய்தி வரை வந்துவிட்டது. திருவண்ணாமலையில் கடந்த 3, 4 ஆண்டுகளாக தான் இப்படியொரு கிரிவலத்தை தொடங்கி நடத்துகிறார்கள். கடந்த ஆண்டு சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமானோர் குபேர லிங்கம் அருகே குவிந்தனர். இன்று டிசம்பர் 5 குபேரன் கிரிவலம் வரும் நாள் என ஆந்திரா, கர்நாடகா, தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளார்கள்.

 

குபேரலிங்கத்தை சுற்றி சுமார் 100 போலிஸார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குபேரனை வணங்கியுள்ளார்கள் என்கிறார்கள் தற்போது பாதுகாப்பில் உள்ள போலிஸார். நூற்றுக்கணக்கானவர்கள் அங்கேயே உள்ளனர், அன்னதானமும் நடைபெறுகிறது.

 

இந்து அமைப்பு ஒன்று குபேரலிங்க கோயில் அருகே யாகம் நடத்தப்போகிறோம் என பிரச்சாரம் செய்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சியான கோயில் நிர்வாகம், தனது பணியாளர்களை அங்கு பாதுகாப்பு பணியில் நிறுத்தி இங்கு யாரையும் யாகம் வளர்க்கவிடாதீர்கள் என்றுள்ளதால் கோயில் பணியாளர்கள் 10 பேர் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.

 

குபேர கிரிவலம் என்ற ஒன்று கிடையாது, யாரோ தங்களது சுயநலத்துக்காக ஒரு கதையை தயார் செய்து பிரச்சாரம் செய்கிறார்கள் என்கிறார்கள் கோயில் நிர்வாகத்தினர், சில குருக்களும் அதை ஆமோதிக்கின்றனர். ஆனால் அதை வெளிப்படையாக அறிவிக்கமறுக்கிறார்கள். இதனால் யாரோ கிளப்பிவிட்ட குபேரகிரிவல கதையை கேட்ட, படித்த ஆயிரக்கணக்கானவர்கள் தாங்கள் குபேரனாக படையெடுத்துள்ளார்கள் திருவண்ணாமலைக்கு.

 

 

 

Next Story

கிரிவலப்பாதையில் அண்ணாமலையாரின் 27 வகை தரிசனம்; குவிந்த பக்தர்கள்

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

27 types of darshan of Annamalai on Girivalam

 

கார்த்திகை மாத பௌர்ணமிக்கு அடுத்தபடியாக சித்திரை மாத பௌர்ணமி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் புகழ்பெற்றது. கார்த்திகை மாத பௌர்மணிக்கு அடுத்தபடியாக அதிகளவு பக்தர்கள் கிரிவலம் வரும் நாள். இந்த சித்திரை மாத பௌர்ணமி மே 4 ஆம் தேதி இரவு 11.35க்கு தொடங்கி மே 5ஆம் தேதி இரவு 11.20க்கு முடிவடைகிறது. இதுவரை சுமார் 10 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்திருப்பார்கள் என்கிறார்கள். கிரிவலப்பாதையே பக்தர்களால் நிரம்பியுள்ளது. இவ்வளவு பக்தர்கள் வரும் திருவண்ணாமலை கோவில் வரலாறு, தல வரலாறு என்ன ?

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மிகவும் பழமை வாய்ந்த புண்ணிய திருத்தலமாகும். இங்கு உள்ள கோயிலில் அண்ணாமலையார் அக்னி வடிவில் காட்சி அளிக்கிறார். இக்கோயில் சிவன் பார்வதிக்காக இந்தியாவில் கட்டப்பட்ட மிக பெரிய கோயில் என்று வரலாறு கூறுகிறது.

 

பிரம்மன், திருமாலின் ஆணவம் அழிந்த தலம். சிவன் அர்த்தநாரீஸ்வரர் கோலம் கொண்ட தலம். கார்த்திகை தீபத்தின் மூலத் தலம். மலையுச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தால் உலகப் புகழ்பெற்று விளங்குகிறது. யார் பெரியவர் என பிரம்மா மற்றும் விஷ்ணுவிற்கு வாக்குவாதம் ஏற்பட்டு உச்சத்தை எட்டிய நிலையில், சிவன் இதற்கு ஒரு முடிவை எடுத்துரைக்க அக்னி வடிவத்தில் தோற்றமளித்து விஷ்ணுவையும், பிரம்மாவையும் சிவனுடைய கால்கள் மற்றும் சிரசத்தை கண்டுபிடிக்க சவால் விடுத்தார். இந்த சவாலை ஏற்ற பிரம்மா மற்றும் விஷ்ணு தோல்வியடைந்தனர். இந்த போட்டியில் பிரம்மா ஜெயிக்க சிவனிடம் பொய் சொல்லிவிட்டார். இதனால் கோபமடைந்த சிவன் பிரம்மாவிற்கு சாபம் கொடுத்தார். இந்த சாபத்தினால் பிரம்மாவிற்கு இந்தியாவில் எந்த இடத்திலும் கோயில் இல்லை.

 

அண்ணாமலையார் ஆலயம் 24 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்துள்ளது. தமிழ்நாட்டுத் தலங்களுள் முதன்மையானது. பஞ்சபூதத் தலங்களுள் இது அக்னித் தலம். எங்கிருந்து நினைத்தாலும் முக்தி கொடுக்கும் தலம். இத்தலத்தில்தான் திருப்புகழ், கந்தர் அனுபூதி, திருவெம்பாவை, திருவம்மானை, அருணாச்சல அஷ்டகம் போன்ற புனித நூல்கள் பிறந்தன. ஆலயத்தில் ஒன்பது கோபுரங்கள் உள்ளன. கிழக்கே ராஜகோபுரம் (217 அடி உயரம்), வீரவல்லாள கோபுரம், கிளி கோபுரம் (81 அடி உயரம்); தெற்கே திருமஞ்சன கோபுரம் (157 அடி உயரம்), தெற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); மேற்கே பேய் கோபுரம் (160 அடி உயரம்), மேற்கு கட்டை கோபுரம் (70 அடி உயரம்); வடக்கே அம்மணி அம்மன் கோபுரம் (171 அடி உயரம்), வடக்கு கட்டை கோபுரம் (45 அடி உயரம்). இவ்வாலயத்தின் உள்ளே ஆறு பிராகாரங்கள், 142 சந்நிதிகள், 22 பிள்ளையார்கள், 306 மண்டபங்கள், 1,000 தூண்கள் கொண்ட ஆயிரங்கால் மண்டபம், அதனடியில் பாதாள லிங்கம், 43 செப்புச் சிலைகள், கல்யாண மண்டபம், அண்ணாமலையார் பாத மண்டபம் என அமைந்துள்ளது. 

 

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் பல மன்னர்களால் சிறந்த முறையில் பல்வேறு காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், மற்றும் சம்பந்தர் ஏழாம் நூற்றாண்டில் எழுதியுள்ள காவியங்கள் இன்றும் உலகளவில் புகழ் பெற்று விளங்குகிறது. அண்ணாமலையாரை பற்றி அருணகிரிநாதர் அவருடைய படைப்பில் சிறப்பாக எழுதியுள்ளார். திருப்புகழ்  இங்கு தான் எழுதி அர்ப்பணிக்கப்பட்டது. முத்துசாமி தீட்சிதர் இங்குதான் அவருடைய படைப்பான கீர்த்தி அருணாச்சலம் என்ற கவிதையை எழுதி வெளியிட்டார். 

 

இக்கோயிலில் இன்றைய காலகட்டத்தில் மொத்தமாக 5 பிரகாரங்கள் உள்ளன. இந்த ஐந்து பிரகாரங்களிலுமே நந்திகள் அண்ணாமலையாரை நோக்கியபடி அமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பிரகாரத்தில் நான்கு திசைகளில் நான்கு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருமஞ்சன கோபுரம், அம்மணியம்மாள் கோபுரம், பேய் கோபுரம், மற்றும் ராஜ கோபுரம். ராஜகோபுரம் 217 அடி உயரம் மற்றும் 11 அடுக்குகள் கொண்ட பிரம்மாண்டமான படைப்பாகும். விஜயநகர் மன்னர் கிருஷ்ணதேவராயர் உதவியுடன் கட்டப்பட்ட இக்கோபுரம் தென்னிந்தியாவின் இரண்டாவது உயரமான கோபுரமாகும். இத்துடன் ஐந்தாவது பிரகாரத்தில் உள்ள ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் அத்துடன் சேர்ந்த சிவகங்கா தெப்பகுளம் இவை யாவும் மன்னர் கிருஷ்ணதேவராயர் புகழ்பாடும். குறிப்பாக இங்கு இருக்கும் ஆயிரம் கால்கள் உள்ள மண்டபம் சிறந்த கைவினைஞர்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இம்மண்டபம் திருவாதிரை நட்சத்திரம் தோன்றும் நாள் அன்று திருமஞ்சனம் நடைபெறுவதற்காக உபயோகிக்கப்படுகிறது. ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அண்ணாமலையார் வணங்க இந்த மண்டபத்தில் கூடுவார்கள். இந்த மண்டபத்தின் கீழே பாதாள லிங்கம் என அழைக்கப்படும் அறை உள்ளது. இங்கு சிவா லிங்கம் உள்ளது. பாதாளலிங்கம் என அழைக்கப்படும் இந்த இடத்தில் தான் ரமண மகரிஷி தியானத்தில் அமர்ந்திருந்தார்.

 

இந்த பிரகாரத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் இங்கிருக்கும் கம்பாட்டு இளையநார் சன்னதி. இந்த சிறப்பான சன்னதியை மன்னர் கிருஷ்ணதேவராயர் கட்டினார். இங்கே நான்கு அறைகள் உள்ளன. பிரார்த்தனை செய்வதற்காக மூன்றாவது அறை பக்தர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. நான்காவது அறையில் முருகக் கடவுளின் மூலஸ்தானம் அமைக்கப்பட்டுள்ளது. முதலாவது அறையில் பல அரிய வேலைப்பாடுகள் நிறைந்த சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளது. இந்த வழியாகத்தான் இரண்டாவது அறைக்கு செல்ல முடியும். மேலும் சிவாகங்கா, விநாயகர் சன்னதி, கம்பாட்டு இளையநார் சன்னதிக்கு பின்புறமும் ஆயிரம்கால் மண்டபம் முன்புறமும் நடுவில் அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள விமானம் மிகவும் சிறப்பாக பல வண்ணங்களில் உருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள அருணகிரிநாதர் மண்டபத்தில் ஒரு சிறப்பம்சம் என்னவென்றால் அருணகிரிநாதர் நின்றபடி முருக பெருமானை பிரார்த்தனை செய்கிறார். இந்த சன்னிதி கோபுரதில்லையனர் சன்னதி என்று அழைக்கப்படுகிறது. இச்சன்னதிக்கு அடுத்து வருவது கல்யாண சுதர்சன சன்னதியாகும். இச்சன்னதி தெற்குபுரத்திலிருந்து வள்ளால மகாராஜா கோபுரத்தை நோக்கி அமைந்துள்ளது.

 

வள்ளால மகாராஜா கோபுரம் மன்னர் வள்ளாலரால் கட்டப்பட்டது. அதனால்தான் மன்னர் இறந்த பின்னர் சிவனே இறுதி சடங்குகள் செய்தார் என புராணம் கூறுகிறது. கோயிலின் நான்காவது பிரகாரத்தில் பிரம்ம தீர்த்தம் அமைந்துள்ளது. வள்ளால கோபுரத்தின் கிழக்குப்புறத்தில் மன்னர் வள்ளாலாவின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது.  மூன்றாவது பிரகாரத்தில் 12ம் நூற்றாண்டு காலத்து லிங்கம், சிலைகள், நிறுவப்பட்டுள்ளது. இத்துடன் கோபுர நுழைவாயிலும் இங்கு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்கு புறத்தில் கொடிகம்பமும் வடக்கு புறத்தில் உண்ணாமலை அம்மன் சிலையும் வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பிரகாரத்தில் சிவலிங்கத்தை பிரதிபலிக்கும் அனைத்து உருவங்களும் மற்ற தெய்வங்களும் இருக்கிறது. 

 

ஆலயத்தின் உள்ளேயே சிவகங்கைத் தீர்த்தம், பிரம்ம தீர்த்தம் என்ற இரு பெரிய குளங்கள் உள்ளன. கொடிக்கம்பம் அருகே செந்தூர விநாயகர், பஞ்ச லிங்கங்களும், நான்கு முகங்கள் கொண்ட பிரம்ம லிங்கமும் உள்ளன. காலபைரவர் சந்நிதியும் உண்டு. இங்கே முருகப்பெருமான் இளையனார் என்னும் பெயரில் மூன்று இடங்களில் வணங்கப் பெறுகிறார். அருணகிரியுடன் சவால் விட்டான் சம்பந் தாண்டான். அதற்காக முருகன் அருணகிரிக்கு கம்பத்தில் காட்சி தந்தார். இவர்தான் கம்பத்திளையனார் என்ற பெயரில் வளைகாப்பு மண்டபத் தூணில் காட்சி தருகிறார். அருணகிரி வல்லாள கோபுரத்தின் மீதேறி கீழே குதித்து உயிர்விட முயன்றபோது, தடுத்தாட்கொண்டு அருள்புரிந்து திருப்புகழ் பாட வைத்தவர் கோபுரத்திளையனார். கோபுரம் அருகிலேயே பிச்சை இளையனார் சந்நிதி, கிளிகோபுரம் அருகே உள்ளது.

 

காமதகனம் நடக்கும் சிவாலயம் இது ஒன்றுதான். ஆடிப்பூரத்தன்று மாலை, ஆலயத்தின் உள்ளேயே உண்ணாமுலையம்மன் சந்நிதிமுன் தீமிதி விழா நடத்தும் ஆலயமும் இது ஒன்றுதான். திருவிழா நாட்களில் திட்டிவாசல் வழியே உற்சவமூர்த்திகள் வெளிவருவதும் இவ்வாலயத்தில் மட்டும்தான். அருணகிரிக்கு விழா எடுக்கும் ஆலயமும் இதுதான். சிவபெருமானே அண்ணாமலையாகக் காட்சி தருகிறார். இதை காந்த மலை என்பர். காரணம், இம்மலையை தரிசிக்க வருவோரை மீண்டும் மீண்டும் காந்தம்போல கவர்ந்து இங்கு வரவழைக்கும். கிருத யுகத்தில் இது அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் திகழ்கிறது. மலையின் உயரம் 2,688 அடி. (800 மீட்டர்). கிரிவலப் பாதையின் தூரம் 14 கிலோமீட்டர். இப்பாதையில் 360 தீர்த்தங்களும், அஷ்ட லிங்கங்களும், அடிக்கு 1,008 லிங்கம் அமைந்துள்ளது என்பர். மலையை ஒவ்வொரு இடத்தில் நின்று பார்த்தால் ஒவ்வொரு வகை தரிசனமாக 27 வகை தரிசனம் காணலாம்.

 

 

Next Story

எச்சரித்த அமைச்சர்; கண்டுகொள்ளாத அதிகாரிகள்; வேதனையில் மக்கள்

Published on 09/12/2022 | Edited on 09/12/2022

 

Thiruvanamalai girivalam government officials violated Minister warning

 

திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு தீபத்திருவிழாவிற்கு முன்பு அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொண்ட முன்னேற்பாடு கூட்டங்கள் மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தலைமையில் பத்துமுறை நடைபெற்றன. மூன்று  கூட்டங்களில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் அமைச்சர் வேலு அதிகாரிகளிடம் பேசும்போது, தீபத் திருவிழா நாட்களில் இருசக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களுக்கும் நுழைவு கட்டணம், பார்க்கிங் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.

 

திருவிழா நாட்களில் திருவண்ணாமலை நகரம், கிரிவலப்பாதையில் சிறு சிறு வியாபாரக் கடைகள் வைக்கப்படுகின்றன. இந்தக் கடைகளில் தினசரி வாடகை என்கிற பெயரில் நகராட்சி மற்றும் ஊராட்சிகள் வசூலிப்பதாக புகார்கள் உள்ளன. கடந்த காலத்தில் தனக்கே வசூல் செய்வதாக புகார்களும் வந்துள்ளதாக தெரிவித்திருந்தார். அப்படி வசூலிப்பது தொடர்பாக புகார்கள் வந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். 

 

கடந்த 10 ஆண்டுகளாக திருவிழா மற்றும் பெளர்ணமி நாட்களில் வாகனக் கட்டணம் வசூலிக்க நகராட்சி தடை விதித்துள்ளது. ஆனால் நகரத்திற்கு வரும் சாலைகளில் வாகனங்களை மடக்கி அந்தந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் நகராட்சி பெயரைச் சொல்லி ரூ 50, 100 என வசூல் செய்கின்றனர். தீபத்திருவிழா மற்றும் பெளர்ணமி நாளில் தண்டராம்பட்டு சாலை, மணலூர்பேட்டை சாலை, திருக்கோவிலூர் சாலை, விழுப்புரம் சாலை, காஞ்சி சாலை வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மக்கள் நெருக்கடியால் நகரத்துக்குள் வரமுடியாமல் சாலை ஓரம் இருசக்கர வாகனம், கார், வேன், பேருந்து நிறுத்தியதற்கு கட்டணம் வசூல் செய்துள்ளனர். 

 

Thiruvanamalai girivalam government officials violated Minister warning

 

திருவிழா தினங்களில் நகரத்தில் சாலையோரம் கடை வைத்திருந்தவர்களிடம் ஒருநாள் வாடகை ரூபாய் 200 முதல் 500 வரை வசூல் நடத்தினர். கிரிவலப் பாதையில் கடை வைத்திருந்தவர்களிடமும் அந்தந்த ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் கட்டணம் வசூலித்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்தியந்தல் ஊராட்சியைச் சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவரின் கையொப்பமிட்ட கட்டண ரசீது புத்தகத்துடன் ஒவ்வொரு கடையாக சென்று கட்டணம் வசூலித்தனர். வீடியோ எடுத்த செய்தியாளரையும் அத்தியந்தல் ஊராட்சி மன்றத் தலைவரின் உத்தரவின் பெயரில் வசூலில் ஈடுபட்டவர்கள் மிரட்டினர். 

 

அனைத்துத்துறை அதிகாரிகள் கூட்டத்தில், தீபத்திருவிழா நாளில் சட்டவிரோதமாக வாகனக் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் வந்துள்ளன. அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மீறினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், அமைச்சர் சொன்னதை அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்பதையே இந்தாண்டும் வசூல் நடந்தது உறுதி செய்தது. 

 

வருங்காலங்களில் காவல்துறை மற்றும் நகராட்சி, ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவிழா நாட்களில் கட்டணம் இல்லை என்பதை வெளியூர், வெளிமாவட்ட, வெளிமாநில பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். மிரட்டி வசூல் செய்பவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.