Skip to main content

இணையத்தில் திரியும் திருட்டுப்பயல்கள்...

Published on 17/12/2017 | Edited on 17/12/2017
 இணையத்தில் திரியும்  திருட்டுப்பயல்கள்...

உணர்வுகள்  பத்திரம்!!!     




                                                                                                                 

  இந்த நவீன அறிவியல்  உலகம் எந்த அளவிற்கு வளர்ச்சியும் மகிழ்ச்சியும் நிறைந்துள்ளதோ அதே அளவிற்கு ஆபத்துகளும்  நிறைந்ததாக உள்ளது. சமூகவலைதளங்களில்  தான் இன்று உலகமே மூழ்கியுள்ளது. அளவுக்கு அதிகமாக மூழ்கும் பொழுது மேதைகளும் பேதைகளாகி ஏமாறுகின்றனர். பொருளாதார குற்றங்கள் ஒரு பக்கமென்றால்  மனதுக்குள் இருக்கும் ரகசிய ஆசைகளுக்கு இணையத்தில் வடிகால் தேடுபவர்களை பயன்படுத்தியும் பலர் சம்பாரிக்கின்றனர். சமீபத்தில் வெளியான 'திருட்டுப்பயலே-2' திரைப்படத்தின் கரு இதுதான். படத்தில் வருவது போல இணையத்தின் மூலம்  ஒருவரின் ரகசியங்களை எடுத்துக்கொண்டு அதை வைத்தே ஏமாற்றிய சில சம்பவங்கள் இங்கே.   

பாதிரியார் பயன்படுத்திய டேட்டிங் ஆப்  

சில நாட்களுக்கு முன், கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே உள்ள மறையூரை  சேர்ந்த பாதிரியார் ஒருவர் ஓரின சேர்க்கைக்காக உள்ள டேட்டிங் ஆப்  மூலம் பழகிய   இரு கல்லூரி மாணவர்களை  தன் ஊரிற்கு அழைத்துள்ளார். பின்னர் இருவரும் அவருடன் தங்க  அவரின் வீட்டிற்கு  சென்றுள்ளனர். இரவு உணவுக்காக சப்பாத்தி செய்வதாகக் கூறி அதில் மயக்க மருந்தை கலந்து    பாதிரியாரிடம் இருந்த ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் பணம், டிஜிட்டல் கேமரா, லேப்டாப் ஆகியவற்றை  திருடிச்  சென்றுள்ளனர். அந்த இளைஞர்களில் ஒருவன் ஏற்கனவே பாதிரியாரை சந்தித்து, அவருடன் தங்கி அவரது நம்பிக்கையை பெற்றிருக்கிறான். பின்னர் திட்டமிட்டு இதை நிகழ்த்தியுள்ளான். விஷயத்தை மறைத்து விடலாம் என்று பாதிரியார் நினைத்தாலும், பின்னர் அவரது ஊழியர்கள் இதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில் பெங்களூரில் உள்ள மருத்துவ கல்லூரி மாணவர்கள் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவர்கள் சென்னையை சேர்ந்தவர்கள் என்றும், இதே மொபைல் ஆப்பை (செயலி) பயன்படுத்தி கோவை, திருப்பூர் போன்ற இடங்களிலும் இதே போன்ற சம்பவங்களை நிகழ்த்தியுள்ளனர்.   





வாட்சப்பில் பரவிய தனிமை 

சென்னையை சேர்ந்த 21 வயது  பொறியியல் மாணவன் ஒருவன்  12 பெண்களிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, பின் அவர்களுடன் தங்கி, நெருக்கமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து அதை இணையத்தில் விடுவதாக மிரட்டி பணம் பெற்றுள்ளான். பணம் பெற்றுக்கொண்ட பின்பும்  அவனது  நண்பர்கள் உள்ள வாட்சப் குழுவில் அனுப்பியுள்ளான். அதை வைத்துக்கொண்டு அவர்கள் ஒரு பெண்ணை மிரட்டி வந்துள்ளனர். பின்னர் அதனை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த  பெண் காவல்நிலையத்தில் புகார் அளிக்க, முதலில்  அதனை பெரிதாகக்  கருதாத  போலீசார்  தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. இது போன்று அடிக்கடி நடக்கும் சம்பவங்களால் அவர்களும் அலட்சியமாகிவிட்டனர்.  பின்னர் அந்தப் பெண்   தற்கொலை முயற்சியில்  ஈடுபட காவல்துறையினர் அந்த இளைஞனை  கைது செய்துள்ளனர்.

எலீட் திருடர்  

2016 ஆம் ஆண்டு மும்பையை சேர்ந்த பணக்கார  பெண் ஒருவர்  ஃபேஸ்புக் நண்பர் ஒருவரிடம் 41 லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் மும்பையை  சேர்ந்த பெண் பேஸ்புக்கில் தெரியாத ஒருவருடன் நண்பரானார். அந்த ஐடியில் உள்ளவர்  வெளிநாட்டில் உள்ளது போல் புகைப்படங்கள் பதிவு செய்துள்ளார். பின்னர் தனக்கு இரண்டு மில்லியன் பிரிட்டிஷ் பௌண்ட்ஸ் இந்திய  பணமாக மாற்ற வேண்டும் என்றும்  'நீங்கள் மாற்றி தரவேண்டும். என்னால் மாற்ற முடியாது. சென்ற முறை நான் மாற்ற முயன்று டெல்லி விமான நிலையத்தில் வருமான வரி அதிகாரிகளிடம் மாட்டிக்கொண்டேன்' என்றும்   கூறியுள்ளார். பணத்தை  மாற்றித்  தந்தால் அந்தப் பெண்ணுக்கும்  பங்கு என்று கூறி முதலில் தனக்கு அவசரமாக  41 லட்சம் தான் சொல்லும் வங்கிக்  கணக்குகளில் போடுமாறு  கூறியுள்ளார். அந்தப்  பெண்ணும் போட்டுள்ளார். அடுத்தடுத்து  பணம் கேட்டபொழுது,  ஒரு கட்டத்தில் தான்  ஏமாற்றப்படுவதை  உணர்ந்த பெண்,  தகவல் தொழில்நுட்ப பிரிவில்  புகார் அளித்தார். பின்னர் காவல்துறை நடவடிக்கை எடுத்தது.  




ஒரு பக்கம் பொருளாதார தேவைகளுக்காக நேரம் காலம் பார்க்காமல் உழைக்க வேண்டியிருக்கிறது, இன்னொரு பக்கம் ஏற்படும் மன தேவைகளான அன்பு, நாம் பேசுவதை கேட்க ஒருவர் ஆகியவை இருக்கிறது, இது போக மனிதருக்கென்றே இருக்கும் ரகசிய ஆசைகள் வேறு, பார்ப்பவற்றையெல்லாம் வாங்கத்தூண்டும் விளம்பரங்களும் வணிகமும் வேறு...இப்படி நம்மை சுற்றி இருக்கும் கண்ணிகளில் தவறானவற்றில் கால் வைக்காமல் நடப்பது நம் திறமை தான். சமூக ஊடகங்கள் நம் கைக்குள் இருப்பது பிரச்சனை இல்லை. அதன் கைக்குள் நாம் போய்விடுவதுதான் பிரச்சனை. 

ஹரிஹரசுதன் 

சார்ந்த செய்திகள்