Skip to main content

இளம்பெண் ஈவ்டீசிங்! -சிக்கும் டிக்டோக் வில்லன்கள்!

TikTok


‘குட்டி சொர்ணாக்கா’ என்கிற பெயரில் டப்ஸ்மாஷ்… டிக் டோக் மூலம் இளம்பெண்ணை ஈவ்டீசிங் செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி கடும் சர்ச்சையை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து, விசாரிக்க ஆரம்பித்தபோதுதான் சினிமா ஆசையில் பெற்ற தாயே வீடியோக்களை பரப்பி வருவதாக குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
 

சர்ச்சைக்குரிய வீடியோக்களை பார்த்த மாற்றுத்திறனாளிகளுக்கான டிசம்பர்-3 இயக்கத்தின் தலைவரும் பேராசிரியருமான தீபக்நாதன் நம்மிடம், “ஒரு மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை சுற்றி இளைஞர்கள் சூழ்ந்துகொண்டு கல்யாணம் பண்ணிக்கிறீயா? என்றெல்லாம் கேலி செய்தும்… கழுத்தை நெறித்தும்… சீண்டியும் கோபத்தை வரவழைத்து அவள் கதறும் வீடியோக்களை எடுத்து டப்ஸ்மாஷ்… டிக்டோக் மூலம் பரப்புகிறார்கள் என்றால் எவ்வளவு கொடூரமான மனநிலைகொண்டவர்களாக இருப்பார்கள். 


 

TikTok

                                                                                 தீபக்நாதன்


இப்படி பரப்பிய இளைஞர்களைவிட, இந்த வீடியோவை  ரசிக்கிறவர்களுக்குத்தான் வக்கிரப்புத்தி அதிகமாகிவிட்டது என்று தோன்றுகிறது. குழந்தைமாதிரி இருக்கும் இந்த பெண் பேசும் வீடியோக்களைப் பார்க்கும் குழந்தைகளும் இதேபோல்தானே பேசும்? ஏற்கனவே, சினிமாக்களில் உயரம் குறைவானவர்களை இழிவுபடுத்திக்கொண்டிருக்கும் சூழலில் இப்படியொரு வீடியோ இன்னும் இழிவுபடுத்துகிறது. 
 

இதன்மூலம், உயரம் குறைவானர்களை இன்னும் சிறுமைபடுத்துகிறார்கள் என்றுதான் அர்த்தம். உடல் வளர்ச்சி இல்லாமல் இப்படியிருக்கும் அப்பெண்ணுக்கு சொர்ணாக்கா என்று பெயர் வைத்து வீடியோக்கள் வெளியிடுவதே அப்பெண்ணுக்கு எதிரான குற்றம்தான். இப்படி, மாற்றுத்திறனாளிகளை வைத்து எள்ளி நகையாடும் வீடியோக்களை வெளியிடுபவர்கள்மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும். அதுவும், அந்த இளம்பெண்ணை துன்புறுத்தி வீடியோக்கள் எடுப்பது மிகவும் தவறு” என்று கடும் கண்டனம் தெரிவித்தார்.

 

TikTokஇதுகுறித்து, பிரபல உளவியல் நிபுணர் டாக்டர் நப்பின்னைசேரன் நம்மிடம், “ஒவ்வொருவரும் சமூகத்தில் ஏதோ ஒரு ஐடிண்டிட்டியை தேடுகிறார்கள். அதனால்தான், தங்களது திறமைகளை ஏதோ ஒருவழியில் வெளிப்படுத்துகிறார்கள். அதனால், டப்ஸ்மாஷ்… டிக் டோக் செயலிகள் மூலம் நடிப்பது… ஆடுவது… பாடுவது என தங்களின் திறமைகளை வெளிப்படுத்துவதில் எந்த தவறும் இல்லை. கேவலமாக விமர்சித்தாவது நம்மை பலரும் பார்க்கவேண்டும் என்று நினைத்து எல்லை மீறுவதுதான் ஆபத்து. 
 

ஏற்கனவே, மாற்றுத்திறனாளி குழந்தைகள் இரண்டுபேர்  ‘வடிவேலு’ காமெடிக்கு வாய் அசைப்பதுபோலவும் நடிப்பதுபோலவும் வரும் வீடியோக்கள் பலராலும் இரசிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த மாற்றுத்திறனாளி இளம்பெண்ணின் வீடியோக்களை பார்க்கும்போது ரசிக்கமுடியவில்லை. காரணம், மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் அவள் ஒரு பெண். அதுவும், 18 வயது பெண் என்கிறார்கள். அப்படிப்பட்ட, ஒரு பெண்ணைச் சுற்றி  இளைஞர்கள் நின்றுகொண்டு அவளிடம் அந்தரங்க கேள்விகளை கேட்பது… கேலி கிண்டல் செய்வதும் என்பது சட்டப்படி குற்றம். அதைவிட குற்றம்… அதை வீடியோ எடுத்து இணையதளங்களில் பரப்புவது. அந்த இளம்பெண்ணின் வீடியோக்களை பார்க்கும்போது அவர் ஏதோ ஒரு மன எழுச்சி நிலையில் இருப்பதுபோலவே தோன்றுகிறது. அவர், உளவியல் ரீதியான பாதிப்புக்குள்ளாகிறாரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அப்படிப்பட்ட ஒரு பெண்ணைப்பார்த்து,  ‘என்னை கல்யாணம் பண்ணிக்கிறியா? உங்க அக்கா வீட்டுக்காரரு என்ன பண்ணினாரு? உன் மேல கை போட்டுக்கலாமா?’ என்று கேட்டு அவளது உள்ளக்கிளர்ச்சியை தூண்டி அவள் கோபப்படுவதையும் அழுவதையும் ரசிப்பது என்பது மிகப்பெரிய வன்மம்.
 


அந்த இளம்பெண்ணின் வயதுக்கு மீறிய பேச்சை… அதுவும் ஆபாசமான பேச்சுகளையும் அவளுக்கு தெரியாமல் வீடியோ எடுத்து வெளியிட்டவர்கள் கடுமையான தண்டிக்கப்படவேண்டியவர்கள். இப்படி, வீடியோ எடுப்பதை பெற்ற தாயும் கண்டுகொள்ளாமல் இருப்பது அவரது பொறுப்பற்றத் தன்மையை காட்டுகிறது. அந்த பெண்ணுக்கு கவுன்சிலிங் கொடுக்கவேண்டுமோ இல்லையோ இப்படி வீடியோக்கள் வெளியிடுவதை கண்டுகொள்ளாமல் இருக்கும் அப்பெண்ணின் தாய்க்குத்தான்  கவுன்சிலிங் கொடுக்கப்படவேண்டும். யார் யாரெல்லாம் அப்பெண்ணின் வீடியோக்களை எடுத்தார்கள் என்பதை விசாரித்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். அப்போதுதான், இதுபோன்ற வீடியோக்களை பரப்பாமல் இருப்பார்கள்” என்கிறார் ஆலோசனையாக.
 

இந்த வீடியோவில் இருக்கும் மாற்றுத்திறனாளி இளம்பெண் யார்? என்று நாம் விசாரித்தபோதுதான் இராமநாதபுரம் மாவட்டம் சேதுநகரை சேர்ந்த மஞ்சுளாவின் மகள் என்பது தெரியவந்தது. ஊர் மக்களிடம் விசாரித்தபோது, “ஒரு வயசு புள்ளைய காலிப்பசங்க சுத்தி நின்னு வீடியோ எடுக்கிறானுங்க… அந்த வீடியோக்கள நெட்டுல உடுறானுங்கன்னு அந்த பொண்ணோட அம்மா மஞ்சுளாக்கிட்ட பல பேரு சொல்லிட்டோம். அந்த லேடி கண்டுக்கவே இல்ல. விலங்குகளை வெச்சு வித்த காட்டி பணம் சம்பாதிச்சாலே மனசுக்கு கஷ்டமா இருக்கு. ஆனா, மாற்றுத்திறனாளி புள்ளைய வெச்சு வித்த காட்டி சம்பாதிக்கணும்னு ஆசை வந்துடுச்சு மஞ்சுளாவுக்கு. அதனாலதான், யார் வீடியோ எடுத்தாலும் அதைப்பற்றி பெரிசா எடுத்துக்கிறதில்ல. இந்த, வீடியோக்கள் பரவி யூ- ட்யூப் சேனல்களில் வர ஆரம்பிச்சதும் இதை வெச்சு சினிமா வாய்ப்புகள் தேட ஆரம்பிச்சுட்டாங்க மஞ்சுளா. படத்துல நடிக்கிறதோ தன்னோட திறமையை வெளிப்படுத்துறதோ பிரச்சனையில்ல. ஆனா, அதுக்காக பெத்த புள்ள அதுவும் பொம்பளப்புள்ளைய எவன் வீடியோ எடுத்தாலும் அதை பப்ளிசிட்டியா நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க இந்த புள்ளையோட அம்மா மஞ்சுளா.  ‘ஏம்மா… இப்படி வீடியோ எடுத்து நெட்டுல விடுறானுங்களே… கண்டிக்கவேண்டிதான?ன்னு ஊர்க்காரங்க சொன்னா, ‘என் புள்ளைய பார்த்துக்க எனக்கு தெரியும். உங்க வேலையைப் பாருங்கன்னு சொல்லிட்டு போறாங்க. இதுக்குமேல, நாம என்ன செய்யமுடியும்?” என்கிறார்கள் வெறுப்புடன்.

 

TikTok

                                                                                   மஞ்சுளா


இதுகுறித்து, பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் தாய் மஞ்சுளாவிடம் கேட்டபோது, “யாரு வந்து வீடியோ எடுத்து எதுல போடுறான்னு எனக்கு தெரியமாட்டேங்குது. நான், என்ன செய்றது? என் பொண்ணுக்கு இப்போதான் சினிமாவுல வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதுக்கு எதுவும் பாதிப்பு வந்துடப்போகுது” என்கிறார்… அப்போதுகூட சினிமா வாய்ப்பு பறிபோய்விடுமோ என்றும் கொஞ்சம்கூட பெற்ற மகளின் மீது அக்கறையில்லாமல்.
 

இதுகுறித்து, ராமநாதபுரம் மகளிர் இன்ஸ்பெக்டர் சுந்தரம்பாளிடம் பேசியபோது, “வீடியோவில் அப்பெண்ணிடம் ஈவ்டீசிங்கில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும். இப்பெண்ணிடம் மட்டுமல்ல. எந்த பெண்ணிடமும் இப்படி கேலி கிண்டல் செய்து வீடியோ எடுத்து வெளியிடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார் எச்சரிக்கையாக.
 

என்ன விளைவுகளை ஏற்படுத்தினாலும் பரவாயில்லை… எவ்வளவு அசிங்கப்பட்டாலும் அவமானப்பாட்டாலும் பரவாயில்லை. சீரியல், சினிமா வாய்ப்புகள் கிடைக்கவேண்டும்… பணம் சம்பாதிக்கவேண்டும்… பிரபலமாகவேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கும்வரை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றினாலும் இதுபோன்ற செயல்களையும் ‘செயலி’களையும் தடுக்கவே முடியாது.