/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-1_4442.jpg)
தமிழகத்தில் அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் லஞ்சம் வாங்கி கைதான சம்பவம், ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்த நிலையில், அந்த சம்பவம் தொடர்பாக நடக்கும் நிகழ்வுகள் சில திகிலை ஏற்படுத்தி வருகின்றன.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் துணைக் கண்காணிப்பாளராகப்பணிபுரியும் டாக்டர் சுரேஷ்பாபுவை, சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கூறி, அவரிடம் இருபது லட்ச ரூபாயை லஞ்சமாக வாங்கிய மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரியை, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அண்மையில் அதிரடியாக மடக்கிப் பிடித்தனர். அவரிடம் தீவிர விசாரணை நடத்தியபின், அவரைக் கைது செய்து சிறையிலும் அடைத்தனர்.
சிறையில் அடைக்கப்பட்ட திவாரி, உணவு அருந்தாமல் அழுது அடம்பிடித்து வந்ததோடு, மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் இருந்ததால், அவரை மதுரை மத்திய சிறைக்கு மாற்றினர். அங்கு வைத்து அவரை மனநல மருத்துவர்கள் பரிசோதித்து சிகிச்சை கொடுத்து வருகின்றனர். இந்த நிலையில், திவாரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என, திண்டுக்கல்லில் உள்ள ஊழல் வழக்குக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி மோகனாவிடம் அவர் தரப்பு மனு செய்தது. அப்போது, அவர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், "இதுவரை திவாரி மீது எந்தவொரு புகாரும் இல்லை. அவர் இதுவரை எந்த ஒரு மெமோவும் வாங்கியதில்லை. அப்படியிருக்க, அவரை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சிக்க வைத்திருக்கிறார்கள். எனவே, அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று வாதாடினார்.
ஆனால் அரசுத் தரப்பு வக்கீலோ, "இது முதன்மை வழக்காக இருப்பதால் அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அவர் வழக்கின் சாட்சிகளை கலைத்து விடுவார்” என்று எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து நீதியரசர் மோகனா, திவாரியின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/th-2_1718.jpg)
அதே சமயம் இந்த ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது, புகார்தாரரான டாக்டர் சுரேஷ்பாபு, இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீதியரசரிடம் தனியறையில் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். "இதுவரை லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கில், புகார் கொடுத்த நபர் தனிப்பட்ட முறையில் நீதியரசரிடம் வாக்குமூலம் கொடுத்ததில்லை' என்கிறார்கள் சட்டத்துறையினர்.
இது சம்பந்தமாக டாக்டர் சுரேஷ்பாபுவின் நெருங்கிய நண்பர்கள் சிலரிடம் நாம் விசாரித்தபோது, அமலாக்கத்துறை அதிகாரி திவாரி மீது புகார் தெரிவித்து, அவரை கைது நடவடிக்கையில் சிக்க வைத்திருப்பதால், டாக்டர் மீது அமலாக்கத்துறையினர் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். அவரைப் பழிவாங்கும் நோக்கில், அவர் எங்கெங்கே சொத்துக்களை வாங்கியிருக்கிறார் என்று விசாரித்து வருகிறார்கள்.
அதேபோல் தனது நண்பர்கள் மூலம் டாக்டர் சுரேஷ்பாபு, வெளிநாட்டில் தன் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பதாகவும் கூறி தகவல்களைத் தேடி வருகிறார்கள். இவற்றின் அடிப்படையில் அமலாக்கத்துறையினர் இப்போது, டாக்டரை சும்மா விடமாட்டோம். அவருக்கு எதிராக ரெய்டை நடத்தி, அவரைக் கைது செய்வோம் என்று மறைமுகமாக மிரட்டி வருகிறார்கள். இதற்கிடையே திவாரியின் ஆதரவாளர்கள், டாக்டர் வழக்கமாகப் போய்வரும் இடங்களையெல்லாம் கண்காணித்து வருகிறார்கள். அதனால் அவர்கள் மூலம் டாக்டரின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று அஞ்சுகிறோம்.
லஞ்ச ஒழிப்புத்துறையில் உள்ள சில அதிகாரிகளே, கொஞ்சம் பாதுகாப்பாக இருங்கள் என்று டாக்டரிடம் கூறியிருக்கிறார்கள். அதைக் கேட்டு டாக்டர்அலறிக்கொண்டிருக்கிறார். அதனால்தான் அமலாக்கத்துறையினர் மற்றும் திவாரியின் ஆதரவாளர்கள் மூலம் தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதியரசரிடம் டாக்டர் ரகசிய வாக்குமூலம் கொடுத்து அவர் முறையிட்டிருக்கிறார்'' என்கிறார்கள் கவலையோடு.
இந்த நிலையில், லஞ்சம் வாங்கிக் கைதான அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை தங்கள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திட்டமிட்டிருக்கிறார்கள். அவர் வாங்கி வந்த லஞ்சப் பணத்தில், மதுரை, சென்னை உள்பட சில இடங்களில் பணிபுரியும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பதினொரு பேருக்கு பங்கு கொடுத்திருக்கிறாராம். எனவே, இந்த விசாரணையின் அடிப்படையில் மேலும் சில அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்யப்படலாம் என்கிற பேச்சும் பரவலாக அடிபட்டு வருகிறது.
லஞ்ச ஒழிப்புத்துறையின் இந்த மூவ்களை எல்லாம்டெல்லி கூர்ந்து கவனித்து வருகிறதாம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)