Skip to main content

நாம் கண்டுகொள்ளாத நல்லவர்! தோழர் நல்லகண்ணு பிறந்தநாள்...

Published on 26/12/2018 | Edited on 26/12/2022
nallakannu

 

ஊருக்கே தெரியும் இவர் நல்லவர் என்றும், அவர் சார்ந்த கட்சி தொழிலாளர் கட்சி என்றும்... ஆனாலும் இவரை ஏற்கவில்லை கோவை மக்கள். இத்தனைக்கும் கோவை தொழிலாளர்களை அதிகம் கொண்ட நாடாளுமன்றத் தொகுதி. அத்தோடு அவர் தேர்தலில் போட்டியிடுவதையே  நிறுத்திக்கொண்டார். 1999 நாடாளுமன்றத் தேர்தலில் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் நல்லக்கண்ணு போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நின்ற போட்டியாளர் பா.ஜ.க.வின் சி.பி.ராதாகிருஷ்ணன். அதுவரை தமிழ்நாட்டில் பெரிதாக கால்பதிக்காத பாஜகவின் வேட்பாளரிடம் ஊரறிந்த நல்லவர் தோற்றார், 54,000 ஓட்டுகள் வித்தியாசத்தில். அத்வானி வருகையின் போது நடந்த  கோவை குண்டுவெடிப்புக்குப் பின் ஓராண்டுக்குள் வந்த தேர்தல் அது. அதோடு திமுக கூட்டணி பலமும் பாஜகவுக்கு இருந்தது என்றாலும், நல்லகண்ணு போன்ற ஒரு வேட்பாளரைத் தோற்கடித்தது துரதிர்ஷ்டமே. சகாயத்தையும் ரஜினியையும் அழைக்கும் நாம்தான் இவர் போன்றவர்களை ஒதுக்கி வைக்கிறோம். உண்மையில் அரசியலுக்கு மட்டுமல்ல, ஒரு நல்ல தமிழ்நாடு உருவாகவும் அவர்களை விட, இவரே மிகவும் தேவை.

 

தன் 98வது வயதிலும் துடிப்பான இளைஞனாக அறப்போர் புரியும் இவர் டிசம்பர் 26, 1925ல் திருவைகுண்டத்தில் (திருநெல்வேலி) பிறந்தார். பள்ளிப்பருவத்தில் ஆங்கிலேயருக்கு ஆதரவான ஒரு நாடக ஒத்திகை அவர் பள்ளியில் நடைபெற்றபோது அதை எதிர்த்து அப்போதே போராடியவர். அதற்காக ஆசிரியர்கள் தண்டித்த போது பள்ளிப்  புறக்கணிப்புப் போராட்டம் நடத்தியவர். காந்தியை விட நேருவின் மீதும், அவர் எழுத்துக்களின் மீதும் காதல்  கொண்ட இவர் காங்கிரஸில் இணைந்தார். பின் காங்கிரஸ் நிலச்சுவான்தார்கள் மற்றும் பணம் படைத்தோரின் புகலிடமாக மாறி வருவதாக நினைத்த நல்லக்கண்ணு அதிலிருந்து வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஆரம்பத்தில் நெல்லை மாவட்ட விவசாயச் சங்கச் செயலாளராக இருந்தபோது நிலஉரிமை போராட்டம் மேற்கொண்டு "உழுபவருக்கே நிலம்" என்ற வார்த்தையை உண்மையாக்கினார். 

 

nallakannu

 

அரசியலில் அவர் கடைப்பிடித்த நேர்மை, ஜனசக்தியில் செய்தி வெளியிட்ட அவரின் துணிச்சல், இன்றுவரை ஒரு சாதாரண வீட்டில் குடியிருக்கும் எளிமை, மனைவி உடல்நிலை மோசமானபோதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மனவலிமை, திருநெல்வேலி ஜாதி கலவரத்தில் தனது மாமனார் கொல்லப்பட்டபோதும், நிதானம் தவறாமல் தக்க முடிவு எடுத்தது மட்டுமின்றி சுற்றுப்பயணத்தையும் சிறப்பாக முடித்த அவரின் பொறுமை, கம்யூனிஸ்ட் பற்றி தவறாக பிரச்சாரம் செய்தவர்களிடம்  கம்பெடுத்துக்கொண்டு சென்ற அவரின் வீரம், பணத்தை துட்சமாக நினைத்த அவரின் மனம், இதுமட்டுமில்லாமல் தானே தன் துணிகளைத் துவைப்பது, நேரம் இருந்தால் உடன் இருப்பவர்களுக்கு உணவு சமைத்துத் தருவது போன்ற அனைத்துமே அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியவைதான்.

 

"இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் இணைய வேண்டும், அதுதான் இந்தியாவிற்கு தேவை" என்ற சிந்தனை கொண்ட "தோழர்" நல்லகண்ணு பிறந்த தினம் இன்று. தினகரனுக்கு வந்த மூன்று மாதத்தில் அன்று ஆதரவு அளித்த நாம், இன்றுவரை நல்லகண்ணுவிற்கு கொடுக்காமல் இருப்பது அரசியல் பற்றிய அறிவு குறைவாக இருப்பதையே வெளிக்காட்டுகிறது.

 

 

Next Story

“சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர்” - முத்தரசன் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Mutharasan condoles the demise of MP Ganesamoorthy

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு எம்.பியாக இருந்த மதிமுகவைச் சேர்ந்த கணேசமூர்த்தி, கடந்த ஞாயிற்றுக்கிழமை பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது இழப்புக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரும், ஈரோடு மாவட்ட மூத்த அரசியல் முன்னோடியுமான அ. கணேச மூர்த்தி எம்.பி. (77) இன்று (28.03.2024) அதிகாலை கோவை மருத்துவமனையில் காலமானார் என்று துயரச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஈரோடு அருகில் உள்ள அவல் பூந்துறை, கவுண்டிச்சிபாளையம் என்ற ஊரில் செல்வாக்கு பெற்ற விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர். பெருந்துறை அரசு உயர்நிலைப் பள்ளியில் படிப்பை முடித்து சென்னையில் உயர் கல்வி பெற்றவர்.

கல்லூரி கல்வி பயின்ற காலத்தில் தமிழ் மொழி பற்று, தேசிய இனங்கள், தமிழர் தனித்துவ பண்புகள் குறித்த அறிஞர் அண்ணாவின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு தி.மு.கழக மாணவர் இயக்கத்தில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய தளகர்த்தர்களில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதி தி.மு.கழக வேட்பாளராகத் தேர்தல் களம் இறங்கியவர். முதல் மூன்று முறை தொடர்ந்து தோல்வி அடைந்த போதும் கொள்கையில் நிலைகுலையாமல் பயணித்தவர்.

1977 முதல் 1992 வரையான காலங்களில் திராவிட முன்னேற்றக் கழகம் சந்தித்த நெருக்கடிகளை முன்னின்று எதிர் கொண்டவர். 1980களின் ஆரம்பத்தில் திமுக மாநில சிறப்பு மாநாடு நடத்தி தலைவர் கலைஞரிடம் 33 லட்சத்து 33 ஆயிரத்து 333 ரூபாய் நிதி வழங்கிய பெருமைக்குரியவர். கட்சி உறுப்பினர்கள், ஆதரவாளர்களின் பேராதரவு பெற்று  தி.மு.கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் பொறுப்பை ஏற்று சிறப்பாக செயல்பட்டவர். 1989 மொடக்குறிச்சி தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றார்.

கட்சியில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து வைகோவுடன் இணைந்து மறுமலர்ச்சி தி.மு.கழகம் உருவாக்கியவர்களில் அ. கணேசமூர்த்தி குறிப்பிடத்தக்கவர். பொடா சட்டத்தின் கீழ் 19 மாதம் சிறையில் இருந்தபோதும் உள்ளம் கலங்காத கொள்கையாளர். பழனி மக்களவைத் தொகுதியில் இருந்து இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தற்போது ஈரோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராகச் செயல்பட்டு வந்தவர். கட்சியின் உயர் பொறுப்புகளிலும் பணியாற்றியவர். உயர்ந்த பண்புகளின் அடையாளமாக வாழ்ந்து காட்டிய அ. கணேசமூர்த்தியின் மறைவு எளிதில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. பொதுவாழ்வு பணிகளை ஒருங்கிணைக்கும் தலைமை பண்புமிக்க ஒருவரை ஈரோடு மாவட்டம் பறிகொடுத்து விட்டது.

அ. கணேசமூர்த்தியின் வாழ்விணையர் சில வருடங்களுக்கு முன்பு காலமாகிவிட்டார். இவர்களுக்கு கபிலன் என்ற மகனும் தமிழ் பிரியா என்கிற மகளும் பேரக் குழந்தைகளும் இருக்கிறார்கள். அ. கணேசேமூர்த்தியின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், மதிமுக தலைவர் வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Next Story

பிரதமர் மோடி மீது தேர்தல் ஆணையத்தில் புகார்!

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
Complaint against PMinister Modi in Election Commission

பா.ஜ.க. சார்பில் கோவையில் நேற்று (18.03.2024) நடைபெற்ற பிரமாண்ட வாகன அணிவகுப்பில் (ரோடு ஷோ) பிரதமர் மோடி பங்கேற்றார். அப்போது திறந்த வெளி வாகனத்தில் பேரணியாகச் சென்று சாலையில் இருபுறமும் உள்ள மக்களை நோக்கி கையசைத்தவாறே பேரணியில் ஈடுபட்டார். இந்த வாகனத்தில் மத்திய இணையமைச்சர் எல். முருகன், பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த பேரணியை ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே சென்று மாலை 6:45 மணிக்கு நிறைவு செய்தார்.

இந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் தேர்தல் நடத்தை விதி மீறலாக கலை நிகழ்ச்சிக்கான மேடையில் பள்ளி மாணவர்களும் இருந்தது குறித்து கண்டனங்கள் எழுந்தது. தேர்தல் பிரச்சாரத்தில் பள்ளி மாணவர்களைப் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை இருக்கும் நிலையில், பிரதமர் மோடி கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார நிகழ்ச்சிகளிலேயே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. பள்ளி மாணவர்கள் பங்கேற்ற அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இது தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான கிராந்தி குமார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதில் இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டிருந்தது.

அதன் அடிப்படையில், கோவை சாய்பாபா காலனி பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் நடுநிலைப் பள்ளியைச் சேர்ந்த பள்ளி மாணவர்களை பா.ஜ.க. பேரணிக்கு அழைத்து வந்த பள்ளித் தலைமை ஆசிரியர் மற்றும் பணியாளர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களைப் பங்கேற்க வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் அழகுவடிவிடம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் நடத்திய 3 மணி நேர விசாரணை நிறைவு பெற்றது. இதனையடுத்து விசாரணை அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது.

Complaint against PMinister Modi in Election Commission

இந்நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அந்த புகார் மனுவில், “கோவையில் நடைபெற்ற பிரதமர் மோடியின் ரோடு ஷோவில் பள்ளி மாணவர்களைப் பங்கேற்க வைத்தது தேர்தல் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். இந்த நிகழ்ச்சிக்காக பள்ளிக் குழந்தைகளைக் கட்டாயப்படுத்தி சாலை ஓரங்களில் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் வாரணாசி தொகுதியின் பா.ஜ.க. வேட்பாளராக இருக்கும் பிரதமர் மோடி, கோவை அரசு பங்களாவில் தங்கியது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.