Skip to main content

தந்தை மகன் அடுத்தடுத்து மரணம் போலீஸ் டார்ச்சரா? போராட்டத்தில் சாத்தான்குளம்

Published on 23/06/2020 | Edited on 23/06/2020

 

கரோனா எனும் கொடிய வைரஸ் தமிழகத்தை ஆக்கிரமித்து கொண்ட கணம்தொட்டே அதன் பாதிப்பும், அதனால் ஏற்பட்ட மரணங்களின் விகிதமும் ஏறிக்கொண்டே போவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பதற்றத்திலும், பயத்திலும் முடங்கிப்போனது. வருமானமின்றி தவிக்கும் மக்கள் ஜீவாதாரத்திற்கே போராட வேண்டிய இரட்டை தாக்குதல் இது. போதாக்குறைக்கு நகர நிர்வாகங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளிடமில்லை. மாறாக தற்போதைய கரோனா ஆதிக்கத்தால், நிர்வாகங்கள் அந்தந்த காவல் சரக அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறையினரின் வசம் போனதால், இவர்களின் அலப்பறையும் சேர்ந்து மக்கள் மேல் மும்முனைத் தாக்குதல் நடத்துகிறது. அதன் ஒரு பதம்தான் கடந்த நக்கீரனில் தூத்துக்குடியில் நடந்த போலீஸ் மற்றும் வருவாய்த் துறையினரின் இரட்டை தர்பார் பற்றிய விவரிப்பு. குறிப்பாக இதில் காவல்துறையின் எல்லை மீறலால் நடந்த தந்தை மகன் இருவரின் அடுத்த மரணங்களால் தூத்துக்குடி மாவட்டத்தின் சாத்தான்குளம் கொந்தளித்துப் போய்க்கிடக்கிறது.

 

சாத்தான்குளம் நகரிலிருக்கும் ஜெயராஜ் 60 வயது முதியவர். நகரின் பழைய பேருந்து நிலையமருகே தன் ஒரே மகன் பென்னிக்ஸ் இமானுவேலுக்கு செல்போன் கடை வைத்துக் கொடுத்தவர், மரக் கடை வியாபாத்திலுமிருக்கிறார்.

 

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு சில இடங்களில் கடுமையாக்கப்பட்டாலும், பல பகுதிகளில் தளர்வும் அறிவிக்கப்பட்டு, இரவு 9 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி என்று அரசும் அறிவித்திருக்கிறது. பாமர மக்கள் அரசின் அறிவிப்பைத்தான் நம்புகிறார்கள், நடக்கும் என்று எண்ணுகிறார்கள் ஆனால் அரசின் அறிவிப்பு லோக்கல் அதிகாரிகளிடம் செல்லுபடியாவதில்லை. காரணம் அங்கு அவர்கள் வைத்ததுதான் சட்டமாக்கப்படுகிறது, அதற்கு சாத்தான்குளமும் தப்பவில்லை.

 

கடந்த 18 அன்று 7 மணியளவில் பென்னிக்ஸ் இமானுவேல் தன் செல்போன் கடையை பூட்டிவிட்டு பக்கத்திலுள்ள கடையின் முன் நின்றிருக்கிறார். அதுசமயம் ரோந்து வந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், கடைய அடச்சிட்டு போவ வேண்டியது தானல, ஏம் நிக்கீக என அதட்டியிருக்கிறார். சார் நான் கடைய அடைச்சிட்டேன், இப்ப போயிறுவேன் என்று பென்னிக்ஸ் சொல்ல, முறைத்துவிட்டுப் போயிருக்கிறார்கள்.

 

அதன்பின் அங்கு வந்த தன் தந்தை ஜெயராஜிடம் போலீசார் நடந்து கொண்டதை யதார்த்தமாகவே சொல்லியிருக்கிறார் பென்னிக்ஸ். இதனால் ஆத்திரமடைந்த ஜெயராஜ் 9 மணிவரை கடை இருக்கலாம்னு தான அரசு அறிவிப்பு என்றவர் யதார்த்தமாகவும் அவர்களுக்குள்ளேயே பேசியிருக்கிறார்கள். இவர்களின் பேச்சை டேப் செய்த போலீஸ்காரர் ஒருவர், அந்த ஆடியோவை எஸ்.ஐ. பாலகிருஷ்ணனுக்கு அனுப்பியிருக்கிறார்.

 

மறுநாள் மாலை கடுப்போடு செல்போன் கடைக்கு வந்த எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், அங்கிருந்த ஜெயராஜிடம் என்னவே போலீசயே எதுத்துப் பேசுவியா என்று அரட்டியவர், அவரை ஸ்டேஷனுக்குக் கொண்டு போயிருக்கிறார். தன் தந்தையை ஸ்டேஷன் கொண்டு போனதையறிந்த மகன் பென்னிக்ஸ் மாலை 6 மணிவாக்கில் ஸ்டேஷன் போயிருக்கிறார். அங்கே போலீசின் நடைமுறையில் கவனிப்புகளாம்.

 

அதன் பிந்தைய நாளில் மகன் பென்னிக்ஸும், தந்தை ஜெயராஜூம் அடுத்தடுத்து மரணமடைய கொந்தளித்த சாத்தான்குளம் நகரம் மற்றும் சுற்று வட்டார நகரங்களின் கடைகள் அடைக்கப்பட்டு சர்வ கட்சியினருடன் பொதுமக்களும் இணைந்து மரணத்திற்கான நீதிகேட்டு திரளாகப் போராட்டத்திலிறங்கிவிட்டனர், கொதிப்பும் கொந்தளிப்புமாயிருந்தது சாத்தான்குளம்.

 

போராட்டத்திலிருந்தவர்களிடம் விசாரித்ததில், தந்தையை ஸ்டேஷனுக்குக் கொண்டுபோன பயத்தில் அங்கே மகன் பென்னிக்ஸ் போயிருக்கிறார். இரவு 7 மணியளவில் ஜெயராஜை சுற்றி நின்ற போலீசார், போலீசயே நீ எதுத்துப் பேசுவியா அவ்வளவா என்று வார்த்தையைவிட்டவாறு ஜெயராஜை அடித்திருக்கிறார்கள். பயந்துபோன மகன், எங்கப்பா வயசானவர் அடிக்காதீக என்று போலீஸ் அடியைத் தடுத்திருக்கிறார். ஆனா போலீசோ என்னல போலீசயே அசால்ட் பண்ண வர்றியோல, என்ற அதட்டலால் சூடாகியிருக்கிறார்கள். அதன்பிறகுதான் தந்தை மகனுக்கும் சேர்ந்தே டார்ச்சர் லத்தியடி.

 

இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை மற்றும் முத்துராஜ், ஜேசுராஜ், வெயிலுமுத்து உள்ளிட்ட ஐந்து போலீசார், அடுத்து தன்னார்வலர்கள் 5 பேர்கள் இத்தனை பேர்களும் இருவரையும் சுற்றிக் கொண்டார்கள்.

 

இதில் தன்னார்வலர்கள் மற்றும் போலீசார், இருவரின் கைகால்களை இறுக்கிப் பிடித்துக் கொள்ள போலீசின் குண்டாந்தடி அடி, புட்டத்திலும், முதுகிலும் சரமாரியாக விழுந்ததில், வலி பொறுக்க முடியாமல் துடித்த தந்தையும், மகனும் கதறி ஓலமிட்டிருக்கிறார்கள். அதனையும் பொருட்படுத்தாதவர்கள், தடியை தண்ணீரிலும் நனைத்து அடி கொடுத்ததில் இருவரின் புட்டமும் வீங்கியிருக்கிறதாம். தொடர்ந்து உயிர்த்தலத்திலும், ஆசனவாயிலும் காயமேற்பட்டிருக்கிறது. ஜெயராஜிற்கு அதிலிருந்து ரத்தம் வடிந்திருக்கிறதாம்.

 

போலீசின் தொடர் அடி தாங்க மாட்டாத முதியவர் ஜெயராஜிற்கு ரத்த அழுத்தமாகி மயங்கியிருக்கிறார், உடனடியாக அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றவர்கள், பின்பு ஸ்டேஷனுக்குக் கொண்டுவந்திருக்கிறார்கள். இரவு 12 மணிக்கு நடந்த இந்த சம்பவத்திற்குப் பின்பு வந்த எஸ்.ஐ. ரகுகனேஷ் தன் பங்கிற்கு அடி பூஜையும் நடத்திவிட்டுப் போயிருக்கிறாராம்.

 

police

 

மறுநாள் 19 அன்று விடிந்த காலையில் இருவரையும் கோர்ட்டில் ரிமாண்ட் செய்த போலீசார் அந்தப் பகுதியிலுள்ள சப்-ஜெயில்களில் அடைக்காமல் 20ம் தேதியன்று தொலை தூரத்திலுள்ள கோவில்பட்டி நகரின் சப்-ஜெயிலில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் போலீசையே அசால்ட் பண்ண வந்தவங்க என்று சொல்லிவிட்டுப் போனதாகவும் சொல்கிறார்கள்.

 

சப்-ஜெயிலில் வலிபொறுக்க மாட்டாமல் தந்தையும், மகனும் துடித்ததில் 22ம் தேதி இரவில் பென்னிக்ஸ் உயிரிழந்திருக்கிறார். தொடர்ந்து 23ம் தேதி காலையில் தந்தை ஜெயராஜூம் மரணமடைந்திருக்கிறார். இருவரின் மரணங்கள் மாவட்டத்தையே உலுக்கிவிட்டது, போராட்டம் ஆர்ப்பாட்டம் என நகரம் சூடாகியிருக்கிறது.

 

‘கொம்பன் கம்ப எடுத்தாம்னா புட்டம் பழுத்திரும்லேன்னு’ அதட்டலாகச் சொல்லிக்கிட்டுத்தான் ரோட்டுல வருவாரு எஸ்.ஐ. ரகுகணேஷ். அவர் அடியால பல பேருக்குப் புட்டம் பழுத்துப் போயிருக்குங்க என்கிறார்கள் போராட்டத்திலிருந்தவர்கள்.

 

போராட்டக்களத்திருந்த தொகுதி எம்.எல்.ஏ.வான அனிதாராதா கிருஷ்ணனிடம் பேசினோம்.  “தந்தை, மகன் மரணங்களுக்குக் காரணமே போலீஸ் டார்ச்சர்தான். இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்களான பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், பால்துரை மற்றும் ஐந்து போலீசார் உட்பட அனைவர் மீதும் பிரிவு 302ன் கீழ் வழக்குப்பதிவு செய்து சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டும். தந்தையையும், மகனையும் இழந்த குடும்பத்திற்கு நிவாரணமாக ஒரு கோடி தரப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் கொடுக்கப்பட வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கை, அது நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்கிறார். இதனிடையே தந்தை, மகன் இருவரின் மரணத்திற்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றிருக்கிறார் தி.மு.க.வின் தலைவரான ஸ்டாலின்.

 

நாம் இது குறித்து நெல்லை ரேன்ஞ் டி.ஐ.ஜி.யான பிரவீன் குமார் அபிநபுவிடம் கேட்டதில், ஜெயிலில் அவர்கள் மரணமடைந்திருப்பதால் நீதிமன்ற விசாரணை நடத்தப்படும். நீதித்துறையின் விசாரணைக்குப் பின்புதான் நடந்தது தெரியவரும். மேலும் போலீசார் மீது குற்றச்சாட்டுக் கிளம்பியதால் அவர்கள் மீது, உரிய துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்கிறார் டி.ஐ.ஜி.

 

‘சட்டத்தை மதிப்போம். மக்களைக் காப்பாற்றுவோம்’ என்று மனசாட்சி உறுதி மொழி கொடுத்த பிறகே பணிக்கு வருபவர்கள்தான் காவலர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு; அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கெடு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
The court is bad for the authorities for Tuticorin firing

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கு கடந்த மார்ச் 23 விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” எனப் பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இந்த நிலையில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர் மற்றும் என்.செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூறியதாவது, ‘வழக்கில் எதிர் மனுதாரர்களாகச் சேர்க்கப்பட்ட சில அதிகாரிகளுக்கு நீதிமன்ற நோட்டீஸ் சென்றடையவில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்ட அதிகாரிகள் அனைவரும் ஜூன் 7ஆம் தேதிக்குள் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு விசாரணையை ஜூன் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.